“மன உளைச்சலைப் புரிந்து கொண்டேன்!”

முப்பது வயதான ரீடா, முனைவர் பட்டத்திற்கான ஆறாவது வருடத்திலிருந்தாள். கால வரம்பு நீடிக்கிறதே, தன்னால் இதை முடிக்க முடியுமா என்ற கவலையாலும், துறை ஆலோசகர் (PhD guide) எச்சரிக்கை செய்ததாலும் பதட்டம் அதிகரித்தது. என்னைப் பார்க்க மருத்துவர் பரிந்துரைத்திருந்தார்.
குழந்தைப் பருவத்தில், தந்தை வெளிநாட்டு சென்றதால் ஊர், பள்ளி மாறிய போதும் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்று உணர்ந்ததை விவரித்தாள். அந்த சமயங்களில் முழங்கை வலியும், மேல்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்து பதட்ட நிலையும் இருப்பதாக விவரித்தாள்.
முன்பைவிட வீரியம் அதிகரித்தது. மனநல மருத்துவர் தேவையான மருந்துகளைத் தந்ததும், சற்று நன்றானது. விடியற்காலையில் எழுந்திருப்பதும். மனம் படிக்க எழுத வேண்டியதை அலச, பதட்ட நிலை துவங்கியது.
ரீடா பல வெற்றியைப் பெற்றிருந்தாலும் தனக்குத் திறமைக் குறைவு என எண்ணினாள். இந்த மாதிரியான சிந்தனை நாள் முழுதும் படர, முடித்துத் தர வேண்டிய வேலையைச் செய்யாமல் ஏதோவொன்று செய்ய, செய்ய வேண்டிய வேலைகள் அப்படியே இருக்கும். தீய சுழற்சியானது: வேலை செய்யவேண்டும், ஆனால் மனம் அலைமோத, வேறொன்றைச் செய்ய, வேலையை முடிக்கவில்லை.
மந்த நிலை நிலவ, எதிலும் உற்சாகம் ஏற்படவில்லை. முடிக்க வேண்டியதைப் பற்றிய சிந்தனை இருக்க, சோர்வு கூடியது என்றாள்.
முன்பெல்லாம் ஓடுவது மனதிற்குப் புத்துணர்ச்சி தந்தது. முழங்கை வலியினால் ஓட முடியவில்லை என்றாள். வலியும் மனநிலையும் மாறாமல் இருந்துவிடுமோ என்ற சந்தேகத்தை எழுப்பினாள்.
உதவியற்ற நிலையை உணர்ந்தாள். இது, மன உளைச்சல் உண்டாக்கலாம்.
தனிப்பட்ட ஸெஷன்கள் ஒருபுறம் போய்க்கொண்டிருந்தது. ஏற்கனவே நடந்துகொண்டிருந்த க்ரூப் தெரப்பியில் ரீடாவை சேர்த்துக் கொண்டேன். உடனே முழுமையாகச் சரியாகிவிடுவேன் என்றாள். இது மாயமாக மாறுவதற்காக இல்லை, மன உளைச்சலைப் பற்றிப் புரிந்துகொண்டு செயல் பட வழிகளைத் தேட என விளக்கினேன்.
ரீடாவிற்கு ஏற்பட்ட முதல் புரிதலே, சிந்தனையைத் திணிக்கப் பார்த்தால் எதிர்த்துத்தான் நிற்கும் என்று. இதை மேலும் புரிந்து கொண்டு, ஏற்றுக்கொள்ள முரண்டு பிடிக்கும் வழியை விட்டுவிட்டு, செய்து பார்க்க வடிவமைப்புச் செய்தேன், இந்த மனநிலையிலிருந்து வெளிவருவதற்கே.
அதற்காக, கைவிரல்களை ஒரு சிறு கயிற்றினால் பின்னி விடுவிக்கச் சொன்னேன். அவசரமாக, அழுத்தம் கொடுத்து முயன்றால் விடுவிப்பு மேலும் கடினமாகும். மாறாக நிதானமாக விரல்களை ஒன்றாக இணைத்துக் கொண்டால், முடிச்சு அவிழ்ந்து விழ உதவும். இரு நிலையைக் காட்டுகிறது: முடிச்சு மன உளைச்சல் உபாதை, அவசரமாக அழுத்தத்தை அழிக்க முயல்வது, முடிச்சை அவிழ்த்து விடுவது மன உளைச்சலிருந்து வலுக்கட்டாயமாக வெளிவர முயல்வது.
ரீடா “நான் சரியாகி விடுவேனா” என்று கேட்ட கேள்விக்கு அவிழ்த்த முடிச்சைச் சம்பந்தப் படுத்த, புரிந்தது. மன உளைச்சலிருந்து நழுவ, இப்படியொன்றும் இல்லை என்ற எண்ணம் அந்த நிமிடத்திற்குச் சாந்தி செய்யும். நீடிக்காது. அதற்குப் பதிலாக இருக்கிற நிலையையும் வீச்சையும் அப்படியே கண்டுகொண்டு, ஒப்புக்கொண்டு, உடலில் நேர்வதையும் உணர்வில் ஏற்படுவதையும் அறிந்தால், பதட்டமின்றி மேற்கொண்டு செய்வதற்கு மனதில் தோன்றும்!
