அப்பா- மகள் உறவுகளைப் போற்றும் 5 தமிழ் திரைப்படங்கள் ! | Femina.in“கைய ஒழுங்காப் புடிச்சி பார்த்து நடந்து வா, குதிச்சிண்டே இருக்காதே….” அப்பாவின் குரல் மறுபடியும் காதில் ஒலிக்கத் தொடங்கியது. என்ன இது, வயது அறுபத்தி மூன்று முடியப் போகிறது. இன்னும் இந்த நினைவுகள் என்னை சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறதே !….. பன்னிரண்டு வயதில் அப்பா இறந்து போனார், நேற்று நடந்தது போல் அல்லவா இருக்கிறது எனக்கு !

சொன்னால் யாராவது நம்புவார்களா ! ஏண்டி, உனக்கே பேரன் பிறந்தாச்சு இன்னும் என்னடி அப்பா அப்பான்னு…. , என்னை கிண்டல் செய்வார்கள். என்னுடைய உணர்வுகளை யாராவது புரிந்து கொண்டால் தானே ? சொல்வார்கள், சொல்வார்கள் காலம் ஒரு அரிய மருந்து, அது எல்லாவற்றையும் சரி செய்து விடும், நாளாவட்டத்தில் துக்கமும் துயரமும் மறைந்து போகும் என்று. சொன்னவன் மட்டும் என் கையில் கிடைத்தால் அவனை நான் உண்டு இல்லை என்று பண்ணி விடுவேன்.

நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும் என் ஆழ் மனதில் அப்பா அப்பா அப்பா தான். அம்மா கூட வருவதில்லை. கேட்கும் உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். மாதாவுக்கு பிறகுதானே பிதா என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் என் மனம் எனக்குத்தானே தெரியும் ? தூங்கி எழுந்தால் அப்பா, சாப்பிட உட்கார்ந்தால் அப்பா, ஏதாவது ஒரு பாட்டை கேட்கும்போது அப்பாவுடன் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து சினிமாவுக்குச் சென்றது, வரும் வழியில் மசாலா பால் குடித்தது, அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடித்தபோது அப்பா காதைத் திருகியது அப்பப்பா……அப்பப்பா என்ன, அப்பா தான். .சகலமும் எனக்கு அப்பாதான். என் கணவர் தான் பாவம் பொறுமைசாலி. ஒரு நாளைக்கு நூறு முறையாவது என் அப்பாவைப் பற்றி பேசும்போது உம் உம் என்று புன்னகையுடன் காது கொடுத்துக் கேட்பாரே தவிர, கேட்டு கேட்டு காது புளித்து விட்டது என்று ஒருநாளும் அங்கலாய்க்க மாட்டார்.

புத்தகத்தை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். மனம் சிறிது சிறிதாக அதில் லயிக்க ஆரம்பித்தது. அப்போது வாயில் கதவு திறந்தே இருந்ததால் பக்கத்து வீட்டிலிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் எம் எஸ்ஸின் குரலில். மறுபடியும் அப்பா….. தினமும் என்னுடைய பன்னிரண்டு வயது வரை வீட்டில் மாலையில் எல்லோரும் அப்பாவைச் சுற்றி உட்காருவோம். அவர் விஷ்ணு சஹஸ்ரநாமம் கணீர் என்று சொல்ல ஆரம்பிப்பார். எல்லோரும் கூடவே சொல்வார்கள். நான் சிறுமி ஆதலால் அவ்வப்போது ஓடி விடுவேன். அப்பா என்னை இழுத்து அணைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்து கேட்கச் சொல்வார். அது முடிந்த பிறகு பேரீச்சம்பழம் நைவேத்யம். என் கண், மனம் அதில்தான் இருக்கும். அதற்காகவே பொறுமையாகக் காத்திருப்பேன். அது தினமும் காதில் விழுந்ததாலோ என்னவோ விஷ்ணு சஹஸ்ரநாமம் மனப்பாடம். என்னையும் அறியாமல் நான் எம் எஸ்ஸின் குரலோடு சேர்ந்து சொல்ல ஆரம்பித்தேன். அவ்வளவுதான். கையில் எடுத்த புத்தகத்தை டேபிளில் வைத்தேன். மனது புத்தகத்தில் லயிக்கவில்லை
பெண், பிள்ளை எல்லோரும் திருமணமாகி அவரவர் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு எங்கோ தூர தேசத்தில் இருக்கிறார்கள். நானும் விடாமல் என்னுடைய இந்த அப்பா பல்லவியை என் கணவரிடம் தினம் கொட்டித் தீர்க்கிறேன். அவரும்தான் பாவம் என்ன செய்வார்.
இதிலிருந்து நான் வெளியே வருவேனா ? என்னையே நான் தினம் தினம் கேட்டுக் கொள்கிறேன்.

