பத்துப் பாட்டுகளுள் இரண்டாவது பாட்டு பொருநராற்றுப்படை. புகழ்ந்து பாடுவோருக்குப் பொருநன் எனப் பெயர். ஒரு பொருநன் மற்றொரு பொருநனை ஆற்றுப்படுத்துவது பொருநராற்றுப்படையாகும். அதாவது ஒரு பொருநன் மற்றொரு பொருநனுக்கு வழி சொல்லி அனுப்புவதாகும்.
பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பாவாலானது. இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும்.
புதுப்புது வருவாய் வளம் பொலிந்தோங்கும் பேரூரில் விழா நடந்து முடிந்த மறுநாள் சோறு கிடைக்காமல், விழாவில் பங்கு கொண்ட கலைஞர்கள் விழா நடைபெறும் வேறு ஊரை நாடிச் செல்வது வழக்கம். இந்தப் பாட்டில் ஆற்றுப்படுத்தப்படும் பொருநன் அப்படிச் செல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் ஆற்றுப்படுத்தும் புலவர் கூறுகிறார்.
வாடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு
நீடுபசி யொராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி யேழின் கிழவ
கோடியல் தலைவ நீ நின் குறிக்கோளை அறிந்தவனாயினும் எங்கு யாரிடம் செல்ல வேண்டும் என்று நினைத்துப் பார்க்காமல் கால் போன வழியில் சென்று கொண்டிருப்பது நீ முன்பு நோற்ற நோன்பின் பயனாகும். என்றாலும் நான் சொல்வதைப் போற்றிக் கேட்பாயாக ! உன் சுற்றத்தார் அடித்துத் தின்னும் பசியால் வருந்துகின்றனர். அந்த நீண்ட நாள் பசியைப் போக்க விரும்பினால் காலம் தாழ்த்தாமல் நான் சொல்லும் இடத்திற்குச் செல்ல எழுக ! வாழ்க!
செல்வச் செருக்கும் செம்மாந்த அழகும் சேர்ந்து கிளர்ச்சி யூட்டிய கரிகாலனின் அரண்மனையின் ஓர் அறையில் தங்கியிருந்தோம். தவம் செய்யும் பெருமக்கள் தம் உடலை விட்டு உயிர் விலகுவதற்கு முன்பே தவத்தின் பயனை எய்துவர். அது போல நாங்களும் எங்களது இளைத்த உடம்பிலேயே இன்பம் கண்டோம். அவர்கள் தவம் செய்த வருத்தம் நீங்கிப் பயன் கண்டது போல நாங்கள் வழிநடந்த களைப்பெல்லாம் நீங்கிச் சுகம் கண்டோம். தூக்க நடுக்கத்தைத் தவிர வேறு மனக் கவலையே இல்லாமல் மயங்கிக் கிடந்தோம்.
பின்னர் எழுந்து பார்க்கும் போது…பகலெல்லாம் உழைத்தவர் மாலை நேரம் வந்ததும் காணும் மனச்சுமை குறைந்த புன்மைநிலை போல எங்கள் நெஞ்சம் பாதுகாப்புச் சுகத்தில் மிதந்து கொண்டிருந்தது. காலை நேரத்தில் பூவைச் சூழ்ந்து வண்டுகள் மொய்ப்பது போல் கனவு கண்டு கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் கல்லா இளையர் சிலர் வந்து அரசன் வருகையைச் சொல்லிக் காட்டினர். நாங்கள் எழுந்து அவனை வணங்குவதற்கு முன்னர் அவன் முந்திக் கொண்டான். வருக என்று கூவி அழைத்துக் கொண்டே வந்தான். இது அவன் நடந்து கொள்ளும் முறைமை வழக்கம். அவனது இந்த வழக்கமான செயலுக்குப் பின்னர்…
பதத்தோடு சுட்டுச் சமைத்த செம்மறியாட்டுக் கறியும் சோறும் கூடிய உணவை அருகிருந்து ஊட்டலானான். அருகம்புல் மேய்ந்த துருவை என்னும் செம்மறியாடு. பராரை எனப்படும் அதன் பருத்த கால்தொடை. அதனைப் புழுக்கிய வேவை. (வேவையை இக்காலத்தில் சூப் என்பர்.) அரசனாயிற்றே என்று அவனிடம் நெருங்கத் தயங்கினோம். அவன் விடவில்லை. தண்டினான். பருகுக என்று சொல்லித் தடுத்தான். (தண்டித்தான்) காழ் என்பது வைரம் பாய்ந்த கட்டையில் செய்த உண்கலம். கை சுடாமல் இருக்க மரக் கிண்ணத்தில் தந்தான். அதில் கொழுத்த கறித் துண்டுகளும் இருந்தன. சூடு வாயில் சுட்டதால் வாயால் ஊதி ஊதிச் சுவைத்துப் பருகினோம். ஊழின் ஊழின் ஒற்றினோம். அவ்வப்போது வாயில் ஒற்றடம் போட்டுக் கொண்டோம். அவை சலிக்கும்போது முனிவந்தோம். அதாவது முகம் சுளித்தோம். உடனே அவன் வேறு பல மாதிரிகளில் சமைத்த உணவை வரவழைத்தான். தந்திரமாக வரவழைத்துக் கொடுத்தான்.
