குவிகம் -சிவசங்கரி சிறுகதைத் தேர்வு 

—————————————————————————————————————————————-

2023  அக்டோபர் மாதத்திற்கான தேர்வு பெற்ற சிறுகதை

ஆர். வி. சுப்ரமணியன் ”சரண் நாங்களே” – ஆசிரியர் ஆர். வி. சுப்ரமணியன்

சொல்வனம் 22 அக்டோபர் 2023

—————————————————————————————————————————————-

சிறுகதை என்பது பக்க வரையறைக்கு உட்பட்டது அல்ல. ஒரு கதையின் அளவை அந்தக் கதை தீர்மானம் செய்யும் என்பது இலக்கணமறிந்த எழுத்தாளர்களின் நியாயம் ஆகும். அதன்படி பல பத்திரிக்கைகள் எழுத்தாளர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறது. இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது வலைதளங்களும் முகநூல்களும். யாரும் கதை எழுதலாம்.  அவர்களுக்குத் தேவை ஒரு கரு. சில உத்திகள். நிறைய கதை படித்த அனுபவம். நமக்கென்று சில ஆதர்சன எழுத்தாளர்களை வைத்துக்கொண்டாலும், அனைவரையும் படிக்க வேண்டும். ஏழு ஸ்வரங்களுக்குள் கோடானு கோடி பாடல்கள் உருவாகும் விந்தைபோலவே சிறுகதைகளும் எனக்கு வியப்பை தருகிறது.

சம்சாரத்தில் இருக்கும் எதார்த்தமான மாமியார் மருமகள் பிணக்கு வீட்டுக்கு வீடு, சூழலுக்கு சூழல் மாறுவது கதைக்களம் ஆகிறது. பள்ளி, கல்லூரிக் காதல் கதைகள் இன்னும் ஆயிரமாயிரம் வந்துகொண்டே இருக்கும். காதல் இருக்கும் வரை. நம் புராண இதிகாச கதைகளை ஆழமாகப் படித்தால், அதன்மீது  நம் கருத்துக்களும், எதிர் கருத்துக்களும் கதையாக உருவம் பெரும். சமூகக் கொடுமைகளுக்கு இன்றளவும் பஞ்சமில்லயே? அது போதாதா? எழுத வேண்டும். அவ்வளவு தான். அதைப்போல நிறைய படிக்க வேண்டும்.

ஐம்பத்தி இரண்டு கதைகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக நான் படித்தும், எனக்கு ஆயாசம் ஏற்படவில்லை. மாறாக வியப்பும் ஆச்சர்யமும் மேலோங்கி நிற்கிறது. காரணம் ஒவ்வொரு கதையிலும் அந்த எழுத்தாளுமைகள் கதை சொன்ன விதம். அவர்கள் பிரயோகப் படுத்தியுள்ள சில சொற்கள், சில வாக்கிய அமைப்புகள், கதை முடிக்கும் விதம் என்று பல.

எல்லா கதைகளும் சிறப்பாக இருந்தது. சில கதைகளை, ஒரு முறை படித்தேன். சிலவற்றை இரண்டு முறை. காரணம் அந்தக் கதையை படிக்கும் பொழுது, படிக்கும் வேகத்தில் முக்கியமான எதையோ கடந்துவிட்ட ஒரு உணர்வு.  சில கதைகளுக்கு, முடிவை வாசகர்களே யூகிக்க வைக்கும் உத்தி ஏதுவாக இல்லை.

சரி, சில கதைகளைப் பற்றிய சிறு விமர்சனங்கள். கதையின் பெயர்களை  தவிர்த்து இங்கே தந்துள்ளேன்.

