(ரஸவாதி)

 

 

‘சார்’ சில நினைவுகள்- தி ஜானகிராமன்  பற்றி ரசவாதி அவர்கள் எழுதிய கட்டுரை: 

ஜானகிராமன் படைக்கும் உலகம் லட்சியவாதிகளால் நிறைந்தது!' - கதை சொல்லிகளின் கதை | Life history of Tamil writer Thi. Janakiraman - Vikatan

           “ப்ரைஸ் வாங்கியிருக்கிற இந்த நாவல மேனுஸ்கிரிப்ட்லேயே படிச்சவன் நாந்தான்.  கலைமகள் ஜட்ஜுகளெல்லாம் அப்புறந்தான் படிச்சிருக்கா.  இதுல நான் ரொம்பப் பெருமைப்படறேன்.  கர்வப்படறேன்”

           ஜானகிராமன் சாரைத் தவிர வேறு எவர்க்கும் இப்படிப் பேசத் தெரியாது.  நிச்சயமாக வரவே வராது.  1957 இல் எனக்குக் கிடைத்த தனிப்பட்ட கௌரவம் இது.

           ஆதாரசுருதிக்கு வெள்ளி விழா நாவல் போட்டியில்  ஆயிரம் ரூபாய் பரிசு செய்தி கேட்டு வாழ்த்திய நண்பர்களுக்கு என் வீட்டில் விருந்து.  தொடர்ந்து நடந்த சிறு பாராட்டுக் கூட்டத்தில் லா.சா.ராமாமிர்தம் மாலை அணிவித்து என்னை ஆசிர்வதித்தார்.  சார் பாராட்டிப் பேசினார்.  இதை விட வேறு என்ன க்ரீடம் வேண்டும், இருபத்தி ஒன்பது வயது இளம் எழுத்தாளனுக்கு?

           1948இல் ஆனந்தவிகடனில் வந்த ‘ராஜ திருஷ்டி’யைப் படித்து விட்டு அவருக்குக் கடிதம் எழுதினேன்.  பதில் போடும் பழக்கம் அப்போது அவருக்கு இல்லை.  பின்னர் 1958இல் ரேடியோவில் சேர அவர் சென்னைக்கு வந்தபோது தான் சந்தித்தேன்.

           “லெட்டர் போட்டேளே வந்தது!” என்றார் புன்சிரிப்புடன்.  அதுவே போதும்.  அன்றிலிருந்து அவர் டில்லிக்குப் போகும் வரையில் நானும் ஜடாதரனும் (பால்யூ) அட்டை மாதிரி அவரிடம் ஒட்டிக் கொண்டோம்.  தினம் வந்து போகிற எங்களை குழந்தைகளான சாகேதும், உமாவும் கண்களில்  வியப்புடன் பார்ப்பார்கள்.  அந்த சிநேகம் எங்கள் இருவருக்கும் ஒரு பெரிய பாக்யம்.  அந்தப் பழக்கத்தின் நினைவுகளெல்லாம் சிறந்த கவிதைகள் மாதிரி.

           ‘மோக முள்’ளும், ‘மலர் மஞ்சமும்’ தொடர்கதையாக சுதேசமித்திரனில் வந்த போது வாராவாரம் அவர் வீட்டில் ஆஜாராகி விடுவோம்.  கையெழுத்துப் பிரதி அல்லது ப்ரூஃப் ஏதாவது இருக்கும்.  ஆர்வத்துடன் படிப்போம்.  அந்த வாரம் எழுதினதைப் பற்றி ஏன், எப்படி, எதனால் என்றெல்லாம் கேள்விகளைத் தொடுப்போம்.  சில சமயங்களில் பொறுமையாக பதில் சொல்வார்.  அநேக தடவைகள் வெறும் புன்சிரிப்புத்தான்.  அதில் ஆயிரம் அர்த்தங்கள். 

           எழுத்து என்றால் சாதாரண எழுத்தா அது?    மற்ற எழுத்தாளர்கள் கிட்டே ஒரு பிரமையையும், பிரமிப்பையும், பயம் கலந்த மரியாதையையும் சார் ஒருத்தர் தான் உண்டு   பண்ணினார்.    நிச்சயமா அவரைப் போல் இன்னொருத்தர் ‘ந  பூதோ ந பவிஷ்யதி’.

