குஷி

அடிப்படை கருவை விட்டு விட்டு சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் திரை அழகை வைத்து ஓட்டப் பார்த்திருக்கிறார் இயக்குனர் சிவா நிர்வானா. ஆனாலும் மனதில் ஒரு குஷியை ஏற்படுத்த மூவரும் அரும்பாடுபட்டு இருக்கின்றனர் என்பது படம் பார்க்கும்போது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. சில ரம்மியமான காட்சிகள், நகைச்சுவை, மணிரத்தினம் ரக திரைக்கதை என்று கவனமாக போகிறது படம். சுவாரஸ்யமான படமா என்றால் ஆமாம். இன்னும் கூட கவர்ந்திருக்கும் விஞ்ஞானத்தையும் மதத்தையும் இன்னும் சரியான வகையில் காட்டி இருந்தால்!- தி ஹிந்து.
சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் ரசிகனை விலக விடாதபடி கட்டி போடுகிறார்கள் தங்கள் திரை ஆளுமையால். சற்று இழுபறியான கட்டங்கள் இருந்தாலும் உண்மைக் காதல் வெல்லும் எனும் இனிப்பு முடிவு எல்லோருக்கும் பிடிக்கும். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
முந்தைய படங்களைப் போலவே காதலை விட்டு வெளியே வரவில்லை இயக்குனர் ஷிவ நிர்வான். இதில் காதலை மதத்தோடு மோத விட்டு யார் விட்டுக் கொடுப்பார்கள் எனும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறார். அது கொஞ்சம் குழப்படியாக இருக்கிறது. – இண்டியா டுடே.
அருமையான காட்சி படிமங்கள்; அற்புத இசையோடு வந்திருக்கிறது இந்த கலகல படம். – இந்தியா ஹெரால்டு.
கிக்
கொட்டாவி வருமளவுக்கு கேவலமாக இருக்கிறது கிக். விளம்பரங்களை உருவாக்கும் நிறுவனராக வரும் சந்தானம், கதைக்காக படத்தில் அவர் உருவாக்கும் விளம்பரங்கள் படத்தை விட நன்றாக இருக்கின்றன. – தி ஹிந்து.
வழமையாக சொல்வது போல பல சமையல்காரர்கள் இருந்தால், செய்யும் சமையல் கோவிந்தா. அதே போல இந்தப் படத்தில் எண்ணிலடங்கா காமெடியன்கள். சரியான காட்சிகளோ வசனங்களோ இல்லாமல் அவர்கள் செய்யும் காமெடி குறி தப்புகிறது. அதோடு முகம் சுளிக்க வைக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் எரியும் தீயில் எண்ணை. முக்கியமான குறை, சரியாக எழுதப்படாத படத்திற்கு வடிவம் கொடுப்பதிலும் சிதைவு – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
கொஞ்சம் கூட சிரிப்பை வரவழைக்காத சிறுபிள்ளைத்தனமான படம். அலுப்பை விதைத்து கொட்டாவியை வரவழைக்கும் இந்த சந்தானம் படம். – சினிமா எக்ஸ்பிரஸ்.
கருமேகங்கள் கலைகின்றன
நல்ல உணர்ச்சிக் காவியமாக மாற வேண்டிய கதை, சராசரி படமாக மாறிப் போயிருக்கிறது. மையப் பாத்திரங்களை ஏற்ற அதிதி பாலன், யோகி பாபு, கவுதம் மேனன் எனப் பலரும் தங்கள் பங்கை சரியாக செய்திருந்தாலும், சில கட்டங்களை இன்னும் ஆழமாக விதைத்திருந்தால் மனதில் தைத்திருக்கும். ஜி வி பிரகாஷின் பின்னணி இசையும், கடைசியில் ஒலிக்கும் ‘மன்னிக்கச் சொன்னேன்’ பாடலும் பொட்டில் அறைந்து நம்மை அதிர வைக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
நல்ல கதைதான்..ஆனால் அதற்கான திரைக்கதை எழுதப்படாமல் போனதால் மனதில் தங்காமல் கலைந்து போகின்றன இந்த கருமேகங்கள். மூன்று கதைகளைச் சொல்ல ஆரம்பித்து, நடுவில் எங்கோ தொலைந்து போகிறார் இயக்குனர் தங்கர் பச்சான். முக்கியமான கதை மாந்தர்கள் படம் நடுவில் காணாமல் போவது, திரைக்கதையின் பெரிய ஓட்டை. பாராட்ட வேண்டுமென்றால் சீனியர் இயக்குனர் பாரதிராஜாவின் உழைப்பை சொல்ல வேண்டும். தன் அனுபவத்தை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் அவர். – தி ஹிந்து.
ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனும் (பாரதிராஜா), பரோட்டோ மாஸ்டர் வீரமணியும் (யோகிபாபு) ஒரு பேருந்துப் பயணத்தில் சந்திக்கிறார்கள். சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகள், வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இருவரும் தொலைத்துவிட்ட உறவைத் தேடி, அதை மீட்டுக்கொள்ள மேற்கொள்ளும் அந்தப் பயணத்தின் முடிவு என்னவானது என்பது கதை. ராமநாதன், வீரமணி இருவரது தேடலின் பயணம் வழியே தற்காலத் தமிழ் சமூகத்தில், குடும்ப உறவுகளில் மண்டிக்கிடக்கும் அகச் சிக்கல்களை, அதனால் விளைந்த இழப்புக்களை வாழ்க்கைக்கு நெருக்கமாகக் காட்டுகிறது இப்படம். தனது சிறுகதை என்றபோதும், அதைத் திரைக்குத் தழுவும்போது சுற்றிவளைக்காமல் விரல் பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் நேரடியாகக் கதைச்சொல்லியிருக்கும் தங்கர் பச்சானின் திரைக்கதை வடிவம் இறுதிவரை இதம். தவறியும் வணிக அம்சங்கள் எதனையும் நுழைத்துவிடாமல், ஒரு நவீன இலக்கியப் பிரதியைப் போல் கதையின் முடிவைக் கையாண்டிருக்கும் இந்தப் படத்தை ,பிரெஞ்சு, பெர்ஷியன், இட்டாலியானோ தொடங்கி உலக சினிமா செழித்து விளங்கும் எந்த மொழியில் ‘டப்’ செய்து வெளியிட்டாலும் கண்களைக் குளமாக்கி, மனதைக் குணமாக்கும் கார் மேகம் இப்படம். – தமிழ் இந்து.
