சிறுகதை: நேர்முகம் | சிறுகதை: நேர்முகம் - hindutamil.in

டொக்! டொக்! என்று வீட்டின் மேற்கூரையிலிருந்து தொங்கவிடப்பட்ட பந்தை தன் மட்டையால் அடித்து ஷாட் பயிற்சி செய்து கொண்டிருந்தான் விக்ரம். அருகே குட்டி மேகா தன் பங்கிற்கு பரதம் பயின்று கொண்டிருந்தாள்.  “ தையும் தத்த தையும் தா கா,” என்று. ராம் அன்றைய முக்கிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்த வண்ணம் சோஃபாவில் அமர்ந்திருந்தான். கௌரி அவளை சுற்றி நடப்பது எதையும் சட்டை செய்யாமல், அவளது மடிக்கணினியில் மும்மரமாக டைப் செய்து கொண்டிருந்தாள்.

“ராம்… லேப்டாப்க்கு தமிழ்ல என்ன சொல்லுவாங்க?”

“மடிக்கணினி”

“ஒட்டெழுத்து வருமா வராதா?”

“ஓய் எழுத்தாளர், நீதான் இதெல்லாம் எழுதணும். என்ன கேட்காத. சரி, மணி எட்டாசே என்ன டின்னர் பண்ண போற?”

“ என்ன பண்ணலாம்? நீயே சொல்லேன்”

“சப்பாத்தி குருமா?”

“அய்யோ… ரொம்ப நேரம் ஆகுமே”

“சரி தோசை வாத்து சட்னி அரைச்சிடு”

“மாவு கம்மியா இருக்கே… இந்த வாரம் அரைக்கல”

“சரி, வழக்கம் போல உப்மாவையாவது பண்ணு… ரவை இருக்கா?”

“ அது இருக்கு… ஆனா, நாளைக்கு சாம்பார் வெக்க புளி கொஞ்சம் கம்மியா இருக்கு… சாப்டுட்டு வாங்கிட்டு வரியா?”

“போன வாரம் மாச மளிகை லிஸ்ட் போட்ட இல்ல,புளி அதுல போட மறந்துட்டியா?”

“சாரி ராம், பிளீஸ் வாங்கிட்டு வா”

கௌரி ஒரு வளரும் எழுத்தாளர். அவளுக்கு வாசிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். திருமணம் ஆனது முதல் இரு குழந்தைகள், தனியார் கம்பெனியில் வேலை என்று பரபரப்பா இருந்தாலும் , இரவு ஒரு அரை மணி நேரமாவது வாசிக்கணும், மாதம் இரண்டு கதையோ, கட்டுரையோ எழுதி தமிழ் இதழ்களில் பிரசுரம் செய்ய வேண்டும் என்று அவளுக்கு ஆசை. ஆரம்பத்தில் சில நிராகரிப்பு இருந்தாலும், சமீப காலமாக அவள் எழுதுவது தொடர்ந்து சில வார மற்றும் மாத பத்திரிகைகளில் பிரசுரம் ஆகிறது. இதனால் அவளும் விடாமல் எழுதுகிறாள். கௌரிக்கு எழுத பிடிக்கும், ராமுக்கு அதை படிக்க, திருத்த பிடிக்கும், இப்படி ஒரு ஒப்பந்தத்தில் அவர்கள் குடும்ப வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது.

“கௌரி, உங்க அம்மா அப்பா தீபாவளி சீர் வைக்க நாளைக்கு வராங்க. நானும் அவங்களுக்கு இந்த முறை தீபாவளி  பண்டிகை இல்லையேன்னு, நம்மோட ரெண்டு வாரம் தங்கி, தீபாவளி சேர்ந்து கொண்டாடிட்டு போலாம்ன்னு கூப்பிட்டு இருக்கேன்,” என்றான் ராம்.

“எங்க அம்மா உனக்கு எதுக்கு கால் பண்றாங்க?”

“உனக்கு பண்ணினாங்களாம் … நீ எடுக்கல, அதான் என் கிட்ட விஷயத்த சொன்னாங்க.”

“ஓ அதுவா… இன்னிக்கு லஞ்ச் டைம்ல கால் பண்ணினாங்க, ஒரு நல்ல கதைக் கரு கெடச்சுது, அதான் என் டைரில குறிப்பு எடுத்துட்டு இருந்தேன். நான் எப்போதும் டைரி இல்லாம இருக்கவே மாட்டேன்.”

“உனக்கு கதைக் கரு கெடச்சா எழுத டைரி வெச்சிருக்கியே… அதுல வீட்டுக்கு வேண்டிய விஷயங்கள், செய்ய வேண்டிய விஷயங்களையும் குறிப்பு எடுத்தா மறக்காதுல்ல?”

