1. நாய்க்குட்டி வேணும்!

         Pembroke Welsh Corgi Dog Breed Information & Characteristics  ஒரு புதுவீடு கட்டி, கிருஹப்பிரவேசம் செய்து முடித்து, ஒருவழியாகச் சில்லரை வேலைகளை ‘முடிக்கவைத்துக்’ குடி வந்தோம். இன்னும் சாமான்கள் எல்லாம் போட்டது போட்டபடியே இருக்க, சில சின்னச்சின்ன பிரச்சினைகளை சமாளித்து ஒருவழியாக ‘செட்டிலாக’ முயன்று கொண்டிருந்தோம். பன்னிரண்டு வயது மகன் அவனுடைய இசைத்தட்டைத் திரும்பவும் போட்டான்.

           “நாய்க்குட்டி வேணும்!” தினம் காலையில் செய்தித்தாளைப் பார்ப்பதும் தன் அப்பாவிடம் விவாதம் செய்வதுமாக இருந்தான். ஆம். ஒரு நாய் வேண்டித் தவமே இருந்தான் அவன். St. Bernard-லிருந்து ஆரம்பித்தான், பெரிய பெரிய நாய்களெல்லாம் நமது சிறிய வீட்டிற்குத் தோதுப்படாது என ஒரு வழியாகப் புரிய வைத்தோம்.

           முதலில் எனக்கு நாயைக் கண்டாலே அலர்ஜி. உங்கள் வீட்டில் நாய் இருக்கிறது என்று நீங்கள் சொல்லிவிட்டால் பின் உங்கள் வீட்டுப் பக்கமே கால்வைக்க மாட்டேன் நான். இது ‘நாய் என்றால் கடிக்கும்,’ என்ற ஆழ்மனத்து நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவதாக, இதனை உறுதிப்படுத்துவது போல, இரு உறவினர்களின் வீட்டு நாய்கள் என்னிடம் முறைத்துக் கொண்டு ஒன்று என்னைக் கடித்தும் விட்டது. அப்படிப்பட்ட நான் இந்த நாய் வேண்டும் எனும் வேண்டுகோளுக்கு எப்படி ஒத்துக் கொண்டேன் என்பது ஆச்சரியமே!

           நாய் வேண்டும் எனும் வேண்டுகோளின் பின்னணியில் ஒரு முக்கியமான செய்தியை வைத்தான் மகன். “எனக்கு ஒரு தம்பியோ தங்கையோ இல்லை. நாயாவது வாங்கித் தர மாட்டாயா?” எந்த மிகவும் பலஹீனமான இடத்தைத் தொட வேண்டுமோ அதை தொட்டுவிட்டான்; சாமர்த்தியசாலி! கணவரோ பின்வாங்காமல், “அதை நடக்கக் கூட்டிக்கொண்டு போவது,  அது சம்பந்தமான எல்லாவற்றுக்கும் நீயே பொறுப்பேற்பாயா?” எனச் சம்மதம் (இது நீர் மேல் எழுத்து என எனக்குத்தானே தெரியும்!!) வாங்கிக்கொண்டு சம்மதித்தார்.  

           வெகுநாட்களாகத் தேடினார்கள் அப்பாவும் மகனும்!. ஒருநாள் காலையில் சென்று ஒரு 6 – வாரத்துக் குட்டியை வாங்கிக் கொண்டு (காசு கொடுத்துதான்!!) வந்தார்கள். வெல்ஷ் கார்கி (Weish Corgi) என ஒரு உயர்ந்த ஜாதி. வெகு சமர்த்தாகத் துரு துருவென்றிருந்தது. எனக்கே அதனிடம் ஆசை பெருகிவிட்டது. பிரிட்டிஷ் ராணியிடம் தான் இந்த வகை நாய்கள் உண்டாம். பின் ஜெய்ப்பூர் ராணியும் வைத்திருப்பதாகச் சொன்னார்கள். பார்க்கவே கொள்ளை அழகாக இருந்தது. அதற்கு ஒரு வம்சாவளி பத்திரத்துடனும் பிறப்புச் சான்றிதழுடனும் வந்து சேர்ந்தது. ரவியோ அதனை விடவேயில்லை. பள்ளிக்கூடம், வீட்டுப்பாட நேரம் தவிர அவனுக்கு நாய்க்குட்டியுடன்தான் பொழுதுபோக்கு. எல்லாருக்கும் நாய்க்குட்டிக்கான ட்யூட்டி பகிர்ந்தளிக்கப்பட்டது! அதற்கு சாப்பாடு என் பொறுப்பு. நான்-வெஜ் கிடையாது! அதிக பட்சமாக தினத்திற்கு ஒரு முட்டைதான். ஆம்லெட் வடிவில்- உப்பெல்லாம் கிடையாது. ராகி ரொட்டி, பால் சில காய்கறிகள் முதலியன! காரட், ஆரஞ்சுப்பழம் முதலியன அதற்கு மிகப்பிடித்தவை. வீட்டில் யாராவது எங்காவது ஆரஞ்சு உரிக்கும் வாசனை வந்துவிட்டால் போதும்! நிமிடத்தில் அங்கு ஆஜர் ஆகிவிடும். கணவர் அதனை (அதற்கான தடுப்பூசிகள் எல்லாம் போட்டு முடித்தபின்) வாக்கிங் அழைத்துச் செல்வார். ரவி அதனுடன் விளையாடுவான். பாட்டி (மாமியார்) நாங்கள் ஆபீஸ், பள்ளி சென்றபோதுகளில் அதனைப் பார்த்துக்கொள்வார். அவருக்கு இயல்பாகவே நாய்கள் என்றால் பிடிக்கும்!