பரம்பொருள்
க்ரைம் திரில்லருக்கு ஏற்ற வகையில் கதையும் அதன் சம்பவங்களும். கட்டிப் போட்டதா? கதை மட்டும் தெறிப்பாக இருந்தால் போதாது. அதை சுவாரஸ்யமாக திரைக்கதையில் சொல்லத் தெரிய வேண்டும். இதில் பாதி வெற்றி அடைந்திருக்கிறது பரம்பொருள். அடிப்படையை கனமாக எழுதாமல் லப்டப்பை எகிறச் செய்யும் முயற்சிகள் தோற்றுப் போகின்றன. காட்சிகளின் நீளம் ரசிகனின் பொறுமையைச் சொதிக்கிறது – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.
மலையளவு பழசு. கடுகளவு புதுசு. காட்சிகளின் பழைய பாணியும் நீளமும் ரசிகனை அலுப்படைய வைக்கிறது. எதுவும் சுவையில்லையா? அதிக நேரத்தை வீணாக்காமல் சட்டென்று மைய புள்ளியான சிலைக் கடத்தலுக்கு வந்து விடுகிறார் இயக்குனர் அரவிந்த் ராஜ். சொல்ல வந்த கதையை இழுத்துச் சொல்லியிருப்பது பெரும் குறை. அதோடு அனாவசிய பாடல்களும் வேகத் தடைகள். – தி ஹிந்து
சில தடங்கல்களுக்கு மத்தியில் ‘விறுவிறுப்பு’ முயற்சி. நடிப்பால் முத்திரை பதிக்கிறார் சரத்குமார். அமிதாஷ் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால் எமோஷனல் காட்சிகளில் இன்னும் கூட மெனக்கெடல் வேண்டுமோ என தோன்ற வைக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை தேவையான பங்களிப்பை செய்ய, கானா பாலா குரலில் வரும் பாடல் கவனிக்க வைக்கிறது. பாண்டிகுமாரின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் ஈர்க்கின்றன. மேலும், அவரின் லென்ஸ் மொத்தப் படத்தின் குவாலிட்டியையும் கூட்ட உதவுகிறது. – தமிழ் இந்து.
ரங்கோலி
வாலி மோகன்தாஸின் யதார்த்த சினிமா. ஆடுகளம் முருகதாஸ் மற்றும் சாய் ஸ்ரீ பிரபாகரன் நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார்கள். – சௌத் ஃபர்ஸ்ட்.
கல்வி குறித்தும், குடும்ப சிக்கல்கள் குறித்தும் இன்னுமொரு படம். சில குறைகள் இருந்தாலும் நெஞ்சம் நெகிழ வைக்கும் தருணங்கள் இதில் அதிகம். – க்ளைமேக்ஸ் ஆஹ்
வடசென்னை சலவைக் கூடங்கள், அத்தொழிலாளர்களின் பொருளாதார / சமூக வாழ்க்கை, அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் விளையாட்டு / பள்ளி உலகம் என தொடக்கத்தில் சுவாரஸ்யமாகவும் புதிய கதைக்களத்துடனேயே நகர்கிறது. சத்யாவாக நடித்திருக்கும் ஹமரேஷ் தொடக்கக் காட்சியில் இருந்தே தன் நடிப்பால் கவர்கிறார். தன் நேர்த்தியான நடிப்பால் தனியாளாகவே பல காட்சிகளை தன் தோளில் தாங்கி இருக்கிறார். புதுமையில்லாத அதே அப்பா-அம்மா கதாபாத்திரம்தான் என்றாலும், தங்களின் யதார்த்தமான நடிப்பால் இருவரும் அழகாக நம் மனதில் நிறைகிறார்கள். பார்வதி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் பிரார்த்தனா சந்தீப், அக்கா வேம்பாக வரும் அக்ஷயா, தமிழாசிரியராக வரும் அமித் ராகவ், மாணவர்களாக வரும் சஞ்சய், ராகுல், விஷ்வா என அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். மொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். கதைக்களங்களான சலவைத் தொழிற்கூட்டத்தையும், இராயபுரத்தின் தெருக்களையும் தன் கச்சிதமான ஒளிப்பதிவால் திரைப்படத்தின் முதுகெலும்பாக ஆக்கியிருக்கிறார் ஐ.மருதநாயகம். படம் முழுவதுமே பாடல்கள் விரவிக் கிடந்தாலும், எதுவுமே அலுப்பத்தட்டாத வகையில் இசையமைத்திருக்கிறார் சுந்தர மூர்த்தி கே.எஸ். அதற்கு கார்த்திக் நேத்தா, வேல்முருகன், இயக்குநர் ஆகியோரின் வரிகளும் துணை நின்றிருக்கின்றன. பின்னணி இசையிலும் தன் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார் சுந்தர மூர்த்தி கே.எஸ்.
