

*ஆழ்வார்களும்* *கண்ணதாசனும்* – *முன்னுரை*. – ( *பகுதி 1* )
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பரம ரசிகர்களில் அடியேனும் ஒருவன் என்பதை என்னை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.
அவரது பல பாடல்களை எடுத்துக்கொண்டு அலசல் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன்.
அவர் பாடல்களில் இலக்கியத் தாக்கம் என்பதை பற்றியும் அங்கங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.
திவ்ய பிரபந்தம், திருக்குறள், கம்பராமாயணம், பாரதியார் பாடல்கள், சங்க கால பாடல்கள் , என அனைத்தையும் கற்றுணர்ந்தவர் கவிஞர். அவரது பல பாடல்களில், மேற்கூறிய ஏதேனும் ஒரு நூலில் இருந்து ஏதேனும் ஓர் இழை புலப்படும்
அவை *அனைத்தும்* அவர் அறிந்து செய்ததா அல்லது இயல்பாக அவ்வாறு அமைந்து விட்டதா என்ற கேள்விக்கு பதில் கிடையாது. ஏனெனில் பதில் சொல்லக் கூடியவர் கவிஞர் ஒருவரே. அவர் இன்று நம்மிடையே இல்லை.
அவர் தெரிந்தே வெவ்வேறு இலக்கியங்களில் இருந்து கருத்தை எடுத்து ஆண்டிருந்தாலும், பிரமிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் என்றோ படித்த இலக்கிய நயத்தை மனதில் உள்ளிருத்தி, பிற்காலத்தில் என்றோ ஒரு நாள், திரைப்படங்களின் கதை சூழலுக்கு ஏற்ப கேட்கப்படும் பாடல்களில் அவற்றை வெளிப்பட வைப்பது , அதுவும், எளிமையான தமிழில் பாமரனும் அறிய கொடுப்பது என்பது சாதாரணமாக எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். கவிஞர் நம்மை வியக்க வைக்கிறார்.
ஆழ்வார்கள் அருளிச்செய்த *நாலாயிர திவ்ய பிரபந்தம்* என்று எடுத்துக் கொண்டால் அதைப்பற்றி கண்ணதாசன் தனது *அர்த்தமுள்ள இந்து மதம்* நூலில் இவ்வாறு கூறுகிறார் :
” பக்திச்சுவையை , இலக்கியச் சுவையாக்கி , தமிழ் நயமும், ஓசை நயமும், பொருள் நயமும் கலந்து, படிப்பவர்களுக்கு தெய்வீக உணர்ச்சியையும் லௌகீக உணர்ச்சியையும் ஒன்றாக உண்டாக்குவது திவ்ய பிரபந்தம். “
இந்நிலையில், நாலாயிர திவ்ய பிரபந்தத்தை நமக்கு அளித்த 12 ஆழ்வார்களின் தாக்கம் கண்ணதாசனின் எந்தெந்த பாடல்களில் வெளிப்பட்டிருக்கின்றன என்பது பற்றி ஒரு கட்டுரைத்தொடர் எழுதினால் என்ன என்ற யோசனை எனக்கு வந்தது.
யோசனையை நடைமுறைப் படுத்த விழைந்தபோது, மதுரை பேராசிரியர், மரியாதைக்குரிய பெரியவர் *சொ.சொ.மீ. சுந்தரம் அவர்கள்* எழுதிய *ஆழ்வார்களும் கண்ணதாசனும்* என்ற ஒரு புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது பேச்சையும் இணையத்தில் கேட்டேன். அவரது ஆழ்ந்த வைணவ ஈடுபாட்டையும் கண்ணதாசன் மேல் உள்ள அன்பையும் புரிந்து கொண்டேன்.
ஆழ்வார்களின் தாக்கமாக வந்த கவிஞரின் பாடல்கள் என்று அவர் மேற்கோள் காட்டிய பெரும்பான்மையான பாடல்கள் கவிஞரின் தனிப்பாடல்கள் – அதாவது *திரைப்பாடல்கள் அல்ல* . எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் அவ்வளவாக பரிச்சயமற்ற கவிஞரின் தனிக் கவிதைகளை இந்த கட்டுரைத் தொடரில் நான் கொடுக்க விரும்பவில்லை.
