குலோத்துங்கன்-2
சாளுக்கியச் சோழன் குலோத்துங்கனின் ஆட்சியின் 26-ஆம் ஆண்டு. கி. பி. 1096-ல் தென்கலிங்கப்போர் நிகழ்ந்தது. இப்போர், வேங்கிகாட்டில் அரசப்பிரதிநிதியாயிருந்த குலோத்துங்கன் மகன் விக்கிரமசோழன் தென்கலிங்கநாட்டின் மன்னனாகிய தெலுங்கவீமன்மேற் படையெடுத்துச் சென்று அவனை வென்றான். இப்போர் குலோத்துங்கனது மகனாகிய விக்கிரமனால் நிகழ்த்தப் பெற்றதாயினும் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்திலே நடைபெற்றது.
குலோத்துங்கனின் ஆட்சியின் 45-ஆம் ஆண்டு கி, பி. 1115-ஆம் ஆண்டிற்கு முன்னர் வடகலிங்கப்போர் நடைபெற்றது. இது, வட கலிங்க வேந்தன் அனந்தவர்மனுடன் குலோத்துங்கன் நடத்தியது. இப்போரை வெற்றியுடன் நடத்தித் திரும்பியவன் குலோத்துங்கனின் படைத் தலைவர்களுள் முதல்வன் கருணாகரத் தொண்டைமான் (சாண்டில்யனின் இளையபல்லவன்). இவனோடு வாணகோவரையன், முடிகொண்ட சோழன் என்ற இரண்டு படைத்தலைவர்களும் அங்குச் சென்றிருந்தனர். குலோத்துங்கனது ஆட்சியில் நடந்த போர்களுள் இதுவே இறுதியில் நடந்தது. வடகலிங்கத்தில் நடந்த இப்போர் நிகழ்ச்சி ஜயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணியில் விவரிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கதை சொல்லலாமா?
ஒருநாள். காஞ்சிமாநகரில், பொன்மாளிகையான அரண்மனையில், ஓவியமண்டபத்தில், குலோத்துங்கன் கொலுவீற்றிருந்தான். அப்பொழுது, வாயிற்காப்போன் ஓடிவந்து ௮ரசனை வணங்கி, “சக்கரவர்த்தி! வேந்தர் பலர் தங்கள் திறைப்பொருள் கொணர்ந்து கடைவாயிலின் கண் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றான். ௮தைக்கேட்ட அரசன் “அன்னாரை விடுக” என்றான். வந்ததோ ஒரு கூட்டம்! அந்தக்கூட்டத்திலிருந்தவர்கள்:
தென்னவர் வில்லவர் கூவகர் சாவகர் சேதிபர் யாதவரே கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. கங்கர் கடாரர் கவிந்தர் துமிக்தர் கடம்பர் நுளும்பர்களே வங்க ரிலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவ ரையணரே கொங்கணர் கொங்கர் குலிங்கர் ௮வக்தியர் குச்சரர் கச்சியசே வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சரீகளே. குத்தர் திகத்தர் வடக்கர் துருக்கர் .குருக்கர் வியத்தர்களே.
இந்த மன்னர்கள், குலோத்துங்கனை அணுகிப் பணிந்து “மன்னர் மன்ன! நாங்கள் நினக்கு திறைப்பொருள் கொணர்ந்துளோம்” என்றுறைத்துத் தாம் கொண்டுவந்துள்ள பொற்கலம், மணித்திரள் முதலான பொருள்கள் அனைத்தையும் அரசன் முன் வைத்துக் கைகுவித்து ஒருபுடை நின்றனர். அப்போது அரசன் அமைச்சரைப்பார்த்து, “இதெல்லாம் சரி அமைச்சரே! இவர்களைத் தவிரத் திறை கொடாதார் இன்னும் எவரேனும் உளரோ?” என்று வினவினான். அமைச்சர் மெல்லச் சொன்னான் ”வடகலிங்கத்தரசன் இருமுறை திறை கொடுக்கவில்லை” என்றான். அரசன் பெரிதும் வெகுண்டு “அங்கனமாயின் அவனது வலிய குன்றரணம் இடியவென்று அவனையும் ௮வனது யானைகளையும் பற்றிக் கொண்டுவருக” என்றான். இதைக்கேட்டு, ௮ருகில் அமர்ந்திருந்த இளையபல்லவன் எழுந்தான். “மன்னா! அந்நாளில் நமக்கு பாலூர்ப்பெருந்துறையில் நடந்த கொடுமைகளுக்குப் பாடம் கற்பிக்க, நல்ல வாய்ப்பு இது. அடியேன் கலிங்கத்தை வென்று வருகிறேன். விடைகொடுக்கவேண்டும்” என்றான். ௮ரசன், “நல்லது சொன்னாய் நண்பா! அங்கனமே செய்க” என்றான்.