திரைக்கதை திருப்பங்கள், கதாபாத்திரங்களின் பரிணாமங்கள், சில காட்சிகளில் வசனங்கள் கூட நாம் யூகித்தப்படியே நகர்கிறது. மேலும், எழுதப்பட்டிருக்கும் காதல் காட்சிகளும் பள்ளி பருவத்தின் இயல்பில் இருந்து விலகி, முழுக்க முழுக்க ‘சினிமாத்தன்மையாக’ இருக்கிறது.- விகடன் இணைய இதழ்
ஒரு படமாக பார்க்கும் பட்சத்தில் இப்படத்தில் பிராப்பர் திரைக்கதைக்கான எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் எதார்த்த சினிமா பாணியில் தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அப்படியே கண்முன் நிறுத்தும்படியான திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும்படி கொடுத்த இயக்குநர் வாலி மோகன் தாஸ், முடிவு காட்சிகளில் ஏனோ சற்றுத் தடுமாறி இருக்கிறார். படத்தின் முடிவாகச் சொல்ல வரும் மெசேஜ் சற்றே எதார்த்த வாழ்வுக்குத் தள்ளி இருப்பது மட்டும் சற்று மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. மற்றபடி படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. – நக்கீரன் இணைய இதழ்
லக்கி மேன்
இயக்குனர் பாலாஜி வேணுகோபாலின் காமெடி வசனங்கள் திணிப்பு இல்லாமல் ஆங்காங்கு தூவப்பட்டு புன்னகையை வரவழைக்கின்றன. யோகி பாபுவும் வீராவும் தங்கள் பங்கை சரியாக நிறைவேற்றி இருக்கிறார்கள். சில வசனங்கள் தெறிப்பாக நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க வைக்கின்றன. தனக்கு அதிர்ஷ்டமே இல்லை என்று நம்பும் யோகி பாபுவுக்கு ஒரு மகிழுந்து பரிசாக கிடைத்தவுடன் எல்லாமே தலைகீழாக மாறுகிறது என்பது ஒன்லைன். இதை நோக்கி பயணிக்கிறது படத்தின் முதல் பாதி. ஆனால் இரண்டாம் பாதியில் வீரா மற்றும் யோகியின் ஈகோ பிரச்சினையை மையமாக்கியதில் படம் ஜவ்வாக மாறி விடுகிறது. -ஃபில்மி கிராஃப்ட் அருண்.
ஈர்க்கும் யோகி பாபு. வசப்படுத்தும் வசனங்கள். இவைதான் லக்கி மேன் படத்தின் யூ எஸ் பி. படம் பார்த்து வெளியில் வரும்போது நமக்கு பரவசம் இல்லை என்றாலும், நாம் அன்லக்கி எனும் எண்ணம் தோன்றுகிறது- சினிமா எக்ஸ்பிரஸ்.
சின்ன முடிச்சு. அதை சற்று உயர்த்தும் வசனங்கள். ஆனாலும் கடைசி வரை சுவாரஸ்யத்தை தக்க வைக்கத் தவறுகிறது படம். ரேச்சல் ரெபெக்கா, யோகி பாபுவின் மகன் வரும் காட்சிகள் மகிழ்வு புதையல். ஷான் ரோல்டனின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கும் காட்சிகளுக்கும் தேவையான அளவு. மொத்தத்தில் லக்கி மேன் நம்மைக் கவிழ்த்தும் போடவில்லை.. கவிழ்ந்தடித்து படுக்கவும் செய்யவில்லை- டைம்ஸ் ஆஃப் இந்தியா.
மொத்த படத்தையும் தன் தோள்களில் சுமக்கிறார் யோகி பாபு. பாலாஜி வேணுகோபாலின் திரைக்கதை நம்மை புரட்டிப் போடும் அளவிற்கு இல்லை. சொப்பன சுந்தரி போல திரில்லர் இல்லை. ஆனாலும் தேவையற்ற சதை (காட்சிகள்) இந்த லக்கி மேனை ஜெயிக்க விடவில்லை. – தி ஹிந்து
நூடுல்ஸ்

அய்யப்பனும் கோஷியும் போல முதல் பாதி. திரிஷ்யம் போல இரண்டாம் பகுதி. இந்த வாரம் வந்த படங்களில் நம்மை சற்று அசைத்துப் பார்த்த படம் இது தான்! – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
தமிழில் ஒரு மலையாளப்படம். எதிலும் எங்கும் யதார்த்தம். தமிழின் பல படங்களில் வில்லனாக அறிந்த மதன் தட்சிணாமூர்த்தி இதில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். காவல் துறை அதிகாரியான மதனும் உடல் பயிற்சி பயிற்றுநராக வரும் ஹரீஷ் உத்தமனும் காட்சிக்கு தேவையான நடிப்பைக் கொடுத்து படத்தை நகர்த்தி இருக்கின்றனர். இயல்பான கதைக்களத்தை எடுத்து சுவையான படத்தை தந்ததற்காக நூடுல்ஸை சுவைக்கலாம். -தினமணி
இந்தப் படம் சிந்தனையைத் தூண்டும் பிரச்சினைகளை எழுப்புகிறது. சிக்கலான விசயங்களைச் சரியாகக் கையாள்கிறது – சென்னை விஷன்.