மாலை 6:00 மணி ஆனால் நானும் என் கணவரும் அருகில் உள்ள பூங்காவில் நடை பயிற்சி செய்வது வழக்கம். அப்போது ஒரு அரை மணி நேரம் அங்கு வரும் குழந்தைகளையும், அவர்களுடன் வரும் பெரியவர்களையும் நாங்கள் இருவரும் பார்த்து ரசிப்போம். சில குழந்தைகளை பாட்டி அல்லது தாத்தா அழைத்து வருவார்கள், சில குழந்தைகளை பெரும்பாலும் அம்மாக்கள் அழைத்து வருவார்கள். எப்போதாவது சனி ஞாயிறுகளில் அப்பாக்கள் அழைத்து வருவார்கள். பார்த்தீர்களா , திரும்பவும் அப்பா. நீங்கள் என்னை அப்பா பைத்தியம் பிடித்த மனநோயாளி என்று சொன்னாலும் பரவாயில்லை. எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் என் உணர்வுகள், நினைவுகள் நிஜமானது. அது உங்கள் யாருக்கும் புரியாது. நான் புரிய வைக்க முயற்சிக்கப் போவதுமில்லை. பார்க்கில் சறுக்கு மரத்தில் விளையாடி முடித்துவிட்டு ஒரு குழந்தையை அதன் அப்பா தன்னுடைய பைக்கில் பின்னாடி உட்கார வைக்கிறார்.

மறுபடியும் என் மனம் பின்னோக்கி 1970 களுக்கு செல்கிறது. அப்போது திருவருட்செல்வர் படம் பார்த்துவிட்டு வழக்கம் போல் அப்பாவின் சைக்கிளில் ஏறி அமர்கிறேன். வீட்டிற்கு திரும்பும் வழியில் ஜூஸ் கடை. வழக்கம் போல் பிடிவாதம். ரோடு என்று கூட பார்க்காமல் ஒரே அடம் பிடித்தேன். அப்போது எனக்கு 10 வயது இருக்கும். இந்தக் காலத்தில் 10 வயது குழந்தைகள் எவ்வளவு முதிர்ச்சியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் ஒரு ஐந்து வயது பெண் போல பிடிவாதம் பிடித்தேன். என் அப்பாவும் வேறு வழி இன்றி கடையில் நிறுத்தி ஆரஞ்சு ஜூஸ் வாங்கிக் கொடுத்தார். அடுத்த நாள் சளி பிடித்து விட்டது. ஒரே இருமல். அப்பா டாக்டர் என்பதால் உடனே மருந்து கொடுத்து என்னை சரிப்படுத்தினார். இப்போது கூட தொண்டையில் அந்த ஜூஸின் ருசி. நீங்கள் கேலியாக சிரிப்பது என் காதில் விழத்தான் செய்கிறது. சிரிங்க, நன்றாக சிரிங்க…. உண்மையைச் சொன்னால் உங்களுக்கெல்லாம் சிரிப்பு வருகிறதா ….. வரட்டும் வரட்டும் எனக்குக் கவலை இல்லை.

