ருசியியல் சில குறிப்புகள் 14: திவ்யமான திருப்பதி லட்டு! | ருசியியல் சில  குறிப்புகள் 14: திவ்யமான திருப்பதி லட்டு! - hindutamil.in
”அண்ணா.. ஆயிரம் லட்டுக்கு ஆர்டர் வந்திருக்கு. அதுவும் எலுமிச்சை சைஸ் லட்டு இல்லை.. கிரிக்கெட் பந்து சைஸ் லட்டு.”

சீனுவோட முகத்துலயும் குரல்லயும் சந்தோஷம் டிஸ்கோ ஆடித்து.

“யாருடா இவ்வளவு பெரிய ஆர்டர் கொடுத்திருக்கா?”

வாணலில பொன் நிறத்துல உப்பிண்டு வந்த பூந்தியை ஜாலர்ல வாரிண்டே கேட்டார் வரதன். அவர் தான் “அன்னபூரணி கேட்டரிங்”க்கு சொந்தக்காரர். மனுஷர் மாநிறத்துல அஞ்சடி பன்னெண்டு அங்குலம்.. சரி சரி.. ஆறடிக்கு ஆஜானுபாகுவா திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மூலவர் மாதிரி இருப்பார். மீசை தான் மிஸ்ஸிங். நெத்தில எப்பவும் பெயிண்ட் அடிச்ச மாதிரி பளிச்சுன்னு நாமம். பத்து நாளா சவரம் பார்க்காத முகம். உதட்டுல வெத்தலையும் புகையிலையும் கூட்டணி அமைச்சு ஏற்படுத்தின சுவடு.. கழுத்துல ஸ்படிக மாலை. தோளுல கொஞ்சம் நிறம் மக்கிப் போன சிவப்பு காசித்துண்டு. இடுப்புல அங்கங்க கரை படிஞ்ச வேஷ்டி..

திருப்பதிக்கு அடுத்தபடியா லட்டுன்னாலே வரதன் லட்டு தான். அவ்வளவு பிரசித்தம். சொல்லப்போனா வெளிநாட்டுலேர்ந்து வரவாலாம் கூட ஆர்டர் கொடுத்து வரதன் லட்டுவை வாங்கிண்டு போவா.

“டிரான்ஸ் சிஸ்டம்ஸ்”னு ஒரு கம்பூட்டர் கம்பெனி.. அதுல வேலை பார்க்கறவாளுக்கெல்லாம் தீபாவளி கிப்டா லட்டு டப்பா தரப் போறாளாம். என் சிநேகிதன் கோவிந்து அந்த கம்பெனில தான் வேலை பார்க்கறான். அவன் மூலமா தான் இந்த ஆர்டர்.. நவம்பர் பன்னெண்டாம் தேதி தீபாவளியா? நாம எட்டாம் தேதியே அறுநூறு லட்டு சப்ளை பண்ணிரணும். வண்டி அனுப்பிருவா. லட்டு சப்ளை பண்ணின உடனே பணம் செட்டில் பண்ணிருவா?”

வரதன் யோசிச்சார்.

“அறுநூறு லட்டுன்னா.. அதுவும் கிரிக்கெட் பால் சைசுக்கு லட்டுன்னா.. ம்.. ஒரு லட்டுவுக்கு அம்பது ரூபான்னு வெச்சாலுமே கிட்டத்தட்ட அம்பதாயிரம் ரூபா. கம்பெனிங்கறதுனால அறுபது ரூபான்னு கூடச் சொல்லலாம், எப்படியும் செலவெல்லாம் போக கையில கணிசமவே நிக்கும்.”