வழக்கமான கதைதான் என்றாலும் இதன் திரைக்கதை ரசிகனைக் கட்டிப் போடுகிறது. இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தியின் கதை சொல்லும் பாணி சிறப்பு. மெல்ல லப் டப்பை எகிற விடும் வித்தையை அவர் முழுமையாக கற்றிருக்கிறார். ராபர்ட் சற்குணத்தின் இசை பல இடங்களில் நம்மை சபாஷ் போட வைக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
ஜவான்
பதானின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இன்னுமொரு பிளாக் பஸ்டரை அட்லியின் கூட்டணியில் தந்திருக்கிறார் ஷாருக்கான். இதில் போனஸாக இரட்டை வேடம் என்பது குல்ஃபியுடன் கோன் ஐஸ்கிரீம். அதிரடி சண்டைக் காட்சிகளிலுடன் கிங் கானை புது அவதாரில் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஐம்பத்தி எட்டு வயதில் கான் காட்டும் அதி வேக சண்டைகளோடு ஒப்பிட்டால் பதானின் காட்சிகள் வெறும் டீசர் என்றும் தோன்றும். கடைசி சில நிமிடங்கள் தவிர எங்கும் பிரச்சார தொனி இல்லை என்பதும் இதன் சிறப்பு. -ஹிந்துஸ்தான் டைம்ஸ்
அட்லி உங்களை சாய்ந்து உட்கார விடவில்லை. மூன்று மணி நேரப்படம் ஒரு நொடி கூட அலுப்பில்லை என்பது இதன் வர்த்தக சாதனை. ஷாருக்கானை கொண்டாடும் படம். அதில் சில சொட்டுகள் நயன்தாரா, சார்லீஸ் ஏஞ்சல்ஸ் போல ஆறு களவாணிகள், ஒரு குரூர வில்லன் என்று போட்டு கலக்கினால் அதுதான் ஜவான். குறைகள் இல்லையா என்றால் இருக்கிறது. எடிட்டிங் கத்தரியை இன்னும் கூட சாணை பிடித்திருக்கலாம். ஆனாலும் இது அட்லியின் திருவிழா கொண்டாட்டம், குலசாமி ஷாருக் கானிற்காக! – டைம்ஸ் நௌ.
சமூகக் கடமை ஏற்றப்பட்ட திரில்லர் ஜவான். பாரதத்தைச் சுத்தப்படுத்த ஷாருக் கையிலெடுக்கும் திட்டமே கவனம் ஈர்க்கும் இந்தப்படம். இதுவரை வந்த அத்துணை இந்திப்பட நாயகர்களின் பிம்பத்தை ஒட்டி இருக்கிறது இந்த நாயகனின் வேடம். அதனால் ஆறிலிருந்து அறுபது வரை அசை போட நிறைய தீனி. நடுவில் கிங் கானின் பழைய வெற்றிகளையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை இயக்குனர் அட்லி. நிச்சயம் பதானைக் கடந்து வெல்லப்போகும் படம். -தி ஹிந்து.
ஒரு சமூகக் குறிக்கோளுடன் எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம். இதில் வரும் பெண்கள் ஆட்டம் போட மட்டுமல்ல. அவர்களுக்கு கதையில் பங்கு இருக்கிறது. இது அனிருத் இசையில் வரும் படம் எனும் விளம்பரம் பொய்யில்லை என்று நிரூபித்திருக்கிறார் அனி. பாடல்கள் ஹனி. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
பொழுதுபோக்கிற்கு குறைவில்லை. அதோடு நல்ல மெசேஜையும் கொடுக்கத் தவறவில்லை இந்தப் படம். நயன்தாராவும் தீபிகா படுகோனும் நம் கண்களை விட்டு அகல மறுக்கிறார்கள் திரையில் தோன்றும் போதெல்லாம். மகளிர் சிறைச்சாலை குறித்த பகுதி படத்தின் தொய்வான ஒன்று. மற்றபடி அப்பா மகன் என விஸ்வரூபம் எடுக்கும் கானின் வேடங்கள் ரசிகனுக்கு மாப்பிள்ளை விருந்து – சினிமா எக்ஸ்பிரஸ்.
ஒரு மாஸ் மசாலா படத்தில் சம கால அரசியலை பேசியதற்காக இயக்குனர் அட்லிக்கு சல்யூட். ஆனாலும் இரட்டை வேடங்களில் அப்பா ஷாருக் தான் கவர்கிறார். அவரது அறிமுகக் காட்சி அரங்கில் தெறிக்கிறது. இந்தப் படத்திற்கு பாடல்கள் தேவையில்லை. ஆனாலும் விறுவிறுப்பான திரைக்கதைக்கு நடுவே பாடல்களைப் போடும் பழைய பாணியை ஏன் இயக்குனர் தன் முதல் இந்தி படத்தில் வைத்திருக்கிறார் எனும் கேள்வி எழுகிறது. நயன்தாராவைப் பொறுத்தவரை வெறும் காதலியாக ஆடிப் பாடி விட்டுப் போகாமல் கதையில் சமரசம் பேசும் காவல் அதிகாரியாகவும் எழுதபட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது. வழக்கமான விஜய் சேதுபதிக்கு உண்டான நக்கல் நையாண்டி இந்த வில்லன் பாத்திரத்தில் பரிமளிக்கவில்லை. அட்லி படங்களில் ஒன்றிரண்டு உணர்வு பூர்வமான காட்சிகள் இருக்கும் என்றாலும், அவை சட்டென்று தோன்றி மனதில் தைக்கும் முன் கடந்து போகின்றன. தீபிகா படுகோன், அப்பா ஷாருக் காட்சி மட்டும் இதில் விதிவிலக்கு. தீபிகா அசத்துகிறார். பழைய அட்லி, ஷாருக், ஷங்கர் படங்களை நினைவூட்டும் காட்சிகள் இதிலும் உண்டு. தயாரிப்பு நிறுவனம் செலவழித்த தொகை படத்தின் பிரம்மாண்டத்தில் தெரிகிறது. ஷாருக், அனிருத் மற்றும் பிரம்மாண்டத்திற்காக பார்க்கலாம். மொத்தத்தில் இது ஷாருக்கின் திரை பிம்பத்தை மனதில் கொண்டு எழுதப்பட்ட அட்லியின் படம் சோடை போகவில்லை. – விகடன் விமர்சனக்குழு.
