ஏன் என்ற கேள்வி (தொடர்ச்சி)

“வாங்க வாங்க குவிஸ் பார்மட் கொண்டுவந்து விட்டீர்களா ” என்றார் சென்னை தொலைக்காட்சி புரொட்யூசர் அஸ்வினி குமார்.
நான் பணிபுரியும் விவேகானந்தா கல்லூரியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தான் சென்னை தூர்தர்ஷன் நிலையம். பணி முடிந்து மாலை நான்கு மணிக்குக் கிளம்பினால் என் ஸ்கூட்டரில் , தொலைக்காட்சி நிலையத்திற்கு பதினைந்து நிமிடங்களுக்குள் சென்றுவிடுவேன். அவர்கள் அலுவலகம் மாலை ஐந்தரை மணி வரை இயங்கும். தேவை என்றால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மேலும் சில மணி நேரங்கள் இருப்பார்கள். எனவே நிகழ்ச்சி பற்றிய “டிஸ்கஷனுக்கும்” தயாரிப்புக்கான குறிப்புகள், தகவல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் பலமுறை நான் தொலைக்காட்சி நிலையத்திற்குச் செல்லவேண்டி இருந்தாலும் அது போக்குவரத்து , நேரம் ஆகிய இரண்டிலும் எனக்குப் பெரிய இடர்ப்பாடாக இருந்தது கிடையாது. 1978- லிருந்து தொடர்ந்து நான் பல நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியிலும் ,வானொலியிலும் தயாரித்து அளித்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை.
“ ம்.. ரெடியா இருக்கு “ எனச் சொன்னேன். காப்பி குடித்துக் கொண்டே எங்கள் டிஸ்கஷன் தொடர்ந்தது. வரவேற்பைக் கொடுத்த அருமையான பார்மட். அதுதான் “ ஸ்பெஷல் குவிஸ்” பார்மட்.
ஒவ்வொரு குவிஸ் நிகழ்ச்சியும் ஒரு “தனித் தலைப்பில் “ நடத்தப்படும். அந்தத் தலைப்பிலிருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும். இதுவரை மிகுந்த வரவேற்பைப் பெற்ற அத்தனை வினா சுற்றுக்களும் அதிலே இடம்பெறும். தேவைக்கு ஏற்ப சுற்றுக்கள் தன்மை மாறுபடும். எந்தத் தனித் தலைப்பில் குவிஸ் நடத்தப் படுகிறதோ அந்தத் துறை வல்லுனர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அவர் மூலம் சில விடைகளுக்கான விளக்கங்களும் நிகழ்வில் பகிர்ந்துகொள்ளப்படும்.
துறை வல்லுனர்களை அழைப்பதில் சிரமங்கள் இருக்கும் என்றாலும், அதிலே பல பிளஸ் பாயிண்டுகள் இருந்தன. நிச்சயம் அவர் ஒரு வி ஐ பி என்பதால் நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்; கேள்வி பதில் தயாரிப்பில் அவர்களுடைய அனுபவமும், அறிவும் எனக்குப் பயன்படும். ஒரு வல்லுநரே அருகில் அமர்ந்திருப்பதால் விடைகள் விளக்கப்படும் போது அதன் உண்மைத்தன்மை அதிகரிக்கும். வல்லுனரின் நிறைவுரையின் போது , அவர் சார்ந்த துறையின் முக்கியமான கருத்துக்களை அவரால் பகிர்ந்துகொள்ள இயலும். அது நிகழ்ச்சியின் கண்டெண்டை மேலும் வளப்படுத்தும்.
