நாற்பது வருடம் முன்னால் பார்த்த ஒரு T V drama / serial / episode. என்ன பெயர் கொடுப்பது என்று தெரியவில்லை. கதாசாகர், ஏக் கஹானி என்று பல நல்ல நிகழ்ச்சிகள் வந்தன. ஒரு எபிசோட்  அல்லது இரண்டு எபிசோட் வரும். இது இரண்டு எபிசோட் கதை.

பாட்டியும், பேத்தியும் தனியாக வசிக்கிறார்கள்.  அந்த பெண் நித்யா . அவளின்  அப்பா இறந்துவிட்டார். அம்மா, அப்பாவின் நண்பரையே கல்யாணம் செய்து கொண்டு போய் விட்டாள். பாட்டி யோடு நினைவு தெரிந்த நாளிலிருந்து வாழ்கிறாள். அவளின் படம் கூட இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று தூர எறிந்து விட்டாள் பாட்டி. அம்மா முகமே தெரியாமல் வளர்கிறாள்  நித்யா . அழகான பெண் அவள். கல்யாண முயற்சி செய்யும் போதுதான் பிரச்சனை ஆரம்பித்தது. அம்மா வேறுகல்யாணம் செய்து கொண்டு விட்டாள்,  பாட்டியோடு தனியாக இருக்கிறாள் என்பதனால் வருபவர்கள் எல்லாம் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று போய் விடுகிறார்கள்.

கோபப்பட்டு பாட்டியிடம் கேட்கிறாள்.

“என்  அம்மா எங்கே இருக்கிறாள்? யாரோடு இருக்கிறாள்? சொந்த மகள் இங்க இப்படி இருக்கும் போது எப்படி நிம்மதியாக  இருக்கிறாள்? எத்தனை முறை கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறாயே ? இப்போது சொல். நான் அவளைக் கட்டாயம்   பார்க்க வேண்டும். கேட்க வேண்டும்”

பாட்டி , “பக்கத்து ஊரில்தான் இருக்கிறாள்” என்று சொல்லி விலாசமும் தருகிறாள்.

மிக மிக கோபத்தோடு வெளியே போகிறாள். கண்டபடி கேட்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டு போய் அம்மாவின் வீட்டுக் கதவைத் தட்டுகிறாள் நித்யா.

கதவு திறக்கப்படுகிறது. அழகான சாந்தமான சற்று வயதான ஒரு பெண் கதவைத்திறக்கிறாள். ஆச்சர்யத்தோடும், அன்போடும், பாசத்தோடும் பார்க்கிறாள். மலர்ந்த முகத்தோடு வரவேற்கிறாள்.

 

…. இந்த இடத்தில் அந்த இரண்டு வார தொடருக்கு, தொடரும் என்று போட்டு விட்டார்கள்.