தமிழ்குடிமகன்
சாதியையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பற்றி இன்னொரு படம். வழக்கமான டெம்ப்ளேட்டில் பயணித்தாலும் சில இடங்களில் மனதுக்கு நெருக்கமாக நெருடலான காட்சிகளும் உண்டு. சேரனின் சின்னச்சாமி பாத்திரம் புதுசில்லை. அதோடு படத்தில் சில அருமையான வசனங்கள் தவறான இடங்களில் பேசப்பட்டு வீணாகின்றன. இசையும் தொழில்நுட்பக்குழுவும் படத்தை உயர்த்த எதுவும் முயற்சிக்கவில்லை. நல்ல எண்ணத்தோடு எடுக்கப்பட்ட படம் அதை பாதியில் தவற விட்டிருக்கிறது. – ஒன்லி கோலிவுட்
ஊரில் யார் இறந்து விட்டாலும் சின்னச்சாமியின் குடும்பம் தான் இறுதிச் சடங்குகளைச் செய்யும். அதனாலேயே அவர்களை தாழ்ந்தவர்களாக பார்க்கும் மற்ற சாதி மக்கள். இதை உடைக்க, கிராமத் தலைவராக நினைக்கிறார் சின்னச்சாமி எனும் சேரன். அதை தடுக்க நினைக்கும் மற்றவர்கள். ஒரு கட்டத்தில் ஈமக்கிரியைகளை செய்வதில்லை எனும் முடிவு கிராம மக்களைப் புரட்டிப் போடுகிறது. இறுதியில் என்னாச்சு என்பது க்ளைமேக்ஸ். இசக்கி கார்வண்ணனின் படம் இதுவரை சொல்லாத களத்தை எடுத்து பொட்டில் அறைகிறது. சேரன் நிறைவாக செய்திருக்கிறார்,. அப்படி ஏதும் செய்யவில்லை சாம் சி.எஸ்ஸின் இசை. – சௌத் ஃபர்ஸ்ட்
சொல்ல வந்த கருவிற்காக இந்தப் படத்தை பார்க்க வேண்டும். இன்னும் கொஞ்சம் கவனம் சேர்த்திருந்தால் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு போயிருக்கும் இந்தப் படம். சேரனின் நடிப்பு சில கட்டங்களில் தட்டையாக போயிருக்க வேண்டிய அபாயத்தைத் தடுக்கிறது. எவ்வளவோ முயன்றாலும் சாம் சி எஸ்ஸின் இசை படத்திற்கு பெரும் உதவி ஏதும் செய்யவில்லை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
சரியான கேள்விகளை முன் வைக்கிறது படம். ஆனால் அதற்கான பொருத்தமான பதில்கள் படத்தில் இல்லை. எந்த வேலை செய்வது என்பது உழைப்பாளியின் உரிமை, அதற்குரிய மரியாதையும் அவசியம் என்பது போன்ற சொல்லாடல்கள் இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒன்று. நடித்த அத்துணை கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்கள். ஆனால் முடிவு? வானவில்லின் அருகில் இருக்கும் தங்கப்பானையை காட்டும் கனவோடு முடிகிறது சலிப்பு. – சினிமா எக்ஸ்பிரஸ்.
குலத் தொழிலை விட நினைப்பவர்க்கு ஏற்படும் பிரச்சினை குறித்த கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் சேரன், தனக்கே உரிய பாணியில் யதார்த்தமாக நடித்து இருக்கிறார். தன் இன மக்கள் ஒடுக்கப்படுவதையும், முன்னேறவிடாமல் தடுக்க படுவதையும் உணர்வு பூர்வமாக நடிப்பால் கடத்த முயற்சி செய்து இருக்கிறார். நாயகி பிரியா ஜோவிற்கு பெரியதாக வேலை இல்லை. வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் லால். அருள்தாஸின் நடிப்பும் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. எஸ்.பி.யாக வரும் சுரேஷ் காமாட்சி நடிப்பில் கவர்ந்து இருக்கிறார். படத்தின் முக்கியமான திருப்புமுனை காட்சியில் வருகிறார். வக்கீலாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். இயக்குனர் இசக்கி கார்வண்ணன் சிறந்த கதையை எடுத்து திரைக்கதையில் தெளிவில்லாமல் இயக்கி இருக்கிறார். பெரிய நடிகர்களை வைத்து சரியாக கையாளத் தவறி இருக்கிறார். காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் திரைக்கதை இருப்பது படத்திற்கு பலவீனம். ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. – மாலை மலர்
துடிக்கும் கரங்கள்
படத்தில் சங்கிலி முருகன் தனது மகனைத் தேடி அலைவது போலக் கோர்வையான திரைக்கதையைத் தேடி அலைய வைக்கிறார் இயக்குநர் வேலுதாஸ். எக்கச்சக்க லாஜிக் மீறல்கள் எட்டிப் பார்க்கின்றன. பார்வையாளர்கள் மனதில் திரில்லர் பாணியில் ஒரு சீரியஸ் படமாக இருக்கப் போகிறது என்ற எண்ணத்தை வர வைக்கின்றன முதல் பத்து நிமிடங்கள். ஆனால், அதன் பின்னர் ஹீரோ, ஹீரோயின் என்ட்ரி, காதலுக்காக ஸ்டாக்கிங், சிரிக்க வைக்காத காமெடி என முன்னர் வரைந்த மனக்கோட்டினை அப்படியே ரப்பர் வைத்து அழிக்கிறார்கள். விகடன் இணைய இதழ்.
யூடியூப்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணர்த்தும் கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விமல், கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் இருந்து மாறி, வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷனில் கவனிக்க வைத்து இருக்கிறார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருக்கிறார் சவுந்தரராஜா. சதீஷின் காமெடி பெரியதாக எடுபடவில்லை. நாயகி மிஷாவும் வழக்கமான கதாநாயகி போல் வந்து சென்றிருக்கிறார். டிராபிக் போலீஸ் ஆக வரும் ஜெயச்சந்திரன் இடைவேளை வரை தன் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார் பில்லி முரளி. ராகவ் பிரசாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ரம்மி ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் துடிக்கும் கரங்கள் – துடிப்பு குறைவு. – மாலை மலர்.
மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பொலி ஷெட்டி ( தமிழ்/ தெலுங்கு)
அனுஷ்கா ஷெட்டிக்கு அருமையான மறுபிரவேசம். நவின் பொலி ஷெட்டிக்கு இன்னொரு ஹிட். ரசனையான காதல் பயணம் இந்தப் படம். கலியாணம் எனும் கட்டுகள் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் கதை நாயகியும் அதனால் ஏற்படும் சிக்கல்களுமே கதை. நவீன் பொலி ஷெட்டி தன் நகைச்சுவை வசனங்களாலும் டைமிங்கினாலும் படத்தை தோள்களில் சுமக்கிறார். – இந்தியன் எக்ஸ்பிரஸ்.
எதிர்பார்த்த முடிவுகளுடன் ஒரு படம். சரியான அளவு நகைச்சுவை இருந்தாலும் அது மட்டும் போதுமா எனும் எண்ணத்துடன் முடிகிறது படம்.-டைம்ஸ் ஆஃப் இந்தியா.
நவீன் பொலி ஷெட்டி இந்த நவீன காதல் கதையில் கட்டியணைக்கத் தோன்றும் விதமாக நடித்திருக்கிறார். இயக்குனர் மகேஷ் பாபு ஹிட்டடித்திருக்கிறார்.- இண்டியா டுடே.
ரெட் சாண்டல் வுட்
வெற்றியின் படங்கள் கல்லா கட்டாது. ஆனால் நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களைத் தேர்ந்தெடுக்கும் திறமை அவரிடம் உண்டு. இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒன்று தான். ஆனால் சரியாக எழுதப்படாமல் பாதியில் கை விட்டு விடுகிறது. சில இடங்களில் சுவாரஸ்யமாக இருக்கும் படம் பல இடங்களில் தொய்வாகிப் போகிறது. சாம் சி எஸ்ஸின் இசை மற்றும் மற்ற தொழில் நுட்பக் குழு தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
செம்மர கடத்தலை மைய்யமாக கொண்டு உருவான படம்தான் ரெட் சாண்டல் வுட். இப்படத்தை குரு ராமானுஜம் இயக்கி உள்ளார். ஹீரோ வெற்றி நடிப்பில் முந்தைய படங்களை விட தேறி வருகிறார் என்றே சொல்ல வேண்டும். சோகம், ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.எம். எஸ். பாஸ்கர் நடிப்பு ஒரு யதார்த்த கிராமத்து மனிதரை கண் முன் நிறுத்துகிறது. நாம் பக்தியுடன் பார்க்கும் திருப்பதி மலைக்கு பின் செம்மரம் என்ற பயங்கரமும் சோகமும் இருப்பதை இப்படம் சொல்கிறது. ரெட் சாண்டல் வுட் தமிழர்களின் ரத்த சரித்திரம்! – கல்கி இணைய இதழ்.
இன்னும் கூட வித்தியாசமாக வந்திருக்க வேண்டிய படம் எழுதிய வகையில் கவனம் போதாமையால் சறுக்கி இருக்கிறது. இருக்கும் நேரத்தில் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசரமும் திரைக்கதை பயணிக்கும் மித வேகமும் படத்திற்கு எதிர்மறைகளாகி விட்டன. – சினிமா எக்ஸ்பிரஸ்.
மார்க் ஆன்டனி

மார்க் ஆன்டனி சிறந்த படமில்லை. ஆனால் புதுப்புனல் உற்சாகத்துடன் பயணிக்கிறது. அதோடு சொல்ல வந்த நோக்கத்தை தெளிவாகச் சொல்கிறது. லாஜிக் எல்லாம் பார்க்காமல் போனால் இதை கடைசி சொட்டு வரை ரசிக்கலாம். கூடவே பிரதான பாத்திரங்களின் அட்டகாசமான நடிப்பு; இருபது வருட கால இடைவெளியில் இங்கும் அங்கும் தாவும் திரைக்கதை புதுசு. விஷாலும் எஸ் ஜே சூர்யாவும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். சிறிது நேரமே வந்தாலும் ரித்து வர்மா கட்டிப் போடுகிறார். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
கோமாளி காலம் தாவும் படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு காமெடி செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாகவும் செய்திருக்கிறார். அவரைத் தவிர விஷாலையும் சேர்த்து சற்று புளித்த வாடை அடிக்கும் பாத்திரங்களும் காட்சிகளும் அலுப்படைய வைக்கின்றன. பின்னாளைய உலகத்திற்கு போகும் அலைபேசி ரசிகனிடம் கிடைத்திருந்தால் விஷாலையோ ஆதிக் ரவிச்சந்திரனையோ பார்த்து இந்த கதையை கேட்டிருப்பார். படம் பார்ப்பது தவிர்க்கப்பட்டிருக்கும். – தி ஹிந்து.
ஒற்றை ஆளாக இந்தப் படத்தை தூக்கி நிறுத்துகிறார் எஸ் ஜே சூர்யா. எங்கேயும் இது ஒரு நவீனப் படம் என்று காட்ட முயற்சிக்கவில்லை என்பது இதன் உண்மை தன்மை. இதில் எடிட்டரின் பங்கு அளப்பரியது. அதோடு ஒளிப்பதிவாளரின் காட்சி கோணங்களும் ஒளி அமைப்பும் அசத்தல் – இந்தியன் எக்ஸ்பிரஸ்.
மார்க் ஆண்டனியின் உருவமும் அவர்தான். இதயமும் அவர்தான். எஸ் ஜே சூர்யா அதகளம் செய்திருக்கிறார். – தி ஹிந்து.