மேலும் புரிந்து கொள்ள, ரீடாவுடன் தொடர்ந்தேன். துன்பம் மற்ற உணர்வுகளைப் போல நமது உடலில் தென்படும். உடல் வலியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும். இது நமது தினசரி செயலில் குறுக்கிடும். உணர்ச்சிகளை எதிர்க்க முயற்சி செய்தால், இடையூறுகள் அதிகரித்து, மேலும் துன்பம் கொடுத்து தீய சுழற்சியாகலாம்.
உதாரணமாக ரீடாவின் தூக்கத்தை எடுத்துக் கொண்டேன். தூக்கம் வராத போது சிந்தனையைச் சிதறவிட, பதட்டம் கூடியது. தூக்கத்தை வரவழைக்க, கண்களை அழுத்தி மூடிக்கொள்வாள். மீதிருக்கும் வேலையைப் பற்றிய சிந்தனைகள் கூட, பதட்டம் அதிகரிக்கும், தூக்கம் வராது. தூங்காததினால் மறுநாள் சோர்வு கூட, வேலை நடக்காது, பதட்டம் அதிகரிக்கும்.
அதேபோல், இக்கட்டான நிலைமைகளைச் சந்திக்கும்போது, உணர்வுகளினால் எதிர்கொள்ளத் தெரியாமல் ஸ்தம்பித்து நிற்க, சூழ்நிலையைச் சமாளிக்க முடியவில்லை, தவிப்பு உண்டாகியது. சரியாகச் சமாளிக்காததில், சூழ்நிலை மேலும் மோசமாகி, தவிப்பு அதிகரித்தது.
வெகு சீக்கிரமாக ரீடாவின் புரிதல் கூடியது! தன்னுடைய தவறான பல செயல்முறைகளைத் தெளிவாகக் கண்டறிந்தாள். உதாரணத்திற்கு, எதிர்மறை உணர்வுகள் வர, மன உளைச்சல் நேர்ந்ததை. மறப்பதற்குப் பயனில்லாத வேலை செய்ததை வரிசைப் படுத்தினாள். இதனால் ஏற்பட்ட குற்ற உணர்வு தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டதை, வேதனை அளித்ததைப் பார்த்தாள்.
தீய சூழல்களை மாற்றி அமைக்க, ரீடாவைச் சுய இரக்கம் பயிலச் சொன்னேன், அதாவது நாம் தன்னைத் தானே மன்னித்துக் கொள்வது. தூக்கம் வராதபோது, செய்யாத வேலைகளைப் பற்றி எண்ணி பதட்டம் கூட்டுவதற்குப் பதிலாக, பிடித்த ஏதோ ஒன்றைப்பற்றி எண்ணலாம். சூழ்நிலைகளைச் சரியாகச் சந்திக்காவிட்டால், “பரவாயில்லை, மறுமுறை சரியாகச் செய்கிறேன்” என்று தன்னையே தைரியப் படுத்திக் கொள்ளலாம். தீய சூழ்ச்சிகளை இப்படி முறிக்கலாம் என ரீடா புரிந்து கொண்டாள்.
அதே சமயம், தன் நிலையை மாற்றிக்கொள்ளவும் முயற்சிகள் எடுக்க ஆரம்பித்தாள். சில செஷன்களில் உரையாடிய பிறகு, தனக்குப் பிடித்திருந்த வேலைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தாள். தையல், தோட்ட வேலை, பாடுவதைச் செய்ய ஆரம்பித்தாள். செய்யச் செய்ய, உடலில் ஏற்பட்ட மாற்றம் பழையபடி மனதில் அமைதியை அளித்ததை உணர்ந்தாள்!
ரீடா தன்னையும் அறியாமல் நன்றாகி வருவதைக் குழுவினர் அவளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இதை ரீடா ஆராய்ந்ததில் தெளிவானது, தன் வலியை வெவ்வேறு வகைகளில் அணுகிப் புரிந்து கொண்டதில், உடலும் சமாதானம் ஆகிறது, வலியின் வீரியம் குறைகிறது என்று. பள்ளிக் காலத்தில் கைப்பந்துக் குழுவில் விளையாடியவள், பல ஆண்டுகளுக்குப் பிறகு உற்சாகமாகத் தொடர்ந்தாள். இதுவே மன உளைச்சலுக்கு விடையாகப் பொருந்தும் என ரீடாவின் சிந்தனைச் செயல் காண்பிக்க, மற்ற கைவேலைகளுடன் இதையும் சேர்த்துக் கொண்டாள்.