“சரிடா.. ஆறாம் தேதி காலம்பர வேலையை ஆரம்பிச்சுரலாம். நம்ம ரங்கன், கௌசிகன் அப்புறம் வைத்தா.. இவாகிட்டச் சொல்லி வெச்சுரு. இவா வந்தாத் தான் சுறுசுறுப்பா வேலை நடக்கும். பரத்வாஜை பக்கத்துலயே சேர்க்காதே. அவன் வந்தா தானும் வேலை பண்ண மாட்டான். மத்தவாளையும் வேலை பண்ண விடாம ஏதாவது தொண தொணன்னு பேசிண்டே இருப்பான். அதோட துக்கிரி வேற.. மனசு சஞ்சலப்படும் படியா எதையாவது அபசகுனமா சொல்லி வெப்பான்”

“சரிண்ணா”

“நாடார் கடைல சாமான் லிஸ்ட் கொடுத்துரு. பேக்கிங்குக்கு பிளாஸ்டிக் டப்பா அவா தராளா இல்லை நாம தான் வாங்கிக்கணுமா?”

“நாமதாண்ணா.. அந்த செலவையும் லட்டு ரேட்டுல சேர்த்துக்கச் சொன்னான் கோவிந்து. ஒரு டப்பால ரெண்டு லட்டு.. ஐநூறு டப்பா தேவைப்படும்”

“அப்படியா? சரி அளவு பார்த்து இன்னிக்கே ராயல் ஃபேன்ஸில ஆர்டர் கொடுத்துரு. பாய் இஷ்டத்துக்கு ரேட் போட்டுரப் போறார்.. நான் சொன்னேன்னு பார்த்துப் போடச் சொல்லு. லட்டுவை அப்படியே பிளாஸ்டிக் டப்பாவுல வெக்கக் கூடாது, அடில பட்டர் பேப்பர் வேணும். அதுவும் பாய் கடைலயே கிடைக்கும்.”

“சரிண்ணா”

“ம்… அப்புறம் லட்டு போட்ட டப்பாக்களைக் கொண்டு போக அட்டைப்பெட்டி வேணும்.. ஒரு அட்டைப்பெட்டில பத்து டப்பாதான் வெக்கணும். அதனால நூறு.. சரி நூத்தி இருபது அட்டைப்பெட்டியா ஸ்டேஷனரி பாலுகிட்டச் சொல்லிரு.”

“சொல்லிடறேன்”

“இதப்பாரு சீனு.. இது பெரிய ஆர்டர்.. ஒழுங்காப் பண்ணணி முடிக்கணும்.. இல்லைன்னா இத்தனை வருஷமா நான் சம்பாதிச்ச பேர் ரிப்பேர் ஆயிரும்”

வரதனோட பார்யாள் வைதேகி அங்க வந்து..

“எட்டாம் தேதி காஞ்சிபுரத்துக்கு போறோம் தானே?”

ஒவ்வொரு தீபாவளிக்கு முன்னாலயும் காஞ்சிபுரம் ராமானுஜன் ஆதரவில்லோர் இல்லத்துக்குப் போய் அங்க இருக்கற குழந்தைகளுக்கு  லட்டுவும் கொஞ்சம் பணமும் கொடுத்துட்டு வரது வரதனோட வழக்கம். பல வருஷங்களுக்கு முன்னால ஒரு தடவை ஜீயர் சுமாமியை தரிசனம் பண்ணின போது அவர் போட்ட உத்தரவு..  அதை இத்தனை வருஷமா வரதன் விடாம கடைபிடிச்சிண்டு வரார். இந்த வருஷம் எட்டாம் தேதி காஞ்சிபுரம் போறதா தீர்மானம் பண்ணியிருந்தார். அதுக்கான ஏற்பாடுகள் தான் நடந்துண்டிருந்தது. அங்க இருக்கற குழந்தைகளுக்காக எலுமிச்சை சைசுல கிட்டத்தட்ட ஐநூறு லட்டு கொண்டு போவார். .

வரதன் யோசிச்சார்.

“எட்டாம் தேதி ஆயிரம் லட்டு நல்லபடியா டெலிவரி பண்ணணும். அதனால கண்டிப்பா காஞ்சிபுரம் போக முடியாது.”

உடனே வைதேகியைப் பார்த்து..

“எட்டாம் தேதி வேண்டாம்.. இங்க வேலை இருக்கு.. பத்தாம் தேதி போகலாம். அப்புறம் அந்த பம்பாய்காராளுக்கும் டெல்லிகாராளுக்கும் இன்வாய்ஸ் மெயில் பண்ணிட்டியா?”