           இவ்வாறு ‘டாட்’ (Todd) – அதுதான் நாய்க்குட்டிக்கு நாங்கள் வைத்த பெயர். குழந்தைகள் காமிக் டிஸ்னி சினிமாப்படம் ஒன்று உண்டு.  The Fox and The Hound      என்பது அதன் பெயர். அதில் ஒரு அம்மாள் தாயை இழந்த ஒரு நரிக்குட்டியை எடுத்து வளர்ப்பார். அதற்கு ‘டாட்’ (Todd) எனப்பெயர். இதுவும் அதைப்போல இருந்ததனால் இந்தப்பெயரை வைத்தோம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதன் சேட்டைகளுடன் வளர்ந்து வந்தது. பந்து விளையாடுவதென்றால் அதற்கு மிகவும் விருப்பம். யார் வீட்டிற்குத் திரும்பி வந்தாலும் வாயில் ஒரு ரப்பர் பந்துடன் அவர்களை எதிர் கொள்ளும். நான்கு பந்துகளாவது அதற்குப் போட்டு அதனைப் பிடித்து எடுத்து வரச்செய்யும்வரை விடவே விடாது. ஒரு காலகட்டத்தில் நான் மைக்ரேன் தலைவலியுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். சில நாட்களில் ஆபீஸிலிருந்து தலைவலியுடன் திரும்புவேன். எதுவுமே பேசாமல் என் படுக்கையறைக்குச் சென்று போர்த்துக்கொண்டு படுத்து விடுவேன். Toddம் சப்தமின்றி என்பின் வந்து கட்டிலின் கீழ் எனக்கு நேர்கீழே படுத்துக் கொண்டு விடும். ஒரு தொந்தரவும் செய்யாது.

           சில நாட்கள் மன உளைச்சலுடன் அலுவலகத்திலிருந்து திரும்புவேன். ஒரு கப் டீயோடு அமர்பவளை சும்மாயிருக்க விடாது. பந்தைக் கொண்டுவந்து ‘விளையாட வா’ எனக் கரத்தில் திணிக்கும். அதற்குத்தான் களைப்பென்பதே கிடையாதே. நாம் தான் களைத்துப் போய் விடுவோம். என் மனதைப் பாடாகப் படுத்திக்கொண்டிருந்த  நிகழ்வுகள் தற்காலிகமாக பின்னால் தள்ளப்பட்டு சிறிது உற்சாகமும் கிளம்பும். குட்டியாக இருந்தபோது ஒருநாள் தோட்டத்து மண்ணில் பெரிய ஒரு குழிபறித்து விளையாடிவிட்டு மண்ணையும் எக்கச்சக்கமாக விழுங்கிவிட்டது போலும். விடியவிடிய அது பட்ட வேதனை சொல்லி மாளாது. ஒரு கட்டத்தில் அதனை இழந்தேவிட்டோம் எனவே எண்ணினோம். காலையில் மருத்துவர் வந்து ஊசிபோட்டு மருந்து கொடுத்தபின் மெல்லமெல்ல சரியாயிற்று. 