குழுவில் பலர், ரீடாவின் முயற்சிகளைப் பார்த்து, தங்களது பிரச்சினைக்கும் தீர்வு காண, தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகள் தேர்ந்தெடுத்தார்கள், வழிப்படுத்தினார்கள். தனிப்பட்ட செஷன்களிலும் இந்தக் குழுவிலும் இதைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். பல ஊக்குவிப்பு நேர்ந்தது.
மொத்தத்தில், நமக்கு நேரும் உடல்-மன இன்னல்களை, தகவல் தருவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன், எப்படி நேர்கிறது, அதற்கும் நம் உணர்ச்சிகளுக்கும் இணைப்புகள் என்ன, நம் சிந்தனையை, செயல்களை எப்படிப் பாதிக்கிறது என்று கூர்ந்து கவனித்துக் கண்டுகொள்ள வேண்டும். புரிந்தால் அதைச் சரி செய்யும் யுக்திகளைக் கடைப்பிடிக்க முடியும். மாறாக, பயத்துடன் பார்த்தால், நிலை குலுங்க வைக்கும். அதிலிருந்து ஓடிப் போக முயன்றால், அந்த நிலை நிழல் போலத் தொடரும்.
மனம் வலுவானதும், ரீடாவிற்குத் தன் பயத்திலிருந்து வெளிவர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. குறிப்பாக, துறை ஆலோசகரிடம் பேசுவதற்கு. இதற்குக் குழுவில் ஒருவர் துறை ஆலோசகராக நடித்து (role play) ஆராய உதவினார். . இருவரும் மாறி மாறி பல சந்தேகங்களை எடுத்து, பாத்திரத்தைச் செய்ய சில தகவல்கள் வெளியானது.
குறிப்பாக, ரீடா, துறை ஆலோசகர் கேட்பதற்குப் பலமுறை பதிலளிக்காமல் உறைந்து நிற்பாள். இது முன்னேற்றம் தராததைப் புரிந்துகொண்டாள். இதன் காரணமே, பலமுறை செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் தவிர்த்துக் கொண்டிருந்தது பதட்டத்தை ஏற்படுத்தியதனால். ரீடா தன்னை அறியாமலே எதிர்ப்புச் செய்வதையும் அதன் விளைவையும் அடையாளம் காண முடிந்தது. இதை நேருக்குநேர் பார்க்கத் தைரியம் வேண்டும். ரீடா அந்த தைரிய நிலையை அடைந்திருந்தாள்.
குழுவினருடன் நடிப்பு மூலம் கலந்தாலோசித்ததில் புரிந்தது. ரீடா ஒரு பக்கம், பல வேலைகளை முடித்திருப்பாள், முடிக்காதவற்றை நினைத்து பதற்றமடைந்து, பகிராமல் உறைந்து நிற்பாள். மற்றொரு பக்கம், சந்தேகங்கள், இடையூறுகள் காரணமாகச் சிலவற்று முடிக்காமல் நின்றிருக்கும். தன் பயம், அதைரியம், மனப்போக்கினால் செய்ய வேண்டியது சில நடந்திருக்காது. இது தெளிவானதும், தீர்வு கண்முன் இருந்தது. தன் வழியை மாற்றி, முதலில் ஆலோசகரிடம் முடித்ததைச் சொல்வதும், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதும், செய்யாதவற்றிற்கு, தன் தவற்றை ஒப்புக் கொண்டு, மறுமுறை செய்வதற்கான சிறிய திட்டங்களைத் தீட்டி முடிக்க முயன்றாள்.
ரீடா தனக்கு நேர்ந்த மன உளைச்சலை விரோதியாக எண்ணாமல் உடலும் மனமும் சொன்ன தகவல்கள் என எடுத்துக் கொண்டாள். இதனைத் தான் புரிந்து கொள்ளாமல் வியந்து பயந்ததனால் பல வகையான பிரச்சினை சந்திக்க நேர்ந்தது.
இந்தப் புரிதல் முக்கியமானது. அதன் அடிப்படையில் ரீடா தன் எதிர்பார்ப்பைப் பற்றிய விளக்கம் ஆரம்பித்தேன். எளிதில் மன உளைச்சலுக்குக் காரணி எதிர்பார்ப்பு, சுய மதிப்பு எனத் தெரிந்தது. மன உளைச்சலுக்குக் காரணமே எதிர்பார்ப்பை மிக உயரத்தில் வைப்பதே. அதனால் வெற்றி அடைந்தாலும் அதை எதிர்பார்ப்புடன் ஒப்பிட்டு, போதவில்லை என்று முடிவு செய்ய மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்.
இவையெல்லாம் முடிந்ததில் முழங்கை வலி சரியானது. முனைவர் பட்டத்திற்கு அருகில் சென்றிருந்தாள். தோழமை, பிடித்த பலவற்றைச் செய்து வந்தாள். மருத்துவர் மருந்துகளைக் குறைக்க ஆரம்பித்தார்.
