நேர்த்தியான திரைக்கதை, தேர்ச்சியான நடிப்பு, காத்திரமானபடமாக்கல்
‘நாம் கலையைத் தேர்வு செய்வதில்லை, கலை தான் நம்மைத் தேர்வு செய்கிறது’ என்ற வாசகங்களோடு தொடங்குகிறது படம். “டைரக்டர் சார், சுயசரிதையைக் கொஞ்சம் மாத்தி எழுதிக்கலாமா?” என்று ஒரு குரல் கேட்க, “எவனும் இங்க புதுசா எதுவும் எழுத முடியாது… பேனாவை கெட்டியா மட்டும் பிடிச்சிக்கிட்டா போதும் … எழுதப்பட்டது எல்லாம் எழுதப்படும்” என்று பதில் வருகிறது. கேட்பவர் ஒரு கேங்ஸ்டர், நடிகர் அல்ல. பதில் சொல்பவர் அவரைக் கொல்ல வந்திருப்பவர், படம் இயக்குபவர் அல்ல.
ஜிகர்தண்டா (2014) ஒரு கேங்ஸ்டரை வைத்துத் திரைப்படம் எடுக்கத் துணியும் இயக்குநரைத் திரைப்படுத்தியது. ஜிகர்தண்டா டபிள் எக்ஸ் முற்றிலும் வித்தியாசமான களத்தில் கொலையையும் கலையையும் மோதவிட்டுக் கலையை வெல்லவைக்கிறது.
சில வாரங்களுக்குமுன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், திரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் / இயக்குநர் எஸ் ஜே சூர்யா மூவரும் பங்கேற்றதும், குறிப்பாக சந்தோஷ் நாராயணன் முத்தாய்ப்பாகக் குறிப்பிட்டதும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.
குற்றங்களைச் சுற்றியே பின்னப்பட்டுள்ள கதையில் கொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், ஊடாக அவற்றின் அரசியல் பேசப்படுவது தான் படத்தின் முக்கியமான அம்சம். ஒரு கொலைஞன் கலைஞனாக உருப்பெறுவது மட்டுமல்ல, அந்தக் கொலைஞனைக் கொல்ல வருபவரும் அந்தக் கலைக்குத் தன்னை ஒப்புக் கொடுப்பதும், இந்தக் கூட்டு விளைவுக்கு இருவரும் பரஸ்பரம் எதிரெதிர் திசைகளில் ஆற்றும் வினைகள் காரணமாவதும் அதன் தொடர்ச்சியாக நிறைவாக முன்னெழும் அரசியல், திரைக்கலையில் மிகுந்த கலைநேர்த்தியோடு கையாளப்பட்டிருப்பதும் அண்மைக் காலத்தில் முக்கிய படைப்பாக நோக்க வைக்கிறது.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமாம் என்பது கால காலமாகச் சொல்லப்படும் பழமொழி. யாரோ பிரதமராகவோ, முதல்வராகவோ நியமனம் செய்யப்பட, அதற்குக் கிஞ்சிற்றும் தொடர்பற்ற அப்பாவிகள் நடுத்தெருவில் வெட்டி வீழ்த்தப் படுகின்றனர். மலைவாசிகள் காவல் நிலையத்திலேயே வைத்து வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அராஜக வன்முறைகளைப் பற்றிய உண்மைச் செய்திகளும் அங்கேயே புதைக்கப்பட்டுவிட, தயாரிக்கப்பட்ட செய்திகள் மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுகின்றன.
காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராகப் பணியில் சேருமுன் தற்செயலான கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் கிருபாகரன் (எஸ் ஜே சூர்யா). அவரோடு சேர்ந்து அதே போன்று அடைபட்டுள்ள நான்கு பேரை, தனக்குத் தேவையான 4 கொலைகளைச் செய்தால் முந்தைய குற்றத்திலிருந்து அவர்களை விடுவித்துக் காவல் துறை பணியில் சேர்த்துவிட உறுதி அளித்து கெடு விதித்து விடுவிக்கிறார் காவல் துறை உயர் அதிகாரி (நவீன் சந்திரா). அது அவர் தனக்கு உயிரான அண்ணன் நடிகர் ஜெயக்கொடி (ஷைன் டாம் சாக்கோ) எப்படியாவது முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற சேவைக்கான தேவையில் இருந்து எழுவது. சீட்டுக் குலுக்கிப் போடுவதில், கிருபை கொல்ல வேண்டிய நபர் அலையஸ் சீசர் (ராகவா லாரன்ஸ்) என்று வருகிறது. சீசர் ஆகப்பட்டவர் யாரெனில் மதுரை ஜிகர்தண்டா அமைப்பின் கேங்ஸ்டர், முதல்வர் தேர்வுக்குக் காத்திருக்கும் கார்மேகத்தின் (இளவரசு) புஜபலம்.