           ‘ஸ்ரீ காந்திமதீம்’ என்கிற தீக்ஷிதர் கிருதி எனக்குப் பாடம்.  எப்படி?  சாருக்கு பத்தமடை சுந்தரமய்யர் கற்றுக் கொடுத்த போது நானும் கூடவே உட்கார்ந்து கற்றுக் கொண்டது தான்.  இலக்கியம் மட்டுமல்ல.  கர்நாடக சங்கீதமும் எங்கள் சம்பாஷணைக்கு ஒரு காரணமாக இருந்தது.  ராகங்கள், ஸ்வரப்ரஸ்தாரங்கள் கீர்த்தனைகள் எல்லாவற்றையும் பற்றிப் பேசுவோம்.  சாமா ராகம் அவர் பாடிக் கேட்டிருக்கிறேன்.  “ரெண்டு மத்திமத்தையும் மாத்தி மாத்தி கரெக்டா அந்தந்த ப்ளேஸ்லே போட்டு மூர்ச்சனைகள் விழறதினாலேதான் சாரங்கா அழகா இருக்கு”  என்பார். தேர்ந்த சங்கீத ஞானம், அறிவுக் கூர்மை, நிறையப் படித்து அறிந்து புரிந்து தெளிவு கண்ட ஒரு சிந்தனை, வலிமை பொருந்திய எழுத்து இதெல்லாம் அவருக்கு வரப்பிரசாதம்.

           மனுஷ்யஸ்வபாவங்களில் உள்ள நேர்கள், கோணல்கள், செடி, கொடி, மரங்கள், பறவைகள் மிருகங்கள், நதிகள், தடாகங்கள் எதுவுமே அவர் பார்வையில் பட்டதும் அவர் மனதில் ஆழமாக ஒரு புகைப்படம் போல பதிந்து விடும்.  அதை நூலிழை பிசகாமல் அப்படியே அநாயாசமாக எழுத்தில் கொண்டு வர சார் ஒருவரால் தான் முடிந்தது.  “வேற்றுத் தெருவில் அடி எடுத்து வைக்கும் நாயைப் போல ஜூனியர் மெதுவாக உள்ளே வந்தார்” (பரதேசி வந்தான்), “விளக்கு எரியலேன்னு யாராவது போய்ச் சொன்னாத் தேவலை என்பார்”.  யாராவது என்பதற்கு அவரைத் தவிர வேறு யாராவது என்று அர்த்தம் (கோபுர விளக்கு) இதெல்லாம் ஞாபகத்திலிருந்து வருகிற ஓரிரு உதராணங்கள். கிண்டல், குத்தல், லேசான கேலி இவை விரவிக்கிடக்கும் அவர் கதைகளிலே. (‘கேட்காத காதுக்கு கடுக்கன் என்ன மாட்டல் என்ன’, ‘அறிவு இருந்தால் வக்கீல் தொழில்தான் பண்ணணுமா’,  ‘இப்படிப்பட்ட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தான் தேங்காய்க்கும் பூவன் பழத்துக்கும் மத்தியில் நிற்கும் குத்து விளக்குப் போல அவள் இருந்தாள்’)

           சார் விமர்சனங்கள், அபிப்பிராயங்கள் தனிரகம்.  வாய்விட்டுப் பாராட்டுவது அபூர்வம்.  நிறைய எழுத்தாளர்களுக்கு தன் கதையைப் பற்றி சாரின் அபிப்ராயம் என்ன என்று தெரிந்து கொள்ள ரொம்ப ஆசை.  நேரில் வந்து கேட்டால்,”நன்னா வந்திருக்கே!” என்பார் புன்சிரிப்புடன்.  ஆனால் அவருடன் நெருங்கிப் பழகிய எங்களுக்குத் தான் தெரியும்,”நன்னாவே எழுதியிருக்கான் சார்!” என்று அந்த ‘வே’யில் ஒரு அழுத்தம் கொடுத்து சில சமயங்களில் சொல்வது மட்டுந்தான் நிஜமான பாராட்டு என்று.  அவர் ஒரு வசிஷ்டர்.  பிரம்மரிஷி பட்டம் வாங்குவது அவரிடம்  ரொம்ப ரொம்ப கஷ்டம்.