  • பை ஒன். கெட் த்ரீ. அதாவது, ஒன்று வாங்குங்கள், மூன்றை எடுத்துச் செல்லுங்கள் என்ற ரீதியில்,  ஒரு கதையில், மூன்று கதை. கைமண் அளவு கற்ற எனக்கு இது புது உத்தியாக தெரிகிறது.
  • ஓய்வுக்காலத்தில் என்ன செய்யலாம் என்று திட்டமிட ஒரு ஓய்வு தேவைப்படுகிறது. அதுவும் ஒரு கதையாகிறது.
  • நகைச்சுவை கதை எழுதுவது கடினம். நகைச்சுவை கதைகளைப் படிக்கும் போது, குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு இடங்களிலேனும்   படிப்பவருக்கு இயல்பாக சிரிப்பு வந்தால் அது வெற்றிக் கதை.
  • தனிமையில் ஏற்படும் உண்மையான சலனங்கள்.
  • “வாழ்க்கைன்னு வந்துட்டா விவரமா இருக்கணும்”, காதல் வேறு கல்யாணம் வேறு என்று சொல்லப்படும் கதை.
  • அழகு அவரவர் பார்வையை பொறுத்தது. பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் எப்போதும் அழகுதான்.
  • தேவதைகள் ஆபத்தில் உதவுவார்கள்.
  • விலங்குகளின் இடத்தை நாம் ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றை விரட்டும் தற்காலச் சூழலை சொல்லும் கதை. கடவுள் அனைத்தையும் காக்கிறார்.
  • நோய்கள் பற்றிய புரிதல் குறைவினால் வரும் பயம்,   சகிப்புத்தன்மை இல்லாத மனிதர்களின் உணர்வினை சொல்லும் இயல்பான கதை.
  • காகிதத்தில் வண்ணம் தீட்டுவதும், பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுவதும் வேறு ரகம். நவராத்திரி சமயத்தில் பொம்மைகளைப் பார்த்ததும் தோன்றிய கதையாக இருக்கலாம்.
  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை சொல்லும் கதை.
  • பெரிய கதைக்கான களம். சுருக்கியதால், விரைவு வண்டி போல செல்கிறது கதை.
  • மழை நீரும் சில சமயங்களில் சுடும். அது மனநிலையை பொறுத்து
  • என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் சில சமயங்களில் வழிகாட்ட சாமிதான் வரணும்.சரி, இனி பதக்கப் பட்டியல்.

    தங்கம்: ஆர். வி. சுப்ரமணியன் எழுதிய சரண் நாங்களே. (சொல்வனம் 22.10.23)

    மகாபாரதப் போர் முடிந்த பின்னர் நிகழும் சம்பாஷனை, தருமர் தர்மவானா? அவரை பற்றிய விமர்சனங்கள் என்ன? அவர் போற்றப்படுகிறாரா என்று விவரிக்கும் கதை. சில நுணுக்கங்கள் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. குகையில் இருக்கும் பனிக்குச்சி, குகை விரிசல்கள் வழியே தெரியும் நட்சத்திரங்கள், பீமனின் பாட்டு, நாய் என்று சில.  

    2. வெள்ளி: ஜே.வி. நாதன் எழுதிய ஒரு டீஸ்பூன் மன்னிப்பு. (குமுதம் 04.10.23)

    மன்னிப்பின் கணத்தை நியாயத்தின் கணத்துடன் தராசில் வைத்து சரிபார்க்க முடியாது. மனம் தெளிவு பெறவில்லையென்றால், செய்யும் செயலில் தடுமாற்றம் வரும். இந்தக் கதையில், எளிமையான எழுத்து நடை எனக்குப் பிடித்தது. ஒரு அழுத்தம் இருந்தது. எதை செய்யவும் பொறுமை அவசியம். அது கொலையாகவே இருந்தாலும் கூட.

    3.   வெண்கலம்:: தேவி லிங்கம் எழுதிய வக்கிரம். (குங்குமம் 20.10.23)

    மனித பாலியல் நடத்தைகள் பற்றிய பாலியல் கல்வியின் அவசியத்தை சொல்லியிருக்கும் கதை.