புத்தகம் : கந்தர்வர்களின் உலகம் ( கவிதைகள் )
எழுதியவர் : லாவண்யா சத்யநாதன்
தளம் வெளியீடு : ஜனவரி 2019
பக்கம் : 56
விலை : ரூ. 60
நான் படித்த நூல்களை உங்களுக்கு சுருக்கமாக அறிமுகம் செய்கின்ற இந்தத் தொடரில், இதுவரை கவிதை நூல் ஒன்றைக் கூட குறிப்பிடவில்லை. அந்தக் குறை இப்போது தீர்ந்து விட்டது.
சமீபத்தில் “சிறகு” பத்திரிகையை தனியாளாய், தானே எல்லாமுமாய் நடத்தி வரும் சிறகு ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்த ஒரு சந்திப்பில், கவிஞர் லாவண்யா சத்யநாதன் அவர்கள் இந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். ஐம்பத்தாறே பக்கங்கள் உள்ளதால், ஒரு மினி புத்தகம் என்றே இதனைக் குறிப்பிடலாம். சாவகாசமாய் படித்தால் கூட ஒரு மணி நேரத்திற்கு மேல் எடுக்காது.
லாவண்யா சத்யநாதனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது என அறிகிறேன். முதல் இரண்டு தொகுப்புகளும் “விருட்சம்” வெளியீடுகள்.
தஞ்சாவூர்க் கவிராயர் இந்நூலுக்கு அழகான முன்னுரையும் பரிந்துரையும் அளித்திருக்கிறார். “ந.பிச்சமூர்த்தி, சி.மணி, எஸ், வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன் போன்ற புகழ்மிக்க புதுக்கவிஞர்களின் மரபின் தொடர்ச்சியாக லாவண்யாவைக் குறிப்பிடத் தோன்றுகிறது” என்ற அவருடைய வரிகள் கவிதைகளின் கனத்திற்கு கட்டியம் கூறுகின்றன.
கவிஞரின் படைப்புகள் நவீன விருட்சம், புது எழுத்து, லயம், மணல் வீடு, கவிதாசரன், கல்வெட்டு பேசுகிறது, வேட்கை, சொல்வனம் டாட்காம், மலைகள் டாட்காம் ஆகிய பத்திரிகைகளில் இடம் பெற்று அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன என்பதும் வாசகர்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தகவல்.
சிறு நூலாக இருந்தாலும் மொத்தம் 46 கவிதைகளை உள்ளடக்கியது “கந்தர்வர்களின் உலகம்” என்ற இக்கவிதைத் தொகுதி. அனைத்தும் சிறு கவிதைகளாக இருப்பதால், படிக்கும்போது அயர்வு ஏற்படுவதில்லை. கருத்தூன்றிப் படிக்க முடிகிறது.
எல்லாக் கவிதைகளும் எல்லோருக்கும் பிடிப்பதற்கில்லை. பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், ஒவ்வொரு வாசகருக்கும் பிடிக்கக்கூடிய, உதட்டிலே முறுவலை வரவழைக்கக்கூடிய, ஒரு தரம், இரண்டு தரம் – என்று மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கக்கூடிய கவிதைகள் நிச்சயம் இதில் இருக்கின்றன.
“மல்லித்தோட்டம்” என்ற தலைப்பில் ஓர் அழகிய கவிதை :
: காத்திருக்கிறது உனக்காக
என் கூந்தலில் மல்லிகைத் தோட்டம்
குறிப்பறிந்த தோழிபோல
நழுவிச் சென்றதென் தோள் பற்றியிருந்த
உள்ளாடை
நிலா காய்கிறது
என்னைத் தொட்டுப்பார்
தெரியும்
கணிகை போல் கணினி
உன் மடியில்
கணினியும் கடலும் ஒன்று
மூழ்கியவன் கரை சேர்வதில்லை
மணித்துளிகளாய் உதிர்கின்றன
மல்லிகைகள்
மடிக்கணினியையே நீ
மணந்திருக்கலாம்
நான் மிகவும் ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. குறிப்பாக அந்தக் கடைசி வரி. நச்சென்று வந்து விழுந்திருக்கிறது. பல கவிதைகள் சுருக்கென்றும் தைக்கின்றன.
நீங்கள் கவிதைகளை எந்தவித எதிர்பார்ப்புமின்றி திறந்த மனதுடன் வாசிப்பவராய் இருந்தால், நிச்சயம் இந்த நூலைக் கையிலெடுக்கலாம்.
ஜி பி சதுர்புஜனின் “இந்தப் புத்தகத்தை படித்து விட்டீர்களா ?” வரிசையில் குவிகம் மின்னிதழில் இதுவரை இடம்பெற்றுள்ள நூல்கள் :
- The Wisdom Bridge
- BITS of Social Impact”
- Adventures Of A Countryside Doctor
- ஒரு சிற்றூர் மருத்துவரின் சாகசங்கள்
- பாரதி கண்ட தெய்வ தரிசனம்
- அம்மா அம்மா ( சிறுகதைத் தொகுப்பு )