அங்கே தான் கொலைக்கும் கலைக்கும் முதல் சந்திப்பு நிகழ்கிறது. இளவயதில் இருந்தே ஹாலிவுட் கிளிண்ட் ஈஸ்ட்வுட் ரசிகனாக இருக்கும் சீசர், ஒரு நடிகரின் சீண்டலில் தானே ஒரு கறுப்பு நாயகனாகத் திரையில் தோன்றும் திடீர் ஆசை ஏற்படுத்திக் கொண்டு, தன்னை வைத்துப் படமெடுக்க விரும்பும் இயக்குநர்களை நேர் காணலுக்கு அழைக்கிறார். இது தான் சரியான வாய்ப்பு என்று ஓர் இயக்குநராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சீசருக்கு நெருக்கமான வட்டத்திற்குள் நுழையத் திட்டமிடுகிறார் கிருபாகரன். சீசரின் சொல் வழக்கில் சுடுதல் (ஷூட்டிங்) தொடங்கி விடுகிறது. தான் செய்யவேண்டிய கொலைக்கான நாள், இடம், தருணத்திற்காக கனவில் ரோல் – காமிரா -ஆக் ஷன் என்ற புதிய உலகில் நுழைகிறார் சத்ய ஜித் ரேயின் உதவியாளன் ரே தாசன் என்ற பெயரோடு கிருபாகரன். என்ன நடக்கிறது பிறகு என்பது தான் கதை.
அலையஸ் சீசருக்கான முன்கதை, அடர்ந்த பசுமையான கோம்பை வனத்தில் இருக்கிறது. அதே பழங்குடி இனைத்துப் பெண்ணான அவனது மனைவி மலையரசிக்கு (நிமிஷா சஜயன்) வளைகாப்பு நடக்க இருக்கிறது. அங்கே யானைகளைக் கொன்று தந்தங்களைக் களவாடிக் கடத்தும் ஷெட்டாணியை (விது) வேட்டையாட முகாமிடும் காவல் துறை அப்பாவிப் பழங்குடி மக்களை இழுத்துவந்து கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறது. அதன் நூதனத் தலைவனாகப் பொறுப்பேற்று வரும் டி எஸ் பி தான், கிருபாகரன் உள்ளிட்ட நால்வரைத் தனது அண்ணன் நிமித்தம் சீசர் உள்ளிட்டோரைக் கொலை செய்ய அனுப்பி வைத்தவன்.
மலையரசி வளைகாப்புக்கு முந்தைய இரவு, கிருபாகரன் சீசரிடம் சிக்கிவிடத் தக்க திருப்பங்கள் ஏற்பட்டுவிட, அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் கிருபை, சீஸரை கோம்பை வன மக்களைக் காக்கும் கள நாயகனாக மலை நோக்கிச் சென்றால் தான் ஆஸ்கர் விருது பெறும் திரைக்கதையைப் படமெடுக்க முடியும் என்று திருப்பிவிட, விதி அதே டி எஸ் பி முன் கிருபையைக் கொண்டு நிறுத்தி விடுகிறது. ஷெட்டாணியோடு சீசரை மோதவைத்துக் கொன்றுவிட கிருபை அமைக்கும் திரைக்கதையை சீசரின் வீர சாகசம் முறியடித்து அவனை உயிரோடு பிடித்து அரசின்முன் கொண்டு வந்து நிறுத்தித் தகர்க்கிறது. அங்கே தகர்வது கிருபையின் திட்டம் மட்டுமல்ல, ஷெட்டாணியை உலவவிட்டு மலைக்காட்டு வளத்தை இரு பெரும் கார்ப்பொரேட்டுகளுக்கு விலைபேசி அவர்கள் மூலம் தனக்கு பிரதமர் பதவிக்காகக் காத்திருக்கும் முதல்வரின் (கபிலா வேணு) கனவும் தான்.
பிறகென்ன….பேனாவைக் கெட்டியாகப் பற்றி இருக்கும் கார்த்திக் சுப்புராஜின் பேனா, ஆட்சியாளர்கள் மூலம் எழுதப்பட்ட கதையைச் சரியாக எழுதிக் கொண்டு போகிறது. அரச பயங்கரவாதத்தின் முன் அப்பாவிக் காட்டுவாசிகள் தங்களையோ, தங்கள் காட்டையோ, தங்கள் உயிருக்குயிரான யானைகளையோ, இயற்கை வளத்தையோ எதையுமே காப்பாற்ற முடியாதென்ற கிருபாகரனின் வாசகங்களை, சீசர் சற்றே மாற்றி, நிகழும் வன்முறைகளை எதிர்கொண்டு ஒரு பெரும் தியாகம் செய்து தங்களையே மாய்த்துக் கொண்டு அந்தப் பதிவுகளைத் திரைக்கலை எனும் நொறுக்க முடியாத ஆயுதத்தால் மக்கள் திரள் முன் கொண்டு சேர்ப்போம் என்று உரை நிகழ்த்தி முடிக்கிறான். அடுத்து நிகழும் அரசின் காவல் துறையின் கண்மூடித் தனமான தாக்குதல், கிருபையின் கண்களைத் திறந்து அவரை உண்மையான திரை இயக்குநராகப் பரிணமிக்க வைத்துவிடுகிறது.