மேலும் ஒன்று, இரண்டு வாலியின் பாடல்களும் கண்ணதாசன் பாடல்களாக, தவறாக, அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இதனால் எல்லாம் புத்தகத்தின் அருமை குறையவில்லை என்பதை சொல்லியே ஆக வேண்டும். நான் எழுதும் இந்த தொடரில் சொ.சொ.மீ. அவர்களின் பங்கு அனேகமாக *இல்லை* என்பதை சொல்வதற்காக இவற்றை குறிப்பிடுகிறேன். மிகச்சில இடங்களில் இருவரும் ஒரே மாதிரியான ஒப்பீட்டை எழுதியிருப்பது தற்செயலே.
அடுத்து, அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக விளங்கும் *திரு. வெங்கட்* ( முழு பெயர் திரு வேங்கடநாதன் அல்லது வேங்கட கிருஷ்ணன் என்பதாக இருக்கலாம் என யூகிக்கிறேன் – திருவல்லிக்கேணி காரர் என்பதால் ) அவர்களின் பேச்சை இணையத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது . அபார ஞானம். குறிப்பாக அவர் கண்ணதாசனின் இரு திரைப்பாடல்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை முறையே திருமங்கை ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் வாழ்க்கை சரிதத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது. அவற்றில் பாசுரங்களுடன் பாடல்கள் ஒப்பீடு என்பதாக சொல்லப்படவில்லை. கவிஞரின் பாடல்கள், குறிப்பிட்ட ஆழ்வார்களின் வாழ்க்கை சரிதத்தை விவரிப்பதாக சொல்லி இருக்கிறார்.
மேற்கூறியவற்றைத் தாண்டி, இக்கட்டுரைத்தொடருக்கான ஒப்பீடு சம்பந்தமான பதிவுகள் எதுவும் என் தேடலில் கிடைக்கவில்லை. அனைத்து ஒப்பீடுகளும் அடியேன் சிந்தனையில் உதித்தவையே. சில ஆழ்வார் பாசுரங்களை படிக்கும் போதும், கேட்கும் போதும், பளீர் என்று கண்ணதாசனின் ஏதோ ஒரு பாடல் மனதில் தோன்றும். குறித்துக் கொள்வேன். அதே மாதிரி கண்ணதாசனின் சில பாடல்களை கேட்கும் பொழுது, அட, இது ஆழ்வார் பாசுரத்தில் சொல்லப்பட்ட கருத்தாக இருக்கிறதே என்று தோன்றும்.
அதையும் குறித்துக்கொள்வேன்.
இப்படியாக என் கட்டுரை தொடருக்கு விஷயங்கள் சேகரித்து, இப்பொழுது *ஆழ்வார்களும் கண்ணதாசனும்* என்ற ஒரு கட்டுரைத் தொகுதியாக உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்.
இக்கட்டுரைத் தொடரில் குறிப்பிடப்படவிருக்கும் ஒப்பீடுகள் தவிர, வேறு பல பாசுரங்களின் தாக்கத்தை கண்ணதாசனின் வேறு பல பாடல்களில் பார்க்கலாம். குறிப்பாக ஆண்டாள் பாசுரங்கள் என்று எடுத்துக் கொண்டால் அவற்றின் தாக்கம் வெளிப்படும்படி கண்ணதாசன் நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறார். என் கட்டுரைகளில் நான் கொடுத்திருப்பது ஒவ்வொரு பகுதியிலும், ஒரு ஒப்பீடு மட்டுமே. அபூர்வமாக இரண்டு. அதைத் தாண்டி கொடுக்கவில்லை – கட்டுரைகளின் நீளம் கருதி.
