வத்சலா மேடம் அவர்களின் கவிதைப் புத்தக வெளியீட்டு விழா ( வத்சலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள் -1991-2023) அக்டோபர் ஏழாம் தேதி மாலை தியாகராய நகர் அம்தாவதி குஜராத்தி ஸ்நாக் ஹவுஸ் ஸில் மிகச் சிறப்பாக நடந்தது .
அரங்கத்தில் நுழைந்தவுடன் கிடைத்த ஸ்வீட், காரம், டீ யுடன் கூடிய வரவேற்பு நம் உற்சாகத்தை அதிகப்படுத்தியது .
தொடர்ந்து அழகியசிங்கரின் ‘இசை புதிது ‘ குழும சாந்தி மேடம்’ அவர்களின் குழுவினரின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா இனிதே ஆரம்பித்தது .
நிகழ்வை நடத்திய பிரகிருதி பௌண்டஷன் வரவேற்பைத் தொடர்ந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உரை வழங்கிய தோழர் நா. வே. அருள் அவர்கள் வத்சலா மேடம் அவர்களின் கவிதை மேற்கோள்களோடும் தனது கவிதை நடைப் பேச்சோடும் , இடையில் பேசிய அனைத்து சிறப்புப் பேச்சாளர்களின் அறிமுகங்களோடும் சிறப்பாகத் தொகுத்து உரை ஆற்றினார்.
முதன்மைப் பேச்சாளர் கலைமாமணி திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் இலக்கிய உரை சங்க காலம் தொட்டு தற்காலம் வரை, மரபுக் கவிதை, புதுக் கவிதை ஆகிவற்றின் வரலாற்றை நமக்கு அறிமுகப்படுத்தியது . வத்சலா மேடம் அவர்களின் கவிதைகளை புதுக்கவிதை வகையிலே ‘ சிறுகதைக் கவிதை’ என்று சிறப்பித்து அவர் உதாரணம் காட்டிய ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறுகதை தான்.
தொடர்ந்த சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் அழகரசன் அவர்கள் ஆங்கிலக் கவிதைகளின்கூறுபாடுகளை விளக்கி வத்சலா மேடம் அவர்களின் கவிதைகளை , ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் உள்ள சவால்களைக் குறிப்பிட்டு , சிறப்பான பல கவிதைகளை வாசித்தார். இவை எல்லாம் ‘ஏமாற்றும் எளிமை வாய்ந்த கவிதைகள்’ என்று அவர் குறிப்பிட்டது சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்தது .
இந்த உரைகளுக்கு இடையே தனக்கு மிகவும் பிடித்தமான தனது கவிதைகளைப் பகிர்ந்து கொண்ட கவிதாயினி வத்சலா மேடம் அவர்கள் இறுதியாக தனது ஏற்புரையில் மனம் நெகிழ்ந்து அனைவர்க்கும் நன்றி தெரிவித்துப் பேசிய பேச்சு அனைவரையும் நெகிழ வைத்தது .
விழாவின் ஆரம்பத்தில் நூலைப் பிரசுரம் செய்த பிரகிருதி பௌண்டேஷன் முக்கியஸ்தர்கள், நவீன விருட்சம் ‘ அழகியசிங்கருக்கும் , குவிகம் ‘ கிருபானந்தன் ‘ அவர்கட்கும் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது .
மொத்தத்தில் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களும் அழகரசன் அவர்களும். தொகுப்பாளர் அருள் அவர்களும் வழங்கிய சிறப்புரைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அவர்கள் எடுத்துரைத்த வத்சலா மேடம் அவர்களின் கவிதைத் திறத்தை அவரவர் வார்த்தைகளில் ஒரே வரியில் சொல்வதானால் முறையே , ‘சிறுகதைக் கவிதை’, ‘ ஏமாற்றும் எளிமைக் கவிதை’, ‘வாழ்க்கைக் கவிதை’ என்று சொல்லலாம் .
வத்சலா அவர்கள் ஏற்புரையில் குறிப்பிட்டது போல் மூன்றையும் இணைத்து ‘ காலத்தின் கவிதை ‘ என்றும் சொல்லலாம். காலம் போல் என்றும் நிலைத்து நின்று அவர் தம் கவிதைத் திறத்தை நிறுவும் கவிதைகள் இவை .
அவரது கதைகளையும் கவிதைகளையும் படித்தவன் என்ற முறையில் நான் உணர்ந்தது. இது தனி ஒரு மனுஷியின் குரல் அல்ல, இது சமூகத்தின் சோகக் குரல், பகடிக் குரல், சுதந்திரக் குரல் என்று பரிணாம வளர்ச்சி அடைந்த ஒரு சரித்திரத்தின் குரல் . மகளிர் சமூகத்தின் குரல் . அவருக்கு வணக்கத்துடன் வாழ்த்துகள் .
நிகழ்வின் முடிவில் வத்சலா மேடம் அவர்களின் படத்தை வரைந்து அவருக்குப் பரிசளித்த நமது அழகியசிங்கரின் ‘ கலை புதிது ‘ குழும ஓவியர் உமா பாலு அவர்களின் ஓவியப் பரிசு வத்சலா மேடம் அவர்களை மிகவும் மகிழ்வித்ததைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.
இறுதியில் ‘இசை புதிது ‘ சாந்தி மேடம் குழுவினருடன் சேர்ந்து வந்திருந்தோர் அனைவரும் சேர்ந்து தேசீய கீதம் பாடிய விதம் விழாவின் சிறப்பான முடிவாக இருந்தது .
எங்களை இந்த சிறப்பான கவிதை நிகழ்விற்கு அழைத்துச் சிறப்பித்த வத்சலா மேடம் அவர்கட்கு மிக்க நன்றி







