நேற்று மாலை நண்பர் ஒருவரை காண அவர் வீட்டிற்கு சென்று இருந்தேன்.
நண்பரின் மனைவி மிகவும் நல்லவர்தான், மிகவும் அன்பாக பழகக் கூடியவர்தான். நான் அவருக்கு கெடுதல் ஒன்றும் நினைத்தவனுமில்லை.
நண்பரிடம் பேசியது ஞாபகம் இல்லை. அங்கு காபி சாப்பிடும் பொழுது மனதில் ஓடியதுதான் ஞாபகம் வருகிறது. அதை மட்டும் பகிர்கிறேன் .
முதலில் தோன்றியது காபி போட கற்று தர ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கலாம் என்று.
அந்த அளவிற்கு வசதி இல்லை. மேலும் ஏற்கனவே அட்மிஷன் இல்லாமல் பொறியியல் கல்லூரிகள் எல்லாம் கஷ்டப்படுகின்றன. எனவே அந்த எண்ணத்தை தவிர்த்து விட்டேன்.
அப்புறம் ஆன்லைனில் வகுப்பு எடுக்கலாமா என யோசித்தேன். அதையும் கை விட்டு விட்டேன்.
இருப்பினும் மனது கேட்கவில்லை. எனவே முதல் பாடத்தை நம் நண்பர்களின் நண்மைக்காக கீழே கொடுத்துள்ளேன்.
முதலில் பீபரி, பிளாண்டேஷன் விதைகளை சரியான விகிதத்தில் கலந்து சிக்கரி கலக்காமல் பொடி செய்து காற்று புகாத பாட்டிலில் இறுகி மூடிவைத்துக் கொள்ள வேண்டும்.
காபி பில்டரின் மேல் பாகத்தில் தேவையான அளவு காபித் தூளை போட வேண்டும்.
பின்பு இரண்டு விரல்களால் அதை மெதுவாக அழுத்த வேண்டும். கடினமாக அழுத்தக்கூடாது.ரொம்ப மெதுவாகவும் அழுத்தக் கூடாது. காபித் தூள் குவியலுக்கு இடையே காற்று தாராளமாக சென்று வர வேண்டும்.
டிகாக்ஷன் முழுதும் கீழ் பாத்திரத்தில் இறங்கியவுடன் தான் காபி கலக்க முடியும். அது வரை வேறு ஏதேனும் உபயோகமான வேலை இருந்தால் பார்க்கலாம். இல்லாவிடின் சும்மா அமர்ந்திருக்கவும். டிகாக்ஷன் இறங்கி விட்டதா என அடிக்கடி மூடியைத் திறந்து பார்க்க வேண்டாம்.
பாலில் டிகாக்ஷனை ஊற்றுவதா அல்லது டிகாக்ஷனில் பாலை ஊற்றுவதா என என் ஆராய்ச்சி இன்னும் முடிய வில்லை.
காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் கலந்து வாசனையை(flavour)தூக்கி விடுமாம்.
இப்படியெல்லாம் காபி போட்டா உங்களுக்குதான் கஷ்டம் , நிறைய தடவை காபி போட வேண்டி இருக்கும் . பார்த்துக்கங்க.