           டில்லிக்கு சார் போனதில் எங்கள் தொடர்பு வெகுவாகக் குறைந்தே போய் விட்டது.  சில மாதங்களுக்கு முன்பு அவரையும் சிட்டியையும் பஸ்ஸில் சந்தித்தேன். “பொண் கல்யாணம் நன்னா நடந்ததா? (பெரிய பெண் ரேவதி) என் வாழ்த்து செய்தி கிடைத்ததா?” என்று பரிவுடன் விசாரித்தார்.  பிறகு அவரை நான் பார்க்கவேயில்லை.  ஆனால் அவரை நிரந்தரமாகப் பார்க்க முடியாமல் போய்விடும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. 

           பொக்கிஷம் போல பல அனுபவங்களை அவாது மரணம் மீண்டும் மனசில் கிளப்பி விட்டது.  ‘தவம்’ கதையில் கோவிந்த வன்னியர் சோடா பாட்டில்கள் பக்கத்தில் அமர்ந்து பத்து வருஷங்களை அசை போட்டார்.  அப்படித்தான் நானும் இப்போது இருக்கிறேன்.  புலம்பும் என் மனசு அடங்குவதற்கு வேறு என்ன செய்ய?

(1983 ஜனவரி மாத கணையாழியில் வெளியானது)

ரஸமாக எழுதிய ரஸவாதி

‘ரஸவாதி’ என்கிற திரு ஆர். ஸ்ரீநிவாசன் 06.10.1928 இல் திருச்சியை அடுத்த துறையூரில் பிறந்தவர்.   சிறு வயதில் துறையூரிலேயே தாய் வழிப் பாட்டனார் வக்கீல் கோபாலய்யர் வீட்டில் தங்கி பள்ளியில் படித்த காலம் இவர் வாழ்க்கையின் பொற்காலம் என்றால் மிகையாகாது.  சிறுவயதிலேயே சிறந்த இலக்கிய ரசனையுள்ள அன்பான மிகப் பொறுமையான தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தது பிற்காலத்தில் பெரிய எழுத்தாளராகவும் அன்பான தந்தையாகவும் மிகச் சிறந்த பண்பாளராகவும் உருவாக அடித்தளமாக அமைந்தது.   இயற்கையாகவே தஞ்சை மண்ணில் பிறந்தவர்களுக்கு இருக்கக்கூடிய சங்கீத ஞானத்தை பிற்காலத்தில் புல்லாங்குழல் மேதை  திரு மாலியிடம்  குருகுல முறையில் புல்லாங்குழல் கற்று அபிவிருத்தி செய்து கொண்டார்.  இவர் திரு மாலியிடம் சங்கீதம் பயின்றபோது இவருடைய சக மாணவர் புல்லாங்குழல் வித்வான் திரு.என்.ரமணி அவர்கள்.

எழுத்தாளராக ஆவதற்கு முன்னோடி அனுபவமாக அந்த காலத்தில் கையெழுத்துப் பத்திரிகையொன்றும் நடத்தியிருக்கிறார்.  அதில் இவருக்குத்  துணை நின்றவர்கள்  திரு ஸ்ரீ வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) மற்றும் பிற்காலத்தில் கர்நாடக சங்கீதத்தில் விற்பன்னராக விளங்கிய திரு டி.ஆர்.சுப்ரமணியம் ஆகியோர்.

1942 இல் ‘வெள்ளையனே வெளியேறு’ கோஷத்துடன் சென்ற ஊர்வலத்தில் இவர் சக மாணவரான  தொ.மு.சி.ரகுநாதனுடன் போலீசாரிடம் பலத்த தடியடி வாங்கிய அனுபவமும் உண்டு.  மிகுந்த தேசபக்தியுள்ள ரஸவாதி  தன் வாழ்நாள் முழுவதும் கதர் வேட்டியும் ஜிப்பாவும் மட்டுமே அணிந்து கொள்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்.

கல்லூரி நாட்களிலேயே எழுதத் தொடங்கிய இவருக்கு  1949 இல்  ராஜத்துடன்  திருமணம் நடைபெற்றபோது தன்னுடைய 21 ஆவது வயதிலேயே புகழ் பெற்ற எழுத்தாளராக இருந்தார்.

