கூட்டுக் குடும்பம்!- Dinamani

      (மமதா காலியா 1940 வருடம் நவம்பர் 2 ந் தேதியில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிருந்தாவனில் பிறந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் எம் ஏ பட்டம் பெற்றவர். எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் சிறந்த கவி. ‘துக்கம் சுகம்’ என்ற நாவலுக்காக 2017ல் இந்தியாவின் சிறந்த இலக்கிய பரிசான ‘வியாச சம்மானை’ பெற்றுள்ளார். இவரது கணவரும் புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர்).

இந்தக் கதை ஹிந்தியில் மமதா காலியா அவர்களால் எழுதப்பட்ட ‘பத்து கதைகள்’ என்ற கதைத் தொகுப்பிலிருந்து எடுத்து சுருக்கி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கதையின் ஓட்டம் ஏதும் தடைபடவில்லை.

பாவனா தனது புகுந்த வீட்டைப் பற்றிச் சொல்வது போல் கதை அமைந்துள்ளது. 

 எங்களது குடும்பம் விசித்திரமானது. என் கணவரும், குடும்பத்துடன் அவரது மூத்த சகோதரரும் வெளி நாட்டில் வசிக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதற்கும், இந்தியாவில் இருக்கும் எங்களைப் பார்ப்பதற்கும் ஏங்குகிறார்கள். இந்த ஏக்கம் அதிகமாகும்பொழுது நீண்ட நேரம் போனில் பேசுகிறார்கள். அன்பு நிறைந்த கார்டு அனுப்புகிறார்கள். அடுத்த வருஷம் ஒன்று சேர்வதற்கு முனைகிறார்கள்.

முதலில் எல்லோரும் சேர்ந்து தான் இருந்தோம், மாமனார் மாமியாரும் கூட இருந்தனர். லக்பத் நகரில் உள்ள அந்தப் பெரிய பங்களாவும் எங்கள் எல்லோருக்குமாக மிகவும் சிறிதாகத் தோன்றியது. என் கணவரது இளைய சகோதரர், சகோதரிக்குக் கல்யாணங்கள் நடந்தன. பெரிய அண்ணாவும், என் கணவரும் கேந்திரிய வித்யாலத்தில் ஆசிரியர்களாகவும், இளைய சகோதரி பங்கஜ் பயிற்சி காலேஜிலும், இளைய சகோதரர் நீரத் கபூர்தலா கல்லூரியிலும் ஆசிரியராக வேலை பார்த்து வந்தனர்.. அண்ணா செய்தித்தாள் ஊன்றிப் படிப்பார். என் கணவரும், பங்கஜும் செய்திகள் பக்கமே செல்ல மாட்டார்கள். நீரத் செய்திகளைப் படிப்பதை விட இலக்கியத்தில் ஆர்வமாய் இருந்தார்.

 ஒரு நாள் அண்ணா கனடா செல்வதற்காக செய்தித்தாளில் ஒரு விளம்பரம் பார்த்தார். கனடா பள்ளிக்கூடங்களில் அதிக இருப்பிடங்கள் காலியாக இருந்தன. அண்ணாவும் அண்ணியும் நான்கு விண்ணப்பப்  படிவங்களைக் கொண்டு வந்தனர். ‘மூன்று சகோதரர்களும் சென்று விட்டால் மற்றவர்கள் தனியாக இங்கே எப்படி ஜீவனம் செய்வார்கள்?’ என்று கேட்டதற்கு அண்ணா சொன்னார் ‘பங்கஜ் இருக்கிறாள், அவள் பையன் அமர்ஜித் இருக்கிறான், மற்ற சொந்தங்கள் எல்லாம் அருகிலேயே  இருக்கின்றனர். நாங்கள் ஒரு முறை அங்கே சென்று விட்டால் மற்ற இருவரையும் கூட்டிக் கொள்வோம் எல்லோருக்கும் அங்கே வேலை வாங்கித் தரப்படும்’ என்று அண்ணா சமாதானப்படுத்தினார். ஆனால் வேலையில் இருந்து திரும்பி வந்த நீரத் கனடா செல்வதற்கு மறுத்துவிட்டார். ‘இங்கே கிடைப்பதை விட 40 மடங்கு அதிக சம்பளம் அங்கே கிடைக்கும் நம்மளுடைய வறுமையும் நீங்கும்’ என்று அண்ணா சொன்னார். அதற்கு ‘நீங்கள் சென்று வாருங்கள் நான் வரமாட்டேன்’ என்று திடமாகக் கூறிவிட்டார் நீரத். இப்படியாக என் கணவரும், குழந்தைகளுடன் அண்ணா மன்னியும் சென்று விட்டனர். நாங்களும் சிறிது நாட்கள் பஞ்சாபில் இருந்து விட்டு பிறகு நீரத்திற்கு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு குடி பெயர்ந்து விட்டோம். கனடாவில் அண்ணாவின் குழந்தைகளும் நன்றாகப் படித்து வேலை செய்யத் தொடங்கி விட்டனர்.