“பிளீஸ் ராம், வக்கீல் குறுக்கு கேள்வி கேக்குற மாதிரி கேட்காத … நான் குடும்ப தலைவி ரோல்ல கொஞ்சம் ஆவெரேஜ் தான். ஆனா, அம்மா ரோலில் ஸ்ட்ராங். என் பசங்களுக்கு சின்ன வயசுலயே படிக்கும் ஆர்வத்த ஏற்படுத்திட்டேன்…”என்று ராமிடம் கொஞ்சலாக வாதம் செய்தாள் கௌரி.

கௌரியின் அம்மாவும்,  அப்பாவும் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன் வர, வீடே ஒரே அமளி துமளி ஆனது. “ஏன்  கௌரி பட்சணம் ஸ்வீட்ஸ்  எல்லாம் கடையில வாங்குற? வீட்ல செஞ்சாதானே கட்டுப்படியாகும்,” என்று தொடங்கிய கௌரியின் அம்மா சீதா வீட்டையே திருப்பிப் போட்டாள்.

“இதோ பாரு மாசா மாசம் ஒழுங்கா லிஸ்ட் போட்டு மளிகை சாமான் வாங்கணும். ஒண்ணு விட்டுப்போச்சு, ரெண்டு விட்டுப்போச்சுன்னு மாப்பிள்ளைய அடிக்கடி கடைக்கு அனுப்பக் கூடாது. வீடே ஊழலா இருக்கு, கிச்சன் செல்ஃப் எல்லாம் மாசம் ஒரு முறை பிசுக்கு போக தொடச்சு பேப்பர் மாத்தணும் சரியா. வாரா வாரம் வீட்லயே தோசை மாவு அரைக்கணும், கடை மாவு உடம்புக்கு நல்லது இல்ல ,” என்று சீதா வேலை செய்து கொண்டே அறிவுரை கொடுத்த வண்ணம் இருந்தார்.

கௌரியும் “சரிம்மா” “வாஸ்தவம் தான், இனிமேல் சுத்தமா வெச்சுக்கறேன்,” என்று தலையை ஆட்டியபடியே அம்மாவுக்கு உதவிகள் செய்தாள்.

“இது என்ன ஒரு டப்பால தனியா மிக்சர் இருக்கு? அதை இந்த மிக்சரோட போட்டு வை… ஒரே டப்பாவா போகும்,” என்று ஒரு சம்படத்தை சீதா எடுக்க…

“அம்மா! நில்லு … அது போன தீபாவளிக்கு வாங்கினது, இதோட சேர்க்காத..” என்று பதறினாள் கௌரி.

அவ்வளவு தான் சீதா சாமியாடினாள், “ இதோ பாருங்க மாப்பிள்ளை, இவ செய்யறது கொஞ்சம் கூட சரியில்ல. நீங்க ரொம்ப எடம் கொடுத்துட்டீங்க! இனிமேல் இந்த கதை புஸ்தகம் படிக்கிறது, சிறுகதை எழுதறது எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வைக்கணும். மொதல்ல வீட்டப் பாரு.  மாப்பிள்ளை, நீங்க தான் அவள எழுத விடாம பார்த்துக்கணும் . நான் கால் பண்ணி செக் பண்ணுவேன்,” என்று கௌரியையும் ராமையும் உட்கார வைத்து சரமாரியாக திட்டித் தீர்த்தாள்.

மறுநாள் அதிகாலை ராம் எழும்போது அருகில் கௌரியை காணவில்லை. நேற்று வாங்கிய திட்டில் அதிகாலையே எழுந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாளா? என்று எண்ணி சமையல் கட்டுக்கு சென்றான்.அங்கும் அவள் இல்லை. வீடு முழுவதும் அவளைத் தேடிப் பார்த்து சற்று துணுக்குற்றான் ராம். பலகனியில் மின் விளக்கு போட்டிருப்பது கண்டு அங்கே சென்றான். கௌரி தரையில் படுத்திருந்தாள். ராம் அவளை மெல்லமாக தட்டி எழுப்பினான்.

“இதோ பாரு, அவங்க சொல்றாங்களேன்னு நீ எழுதறத நிறுத்த வேண்டாம். வேலைய முடிச்சுட்டு எழுது. வருத்தப் படாத…” என்றான் ராம் கனிவாக.

“அது இல்ல ராம், ‘படைப்பாளிகளோடு வாழ்வது கொண்டாட்டமா? போராட்டமா? ‘ என்று ஒரு தொடர் படிச்சேன். அதில் ஆண் எழுத்தாளர்களும், அவர்கள் குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள பற்றி எழுதி இருந்தாங்க… நேத்து நடந்த சம்பவத்த வெச்சு, பெண் படைப்பாளிகளோடு வாழ்வது பற்றி ஓர் நகைச்சுவை கதை எழுதினேன்… அப்பறம் இங்கேயே தூங்கிட்டேன் …” என்றாள் சிரித்தபடி கௌரி.