“அனுப்பியாச்சு”

வைதேகி தான் அன்னபூரணி கேடரிங்கோட பில்லிங், அக்கௌண்டிங், கரெஸ்பாண்டென்ஸ் எல்லாம் பார்த்துக்கறா. அதோட அவளுக்குக் கொஞ்சம் கம்பூட்டர் விஷயங்கள் தெரியுங்கறதுனால அப்பப்ப கூகுள்ள புதுசு புதுசா எதையாவது தேடிண்டே இருப்பா.

வரதன் சொன்ன மாதிரியே சீனு எல்லா ஏற்பாடுகளையும் பண்ணினான். ஆறாம் தேதி காலம்பர வேலை ஆரம்பிச்சது. ஒரு பக்கம் வரதன் பூந்தி பண்ன எண்ணைச் சட்டில உட்கார பக்கத்துலயே ரங்கன் பதம் பார்த்து சக்கரைப் பாகு தயார் பண்ண, கௌசிகனும், வைத்தாவும் விடாம லட்டு பிடிச்சு ஏழாம் தேதி பாதி ராத்திரிக்குள்ள ஆயிரம் லட்டு ரெடி. லட்டு பாகு சூடு ஆறினதும் சீனுவும் வைதேகியும் ரெண்டு ரெண்டு லட்டுவா பிஸாஸ்டிக் டப்பாவுல போட்டு பேக் பண்ண..

எட்டாம் தேதி காலம்பர பத்து மணிக்கு மொத்த பார்சலும் ரெடி.

“டேய் சீனு.. டெலிவரிக்கு அவா வேன் அனுப்பறாளோல்யோ?”

வரதன் ரொம்பவே சோர்வா கேட்டார்.

“ஆமாண்ணா.. கோவிந்து சொல்லியிருக்கானே.. இருங்கோ.. அவனைக் கூப்பிட்டு பார்சல் ரெடின்னு சொல்றேன்”

சீனு திரும்பத் திரும்ப முயற்சி பண்ணியும் கோவிந்து காலை எடுக்கலை.

“என்னடா?”

“இல்லைண்ணா..  மீட்டிங்குல இருக்கான்னு நினைக்கறேன்.. அதான் எடுக்கலை. இருங்கோ மறுபடியும் முயற்சி பண்ணிப் பார்க்கறேன்”

இப்போ கோவிந்துவோட போன் ஸ்விட்ச்ட் ஆப்..

சீனுவுக்குக் கொஞ்சம் கவலை பிடிச்சுது..

ஏதாவது பிரச்சனையா?

மறுபடியும் நம்பரைத் தட்டினான்.

உகும்..

“அண்ணா,, என்னன்னு தெரியலை.. போன் கிடைக்கலை. அவா ஆபீஸ் திருவான்மியூர்ல தான் இருக்கு.. நான் வேணா போய் பார்த்துட்டு வந்துடறேன்”

சீனு கிளம்பிண்டிருக்கும் போதே பரத்வாஜ் அவசரமா வந்தான்.

“அண்ணா.. நீங்க ”டிரான்ஸ் சிஸ்டம்ஸ்” அப்படிங்கற கம்பெனிக்குத் தானே என்னைக் சேர்த்துக்காம லட்டு ஆர்டர் எடுத்திருக்கேள்”

“ஆமாம்.. இப்ப என்ன அதுக்கு?”

வரதன் கொஞ்சம் கடுப்போட தான் கேட்டார். அவர் மனசுல என்ன ஏதுன்னு தெரியாத குழப்பம்.

”அவ்வளவு தான்.. போச்சு.. கோவிந்தா கோவிந்தா”

”துக்கிரி துக்கிரி.. என்னடா சொல்றே?”