அப்பா மகள் - சிறுகதைகள்மிகக் கோபத்தோடு, நிறைய கேட்க வேண்டும், என்று வந்தவளுக்கு வாய் அடைத்துக் போனது. பின்னால் அன்பான முகத்தோடு, ஆசையோடு பார்த்த ஒரு நடு வயது மனிதனப்  பார்த்ததும்.  ஏனோ அவள் தேக்கி வைத்திருந்த கோபம் பொங்கி வரவில்லை. 
“வாம்மா, வா உன் வீட்டுக்கு வா” என்று கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவுடன் கையை உதறி விடத்தான் முடியவில்லை.  ஆனால் உட்காந்த உடன் வார்த்தைகள் வந்து விழுந்தன. 
“நீ என் அம்மாவா?  எப்படியம்மா ஒரு பெண்ணை தவிக்க விட்டுட்டு நிம்மதியா வாழ முடிகிறது?   என்னைப் பற்றி யோசிக்கவே இல்லையா?  எப்படியம்மா?  அன்பான நல்ல பாட்டியாலதான்  நான் இப்போ இந்த நிலையில இருக்கேன்.  எப்படியம்மா? எப்படி? ” என்று கோபமாக கேட்டு விட்டு அழுகிறாள். 
பக்கத்தில் உட்கார்ந்து,  தலையை தடவிக் கொடுத்து.  “நித்யா..   நீ ஒரு அம்மாவை பார்க்க வந்து ஒரு பெண்ணைப்  பார்கிறாய்.  உன் எல்லா கேள்விக்கும் பதில் இருக்கு.  பொறுமையா கேளு” என்று சொல்லி பதில் சொல்லத் தொடங்குகிறாள். 
அந்த ஆளைக்காட்டி, “இவர் உன் அப்பாவின் மிக நெருங்கிய நண்பர்.  அடிக்கடி வீட்டுக்கு வருவார் வரும்போதெல்லாம் நித்யா, நித்யா ன்னு உன்னைக் கொஞ்சிக் கொண்டே இருப்பார்.  என் பெயர் கூட நித்யா அம்மான்னு தான்னு சொல்வார்.  அப்பா எப்போதாவது வேலை காரணமா லேட்டானா  உன்னை ஸ்கூலில் இருந்து ஆசையா அழைத்து வருவார்.  ஒரே வார்த்தையில் சொன்னால் உன் மேல் உயிரையே வைத்திருந்தார். நீ ரொம்ப சின்னவள் Pre KG  3 / 4 வயது இருக்கும்
உன் அப்பாவுக்கு ஒரு பெரிய நோய் வந்து, பிழைக்க மாட்டார்.  இன்னும் சில நாட்கள்தான் என்று சொல்லிவிட்டார்கள்.  அப்போது இவரிடம் அப்பா பேசி இருக்கிறார்.”
“என் பெண்ணையும், என் மனைவியையும் நினைத்து என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை.  என் அம்மா ரொம்ப நல்லவர். ஆனால் அவளுக்குப்பின் இவள் என் மகளை வைத்துக் கொண்டு என்ன செய்வாள் என்றே தெரியவில்லை.  நீதான் உதவி செய்ய வேண்டும்.  உன்னைத் தவிர வேறு யாரிடம் உதவி கேட்க முடியும்.  உனக்கும் ஒரு வாழ்க்கை குடும்பம் என்று வந்தாலும் நீ என் மகளுக்கு துணையாக இருக்க வேண்டும். “
வெகு நேரம் பேசிய பின் நித்யாவுக்கு நீ இருந்தால் எப்படி பாத்துக்குவியோ அப்படி பாத்துக்கறேன் கவலைப்படாதே’ என்று இவர் சொன்னார்.  
‘அதேபோல என் மனைவியையும் ஏத்துக்குவையா?  அவளும் சின்னவள்.  எப்படி இந்த உலகத்தை சமாளிப்பாள்  என்பது தெரியவில்லை .  எங்களுக்கு அம்மாவைத்  தவிர உறவு என்று யாரும் பெரிசா இல்லை ‘ என்று கையை பிடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டார். 
‘உன் மேல இருந்த ஆசையால இவர் உனக்கு அப்பாவா இருக்க சம்மதித்தார்.  நாங்கள் இன்றைய உன் வரவுக்காக வருடக் கணக்கா காத்துக் கொண்டு இருக்கிறோம்.  என்றாவது நீ வருவாய் என்று தவமாக தவமிருந்தோம். “
“ஏன் பாட்டிகிட்ட சொல்லிட்டு என்னை கூட்டிக்க வேண்டியது தானே?” எனக்கு என்ன ஆச்சுன்னுகூட கவலைப் படாமல் எப்படி இருந்தீர்கள்?’  என்று நித்யா கேட்க அவர் பேச ஆரம்பிக்கிறார். 
“நித்யா, ஒவ்வொரு தீபாவளிக்கும் என்ன டிரெஸ் போட்டுண்டே, உன் ஒவ்வொரு எக்ஸாம்லேயும் எவ்வளவு மார்க், எது வீக், எது ஸ்ராங் அப்படீன்னு எல்லாம் தெரியும்.  உன் பாட்டி அப்பாவோட பென்ஷன் அக்கவுன்ட்ல க்ரெடிட் ஆகுதுன்னு நினைத்து எடுக்கறாளே அது இந்த அப்பாவுது.  எங்களுக்கு நீ மட்டும்தான்.  இங்க உள்ள வந்துபார் இது உன் அறை.  நீ அன்னிக்கு வந்தாலும் வரவேற்க 20 வருஷமா காத்திருக்கு.  அந்தந்த வயசுக்கு ஏற்ற பொருட்கள் இருக்கு.  இப்போ உனக்காக போன வாரம் வாங்கிய டிரஸ் இது.  உங்க பாட்டி எங்களை மன்னிக்கவே இல்லை.  நாங்களும் அந்த நல்ல மனுஷிகிட்டே இருந்து உன்னை பிரிக்க விரும்ப வில்லை.  அவருக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை. எங்களைக்  காட்டிக் கொள்ளக் கூடாது என்பது உன் பாட்டியின் கண்டிஷன்.  நீயாக வந்தால்தான் பேசணும் அப்படீன்னு சொல்லிட்டா” 
உன் வருகைக்காக இந்த வீடு, உன் அறை, நாங்க ரெண்டு பேர் எல்லோரும் வருஷம் கணக்கா காத்திண்டு இருக்கோம்.  வாம்மா வா” என்று அன்போடு சொன்னவுடன் “அப்ப்பா… அம்ம்மா” என்று சொல்லிக்கொண்டு  இருவரையும் கட்டிக் கொண்டு அழுவாள் நித்யா .  
திட்ட வேண்டும், கோபிக்க  வேண்டும் என்று வந்தவள் கண் கலங்கி உருகி கட்டிக் கொள்வதோடு…
எபிசோட் முடியும். 
நானும் கண் கலங்கினேன்.. அன்றும் .. இன்றும்..