ரஸமாக எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்கக்கூடியவர் என்ற பொருளில் ‘ரஸவாதி’ என்ற புனைபெயர் வைத்துக் கொண்டார்.  அந்த காலகட்டத்திலிருந்த சிறந்த இலக்கிய மாதப் பத்திரிகைகளான ‘அமுதசுரபி’ நாவல் போட்டி பரிசும் (அழகின் யாத்திரை) ‘கலைமகள்’ நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டி (ஆதாரஸ்ருதி)  பரிசும் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. அப்பொழுது இவருக்கு வயது வெறும் 29 தான்! அமுதசுரபி ஆசிரியர் திரு.வேம்பு என்கிற விக்கிரமன் மீதும் அந்த நாளைய கலைமகள் ஆசிரியர் திரு.கி.வா.ஜ. மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.  இவரின் எண்ணற்ற சிறுகதைகள் திரு கி.வா.ஜ அவர்கள் கலைமகள் ஆசிரியராக இருந்தபோது கலைமகளில் அவரால் விரும்பி பிரசுரிக்கப்பட்டது.

பின்னர்,  பரிசு பெற்ற அந்த நாவல்களில் ‘அழகின் யாத்திரை’ மேடை நாடகமாக ரஸவாதியாலேயே மேடை ஏற்றப்பட்டு, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவரே நடிக்கவும் செய்தார். ‘ஆதார ஸ்ருதி’ புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேஸ அய்யங்கார் அவர்களின் பேத்தி திருமதி.ரமாதேவியால் (பிலாஸபி என்கிற புனை பெயரில் எழுதுபவர்) மொழி பெயர்க்கப்பட்டு ‘ஜீவனா’ என்கிற கன்னட வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

சக எழுத்தாளர்களான தி.ஜானகிராமன், கு.ப.ரா., நா.பிச்சமுத்து, எம்.வி.வெங்கட்ராம், மீ.ப.சோமசுந்தரம், பி.எஸ்.ராமையா வல்லிக்கண்ணன் ஆகியவர்களுடன் நல்ல பரிச்சயம் இருந்திருக்கிறது.  இவரும் திரு.தி.ஜானகிராமனும் ஒருவர் எழுத்தை மற்றவர் கையெழுத்துப் பிரதியாகவே வாசித்து விமர்சித்த அனுபவங்களும் உண்டு.  திரு.சுகி.சுப்ரமணியம், நாங்குநேரி சீ.வரதராஜன் (பீஷ்மன்), லா.ச.ரா ஆகியோர் மற்ற நெருக்கமான எழுத்தாள நண்பர்கள். 

இவர் தபால் தணிக்கை அலுவலகத்தில் வேலை செய்தபோது இவரின் சக உத்யோகஸ்தர்களான திரு கே.ஆர்.கல்யாணராமன் (மகரம்), திரு.ஜடாதரன் (பிற்காலத்தில் பால்யூ என்ற புகழ்பெற்ற குமுதம் நிருபராக உருவானவர்) ஆகியோர்களும் எழுத்தாளர்களே!  திரு.பால்யூவையும் இவரையும் ‘எழுத்துலக இரட்டையர்கள்’ என்று குறிப்பிடும் அளவுக்கு இருவரும் மிக அத்யந்த சினேகிதர்களாக விளங்கினார்கள்.  1957இல்  கல்கத்தாவில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார்.

நாடக்கலை மீது ஆர்வமீதூற  மதராஸ் நாடக சங்கத்தில் சேர்ந்து படித்து நாடக்கலையில் ‘டிப்ளமோ’ பெற்றார்.   திரு எஸ்.வி.சஹஸ்ரநாமத்தின் ‘சேவா ஸ்டேஜ்’ குழுவின் முக்கிய நாடகங்களான ‘பிரஸிடன்ட் பஞ்சாட்சரம்’, ‘பாஞ்சாலி சபதம்’ போன்றவற்றில் நடித்த அனுபவங்களும் இவருக்கு உண்டு.  