“அந்தக் கம்பெனி ஒரு அரசியல்வாதியோடதாம்.. அங்க எக்கச்சக்கமா கருப்புப் பணம் பதுங்கியிருக்காம். இன்கம்டாக்ஸ் ரெய்ட் நடக்கறது. வெளிநாட்டு டீலிங்லாம் இருக்கறதுனால ஈ.டி. ரெய்டும் வரலாங்கறா.. அநேகமா கம்பெனியை இப்போதைக்கு திறக்க மாட்டா.. உங்க ஆர்டர் அவ்வளவு தான்.. பணால்.. ஆர்டர் தான் பணால் ஆயாச்சே.. ரெண்டு லட்டு கொடுங்கோ.. வந்தது தான் வந்தேன்.. நானாவது லட்டு சாப்பிட்டுப் போறேன்”

பரத்வாஜ் சொன்னதைக் கேட்ட உடனே வரதன் சீனு எல்லாருக்கும் அதிர்ச்சி.

சீனு புலம்பவே ஆரம்பிச்சுட்டான்.

“ஐயையோ.. அண்ணா இப்போ என்ன பண்ணறது? அதுவும் கிரிக்கெட் பால் சைஸ் லட்டு.. வேற யாரும் வாங்க மாட்டாளே”

வரதனும் கொஞ்சம் கவலையோட யோசிச்சார்.

என்ன ஏதுன்னு விசாரிக்காம சீனு சொன்னதை நம்பி இவ்வளவு பெரிய ஆர்டர் எடுத்தது தப்போன்னு அவருக்கு தோணித்து.

மேல என்ன பண்ணணும்னு சத்தியமா அவருக்குப் புரியலை,,

ஆயிரம் லட்டுவை என்ன பண்ண?

அப்ப அங்க வந்த வைதேகி..

“தாம்பரத்துல ஆஸ்திக சமாஜத்துல ஏதோ பூஜை நடக்கற்தாம். ஏற்கனவே ஏற்பாடு பண்ணியிருந்த ஆளு கடைசி நிமிஷத்துல காலை வாரி விட்டதுனால உடனடியா யாரவது ஐநூறு லட்டு சப்ளை பண்ண முடியுமான்னு இன்ஸ்டாவுல கேட்டிருந்தா.. நல்ல ரேட் கொடுக்கத் தயாரா இருக்கா.. உடனே அவாளைக் கூப்பிட்டுப் பேசிட்டேன். ஒரு பாக்ஸ் லட்டு பேக்கிங்கோட நூத்தி முப்பது ரூபா. இப்ப வண்டி வந்துரும்.. தயாரா இருங்கோ”

அதுவரைக்கும் அழுது வழிஞ்சிண்டிருந்தவா முகத்துல வைதேகி சொன்னதைக் கேட்ட உடனே மத்தாப்பு மாதிரி கொஞ்சம் பிரகாசம்.

“நிஜமாவா? டேய் அம்பது அட்டைப்பெட்டியை தனியா எடுத்து வைடா சீனு.. வண்டி வந்த உடனே ஏத்திடலாம்”

சீனுவுக்கு இன்னும் கவலை தீரலை.

“சரிண்ணா.. ஐநூறு லட்டு போயாச்சு.. மீதி ஐநூறு”

வரதன் நிதானமா சொன்னார்.

“எல்லாம் அந்த ராமானுஜன் சித்தம்டா”

“என்னண்ணா சொல்றேள்? ராமானுஜன் சித்தமா?”

சீனு புரியாம குழம்பினான்.

வரதன் வைதேகியைப் பார்த்து..

“ஏற்கனவே சொன்ன மாதிரி நாம காஞ்சிபுரத்துக்கு  இன்னிக்கேப் போகலாம்.. காருக்குச் சொல்லிரு. இந்த வருஷம் அங்க குழந்தைகளுக்கு எலுமிச்சை சைஸ் லட்டுக்கு பதிலா முழு லட்டுவே கொடுக்கணம்னு ராமானுஜன் தீர்மானம் பண்ணி ஏற்பாடு பண்ணிட்டார். உண்மைல இந்த வருஷம் ரொம்பவே சந்தோஷமான தீபாவளி தான்”

வரதன் முகத்துல திருப்தி தெரிஞ்சுது.