இத்தொடரில் எடுத்துக் கொண்டுள்ள ஆழ்வார்கள் வரிசை என்பது அவர்களது அவதார வரிசை *அல்ல* . எழுதும் வசதிக்கேற்ப நான் தேர்ந்தெடுத்த வரிசைதான் அவை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.
இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் என்று சொல்லப் போனால் ,
ஆழ்வார்களையும் திவ்ய பிரபந்தத்தையும் மட்டுமே அறிந்த வைணவ அன்பர்களுக்கு ஒப்பிலாக் கவிஞன் கண்ணதாசனை அறிமுகப்படுத்துவது,
அதே போன்று, கவியரசர் கண்ணதாசனை மட்டுமே அறிந்த கவிதை / திரைப்பாடல்கள் ரசிகர்களுக்கு ஆழ்வார்களையும் பிரபந்தத்தையும் அறிமுகப்படுத்துவது,
ஆக, இரு சாராரையும் ஒரு புள்ளியில் இணைப்பது, எனக் கொள்ளலாம்.
அடியேனின் சிறு முயற்சி.
ஒவ்வொரு பகுதியையும் நிதானமாக படித்து பின்னூட்டம் இடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
விவரமானதோ அல்லது மிக சுருக்கமானதோ – பின்னூட்டம் எப்படி இருந்தாலும் அத்தகைய பின்னூட்டங்கள் அடுத்த பகுதியை உங்களுக்கு உற்சாகத்துடன் அனுப்ப, என்னை வழி நடத்தும்.
நிதானமாக படிக்க நேரம் கொடுப்பதற்காக, இரண்டு அல்லது மூன்று நாள் இடைவெளியில் அடுத்தடுத்த பகுதிகளை வெளியிட எண்ணியுள்ளேன்.
( *பகுதி 2 * )
பன்னிரண்டு ஆழ்வார்களில், முதல் மூன்று ஆழ்வார்களை சேர்த்து, முதல் ஆழ்வார்கள் என்று சொல்வார்கள்..
*முதலாழ்வார்கள் முறையே,* *பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்* ஆகியோர்.
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பதின் அங்கமாக , இந்த மூவாழ்வார்களின் அருளிச்செயல்கள் முறையே
*முதலாம் திருவந்தாதி* , *இரண்டாம் திருவந்தாதி* மற்றும்
*மூன்றாம் திருவந்தாதி* .
முதல் ஆழ்வார்கள் மூவரும் சமகாலத்தவர்கள். அடுத்தடுத்த நாட்களில் பிறந்தவர்கள்.
” அயோனிஜர்கள் ” என்று கருதப்படுபவர்கள். ( தாயின் வயிற்றில் பிறவாமல், சுயம்பு வாக தோன்றியவர்கள் என்ற பொருள். )
ஒரு மழைக் காலத்தில் யதேச்சையாக ( பெருமாள் திருவுள்ளத்தால் என கொள்ளலாம்) முதலாழ்வார்கள் மூவரும் ( பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ) ஒன்று கூடினர்.
இவர்கள் கூடிய இடம், *திருக்கோயிலூர்* என்ற திருத்தலம்.
அங்கு ஒரு முனிவரின் ஆசிரமத்தில் ஒரு இடைகழியில் ( கொட்டாரம்) இருட்டில் மழைக்காக ஒதுங்கிய இவர்களின் மனமோ, மாலவன் நினைவிலேயே இருந்தது.
அந்த இடமானது ,
ஒருவர் படுக்கலாம்,
இருவர் அமரலாம்,
மூவர் நிற்கலாம்
என்ற அளவுக்கு சிறியதாக இருந்தது.
மூவரும் நெருக்கமாக நின்று கொண்டே, மாலவனைப் பற்றி அளவளாவி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட திருக்கோயிலூர் எம்பெருமான் அவர்கள் பேசுவதை கேட்க ஆசைகொண்டு அவர்களிடையே புகுந்து நெருக்கினார். அவ்விருட்டில் மூவரைத் தவிர வேறு ஒருவரும் தம்மை நெருக்குவதை உணர்ந்து, நெருக்கத்தின் காரணத்தை அறிய , வேறு விளக்கின்மையால், அவர்கள் பாசுரங்கள் மூலம் விளக்கேற்றினர்.