பிறகு இவரே எழுதி மேடையேற்றிய நாடகங்களில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பிற்காக எழுதிய ‘தி பெட்’, நாடகத்தை சிறந்த நாடகமாக நினைவு கூறுகிறார் புகழ் பெற்ற நாடக நடிகரும்  இவரது சகோதரி திருமதி மங்களத்தின் கணவருமான  ‘பின்னி திரு கே.ராமச்சந்திரன்’ அவர்கள்.  புகழ் பெற்ற  நடிகரும் மூத்த நாடகக் கலைஞருமான திரு வி.ஸ்.ராகவனின் ஐ.என்.ஏ. தியேட்டருக்கு எழுதிய ‘வழி நடுவில்’ நாடகம் மதராஸ் மாநிலத்தின் இயல் இசை நாடக மன்றத்தின் பரிசினை வென்றது.   ‘வழி நடுவில்’ நாடகம் கன்னட நடிகர் திரு வாதிராஜ் அவர்களால் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.  1960களில் சென்னை வானொலி நிலையத்தில் இவருடைய எண்ணற்ற நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன.  இவருடைய ஒரு சிறுகதை ‘உயிர்’ என்ற பெயரில் சினிமாவானது.  தயாரிப்பாளர் பி.ஆர்.சோமுவிடம் உதவி இயக்குனராக ‘எங்கள் குல தெய்வம்; என்ற படத்தில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.

மத்திய அரசு தபால் தணிக்கை அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றதும், பக்கவாதத்தால் தாக்கப்பெற்று வலது கை செயலிழந்து போன போது சிறிதும் மனந்தளராமல் விடா முயற்சியோடும் பகவான் ஸ்ரீ ராமரின் மேல்  அபார நம்பிக்கையோடும் லட்சக்கணக்கில்  ‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதி தன் கையைச் சரிப் படுத்திக் கொண்டார்.  அதோடு மட்டுமில்லாமல், அதற்குப் பிறகும் ஒரு  நாவலை அதே மணி மணியான கையெழுத்தில் எழுதியதை  கேள்விப்பட்டு  மனம் நெகிழ்ந்து போன கலைமாமணி திரு விக்கிரமன் அவர்கள் அமுதசுரபி பத்திரிகையில் இதை ஒரு செய்தியாகவே வெளியிட்டார். ‘சேது பந்தனம்’ என்ற அந்த நாவல் அவர் மறைவுக்குப் பின் கலைமாமணி திரு விக்கிரமன் அவர்களின் மகாகவி பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பெற்று மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இவருடைய எழுத்திலேயே மெலிதான நகைச்சுவை இழையோடுவதை நாம் பார்க்க  முடியும்.

புகைப்படக்கலையிலும் ஜோதிடக்கலையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு கற்றுக் கொண்டவர்.  மிக அழகாக வரைவார்.   சிறிது காலம் ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ விற்காக பகுதி நேர நிருபராக வேலை பார்த்த அனுபவமும் இவருக்கு உண்டு.

இவருக்கு மூன்று பெண்கள், நான்கு பையன்கள்.  தன் வாழ்நாள் முழுவதும் பொருளாதார ரீதியில் எண்ணற்ற சோதனைகளையும் இடர்ப்பாடுகளையும் சந்தித்த போதும்,  விடா முயற்சியும், தன்னம்பிக்கையும், மன உறுதியுமும் பூண்டு எல்லோருக்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக (ரோல் மாடல்) வாழ்ந்து காட்டியவர்..

பணத்தை என்றுமே ஒரு பொருட்டாக எண்ணியதில்லை.  “அது வரும். போகும். அவ்வளவுதான்!” என்று  எளிதாக எடுத்துக் கொள்வார்.   மிக எளிமையாக வாழ்ந்தவர்.  அவர் தேவைகளே மிகக்குறைவு.   பன்னீர் புகையிலையை உள்ளங்கையில் அழுந்தத் தேய்த்து ரசனையோடு   வெற்றிலை போட்டுக் கொள்வார்.  அலுவலகமாக இருக்கட்டும் அல்லது வீடாக இருக்கட்டும் எப்போதுமே அவர் இருக்கும் இடத்தில் சிரிப்பும் குதூகலமும் இருக்கும்.  வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அணுவணுவாக ரசித்து  சந்தோஷமாக வாழ்ந்து, தன் கூட இருந்தவர்களையும் எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொண்ட ரஸவாதி 1994இல் தன் 66 ஆவது வயதிலேயே மறைந்து போனார்.