மறுபடியும் குறிப்பிட விழைகிறேன். இந்த மாதிரி குவிஸ் எல்லாம் தற்போது புதுமையே இல்லை. ஆனால் 1980 களில் முதன்முறையாகத் தமிழ் வினாடி வினா நிகழ்ச்சியில், குறிப்பாக சென்னை தொலைக்காட்சியில் இதையெல்லாம் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்த போது அது ஒரு புதுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பலபேர் எனக்குத் தனியாகவும், தொலைக்காட்சி “எதிரொலி “ நிகழ்ச்சிக்குக் கடிதங்கள் எழுதியும் பாராட்டியுள்ளனர் . அத்துணை பார்வையாளர்களையும் ,இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
ஏறத்தாழ இரண்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேலே மாதத்திற்கு இரண்டு நிகழ்ச்சிகளாக “ஸ்பெஷல்” குவிஸ் தொடர்ந்ததற்கு திரு. அஸ்வினிகுமார் அவர்களும் ஒரு முக்கிய காரணம் ஆகும். எழுத்தாளரும் வங்க நாவல்களை தமிழில் தந்த சிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஆகிய த.நா.குமாரசுவாமி அவர்களின் குமாரர் அவர். எங்கள் இருவருடைய “வேவ் லெங்த்தும்” ஒரே மாதிரியாக அமைந்து இருந்தது எங்கள் பணியை இனிமையாக்கியது; புதுமை செய்யத் தூண்டியது. ஓர் உதாரணம் தருகிறேன்.
பொதுவாக குவிஸ் நிகழ்ச்சிக்கு அரை மணி நேரம்தான் ஒதுக்கியிருப்பார்கள்; ஆனால் அஸ்வினிகுமார் தலையிட்டு, நிலைய இயக்குனரிடம் ஸ்பெஷல் குவிஸ் நிகழ்ச்சியின் கூறுகளையெல்லாம் எடுத்துக் கூறி, எங்கள் நிகழ்ச்சிக்கு முக்கால் மணி நேரம் வாங்கிக் கொடுத்தார். அதாவது பதினைந்து நிமிடங்கள் அதிகம். அன்றைக்கு இருந்த ஒரே மீடியா தொலைக்காட்சிதான். அதில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தரவேண்டும். இருக்கின்ற அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் பதில்சொல்ல வேண்டும். எனவே அது பெரிய விஷயம். அதை கன்வின்சிங் ஆக எடுத்துச் சொல்லி பர்மிஷன் வாங்கியது சாதாரணம் அல்ல.
முதல் ஸ்பெஷல் குவிஸ் ரெக்கார்டிங் நடக்கிறது. ஆர்வம் அதிகம் என்பதால் நிறைய கேள்விகள், சுவையான சுற்றுக்கள் இருந்தன. ஆரம்பமே அசத்தல். பங்கேற்பாளர்களோடு வினா விடை சுற்றுக்களில் நடக்கும் உரையாடல்கள் , விடை விளக்கங்கள் இவையெல்லாம் ஸ்கிரிப்டில் எழுதமுடியாது. சில விளக்கங்களை வல்லுனர் தந்தார். சுறுசுறுப்பாக நடக்கும் நிகழ்ச்சியில் நேரம் பார்க்க மறந்துவிட்டேன். நாற்பது நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தது. இன்னும் மூன்று சுற்றுக்கள் மீதம் இருந்தன. என்ன செய்வது ? நிகழ்ச்சி பதிவாகிக் கொண்டிருக்கின்றது. பாதியில் நிறுத்தமுடியாது.
கண்ட்ரோல் ரூமில் இருந்தபடியே அஸ்வின்குமார் உடனே முடிவெடுத்து, “தொடருங்கள்” என எனக்கு சைகை கொடுத்தார். எந்தத் தொய்வும் இல்லாமல் நான் நிகழ்ச்சியைத் தொடர்ந்தேன். ஒண்ணரை மணி நேரம் நிகழ்ச்சி தொடர்ந்தது. ரெகார்டிங் முடிந்த பிறகு என்ன செய்வது என யோசித்தோம். பகுதி ஒன்று இரண்டு என ஒளிபரப்பிவிடலாம் என அஸ்வின் உறுதியளித்தார். இரண்டு பகுதிகளாக வெளிவந்த குவிஸ் எனதுதான் முதல் என்று நினைக்கிறேன். இதெல்லாம் இன்று தனியார் ஊடகங்களில் சாத்தியம். ஆனால் அன்று அரசு நிறுவனத்தில் பிராப்பர் பெர்மிஷன் இல்லாமல் உடனடியாக ரிஸ்க் எடுத்து உடனே ஒரு நிகழ்ச்சியின் கால அளவை மாற்றிவிட முடியாது. அந்த ரிஸ்க் அஸ்வினிக்கு பாராட்டையே வாங்கிக் கொடுத்தது. நிகழ்ச்சியைத் தயாரித்து நடத்திய குவிஸ் மாஸ்டர் என்ற வகையில் அதில் எனக்கும் பங்கு உண்டு என்ற நினைப்பு இன்றும் என் நெஞ்சைக் குளிரவிக்கின்றது.