முதலில் *பொய்கையாழ்வார்* :
(முதல் திருவந்தாதி -1)
பொருள் முதலில் .
பரந்த இவ்வுலகை அகல் (விளக்கு) ஆக கொண்டு, நீண்ட கடலை நெய்யாகக் கொண்டு, கதிரவனை சுடராகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன், துன்பம் எனும் கடலில் இருந்து மீள்வதற்கு.
இப்போது பாசுரம் :
*வையம் தகளியாய்*
*வார்கடலே நெய்யாக*
*வெய்ய கதிரோன் விளக்காக* – *செய்ய சுடர் ஆழியான்* *அடிக்கே*
*சூட்டினேன் சொல் மாலை* *இடராழி நீங்குகவே என்று*
இதில் *புற இருள்* அகன்றது.
அடுத்து *பூதத்தாழ்வார்* :
(இரண்டாம் திருவந்தாதி -1)
அன்பை அகல் ஆகக் கொண்டு, ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு ஞான விளக்கேற்றினேன்
*அன்பே தகளியாய்*
*ஆர்வமே நெய்யாக*
*இன்புருகு சிந்தை இடுதிரியா* –
*நன்புருகி ஞானச் சுடர்* *விளக்கேற்றினேன்*
*நாரணற்கு*
*ஞானத் தமிழ் புரிந்த நான்*
இதில் *அக இருள்* அகன்றது.
பொய்கையார் புற இருளையும் பூதத்தார் அக இருளையும் போக்கியபின் , பேயாழ்வாருக்கு அங்கிருந்த பெருமாள், பிராட்டியாருடன் கண்ணுக்கு தெரிந்தார்.
உடனே , *பேயாழ்வார்* பாடுகிறார்:
(மூன்றாம் திருவந்தாதி -1)
பெரிய பிராட்டியாரை – தாயாரை ( திரு) சேவிக்க பெற்றேன். பெருமாளின் பொன் போன்ற அழகிய திருமேனியையும் சேவிக்கப் பெற்றேன். சூரியன் போன்ற பிரகாசத்தையும் சேவிக்கப்பெற்றேன். யுத்த பூமியில் பராக்கிரமம் காட்டுகின்ற (செரு கிளரும்) அழகிய திருவாழியையும் (சக்கரம்) திருக்கையில் சேவிக்கப்பெற்றேன். வலம்புரி சங்கு மற்றொரு கையில் சேவிக்கப்பெற்றேன்.
*திருக்கண்டேன்*
*பொன் மேனி கண்டேன்*
*திகழும் அருக்கன் அணி* *நிறமும் கண்டேன்* – *செருக்கிளரும்*
*பொன்னாழி கண்டேன்*
*புரி சங்கம் கைக்கண்டேன்* *என்னாழி வண்ணன் பால்* *இன்று* .
தான் கண்ட தரிசனத்தை மற்ற இரு ஆழ்வார்களுக்கும் காட்டுகிறார் பேயாழ்வார்.
இதுவரை முதலாழ்வார்கள் மூவரையும் அவர்களின் படைப்புகளில் இருந்து ஒவ்வொரு பாசுரத்தையும் சுருக்கமாக பார்த்தோம் . மூன்றுக்கும் உள்ள தொடர்பையும் பார்த்தோம். மேலும் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
ஆனாலும் , கட்டுரையின் நீளம் மற்றும் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு நியாயம் செய்ய வேண்டிய முக்கியத்துவம் – இரண்டையும் கருத்தில் கொண்டு மேலே செல்கிறேன்.