மணி பார்த்தேன் இரவு ஏழு. எத்தனை நேரம் தான் நானும் இவரும் டிவி பார்த்துக் கொண்டும் ஐ பி எல் ஐப் பற்றிப் பேசிக்கொண்டும், புத்தகங்களைப் படித்துக் கொண்டும் பொழுதைக் கழிப்பது ? ஆழ்மனதில் பேரன் பேத்திகளை கொஞ்சும் ஆசை நிராசையாகப் போய்க் கொண்டிருக்கிறது. எங்கோ வெளிநாட்டில் இருப்பவர்களை வாட்சப் வீடியோவில் கொஞ்சுகிறோம். இதுதான் இன்றைய யதார்த்தம். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலைமை. ஒரு போலி வாழ்க்கை. என் அப்பாவின் நினைவு மட்டுமே என்னுள் ஆழ்ந்து உறைந்து கிடக்கிறது. அதுதான் நிஜம். அதை தினமும் மாடு அசை போடுவது போல அசை போட்டு ஆனந்தப்படுகிறேன். ஆனாலும் அவரது நினைவுகள் என்னை தூங்க விடாமல் சுற்றிச் சுற்றி வருகிறது. என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை இது தொடரும் என்றே தோன்றுகிறது. ஒரு மனநல மருத்துவரைக் கூட பார்த்தாகிவிட்டது. அவர் பதிலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. “மேடம், நீங்கள் மற்ற விஷயங்களில் முழு கவனத்தை செலுத்துங்கள், எல்லாம் சரியாகிவிடும்” என்று. இனிமேலா இந்த 63 வயதிற்கு மேலா ? எனக்கு சிரிப்புத்தான் வந்தது. பேசாமல் வெளியே வந்து ஓலா பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். என் கணவர் கூட கிண்டலாக ஒரு நாள் சொன்னார்… “தினமும் உன் அப்பாவைப் பற்றி இவ்வளவு சொல்கிறாயே பேசாமல் ஒரு முழு நாவல் உன்னையும் உன் அப்பாவை மட்டுமே வைத்து எழுதேன்… போட்டிக்குக் கூட அனுப்பலாம். யார் கண்டது ? வித்தியாசமாக உள்ளதே என்று உனக்கு முதல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும்.” என்றார். அவரைப் பார்த்து முறைத்ததில் நமக்கேன் வம்பு என்று பேசாமல் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

மனது ஒன்றிலும் லயிக்காமல் அலைபாயத் தொடங்கியது. வெளியே வந்தேன். அடுத்த தெரு வரை ஒரு நடை நடந்து விட்டு வரலாமே என்று. அப்போதுதான் பார்த்தேன் அந்த தெரு முனையில் ஒரு கர்ப்பிணி பெண் கிழிந்த உடையில் வருவோர் போவோரிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.

அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோக்காரர் தன் அருகில் இருக்கும் மற்றொரு ஆட்டோக்காரரிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது. “இந்த பொம்பள பாவம்பா…. மூணு நாள் முன்னாடி வரை நல்லாத்தான் இருந்துச்சு…. இவ புருஷன் முந்தாநாள் லாரி அடிச்சு செத்துப் போயிட்டாரு… இது எட்டு மாசம் கர்ப்பமா இருக்கு. அந்த ஆளு தன் பிள்ள வெளிய வரதுக்கு முன்னாடியே போயிடுச்சுப்பா…. கஷ்ட காலம். இந்தப் புள்ள அப்பா மூஞ்சி கூட பார்க்காம வளரப் போகுது பாரு…. அத நினைச்சாத்தான் கஷ்டமா இருக்குப்பா….” என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட நான் வெலவெலத்துப் போய் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்று விட்டேன்.

“அம்மா…. அம்மா…. என்னம்மா ? ஆட்டோ வேணுமா ?” குரல் வந்த திசையில் சட்டென்று திரும்பிப் பார்த்தேன். உடனே என்னை சுதாரித்துக் கொண்டு, “வேண்டாம்பா” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் அருகில் போய் அவளுக்கு கையில் இருந்த பணத்தையும், பழங்களையும் கொடுத்தேன். மனம் லேசானது. திரும்பி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பா என் கூடவே என் கையைப் பிடித்து நடப்பது போலத் தோன்றியது.