குலோத்துங்கனிடம் விடைபெற்ற இளையபல்லவன், நால்வகை சேனைகளுடன் போருக்கெழுந்தான். எங்கும் முரசங்கள் முழங்கியது. நாற்படையும் சூழ்ந்து நெருங்கி வெள்ளத்தைப்போல் திரண்டெழுந்தது. கண்டவர் வியப்பெய்தி, ‘இச்சேனை கடலைக் கலக்குமோ? மலையை இடிக்குமோ?’ என்று நடுங்கினர். நாத்திசைகளும் அதிர்ந்தது. தூளிப்படலம் பிறந்தது. இளையபல்லவன் யானைமேல் ஏறி இரை தேடும் புலியின் சீற்றத்துடன் சென்றான். சில நகரங்களை எரியூட்டினான். சில ஊர்களைச் சூறையாடினான்.
நல்ல குணமும், பண்பாடும், அறிவும் கொண்ட இளையபல்லவன் இவ்வாறு ஏன் செய்தான் என்ற கேள்விக்கு சாண்டில்யன் கடல்புறாவில் பதில் சொல்கிறார். பாலூர்ப்பெருந்துறையில் அன்று கலிங்கத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த பெருங்கொடுமைகளே காரணம். முன்னாளில், பாலூர்ப்பெருந்துறையில் தன்னைச் சிறைசெய்து, நீதிமன்றத்தில் அவமதித்த கலிங்கமன்னன் அனந்தவர்மனை எண்ணினான். குலோத்துங்கனும், காஞ்சனா தேவியும் தன்னை அந்த நீதி மன்றத்திலிருந்து தப்புவித்ததை எண்ணினான். பாலூரில், தமிழ் வணிகர்களுக்குக் கொடுமை செய்த கலிங்க மன்னனை எண்ணினான். இந்த எண்ணங்கள் அவன் சீற்றத்தை உச்சக்கட்டத்துக்குக் கொண்டு சென்றது.
சோழப்படைகளுக்கு, பன்னிரண்டு ஆறுகளைத் தாண்ட வேண்டியிருந்தது. பாலாறு, பொன்முகரி, பழவாறு, கொல்லியெனும் நான்கு ஆறுகளைத் தாண்டிப் பெண்ணையாற்றையும் கடந்துப்பின்னர் கிருஷ்ணா நடக்கியத் தாண்டி, கோதாவரியையும் தாண்டினான். மீண்டும் சில நகரங்களை எரியூட்டினான். சில ஊர்களைச் சூறையாடினான்.
குடிமக்களெல்லாம், “ஐயோ, மதில்கள் இடிகின்றனவே; வீடுகள் எரிகின்றனவே; புகைப்படலங்கள் சுருண்டு சுருண்டு எழுகின்றனவே; அரண் எங்குள்ளது? நமக்குப் புகலிடம் எங்கே? இங்குத் தலைவர் யார் இருக்கிறார்கள்? படைகள் வருகின்றதே. அந்தோ! நாம் மடிகின்றோம்” என்று ஓலமிட்டுக்கொண்டு நாற்புறமும் ஓடி அலைந்தனர். அவ்வாறு ஏங்கிய மக்கள் “ஐயோ! நம் மன்னன், குலோத்துங்க சோழனுக்கு திறை கொடுக்காது காரணமாக எதிரே தோன்றியது இந்தப்படை போலும். அந்தோ, இனி என்ன செய்வது!” என்றலறிக்கொண்டு. வார்த்தைகள் குழற, உடல் பதற, ஒருவருக்கொருவர் முன்னாக, இடுப்பில் கட்டிய ஆடைகள் அவிழ்வதையும் கருதாது, தங்கள் அரசன் அனந்தவர்மனைக் காண அரண்மனையில் குழுமி நின்றனர்.