ஆர் யூ ஓகே பேபி

ஒர் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க எண்ணும் பெற்றோர் சந்திக்கும் சட்ட உணர்வு பூர்வமான சிக்கல்களை தெளிவாக காட்டுகிறது படம். குழந்தையின் தாயாக முல்லை அரசி, வளர்ப்பு அன்னையாக அபிராமி, தந்தையாக சமுத்திரக்கனி, முல்லை அரசியின் கணவராக அசோக்குமார் என பலரும் நடிப்பை கொட்டிக் கொடுத்திருக்கின்றனர். இளையராஜாவின் இசை பல்வேறு உணர்வுகளை இன்னும் மீட்டி இருக்கிறது. காலத்திற்கு ஏற்ற படம். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
கடத்தப்பட்ட சிசுவை முறையாக சட்டப்பூர்வமாக தத்தெடுத்ததாக நினைக்கும் பெற்றோர் ஒரு புறம்; சிசுவின் உண்மையான தாய் உண்மையை ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் போட்டுடைக்கும் டிவிஸ்ட். கடைசியில் என்னாச்சு என்பது தான் இந்தப் படம். தான் நடத்திய ஒரு லைவ் ஷோவை கொஞ்சம் பெயர் மாற்றி, தான் இயக்கும் படத்திலயே எந்த வித சம ரசமும் செய்து கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி சொன்ன லக்ஷ்மி ராமகிருஷ்ணாவிற்கு பாராட்டுக்களை சொல்லி விடலாம். இது போன்ற குடும்ப பிரச்சனைகளை வைத்து நடத்தப்படும் ஷோக்கள் அனைத்தும் விளிம்பு நிலையில் உள்ள மக்களை மைய்யப்படுத்தியே நடக்கின்றன என்பதை நடு நிலையோடு சொல்லி இருக்கிறார் லக்ஷ்மி. படத்திலும் ஒரு நிஜ லைவ் ஷோ நடுத்துபவராக நடித்துள்ளார். “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா “என சொல்லாததுதான் குறை. குழந்தையில்லா தம்பதிகளின் வலியையும், தத்து எடுப்பதில் உள்ள நடை முறை சிக்கல்களும் புரிய வைத்து விடுகிறார் இயக்குநர். தாய்மையின் அன்பையும், சில சட்ட சிக்கல்களையும், இந்த சிக்கல் களையப்பட வேண்டிய அவசியத்தையும் சொல்கிறது ‘ஆர் யூ ஒகே பேபி.’ – கல்கி இணைய இதழ்.
வளர்ப்பு தாய்க்கும் உயிரியல் தாய்க்கும் இடையே உள்ள பாசப்போராட்டம் குறித்த கதை கேள்விப்படும்போதே சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. அந்த சுவையை தர முடிகிறது படத்தால்- மாலை மலர்.
அப்பத்தா
திரையரங்குகளுக்கு வராமல் ஜியோ சினிமாவில் நேரடியாக காணக் கிடைக்கிறது இந்தப் படம். பல வருடங்களின் அனுபவத்தில் தன் 96வது படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். ஒரு நாயின் பல் வேறு உணர்வுகளை திரையில் காட்டுவது கடினம். நாய்களின் மீது பாசம் காட்டுபவர்கள் சற்று உணர்ச்சி வசப்படுவார்கள். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
அரை வேக்காடு சமையலாக முடிந்திருக்கிறது அப்பத்தா. இன்னும் கூட ஊர்வசியின் திறமையை ஆழமாக சித்தரித்திருக்கலாம். -தி ஹிந்து.
தனது 700வது திரைப்படத்திற்குக் கச்சிதமான கதைக்களத்தைத் தேர்வு செய்திருக்கிறார், ஊர்வசி. ஊர்வசியின் எமோஷனல் பக்கம் நமக்குப் பரிட்சியமான ஒன்றுதான். ஆனால், ‘அப்பத்தா’வாக வாழ்ந்து மாறுபட்ட எமோஷனல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் அனுபவத்தால் அந்த வயதான கதாபாத்திரத்திற்குத் தேவையான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில இடங்களில் கலங்கவும் வைக்கிறார். கிராமப்புற சுற்றுச்சூழலை அசலாகப் படம் பிடித்து திரையெங்கும் பச்சை வண்ணத்தை நிறைக்கிறது மது அம்பாட்டின் ஒளிப்பதிவு. எமோஷனல் காட்சிகளில் ராஜேஷ் முருகேசனின் இசை மேலும் உருக்குகிறது. – சினிமா விகடன்.
டீமன்

எவ்வளவோ மாறுபட முயன்றாலும், இதுவரை பார்த்த ஹாரர் படங்களை விட்டு விலக இயக்குனர் ரமேஷ் பழனிவேல் செய்த முயற்சிகள் பலனளிக்காமல் சராசரி படமாக டீமன் வந்திருக்கிறது. அபர்நதியுடனான நாயகன் சச்சினின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அதோடு படத்தை ஒரு காதல் கதையாக எடுத்திருக்கலாமோ என்றொரு எண்ணமும் வருகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
காதைக் கிழிக்கும் இசை. சராசரிக்கும் கீழான திரைக்கதை; மிதவேகக் காட்சிகள் என்று டீமன் ரசிகனை தொங்கலில் விட்டு விடுகிறது. எழுத்தில் எழுதியதை காட்சிப்படுத்த தவறிவிட்டார் இயக்குனர். – சினிமா எக்ஸ்பிரஸ்.
