அறியாத வயசு


“பையனுக்கு அறியாத வயசு. அவன் எப்படி தனியாப் போவான். நீங்க அவன் கூடப் போய் தங்குறதுக்கு, சாப்பாட்டுக்கு நல்ல இடமா பார்த்துக் கொடுத்துட்டு வாங்க”. இது அப்பாவிடம் அம்மாவின் தாய்ப் பாசம் பேசியது.
“முதல் நாளே எப்படிப்பா லேட்டா போறது” மனசு நினைத்ததை வாய் கேட்க மறுத்து விட்டது. “சரிங்கப்பா” எனக்கூறி கிளம்பினேன்.சரியாக மணி 10.45 . தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, ஆனால் மேனேஜர் எப்படிப் பட்டவரோ?
சிடு மூஞ்சியாக இருந்தால் என்ன சொல்லித் திட்டுவார். அனுபவம் இல்லாததால் அறிவுக்கு எட்டவில்லை. வந்தது வரட்டும், எதுவாய் இருந்தாலும் அவர் ரூமில் வைத்துதானே திட்டப் போகிறார், பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டே வங்கியுள் நுழைந்தேன்.மேனேஜர் R. மகாதேவன் பெயர்ப் பலகை இருந்தது ஆனால் ரூம் காலியாக இருந்தது, அப்பாடி, நிம்மதி. ஒரு கண்டம் தாண்டியாச்சு.
‘மேனேஜர் எப்ப வருவார்’ முதல் கவுன்டரில் இருந்தவரிடம் மெதுவாகக் கேட்டேன்.
‘அங்கே உட்காந்திருக்காரே, அவர்தான்’ கையைக் காட்டினார்.
கண்ணாடி அவர் மூக்கின் மேல் இருந்தது. மேஜை முழுதும் லெட்ஜர்கள். கையில் கத்தையாக வவுச்சர்கள், தொலைந்து போன எதையோ வவுச்சரை வைத்து லெட்ஜரில் தேடிக் கொண்டிருந்தார்.அருகில் சென்று நின்றேன். வேஷ்டி சட்டையில் இருந்தார். தொலைந்தது கிடைக்க வேண்டுமென வேண்டி அவர் கோவிலுக்குப் போய் வந்ததை நெற்றி காட்டியது. கண்ணாடியை மூக்கிலிருந்து கண்களுக்கு நகர்த்திக் கொண்டே என்னை நிமிர்ந்து பார்த்தார். ஆர்டரைக் கொடுத்தேன்.படித்தார். கடிகாரத்தைப் பார்க்காமலே என்னிடம் ‘இப்ப மணி என்ன’ என்றார். நான் சற்று பயத்துடன் ‘11 சார்’ என்றேன். அவர் ‘சரி, இன்னைக்கு இராகு காலம் 10.30க்கே முடிஞ்சிருச்சு. All the best, போய் accountant ஐ பாருங்க’ என்று சொல்லிக் கொண்டே லெட்ஜருக்குள் மீண்டும் தேட ஆரம்பித்தார்.
வீட்டில் அவரும் ஒரு தந்தைதானே.காலைப் பொழுதை வங்கியை வேடிக்கை பார்த்தே கழித்து விட்டேன். மாலை ரூம் தேடும் படலம். முதலில் அம்மா கொடுத்த முகவரிக்குச் சென்றேன். P.D. சிதம்பர சூரிய நாராயணன் என பெயர்ப் பலகை கூறியது. பெயர்ப் பலகை வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஊரில் பெரிய மனிதர்தான். பெயரைப் போலவே அவரது மனசும் பெரிசு. முகவரி கொடுத்தவர் இவருடைய மனைவி வழிச் சொந்தம் எனவே வரவேற்பு பலமாக இருந்தது.
கிழங்குடன் பூரி, தோசை, காபி காலையில சாப்பிட ஒரு ரூபாய் ஆகும். இரவு ஒரு மாறுதலுக்காக தோசை, கிழங்குடன் பூரி, காபி சாப்பிட்டாலும் ஒரு ரூபாய்தான். அவ்வளவு அருமையாக இருக்கும். அதுக்கப்புறம், அந்த பூரி கிழங்கு நான் எங்கேயுமே சாப்பிட வில்லை.நம்ம கதைக்கு வருவோம். மாலை பேங்க் கதவைப் பூட்டியவுடன் கொஞ்சம் ஊர் சுத்திட்டு 9 மணிக்கு படுத்து நிம்மதியாகத் தூங்கி காலையில 9 மணிக்கு எழுந்து நான்கு நாட்கள் நன்றாகப் போனது.
ஐந்தாவது நாள் வங்கியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தேன். அருகே நின்ற குருசாமி பாவா (sub staff) ‘எங்க சார் தங்கி இருக்கீங்க” என்றார். அவரை வங்கியே பாவா என்றுதான் அழைத்தது. நான் இடத்தைக்கூறினேன். பாவா ‘ அப்படியா’ என இழுத்தார். மேலே கேட்டும் வேறு ஒன்றும் கூற வில்லை. மதியம் நான் படுத்திய பாட்டில் பாவா ‘அங்க யாரும் தங்க மாட்டாங்க சார்,ராத்திரியிலே யாரோ நடக்கிற மாதிரி சத்தம் வருமாம், ஜன்னல் தானா சாத்திக்குமாம்’ என்றார். இது போதாதா நமக்கு.
அன்று இரவு ஜன்னல் கதவுகளை எல்லாம் சாத்திவிட்டு, எல்லா விளக்குகளையும் எரிய விட்டு கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தேன். ராவ் கடையை 11 மணிக்கு சாத்தினார். இரவு ஒரு மணிக்கு இரண்டாவது ஷோ முடிந்து மக்கள் பேசிக்கொண்டே போனார்கள். மூன்று மணிக்கு இரண்டு நாய்கள் விடாது குரைத்தன. காலை நான்கு மணிக்கு பால் காரர் சைகிளில் சென்றார். காலை ஐந்து மணிக்கு ராவ் கடையைத் திறந்தார்.