           குழந்தை வளர்ப்பைப் போன்றதுதான் குட்டிநாய் வளர்ப்பும் என எண்ணிக் கொண்டேன். ஒரு விஷயம் மெல்ல மெல்லப் புரியலாயிற்று. செல்லப்பிராணிகளிடம், அதுவும் செல்ல நாய்களிடம் செலுத்தும் அன்பு, பலமடங்காக நம்மிடம் திரும்ப வருகிறது. Todd நாங்கள் வீடு வரும் நேரம் நெருங்க நெருங்க வாசற் கதவினருகே வந்தமர்ந்து விடுமாம். எங்களில் யாராவது ஒருவர் ஊருக்குப் போனால் அதற்குப் பிடிக்காது. பரிதாபமாக எங்களையே பார்த்தபடி இருக்கும். ஊரிலிருந்து வந்ததும் சிறுகுழந்தைகள் செய்வதுபோல பெட்டிக்குள் மூக்கை நுழைத்து அதற்கு ஏதாவது வாங்கி வந்திருக்கிறோமா எனத் தேடும்.

           Todd பதினான்கு வயது வரை எங்களுடன் இருந்தது. கடைசி இரு வருடங்களில் பின்னிரு கால்கள் செயலிழந்து விட்டன. தரையில் இழுத்தபடியே எங்களை நோக்கி வரும்போது பெற்றெடுக்காவிடினும் என் வயிறு பற்றி எரியும். அதற்காக அமெரிக்காவில் கிடைக்கும் ஒரு வீல் நாற்காலியைப் பாடுபட்டு இறக்குமதி செய்தோம். சிலகாலம் உபயோகிக்கவும் செய்தோம். மிகவும் தாங்க முடியாத நிலையில் பிராணி மருத்துவர் அதற்கு ஊசிபோட்டு நிரந்தரமாக உறங்கவைக்கக் கூறினார். இதனை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு மூன்று மாதங்கள் ஆயின. அதற்குள் அதன் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. அது படும் வேதனையை எங்களால் தாங்க முடியாமல் மனதைக் கல்லாக்கிக்கொண்டு மருத்துவரின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டோம். என் காலடியில் எப்போது அமர்ந்து கொண்டாலும் எனது புடவை மடிப்புகளுக்குள் தலையை வைத்துக்கொண்டு இருப்பது அதற்குப் பிடித்தமான செயல். அதனால் எனது நூல் புடவைகளுள் ஒன்றையே அது நிரந்தரமாக உறங்கக் கொடுத்தேன்.

           Todd எனும் அந்த அபூர்வச் செல்ல நாய் என்னுடைய தத்துக் குழந்தை. அப்படித்தான் நான் எல்லாரிடமும் கூறுவேன்.

           மிக முக்கியமான ஒன்றை அது எனக்குக் கொடுத்தது- அதுதான் நிபந்தனைகளற்ற அன்பு (Unconditional love). எதை எதிர்பார்த்தும் இல்லை. அது வாழ்ந்த காலத்தில் இதை நான் நன்கு அறிந்து கொண்டேன். எனக்கு மன அழுத்தம் வராமல் தடுக்கும் அருமருந்தாக Todd இருந்தது. வற்புறுத்தி என்னைத் தன்னோடு விளையாட வைப்பதும் பின் தன் அருகாமையை எனக்கு உணர்த்தியவாறே இருப்பதும் அதன் கடமை எனக் கருதியதோ என்னவோ, என் மனதிற்கு இதமான செய்கைகளாக அவற்றை நான் பிற்காலத்தில் உணர்ந்து கொண்டேன்.

           இதுவே ஒரு அருமையான பாடம். Todd விட்டுச்சென்ற வெற்றிடத்தை வேறொரு நாயை வளர்த்து, அதனால் நிரப்ப அனைவரும் கூறினார்கள். அது நாய் அல்ல. Todd என்னும் அபூர்வப் பிறவி. அவ்விடத்தில் வேறொன்றை வைக்க மனது ஒப்பவில்லை. பிரிவின் சுமை தாள இயலாதது. ஆனால் என்னை எவ்வளவு தூரம் மனநோயாளியாகாமல் அது காப்பாற்றி இருக்கிறது என்பதில் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

           வாழ்க்கைப் பயணத்தில் எத்தகைய அருமையான பாடம்!

           ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்- தெய்வம்

           உண்மையென்று தானறிதல் வேண்டும்

           வயிரமுடைய நெஞ்சு வேண்டும்- இது

           வாழும் முறைமையடி பாப்பா’ எனும் பாரதியார் பாடலின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

 

                                ~~~~~~~~~~~~~~~~~~