சுவையான சில ஸ்பெஷல் குவிஸ் விவரங்களைத் தர விழைக்கின்றேன். இதில் பலதுறைகள் பற்றி எடுத்துக்கொண்டோம். இலக்கியம், வரலாறு, கலை ,அறிவியல், என்று பொதுத் தலைப்பாக இல்லாமல் அவை அவ்வத் துறைகளுள் உள்ள குறிப்பிட்ட பகுதிகளாக அமைந்தன. அனைவரும் அறியாத புதிய தலைப்புகளை எடுத்துக் கொண்டோம். அதில் ஒன்றுதான் “ தடய அறிவியல் துறை (Forensic Science ). இது காவல் துறையின் முக்கியமான கிளை. இதன் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தக் குற்றத்தையும் சான்றுகளோடு நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது. அதிகம் பலர் அறியாதிருந்தாலும் இது பற்றி அறிய பலர் நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள் என நான் நம்பினேன். அதுமட்டுமல்ல, என்னிடம் படித்த மாணவர் ஒருவர் அத்துறையில் ஆய்வு மாணவராக இருந்தார்.
அன்றைய தடயவியல் துறை இயக்குனர் டாக்டர் சந்திரசேகரன் அவர்கள் மிகப் பிரபலமானவர்; நன்றாகப் பேசக் கூடியவர். திரு. எம். ஜி. ஆர். அவர்களை எம். ஆர். ராதா துப்பாக்கியால் சுட்ட கேஸில் நீதிமன்றத்தில் அது பற்றி சான்றுகளோடு சாட்சியம் கொடுத்தவர். அவரை சந்தித்துப் பேசியபோது பல தகவல்களை என்னோடு பகிர்ந்து கொண்டார். அதன் அடிப்படையில் நான் பல சுவையான கேள்விகளையும் தயார் செய்தேன்.
பொதுக் கேள்விச் சுற்று, ஆடியோ வீடியோ, புதிர்க் கட்டங்கள் என்பவை தாண்டிப் புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினேன். ஒரு குற்றம் நடந்த சூழலை நடிகர்களைக் கொண்டு நடிக்க வைத்து அந்த வீடியோ கட்டிலிருந்து சில கேள்விகள் கேட்கலாம் என்று தீர்மானித்தேன். இதுவும் அன்று மிகப் புதிய அணுகுமுறைதான். இதற்கான நடிகர்கள் பட்ஜெட் ஆகியவற்றை அஸ்வினி ஓகே செய்து பச்சைக்கொடி காட்டிவிட்டார்.
ஸ்பெஷல் குவிஸ் ஒவ்வொன்றுக்கும் அந்தந்த சப்ஜெக்ட் ஐப் பொறுத்து தலைப்பு வைப்பது வழக்கம். இதற்கு “கையும் களவும்” என்ற தலைப்பைக் கொடுத்தேன்.
பங்கு கொள்ளும் அணிகளுக்கு தலைப்பு தொடர்பான பெயர்களே சூட்டுவேன். அந்த வகையில் பங்கு பெறும் நான்கு அணிகளுக்கு என்ன பெயர் அளிப்பது ? இது “துப்பறியும் துறை” என்பதால் “ கானன் டாயில் , ஸ்டேன்லி கார்டெனர், தேவன், தமிழ்வாணன் “ என்று அணிகளுக்குப் பெயர் கொடுத்தேன். முதல் சுற்றுக் கேள்வி அணிகளின் பெயர்கள் பற்றியதாகவே இருந்தது.
“இவர்கள் படைத்த துப்பறியும் கதாபாத்திரங்களின் பெயர்கள் என்ன ?” என்பது கேள்வி. ஷேர்லக் ஹோம்ஸ் , பெரி மேஸன் , துப்பறியும் சாம்பு, சங்கர் லால் ஆகியவை சரியான விடைகள்.
தமிழ் மீது மிகவும் பற்றுக் கொண்ட தமிழ்வாணன் “சங்கர்லால் “ என்ற வட இந்தியப் பெயரை ஏன் வைத்தார் என்றும் ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு அணியினர் யாரும் பதில் சொல்லவில்லை. பார்வையாளர் ஒருவர் சரியான பதிலைச் சொன்னார்.