ஒரு நாள் மன்னி போன் செய்து ‘பாவனா எங்களுடைய நல்ல நண்பர் ரிச்சர்ட் இந்தியா வருகிறார். அவர் ஒரு டாக்டர். ஒரு வாரம் இராஜஸ்தான் சுற்றி விட்டு அலகாபாத் வருகிறார்.. நமது வீட்டில் தான் தங்குவார். கொசு, பல்லி இல்லாமல் வீட்டைச் சுத்தப்படுத்தி விடு. உங்க அண்ணாவிற்கு லீவு கிடைக்காததால் அவர் கூட வர முடியவில்லை. நீ அவரை நன்றாகப்  பார்த்துக்கொள். அவருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொடு’ என்றாள். ஃபோனை வைத்து விட்டு வீட்டை ஒரு நோட்டம் விட்டேன். வீடு மிருகக்காட்சி சாலை மாதிரி இருந்தது.

குழந்தைகளைத் தங்களது அறையைச் சுத்தப்படுத்தச் சொல்லிவிட்டு நான் வேறு ஓர் அறையை ஒழுங்குபடுத்தினேன். அறையின் சுவற்றில் அழகான போட்டோக்களை மாற்றிவிட்டு, புதிய துண்டு, பாத்ரூம் செருப்பு, புதிய தண்ணீர் சொம்பு, சின்ன பிரிட்ஜ் என இவைகள் அனைத்தையும் அந்த அறையில் வைத்தேன். இதைப் பார்த்த எல்லோரும் இந்த அறையை வெளிநாட்டு அறை மாதிரி அழகாக மாற்றி விட்டாயே என்றனர். ஒரு சிறிய மியூசிக் சிஸ்டமும் வைத்தேன்.

 நீரத்துடன் ஆறடி உயரம் உள்ள ரிச்சர்ட் பார்க்கர் உள்ளே வந்தவுடன் அறையே நிரம்பி விட்டது மாதிரி இருந்தது. உள்ளே வந்து எல்லோருக்கும் நமஸ்காரம் செய்தார். ரொட்டி துண்டுகளை வாட்டி டீ போட்டு கொடுத்தேன். வெங்காய பக்கோடா செய்து கொடுத்தேன். பக்கோடா மிகவும் சூடா இருந்தது. ரிச்சர்ட் எல்லாவற்றையும் ரசித்து ருசித்து சாப்பிட்டார். பிறகு சாயந்திரம் நதிக் கரையோரம் அவரை அழைத்துச் சென்றோம். அவர் அங்கு இருக்கும் ஒவ்வொரு பொருளுடைய சரித்திரத்தையும் தெரிந்து கொள்ள முயன்றார். இந்த அணையை யார் கட்டினது, எந்த வருடம் கட்டப்பட்டது, எந்தக் கடவுளுடைய சிலைகள் இவை, இத்தனைக் கடவுளை நீங்கள் வணங்குகிறீர்களே அதனால் ஏதும் குழப்பம் ஏற்படாதா, இந்த படகோட்டி எவ்வளவு நாட்களாக படகு  ஓட்டுகிறார், அவருக்கு வயது என்ன, இப்படி சின்ன சின்ன விஷயங்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். எங்களால்  சிலவற்றிற்கு பதில் கூற முடிந்தது, சிலவற்றிற்கு இல்லை. சுற்றுப்புறத்தைப் பற்றி நாங்கள் பல விஷயங்களை அறியவில்லை என்று அப்போதுதான் எங்களுக்கேத் தெரிந்தது.

எங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் அவருடைய உச்சரிப்பைப் புரிந்து கொள்ள சிறிது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் சிலவற்றை சைகையினால் புரிந்து கொண்டோம். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து டிவி பார்த்தோம். ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டோம். இரவு மீண்டும் ரிச்சர்ட் டீ குடித்தார். எங்களிடமிருந்து ஹிந்தியில் சில வார்த்தைகளைக்  கற்றுக்கொண்டு அதைப் பேச முற்பட்டார். கஜராகஹோ செல்ல விருப்பப்படுவார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் சாரநாத் சென்று அங்கே ஞானமாகிய போதி மரத்தைப் பார்க்க விரும்பினார். புத்த மதத்தின் சில சாமான்களை வாங்க முற்பட்டார். தனியாகவே பயமில்லாமல் சாரநாத் சென்று வந்தார். ‘இந்தியாவில் தண்ணீர் தவிர வேறு எதிரி யாரும் கிடையாது என்று உங்கள் அண்ணா சொல்லி இருக்கிறார்’ என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

