

எம். கே. ஆத்மநாதன் – ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் வள்ளியூரில பிறந்த இவர், சிறு வயதிலேயே டி கே எஸ் நாடகக் குழுவில் இணைந்தவர். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் , பாடலாசிரியர். கதை வசனமும் எழுதி இருக்கிறார்.
சுமார் 75 படங்களில, 120 பாடல்களை இயற்றியுள்ளார். 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் முதல் பாடல் – .’ரத்தபாசம்’ படத்தில் ‘பாதகம் செய்வது ஏனோ? ரத்தபாசம் அழிப்பது ஏனோ?’
இசையா? கவிதையா? என்று வியக்கத்தக்க வகையில், பாடல்களைத் தந்தவர் –
புதையல் திரைப்படத்தில்,
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே
அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலெ
விளையாடி.. இசை பாடி….
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே ஓடோடி வந்த சொர்க்க போகமே
சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
மல்லிகா படத்தில்,
நீல வண்ண கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே
மோஹன கண்ணா என் கையைத் தொடாதே
தன்னந்தனியான என்னை
துன்புறுத்தலாகுமோ
நானுனக்கு சொந்தமோ
ராதை என்ற எண்ணமோ
கண்ணை கண்ணை காட்டி என்னை
வம்பு செய்யலாகுமோ
அவன் பித்தனா திரைப் படத்தில்,
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
மனிதன் இருக்கிறானா மனிதன் இருக்கிறானா
இறைவன் கேட்கிறான்
பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி
ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்
இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதரென்றால் இயற்கையும் நின்று விடும்
களத்தூர் கண்ணம்மாவில்,
மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு
அமர தீபம் படத்தில்
எல்லோரும் கூடி ஆடப் பாடக்
கொண்டாடும் நாளிதே – நல்ல நாளிதே
மகேஸ்வரி திரைப்படத்தில்
அழகு நிலாவின் பவனியிலே
அமைதி கொஞ்சும் இரவினிலே
அல்லி மலர்ந்தே ஆடுதே !
களங்கமிலா என் மனதினிலே
கலை அழகே உமதன்பாலே
அமர காவியம் பாடுதே
நாடோடி மன்னனில்,
தடுக்காதே என்னைத் தடுக்காதே
தளுக்கி மினுக்கி வந்து மனசைக் கெடுக்காதே
நல்லவன் வாழ்வான் படத்தில,
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான் மற்றும்,
குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா
மனசை மயக்குதா – சுகமும் கிடைக்குதா
புதையல் படத்தில்,
தங்க மோகனத் தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதானாலே
மங்கையர் வதனம் வாடுதே
திருமணம் திரைப்படத்தில், பல்லவியை கண்ணதாசன்,
என் எண்ணம் இனிப்பதேனோ
இரு கண்ணும் சிவப்பதேனோ
என்று எழுத, சரணங்களை, கண்ணதாசன் புகழும்படி, ஆத்ம நாதன் எழுதினாராம்.
இப்படிப் பல பாடல்கள் தந்தவர் திரு ஆத்மநாதன். 250 நாடங்களுக்கு மேலே இசை அமைத்து இருக்கிறார்.
நாலு வேலி நிலம், மல்லியம் மங்களம், மாமன் மகள், மகேஸ்வரி, நாட்டுகொரு நல்லவன், அல்லி, விக்ரமாதித்தன், எதையும் தாங்கும் இதயம், திருடாதே என பல படங்களில், இவரது பாடல்கள் வெளி வந்துள்ளன.
நடிகர் திலகம், என் டி ராமராவ் நடித்து வெளிவந்த தெனாலி ராமன் திரைப்படத்திற்கு, கண்ணதாசனுடன், வசனம், பாடல்கள் எழுதி இருக்கிறார் திரு ஆத்மநாதன்.
மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் இன்றும் நடக்கும், ஒளி ஒலி காட்சி இவரது இசையில் ஒலிப்பதை பெருமையுடன் கூறுகிறார். 1982ஆம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், செல்வி ஜெயலலிதா நடித்த மதுர நாயகி என்ற பிரமாண்டமான நாட்டிய நாடகத்திற்கும், இவர் தான் இசை அமைத்தாராம்.
கலைமாமணி விருது, அவ்வை சண்முகம் விருது, தமிழ்ச் செம்மல் விருது என பல விருதுகள் பெற்றவர். அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என நான்கு முதல்வர்களிடமும் பணியாற்றிய பெருமை கொண்டவர்.
திறமை இருந்த அளவிற்கு, புகழும் பொருளும் கிடைக்காமல் மறைந்த பல கலைஞர்களில் இவரும் ஒருவர் என்றே கூறலாம். ஒரே பதில் – “ காலம் “ .
நன்றி .
அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திக்கலாம்.