மண்ணமை முழவின் பண்ணமை சீறியா
ழொண்ணுதல் விறலியர் பாணி தூங்க . . . .(110)
மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யொருநா
ளவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப . . . .(115)
வயின்ற காலைப் பயின்றினி திருந்து
மண்ணல்.என்பது குளித்தல். மண்ணுமங்கலம் என்னும்போது இப்பொருள் தருவது காண்க. அடித்தாலும் மண்ணும் முழவை முழக்கினோம். சீறியாழ் என்பது ஏழு நரம்புகள் கொண்டது. நரம்பு எண்ணிக்கையில் சிறிய யாழில் பண்ணமைத்துப் பாடினோம். முகவெட்டுள்ள விறலியர் பாடலின் பாணிக்கேற்ப ஆடினர். இப்படி மயங்கிய பதத்தில் பலநாள் கழித்தோம். ஒருநாள் மடைமாற்று நாளாக அமைந்தது. அன்று புலால் உணவை மாற்றிக் காய்கறி உணவைத் தரலானான். முரியா அரிசியில் புழுக்கிய பதமான சோறு அவிழ்ந்நிருந்தது. இதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவன் கெஞ்சினான். புலாலைப் பிடிக்கக் கைவிரல் மூடும். சோற்றை அள்ள இப்போது கைவிரல்கள் நிமிர்ந்து அவிழ்ந்தன. கருணைக் கிழங்குப் புளிக்குழம்பு மிதக்குமாறு ஊற்றப்பட்டிருந்தது. சோறும் குழம்பும் அயின்றோம். பின் பலரோடும் பயின்று அளவளாவிக் கொண்டு இனிதிருந்தோம்.
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
றாணிழன் மருங்கி லணுகுபு குறுகித்
தொழுதுமுன் னிற்குவி ராயிற் பழுதின் . . . .(139 – 150)
இந்த நூலின் தலவன் பெயர் கரிகால்வளவன் என்று இங்குக் குறிப்பிடப்படுகிறான். ஆளும் விலங்கு ஆளி. ஆளியின்வழி வந்தது அரிமான் என்று போற்றப்படும் சிங்கம். ஆளியை நன்மான் என்று பாடல் குறிப்பிடுகிறது. அதன் குட்டிகூட விலங்குகளை வருத்தும். பால் குடிக்கும் ஆளிக்குட்டி ஞெரேர் எனப் பாய்ந்து முதன் முதலாக வேட்டைக்குச் செல்லும் போதே யானையை அழிப்பது போலக் கரிகாலன் வெண்ணி என்னுமிடத்தில் நடந்த போரில் இருபெரு வேந்தரையும் வென்றான். பனந்தோட்டு மாலை அணிந்த சேரனையும், வேப்பந்தழை மாலை அணிந்த பாண்டியனையும் ஆத்தி மாலையைச் சூடிய கரிகாலன் வென்றான். அப்போர்க்களத்திலேயே சேரனும் பாண்டியனும் மாண்டனர். வெற்றிகண்ட கரிகால்வளவனைத் தொழுது அவன்முன் நிற்பீர் ஆயின்,
பொருந! கரிகாலன் காலடி நிழற்பகுதிக்குச் செல்வீராயின்… பசு அப்போது போட்ட கன்றை நாவால் நக்கித் தெம்பு ஊட்டுவது போல, அவன் உங்களை விரும்பிப் போற்ற முனைவான். நீங்கள் கைதொழுவதற்கு முன்பாகவே புத்தாடை தந்து மாற்றிக் கொள்ளச் செய்வான். உங்களது பழைய ஆடை கிழிந்து குறைந்து போயிருக்கும். வேர்வை அழுக்கு ஏறி பாசி படிந்திருக்கும். கிழிசல் ஊசியால் தைக்கப்பட்டிருக்கும், புதிதாக அவன் தந்த பட்டுடையில் கொட்டைக்கரை போட்டிருக்கும். நீங்கள் புத்தாடை புனைந்த பின் கிண்ணத்தில் தேறல் ஊற்றி வேண்டிய அளவு பருகத் தருவான். காலை வேளையில் கையைக் குடையாக்கியும் அத் தேறலைப் பருகலாம்.