சித்தா
சென்ற வருடம் வெளியான அற்புதமான படமான கார்கியின் தோழியாக மலர்ந்திருக்கிறது சித்தா. கார்கியில் போராளி பெண் என்றால் இதில் ஆண். இது ஒரு வேற்றுமை. ஆனால் இயக்குனர் எஸ் யூ அருண்குமார் எழுதிய விதத்திலும் காட்சிப்படுத்திய தோரணையிலும் அதீத நம்பிக்கையை விதைத்திருக்கிறார். சபாஷ். தந்தையற்ற சுட்டிப் பெண் சேட்டை, சித்தப்பா ஈஸ்வரனுடன் நெருக்கமாகும் ஆரம்பக் காட்சிகள் அல்வா துண்டு. இடைவேளை வரும்போது, அழுத்தத்தின் உச்சத்தில் மீதி படத்தை பார்க்காமல் ஓடி விடலாமா எனும் பதைப்பு மனதுள் வருவது நிஜம். நடித்த கலைஞர்கள் எல்லாம் உயிரைக் கொடுத்து பாத்திரங்களை கண் முன் உலவ விட்டிருக்கிறார்கள். சித்தார்த் இதுவரை நடித்த படங்களில் இதுதான் மிகச் சிறந்த ஒன்று. சகஸ்ரா ஸ்ரீயின் குட்டிப் பெண் வேடம் அற்புதம். அதோடு பாதிக்கப்பட்டவர்கள் ஓடி வந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்வது இன்னும் சில தளங்கள் படத்தை உயர்த்துகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
பத்து வருடங்களுக்கு முன் வந்த கொரியன் படமான தி ஹோப் இவர்களை வெகுவும் பாதித்திருக்கிறது. எவ்வளவு பாதிப்பு என்றால் சில காட்சிகளை அப்படியே இதில் வைக்கும் அளவிற்கு. ஆனாலும் சித்தார்த்தின் சினிமா பயணத்தில் இது ஒரு மைல் கல் என்பதில் சந்தேகமில்லை. நடித்த இரண்டு குழந்தைகளும் மனதை அள்ளுகின்றன. நிமிஷா சஜயனின் பாத்திரம் தேவையற்ற ஒன்று. சில வசனங்கள் யதார்த்தத்தை மீறி இருக்கின்றன என்பதும் உண்மை. ஒரு முறை பார்க்கலாம் எனும் ரகம். – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
இறைவன்
ஒரு நல்ல சைக்கோ திரில்லர். அழுத்தமான பாத்திரங்கள். ஆனால் பாதி வழியில் இலக்கை கோட்டை விடுகிறது படம். இடைவேளைக்குப் பிறகு வில்லன் ஹீரோ எலி பூனை விளையாட்டாக மாறி விடுவது தான் இதன் குறை. ஜெயம் ரவியின் நடிப்பு இந்தப் படத்திற்கு பெரிய பலம். அது படத்தைக் காப்பாற்றுகிறது. கூடவே நயன்தாரா, நரைனின் பாத்திரங்கள் கூடுதல் கனத்தைக் கொடுக்கின்றன. யுவனின் இசை பெரிய ப்ளஸ். பல காட்சிகளை அடுத்த தளத்திற்கு உயர்த்தும் வேலையை இசை செய்கிறது. ஆனால் பயணம் முடியாத அதிருப்தி ஏற்படுகிறது முடிவில். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
எல்லா இழப்புகளும் ஹீரோவுக்கு ஏற்படுவது படத்திற்கு கை கொடுக்கவில்லை. படத்தை தன் அபார நடிப்பால் காப்பாற்றியிருக்கிறார் ஜெயம் ரவி. அந்த கதாபாத்திரமாக மாறி நம்மை அவருக்காக பாவப்பட வைத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.
நல்ல சைக்கோ த்ரில்லராக உருவாக்கப் பட்டிருக்கிறது இறைவன். ஆனால் சில இடங்களில் திரைக்கதை வலுவில்லாமல் போக சுமார் ரகமாக்கிவிட்டது. – சமயம் தமிழ்
வழக்கமான சைக்கோ திரில்லர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறது படம். படத்தின் கடைசி பகுதி அரை வேக்காடு. – தி ஹிந்து.
ஒரு திரில்லருக்கான அனைத்து விடயங்களும் படத்தில் உண்டு.அதை திரையில் இன்னொரு தளத்திற்கு உயர்த்த தவறி விட்டார் இயக்குனர் அகமத். – இன்டியா டுடே.
சந்திரமுகி 2

கொஞ்சம் பொழுது போனா ஓகே என்பவர்களை ஈர்க்கும். வித்தியாசமான படம் வேண்டுவோரை அலுப்படையச் செய்யும். ஆனாலும் மோசமான படமில்லை என்று நினைப்பதற்கு இயக்குனர் பி வாசுவின் பங்களிப்பு மிக அதிகம். சந்திரமுகி, வேட்டையனின் பின் கதையை வாசு சொன்ன விதம் நம்மை எழுந்து உட்கார வைக்கிறது. முதல் பாகத்தில் பார்த்த அல்லது எங்கோ கேட்ட கதையை சுவாரஸ்யமாக படமாக்கிய விதம் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. நம்மை சிரிக்க வைக்க வடிவேலு செய்யும் முயற்சிகள் அயர்வுக்கு கொண்டு போகின்றன. ரஜினியை தொட முடியாது என்றாலும், ராகவா லாரன்ஸ் நம்மை கவனிக்க வைக்கிறார். அதேபோல் கங்கனா ரணாவத்தும். கீரவாணியின் இசை வித்யாசாகரின் அடி தொட்டு ஒலிக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
சந்திரமுகி 2 ஹாரரும் இல்லை. காமெடியும் இல்லை. தீர்மானத்தோடு சராசரி படம் கொடுக்க செய்த முயற்சி. படத்தின் பின் பாதியில் வரும் ‘போதும் போதும்’ எனும் பாடலை ரசிகனும் பாட வேண்டிய கட்டாயம். – இந்தியா டுடே
ஹிட்டடித்த முதல் பாகத்தின் மேல் கறையைப் பூசும், மூளையை மரத்து போக வைக்கும் படம். ரஜினி வடிவேலு காமெடியை ராகவா லாரன்ஸுடன் மீட்டெடுக்க செய்யும் முயற்சி பரிதாபமாகத் தோற்கிறது. – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.
கங்கனா ரனாவத் சொன்னதை செய்திருக்கிறார். ஒலிக்கும் பாடல்களுக்கு ஆடுகிறார். லட்சுமி மேனனும் ராதிகாவும் அதிக பங்களிப்பு இல்லாமல் கடந்து போகிறார்கள். யாரும் கேட்காத இரண்டாம் பாகம் ஆங்காங்கு சுவாரஸ்யம். – தி ஹிந்து.
#