கஜினி படத்தில் எப்படி தான் சாகும் வரை, சூர்யா தான் சஞ்சய் ராமசாமி என்பதை அசீன் பாத்திரம் அறிவதில்லையோ, இந்தப் படத்தில் ரே தாசன் என்ற பெயரில் கிருபாகரன் உண்மையில் தன்னைக் கொல்லவே இயக்குநர் போல் ஏமாற்றி வந்திருக்கிறார் என்பதை சீசர் கடைசி வரை அறிவதில்லை என்பது ஒரு கவித்துவ சோகம். தான் செய்யாத குற்றத்திற்கு வாழ்க்கையையே பறிகொடுக்க நேர்ந்த கொலைக்கு உண்மையில் சீசர் தான் பொறுப்பு என்று உணர்ந்து இன்னும் இறுக்கமான மனத்தோடு அவனைக் கொல்லத் தயாராகும் கிருபாகரன் பின்னர் மனம் மாறும் இடம் இன்னும் கவித்துவமானது. படத்தில் திறந்த வெளியும், நெருக்கமான குடியிருப்பின் இருளடர்ந்த அறைகளும், அடர்த்தியான காடும், தியேட்டரும் எல்லாமே உருவகமாக உருப்பெறும் பாங்கு சிறப்பானது.
ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா இருவரையும் இந்தப் படத்திற்கான பாத்திரங்களாக வார்ப்பதில் அசாத்திய உழைப்பைச் செலுத்தி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். தாங்கள் இதுவரை அறியப்பட்ட விதத்திற்கு முற்றிலும் மாறுபட்ட நடிப்பை அசாத்தியமாக வழங்கியுள்ளனர் இருவரும். உடல் மொழி, வசன உச்சரிப்பு எல்லாமே இருவரும் அற்புதமாக நல்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். லாரன்சின் புன்னகை படத்தில் முத்திரை. அல்லையன் என்ற தனக்கு இளவயதில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் ஷூட்டிங் நடத்த நேரில் வந்தபோது வைத்த பெயர் அலையஸ் சீசர் என்கிறார் ராகவா லாரன்ஸ். அல்லையன் என்பது, குழுவிலிருந்து தனித்துச் சென்று விடும் யானைக்கான பெயர், தனது மக்களிடமிருந்து விலகிப் போய்விடும் நாயகனுக்கு அதனாலேயே அந்தப் பெயர் சூட்டினேன் என்று ஒரு நேர் காணலில் சொல்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
மலையரசி பாத்திரத்திற்குப் படத்தில் அளவான வாய்ப்புகளே என்றாலும் வலுவான காட்சிகள், நிமிஷா சஜயன் அபாரமாக நடித்திருக்கிறார். பார்வையாளர்களது மொத்த வெறுப்பையும் கைப்பற்றிக் கொள்ளும் டி எஸ் பி ரத்தினகுமார் பாத்திரம் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல்வராக வரும் கபிலா வேணு தேவையான அளவில் செய்திருக்கிறார். மிகக் குறைவாகவே தோன்றும் ஜோதி (இயக்குநர் தமிழ்) முதல் உதவிப் இயக்குனர் துரைப்பாண்டியன் (சத்யன்) வரை அனைத்துப் பாத்திரங்களும் பொருளடர்த்தியோடு சித்தரிக்கப்பட்டுள்ளது கார்த்திக் சுப்புராஜ் பெற்றுள்ள வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. வசனங்கள் யாவும் தேர்ச்சியாக செதுக்கப்பட்டுள்ளன.
வளைகாப்புக்கு வந்த கூட்டாளி ‘பெரியவர்’ மரணம், உண்மையில் திட்டமிடப்பட்ட கொலை என்று போஸ்ட்மார்ட்டத்தில் தெரியவர, வேகமாக நடக்கும் நிகழ்வுகளை அடுத்து மயான பூமியில் சீசர் துப்பாக்கியோடு குறி பார்க்கும் திசையில் எதிர்ப்புறத்தில் இருந்து ரே தாசன் காமிராவை சீசரை நோக்கிக் குறி வைக்கும் அருமையான தருணம், அண்மைக்காலங்களில் மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட இடைவேளைக் காட்சி.