 குழந்தைகள் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டு சாப்பிட்டனர். நான் அவர்களைத் திட்டினேன். அதைக் கேட்டு ரிச்சர்ட் அவர்களை சமாதானப்படுத்தினார். பிறகு அவர்கள் சாப்பிடாமல் எழுந்தனர். அவர்களுடைய பாட்டி திரும்பவும் இருவரையும் அழைத்து ‘நான் உங்களுக்கு கதை சொல்லிக்கொண்டே ஊட்டுகிறேன்’ என்று சொன்னார். ‘இவர்கள் இருவரும் சிறுவயதாக இருந்தபோது பாட்டி கதை சொல்லி இவர்களுக்கு ஊட்டுவார்கள், பாட்டியிடம் சாப்பிடுவது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும், இவர்கள் இப்பொழுது வளர்ந்து விட்டார்கள், இருந்தாலும் சாப்பிடும் சமயத்தில் இவர்கள் குழந்தைகளாகி விடுகிறார்கள்’ என்று நான் சொன்னேன். ‘யார் முதலில் சாப்பிட வருகிறாரோ அவர்களுக்கு ஒரு ரூபாய் கிடைக்கும்’ என்று சொன்னவுடன் இருவரும் பாட்டியின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். நான் புதிய தட்டில் உணவு கொண்டு வந்தேன். பாட்டி குழந்தைகளுக்கு கதை சொல்லிக்கொண்டே எல்லா ரொட்டிகளையும் சாப்பிட வைத்தார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இரண்டு தினங்களாக வீடு அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுத்தாலும் சமயத்தில் அவர்கள் அதைப் பின்பற்றுவது இல்லை. இதனால் ரிச்சர்ட் இங்கிருந்து சீக்கிரமாகவே சென்று விட்டால் நலமாக இருக்கும் என்று நினைத்தேன்.

உணவிற்குப் பிறகு டீ குடித்துக் கொண்டே ‘தாங்கள் விருந்தளித்த விதத்தை நான் எப்போதுமே மறக்க மாட்டேன். எனக்கு இங்கே உங்களுடன் சேர்ந்து இருப்பது மிகப் பிடிக்கிறது’. ‘ஆமாம் இங்கே நடக்கும் குழப்பங்களையும் குழந்தைகள் நடந்து கொண்ட விதத்தையும் நீங்கள் மறக்க மாட்டீர்கள்’ என்று நான் சொன்னேன். ‘நீங்கள் எதை குழப்பங்கள் என்று சொல்கிறீர்களோ அதற்காகத்தான் எனது நாடு ஏங்கிக் கொண்டிருக்கிறது. குடும்பத்தின் இந்த ஒற்றுமையான சூழல் இப்பொழுது எங்கே கிடைக்கிறது! என்னை எடுத்துக் கொள்ளுங்கள். 12 வருடங்களாக தனியாக இருக்கிறேன். அம்மா அப்பாவிற்கு விவாகரத்து ஆகிவிட்டது. முதலில் நான் அம்மாவுடன் இருந்தேன். பிறகு அம்மா இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். நான் அப்பாவிடம் இருக்க ஆரம்பித்தேன். ஒரு வருடத்தில் அப்பாவும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள். எனக்கு எங்கேயுமே இடமில்லை. எவ்வளவு தனிமையை உணறுகிறேன் என்று சொல்லட்டுமா! நான் அமெரிக்காவில் ஒரு தனி தீவு மாதிரி. உங்களுடைய அண்ணா சொல்லிக் கொண்டே இருப்பார்கள் தனிமையைப் பற்றி. வெளிநாட்டுக்கு வராமல் நீரத் சரியான முடிவெடுத்தான்’.

 ‘ரிச்சர்ட் எனக்கு அப்போதே தெரியும். உணவிற்காக யாரும் தன்னுடைய தேசத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எழுத படிக்க, வேலை செய்ய, நல்லது கெட்டது எதுவுமே எனக்கு இங்கேயே கிடைக்கட்டும். ஏழு கடல் தாண்டிய வெளி தேசத்தில் என்னுடைய வார்த்தைகளுக்கு இங்கு இருக்கும் வாசம் இருக்காது’ என்று நீரத் உடனே கூறினார். ‘நீ சரியாக சொல்கிறாய். உன்னுடைய இரண்டு அண்ணன்மார்களும் இப்பொழுது அதை உணர்ந்து விட்டனர். நீங்கள் இந்த வீட்டில் மூன்று தலைமுறைகளாக ஒற்றுமையாக உட்கார்ந்து உணவு உண்ணுகிறீர்கள். இந்த மாதிரி சந்தோஷம் இப்பொழுது கிடைப்பது துர்லபமாகிவிட்டது. குழந்தைகளின் அம்மா அப்பா தங்களது தாயார் முன் குழந்தைகள் ஆகி அவர்கள் சொல்வதைக் கேட்கும் இந்தக் காட்சியை நான் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மூன்று தலைமுறையாக ஒரே வானத்தின் கீழ் ஒரே அறையில் அன்போடு கலந்து இருக்கிறீகள். உங்களது குழந்தைகளுக்கு இந்த சாதாரண சூழ்நிலை பெரிய விஷயம். இதை எப்பொழுதுமே தொலைத்து விடாதீர்கள்’. ரிச்சர்ட் காலையில் பனாரஸ் சென்று விட்டார். ஆனால் எனக்கு வாழ்க்கை முழுவதும் ஒரு பாடத்தை கற்பித்து விட்டார். அந்த வெளிநாட்டுக்காரர் ஊர் சுற்ற மட்டும் வரவில்லை என மனத்தையும் தெளிய வைக்க வந்தார் என்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

 

                                    ரேவதி ராமச்சந்திரன், சென்னை