கலிங்கமன்னன் அனந்தவர்மன் இந்த மக்களின் ஓலத்தைக்கண்டான். அவனது சிறியகண்கள் மேலும் சிறியதானது. கண்களில் பிரேதக்களை தோன்றியது. இதழ் வெளுத்தது. கைகள் புடைத்தது. உடல் வியர்த்தது. குரூரம் அவன் முகத்தில் பரவியது. தோள்கள் குலுங்க வெறிச்சிறிப்புச் சிரித்தான். கூடியிருந்த மக்களைப்பார்த்துச் சத்தமாக சொன்னான்: “நான் அன்றொரு நாளில் அனபாயனையே கைது செய்திருந்தேன். தப்பி விட்டான். இளையபல்லவனையும் தூக்குமரத்துக்கு அனுப்ப இருந்தேன். அவனும் தப்பிப் பிழைத்தோடினான். அந்த அநபாயன் வராமல், இன்று, இளையபல்லவன் என்ற அம்பை மட்டும் எறிந்திருக்கிறான். அவன் மீண்டும் என் பிடியில் மாட்ட வருகிறான். இம்முறை அவன் தப்பமுடியாது” என்றவன், “மக்களே! நமது காடு நமக்கு அரண். இருக்கும் மலைகள் நமக்கு அரண். கடலும் அரண். இவற்றாற் சூழப்பெற்று பலம் பொருந்தி இருக்கும் இந்தக் கலிங்கத்தை அறியாத இளையபல்லவனின் படை வருகிறது. நல்லது. நாம் சென்று காண்போம். நீங்கள் கவலையில்லாமல் கலைந்து செல்லுங்கள்” என்றான். எதிரியின் படை வலிவை அறியாத மன்னர்கள் சீரழிந்த கதை அவன் அறியவில்லை போலும்.
அனந்தவர்மன் சொன்னதைக் கேட்ட அவன் மந்திரி எங்கராயன் ‘அரசர் கோபம் கொண்டாலும், அரசுக்குத் தகுந்த அறிவுரை வழங்குவது தன் கடமை‘ என்றுணர்ந்து, மன்னனைப் பார்த்து சொன்னான். “மன்னர் பெருமானே, அடியேன் கூறுவனவற்றை இகழாது சிறிது செவிசாய்த்துக் கேட்டருளல் வேண்டும். வேற்றரசர்களைப் புறங்கண்டு வெற்றிபெற குலோத்துங்கன் படைமட்டும் போதாதோ! அவனே தேரில் வருதல் வேண்டுமோ என்ன? அவனுடைய படையினாற் தோல்வியடைந்த அரசுகள் கெட்ட கேட்டினை நீ கேட்கவில்லயா? முன்னொருநாள் அவனது படை அழித்த சேரர் கதை கேட்கவில்லையா? சேரனுக்கும் மலை அரண், மற்றும் கடல் அரண் இருந்தது. ஆயினும், சோழன் விழிஞமழித்ததும், காந்தளூர்ச்சாலை கொண்டதும் தன் படை மட்டும் கொண்டல்லவா? அங்கு அவன் ஆயிரம் யானைகளை கைப்பற்றிக் கொண்டதை நீ அறியாயோ? அநபாயன் படையினால் மட்டுமே தம் மண்டலங்களை இழந்த வேந்தர்களின் பட்டியலை நீ அறியாயோ? அந்தப் பெரும்படை முன் உன் படைவலி என்னவென்பதை எண்ணித் துணிவாயாக. இதை நான் சொல்ல, உனக்குச் சீற்றம் வரினும், அந்தப்படையை எதிர்கொள்ளும் போது, நான் கூறியதின் உண்மையை நீ நன்குணர்வாய்” என்றான்.
அமைச்சர்கள் சொல்வதைக் கேளாத மன்னர்கள் அழிந்தது புராண காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. இராவணன் அழிந்ததும் அதானாலே! அனந்தவர்மன் அமைச்சரின் அறிவுறைக்கு என்ன சொன்னான்? விரைவில், விவரமாகப் பேசலாம்.