கிளிண்ட் ஈஸ்ட்வுட் நினைவாக கிளிவுட் தியேட்டர், கதையின் முக்கிய காட்சிகள் நிகழும் களமாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பது, கோம்பை வனத்தில் சேத்துக்காளி அம்மனை முன்னிறுத்திக் காட்டுவாசிகள் கதை சொல்லப்படுவது உள்ளிட்டு நுட்பமான பல இடங்களும், காட்டுவாசிகளுக்கும் இயற்கைக்குமான உணர்ச்சிகரமான உறவுகள் காட்சியிலும், வசனங்களிலும் வெளிப்படும் தருணங்களும் படத்தில் முக்கியமானவை. தமிழ்ப்படங்களில் பார்வையாளரைத் திணறவைக்கும் வன்முறைக் காட்சிகளை உருவாக்கும் தன்மை போட்டிபோட்டுக் கொண்டு நிகழ்ந்திருக்க, இந்தப் படத்தின் கொலைகளும், வன்முறை தாக்குதல்களும் கூட பாதிக்கவே செய்கின்றன. ஆனால், ஆகப் பெரிய வன்முறைக் கருவி யாரிடம் இருக்கிறது என்பதை இரண்டாம் பகுதியில் இயக்குநர் வெளிப்படுத்துவதும் குறிப்பிட வேண்டியது.
ஷெட்டாணியின் தாக்குதலிலிருந்து காப்பாற்றி உயிர் தரிக்க வைத்ததற்கு சீசருக்கு நன்றி சொல்ல மற்ற யானைகளோடு தான் ஈன்ற இளம் யானைக்குட்டியோடு வரும் யானையைப் பார்க்கையில், மருத்துவர் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவிக்க யானைகள் கூட்டமாக வந்து செல்வதை (யானை டாக்டர்) ஜெயமோகன் கதையில் வாசித்தது, நினைவுக்கு வந்தது. யானையின் பிரசவக் காட்சி, ரே தாசன் பாத்திரத்தின் எண்ண ஓட்டத்தை மாற்றுவதில் முக்கிய பங்களிக்கிறது.
படத்தின் பாடல்களில் அத்தனை ஆழ்ந்து லயிக்க இயலவில்லை, ஆனால், பின்னணி இசை படத்திற்கான முக்கிய பங்களிப்பு. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாராட்டுக்குரியவர். ஒளிப்பதிவு செய்திருக்கும் திருநாவுக்கரசு, படத்தொகுப்பாளர் ஷஃபிக் முகமது அலி இருவரது உழைப்பும் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. 1970களில் நடக்கும் கதை என்பதால் அப்போதைய மதுரையை, அடர்ந்த வனப்பகுதியில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் படத்திற்காக உருவாக்குவதில் மறைந்த கலை இயக்குநர் சந்தானம் நல்கிய பங்களிப்பை இயக்குநர் மதிப்போடு குறிப்பிட்டு இருக்கிறார். சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பாராயன் அமைத்திருக்கிறார். கணினி வரைகலை, யானை வேட்டை காட்சிகளில் நேர்த்தியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
வாச்சாத்தி பழங்குடி மக்களை மிகுந்த வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய குற்றத்தில் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் அனைவருமே (வழக்குக் காலத்தில் மரணமடைந்தோர் தவிர்த்து) தண்டிக்கப்பட்ட வழக்கில், பின்புலத்தில் காரணமாக இருந்த ஆட்சி அதிகாரத்திற்குப் பொறுப்பான யாரும் விசாரணை வட்டத்திற்குள் கொண்டுவரப்பட இயலாத சட்டத்தின் போதாமையை வழக்கறிஞர் ஆர் வைகை குறிப்பிட்டிருந்த விஷயத்தை இந்தப் படம் குறியீடாகப் பேசுவது கவனத்தை ஈர்க்கிறது.
ஆதிப் பழங்குடிகள் காலகாலமாக தமக்கான இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்படும் அரசியலை மிக வலுவாகப் பேசும் வகையில் ஜிகர்தண்டா டபிள் எக்ஸ், முக்கியமான படைப்பாக வந்திருக்கிறது. கலையின் மேன்மையைக் கொண்டாடும் விதத்திலும் அது பேசப்படுவதாகிறது. அதனாலேயே, கிளைமாக்சில் தவிர்த்திருக்கக் கூடிய ரே தாசன் – டி எஸ் பி மோதல், தர்க்க ரீதியான சில கேள்விகள் உள்ளிட்ட சில அம்சங்களை மீறியும் பார்க்க வேண்டிய முக்கிய படமாகிறது.