யெரியகைந் தன்ன வேடி றாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி . . . .(160)
நூலின் வலவா நுணங்கரின் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
பின்னர் விருதாக உன் (பொருநன்) தலையில் பொன்னாலான தாமரை சூட்டுவான். இவன் சூட்டிவிடும் தாமரை தழல் விட்டும் பிளவு பட்டும் எரியும் தீப்போல் இருக்கும். குளத்தில் இருக்கும் தாமரைக்கு மடங்கும் இதழ் உண்டு. இதில் உள்ளது மடங்காத பொன்னிதழ். பித்தை என்பது ஆணின் உச்சிக் கொண்டை. அது அழகு பெறும்படி உனக்குக் கரிகாலன் தன் கையால் சூட்டிவிட்டுப் பெருமைப் படுத்துவான். பாடினி அரில் மாலை – இது நூலில் கோக்கப்படாத முத்துமாலை.அதாவது முத்துக்களைத் தங்கத்தில் பதித்திருக்கும் மாலை. முத்தாரம் – இது நூலில் கோத்த முத்துமாலை. அரில்மாலையையும், முத்துமாலையையும் பாடினி அணியத் தருவான்.
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தே
ரூட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் . . . .(165)
காலி னேழடிப் பின்சென்று கோலின்
றாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல் . . . .(170)
வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழந்
தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்
வெண்குதிரைகள் நான்கு பூட்டிய தேர்மேல் அனுப்பி வைப்பான். ஏழடி பின் சென்று நின்று ஏறுங்கள் எனபான். ஏறியபின் பேரியாழை மீட்டச் சொல்லிக் கேட்பான். அதற்குப் பரிசிலாக வளம் மிக்க ஊர் கொண்ட நாட்டுப் பகுதியைத் தருவான். யானைப் பரிசும் உண்டு. தேர் – அமரும் இடமான கொடிஞ்சி தந்தத்தால் செய்யப்பட்டது. குதிரை – குதிரையின் உச்சந் தலையில் வண்ணம் பூசிய குஞ்சம் தொங்கும். அதன் பிடரிமயிர் மடிந்து தொங்கும். குதிரைகள் பால்போல் நிறம் கொண்டவை. குதிரையை ஓட்டும் கோலின் நுனியில் முள் பொருத்தப்பட்டிருக்கும் முள் பொருத்தப் பட்டிருந்தால் அது தாற்றுக்கோல். சாட்டைப் பொருத்தப் பட்டிருந்தால் அது சாட்டைக் குச்சி. கரிகாலன் தேரோட்டியின் கையில் தாற்றுக் கோல் இல்லாமல் செய்வான். (இது அவன் விலங்குகள் மாட்டும் கொண்டிருந்த கருணையைப் புலப்படுத்துகிறது) பரிசிலாகத் தரும் நாட்டுப் பகுதியிலுள்ள ஊர்கள் விளைச்சல் குறையாத நன்செய்ப் பண்ணைகள் நிறைந்தவை. வேழம் – வெருவும் பறை போன்ற காதுகளும் பருத்துப் பெருத்த நீண்ட துதிக்கைகளும் கொண்டவை. சிறந்தவை. எனினும் பகை கண்டால் வெகுள்பவை.
பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்
செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து . . . .(175)
நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவ னல்ல னொல்லெனத் . . . .(177)
நீங்கள் பெற்றவற்றை இவை இவை கரிகால் வளவன் தந்த பரிசில் என்று பிறர் பிறர்க்குச் சொல்லிக்காட்டிவிட்டுச் செல்லத் தொடங்குவீராயின் பிறர்க்குச் சொன்னமைக்காகக் கடிந்துகொள்வான் (புலப்பான்). இந்த உலகம் நிலையில்லாதது என்னும் உண்மை நிலையைச் சீர்தூக்கிப் பார்த்துச் ‘செல்லுங்கள்’ என அனுப்பிவைக்கவும் மாட்டான். (அவனிடமே இருக்கக்கூடாதா என ஏங்குவான்)
அப்படிப்பட்ட மன்னவனிடம் நீங்கள் செல்லுங்கள் என ஆற்றுப்படுத்துகிறான்.
தமிழரின் பண்பாடான விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் குறித்து “காலில் ஏழடிப் பின்சென்று” என்னும் பாடல் வரியால் அறிய ,முடிகிறது.
பொருநன் கடும் பசியில் உள்ளான் அதனைப் போக்குவதற்குக் கரிகார்பெருவளத்தான் உள்ளான் என்பதை அடையா வாயில் அடைக நீயும் என்கிறார்.
“ஆடுபசி உழந்த நின் இரும்பேர் ஒக்கலொடு
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று
எழுமதி வாழி ஏழின் கிழவா!” (பொருநராற்றுப்படை 61-63)
என்ற வரிகளின் மூலம் பொருநனின் பசித்துயரம் என்பது கொல்லுகின்ற பசித்துயரால் வருந்தும் பொருநன் உன் சுற்றத்தருடன் நீண்ட நாள் பசியைப் போக்க இன்றே புறப்படு ஏழிசை யாழ் நரம்புக்கும் உரிமை உடையவனே உடனே செல்க. ஏனெனில் உன் பசி போக வேண்டுமானால் கரிகால் பெருவளத்தானைப் பார். பசித்துன்பத்தைப் பற்றிக் கூறும் ஆசிரியர், பழுத்த பழமரங்களை விரும்பித்தேடிச் செல்லும் பறவைப் போலக் கரிகால் பெருவளத்தானுடைய கோட்டை அடையா வாயிலாகக் காத்துத் திறந்திருக்கும். பொருநன் கூறுகிறான், அடையா நெடுங்கதவுடைய ஆசார வாசலை அடைந்தேன். வாயிற்காவலைனைக் கேட்காமாலே உள்ளே நுழைதேன். வயிற்றுப் பசிதீர என்னுடைய வறுமை நீங்க உண்டேன். இளைத்த என்னுடல் பருத்தது. இரையுண்ட பாம்பின் உடல் போலானது. களைப்பு நீங்கிய நான், என் கையில் இருந்த கண்ணகன்ற உடுக்கையத் தட்டி இரட்டை சீர் உடைய தடாரிப் பண்ணை தாளத்திற்கு ஏற்ப இசைத்தேன். வெள்ளி முளைக்கும் வைகறைப் பொழுதில் நான் பாடத் தொடங்கு முன்பே நட்பு கொண்ட உறவினரைப் போல் கரிகால் பெருவளத்தான் என்னை வரவேற்று உபசரித்தான்.
இரும்புக் கோலில் கோர்த்து வேக வைத்த சூடான இறைச்சியை வாயின் இடதுபுறமும் வலது புறமும் மாற்றி வைத்து உண்ண ஓயாது உபசரித்தான். இதை மேலும் உண்ணுவதை வெறுத்து வேண்டாம் என்ற போது, முல்லை மொக்கு போன்ற தவிடு நீங்கிய முனை முறியாத விரல் நுனி போன்ற அரிசி சோற்றைப் போட்டுப் பொறிக்கறியோடு உண்ணவைத்தான். இதைத்தான் முரவை போகிய முரியா அரிசி[6] என்று நூலாசிரயர் குறிப்பிடுகிறார். கூர்மைப் படுத்தப்பட்ட அரிசி சோறு போட்டதைப் பெருமைப் பட பொருநன் குறிப்பிடுகிறான்.
இவ்வாறு பொருநராற்றுப்படை கரிகாலனின் சிறப்பையும் தமிழர் பெருமையையும் பறைசாற்றுகிறது.