இப்போது *கண்ணதாசனை* உள்ளே அழைத்து வரலாம். ஆழ்வார் பாசுரங்களில் *வழக்கமான* விளக்கு, எண்ணெய், திரி என்பன இல்லாமல், உலகம், கடல், சூரியன் மற்றும் அன்பு, ஆர்வம், அறிவு ஆகியன கொண்டு எப்படி அவர்கள் விளக்கேற்றினார்கள் என்பதையும் அதை ஒட்டி இறைவன் காட்சி தந்ததையும் பார்த்தோம்.
இதன் தாக்கத்தில் விளைந்த இரு கண்ணதாசன் பாடல்கள் எனக்கு ஞாபகம் வந்தன.
முதலில்,
*கே பாலச்சந்தர்* இயக்கத்தில் வெளிவந்த *மன்மத லீலை* திரைப்படத்தில் , *எம் எஸ் விஸ்வநாதன்* அவர்கள் அருமையாக இசையமைக்க *வாணி ஜெயராமின்* அற்புதமான குரலில் *கண்ணதாசன்* எழுதிய பாடல்:
*நாதமென்னும் கோவிலிலே*
*ஞான விளக்கேற்றி* *வைத்தேன்*
*ஏற்றி வைத்த விளக்கினிலே*
*எண்ணெய் விட நீ* *கிடைத்தாய்*.
ஆழ்வார் போன்றே இங்கும் *ஞான விளக்கு* .
ஆழ்வார்கள் காலத்தில், விளக்குகள் ஏற்றி, புற இருள், அக இருள் ஆகியன அகன்றதும் எம்பெருமான் நேரிலேயே வந்து காட்சி கொடுத்தான். ஆனால் இன்று அவன் தன் சார்பாக வேறொருவரை அனுப்பி வைக்கிறான். ( தெய்வம் மனுஷ்ய ரூபேண…)
அதைத்தான் கவிஞர் தன் சரணத்தில் அற்புதமாக எழுதியிருக்கிறார் :
*இறைவன் என ஒருவன்*
*என் இசையினில் மயங்கிட* *வருவான்*
*ரசிகன் என்ற பெயரில்* –
*இன்று அவன்தான் உன்னைக்* *கொடுத்தான்*
திரைப்பாடலில் குறிப்பிட்டுள்ள *இசை* என்பது பிரபந்தத்தில் குறிக்கப்பட்டுள்ள பாசுரத்திற்கு ஈடு.
அங்கு ஆழ்வார் பாசுரங்களில் மயங்கி இறைவன் நேரில் வந்தான். இங்கு நாயகியின் இசையில் மயங்கி இறைவன் அனுப்பிய ரசிகனாக நாயகன் வந்தான். அந்த நாயகன் தான் அந்த நாயகிக்கு இறைவன் எனவும் கொள்ளலாம்.
ஆஹா. சிலிர்க்கிறது.
அடுத்து ஞாபகம் வந்த பாடல்,
*இதயக்கமலம்* படத்தில் மாமா *கே வி மகாதேவன்* அவர்கள் அற்புதமாக இசையமைக்க, *பி சுசிலாவின்* தேன் குரலில் *கண்ணதாசனின்* பாடல் :
*மலர்கள் நனைந்தன* *பனியாலே*
*என் மனதும் குளிர்ந்தது* *நிலவாலே*
*பொழுதும் விடிந்தது கதிராலே*
*சுகம் பொங்கி எழுந்தது* *நினைவாலே**
என்ற பல்லவியுடன் துவங்கும் பாடலில் ஒரு *சரணம்* :
*இறைவன் முருகன் திரு* *வீட்டில்*
*என் இதயத்தினால் ஒரு* *விளக்கேற்றி*
*உயிரெனும் காதல் நெய்யூற்றி*
*உன்னோடிருப்பேன் மலரடி போற்றி*
ஆழ்வார்கள் பாசுரங்களோடு ஒப்பீடு என்பதாக தனியாக விளக்கவும் வேண்டுமோ ? !
கண்ணதாசனை, நெகிழ்ச்சியோடு அடுத்த ஆழ்வாரிடம் அழைத்துச் செல்வோம்.

அருமையான பதிவு.
LikeLike