“ தமிழ்வாணனை, ஆங்கில நாவல்களில் வருவது போல துப்பறியும் கதாபாத்திரம் ஒன்றைப் படைத்து நாவல்கள் எழுதும்படி ஒரு வாசகர் கேட்டுக்கொண்டு கடிதம் எழுதினரம். நல்ல ஐடியவாக இருக்கிறதே என்று எழுதத் தொடங்கிய தமிழ்வாணன், துப்பறியும் கதாபாத்திரத்திற்கு அந்த வாசகர் பெயரையே வைத்துவிட்டார். ஆம்! அந்த வாசகர் பெயர் “சங்கர் லால்”
தூக்கில்தான் தொங்கி ஒருவர் இறந்தார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற கேள்விக்கு பல விடைகள் வந்தன. தூக்குக் கயிறு , ஸ்டூல் , கீழே விழுந்த நிலை , நாக்கு வெளியே தொங்கும் என்றெல்லாம் சொன்னார்கள். தாடைக்கும் கழுத்துக்கும் அடியே உள்ள தழும்புதான் முக்கியத் தடயம் என்றார் பேராசிரியர்.
இறந்த உடலின் உள் பாகங்களை அறுத்து எடுத்து பரிசோதனை செய்ய எந்த திரவத்தில் அவற்றைப் போட்டு வைப்பார்கள் என்ற கேள்விக்கு பலர் “போர்மலின்” என்ற வேதியல் பொருளைச் சொன்னார்கள். அடர்த்தியான சாதாரண உப்புக் கரைசல் என்பதே சரியான விடை. இறந்தவர் உடலில் ஆல்கஹால் இருந்ததா எனக் கண்டு பிடிக்க இதுதான் முறை” என்று பேராசிரியர் விளக்கியதும் அனைவரும் அதிசயித்தனர்.
பிரேத பரிசோதனையில் பொதுவாக இறந்தவரின் பற்களைக் கொண்டு வயதைத் தீர்மானம் செய்வார்கள். அதுவும் சிதைந்த நிலையில் இருந்தால் மண்டையோட்டில் உள்ள வரிகளைக் கொண்டு வயதை நிர்ணயம் செய்யும் புதிய முறையை ஆய்வின் மூலம் அறிமுகம் செய்து உலகப் புகழ் பெற்றவர் அன்றைய விருந்தினராக வந்த பேராசிரியர் சந்திரசேகர்.
“மண்டையோட்டை கொண்டு ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியுமா “ என்ற கேள்விக்கு “முடியும் “ என்றாள் ஒரு பெண். எப்படி என்று கேட்டதற்கு “ அது கொஞ்சம் பெரியதாக இருக்கும் காரணம் பெண்களுக்கு மூளை அதிகம்” என்றாள். பெண்கள் பக்கம் ஒரே சிரிப்பலை .
“அதனால்தான் அவர்களுக்கு தலைக்கனம் அதிகம்” என்று இடைபுகுந்தான் ஒரு மாணவன். ஆண்கள் இப்போது சிரித்தனர்.
“அதெல்லாம் இல்லை. பூ வைத்துக் கொள்வதால் அவர்கள் தலை கனம் “என்றேன்.
“சார்! காதுல பூ வைக்காதீங்க “ என்று பார்வையாளர் பக்கம் இருந்து குரல் வந்தது,
சரி! என்று நான் பேராசிரியர் பக்கம் திரும்பினேன். “ மண்டையோட்டை வைத்து எதையும் சொல்ல முடியாது. விலா எலும்புகளை வைத்து சொல்லலாம். விலா எலும்புகள் பெண்களுக்கு ஆண்களைவிட பெரியதாக இருக்கும். குழந்தை சுமப்பதற்கான இயற்கை அது “ என அவர் இந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இவை போன்ற பல உரையாடல்கள் ! இன்னும் சிலவற்றை அடுத்த இதழிலும் தொடர்வேன்.

அருமை வவேசு சார். அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் புதுமையாகவே உள்ளது உங்கள் நிகழ்ச்சிகளின் விவரங்கள்.
அந்தக் காலகட்டத்தில் உங்களை அறியாமல் போய்விட்டேனே என்று இப்போது – இதற்காகவும் – வருந்துகிறேன்.
LikeLike
நன்றி
LikeLike