ஐயா நம்மாழ்வார் இயற்கை விழிப்புணர்வு - குழந்தைகளை வாங்க, போங்க என்று  பேசுவதுதான் மரியாதையா? மருத்துவர் விளக்கம் No Comments வீட்டில் ...

           புரிந்தும் புரியாத இரண்டாங்கெட்டான் வயது என நினைக்கிறேன். தாத்தாவின் ஊருக்கு, அம்மாவின் பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்தோம். “அம்மா, எனக்கு நீ தலைவாரிப் பின்னி விடுவாயா?” என்று ஒருமையில் கேட்டேன் என் தாயிடம். நிச்சயமாக என் வயது ஐந்தோ ஆறோதான். பார்த்துக் கொண்டே இருந்த பெரிய மாமா என்னைத் தன்னிடம் அழைத்தார். அழகாகச் சொல்லிக் கொடுத்தார், ” உன் வயசு என்ன?அம்மா வயசு என்ன? எவ்வளவு பெரியவள் அம்மா? அவாளை நீ வா, போ என்று கூப்பிடக் கூடாது. ‘வாங்கோ,’ என்று மரியாதையாகத்தான் அழைக்க வேண்டும்,” என்றார், எனக்கோ சந்தேகம். உடனே அதனைச் சரி செய்து கொள்வதுதானே புத்திசாலித்தனம்?

           “எதிர்வீட்டு கோபு அவனுடைய அப்பா அம்மாவை, “வா, போ,” என்றுதானே சொல்கிறான் மாமா,” என்றேன். “இங்க பார், அவர்கள் வீட்டில் செய்வதெல்லாம் நாம செய்ய முடியுமா? அதை அவர்கள் வீட்டுப் பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள். உனக்கு மட்டுமே நாங்கள் சொல்லித்தர முடியும்.”

           அன்றிலிருந்து எல்லாப் பெரியவர்களையும் பன்மையில், ‘வாங்கோ, வாங்க,’ என்றே அழைக்க ஆரம்பித்து அதுவே பழகிப் போயும் விட்டதால் வித்தியாசமாகவே எண்ணத் தோன்றவும் இல்லை! அம்மா கூடத் தன் அண்ணாவான மாமாவை ‘நீங்க’ எனத்தான் அழைத்தாள். சில  சமயங்களில் என்னையொத்த வயதுக் குழந்தைகள், பெரியப்பா, சிற்றப்பா குழந்தைகள் வரும்போது அவர்கள் சிற்றப்பா, பெரியப்பா ஆன என் பெற்றோரை, “நீ,” என ஒருமையில் விளிக்கும்போது கோவம் வரும். ஆனால் எங்களைப் பார்த்து அவர்களும் ‘வாங்க’ என காலப்போக்கில் மாறிவிட்டதனால் பெருமையாக இருக்கும்.

           வயதாக ஆக, வாசலில் பால்காரர், பூக்காரம்மாள், காய்கறி விற்பவர் எல்லோரையுமே அவர்கள் வயதில் பெரியவர்களானால் பன்மையில் கூப்பிடும் வழக்கம் பழகிப் போயிற்று. நல்ல வழக்கம் மாமா சொல்லித் தந்தது எனப் பெருமையாக இருந்தது.

           வயதாக ஆக நண்பர்களுடன் பலவற்றையும் விவாதிக்கும்போது, ‘அழைக்கும் விதத்தில் மரியாதை காண்பிப்பதனாலேயே ஒருவர்மீது மரியாதை காட்டுகிறோம் என்று அர்த்தமல்ல’ என ஒரு தோழியின் விவாதம். நான்கைந்து வயதே பெரியவனான கணவனை (அல்லது சமவயதினனான ஒருவனை) மனைவி ‘நீங்கள்’ என அழைக்க வேண்டும்; அவன் மட்டும் அவளை ‘வாடி, போடி’ என ஏன் ஒருமையில், படுமட்டமாக அழைக்க வேண்டும் என இன்னொரு கேள்வி. ‘அவள் தனக்குக் கீழ்ப்படிந்தவள்,’ என உலகுக்குத் தெரிவிக்கவே என்று வாதிட்ட இன்னொரு இளமைச் செருக்கு நிறைந்த கூட்டம். குழம்பித் தான் போகும் எல்லாருக்கும்.

           இன்னொரு விஷயம், நான் பின்னாளில் அறிந்து கொண்டது; மதுரைப்பக்கம் சிறு குழந்தைகளைக் கூட வாங்க, போங்க எனப் பன்மையில்தான் பேசுவார்கள் என்பது. ஆச்சரியமாகவே இருந்தது.

           இறைவனைக்கூட ஒருமையில் விளிக்க உரிமைபெற்ற அடியவர்கள் ஒருபுறம்! ‘பித்தலாட்டக்காரி,’ (காமாட்சி விருத்தம்) என்றெல்லாம் அம்பாளைக் கடிந்துகொள்ளவும் அடியவர்களுக்கு உரிமை உண்டு. ‘பித்தா, பேயா,’ என சிவனையும், ‘வெண்ணெய் திருடின கள்வா,’ எனக் கிருஷ்ணனையும் அழைக்கலாம். அதே சமயம் திருஞான சம்பந்தர், மங்கையர்க்கரசியார் போலும் அடியார்களைப்  பற்றி எழுதும்போது மரியாதையாகப் பன்மையில்தான் எழுத வேண்டும் எனும் நியமமும் உண்டு!

           தற்காலத்தில் நியமங்கள் அனைத்தும் குழம்பி, மேலைநாட்டு நாகரிகத்தில் தேவையல்லாதவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நிற்கும் கூட்டம் ஒன்று. முன்பின் தெரியாதவர்களைத் தொலைபேசியில் அழைத்து (வியாபார நிமித்தமாகவோ, வங்கித் தொடர்பாகவோ) பேசும்போது திரு அல்லது திருமதி எனும் அடைமொழி சேர்க்காமலும், எடுத்த எடுப்பில் முதல் பெயரால் அழைத்துப் பேசுவதும் நம்மில் பலருக்கு எரிச்சலை ஊட்டக்கூடியதே! ஒருமுறை இப்படிப்பட்ட ஒரு சம்பாஷணையின்போது அடுத்த முனையில் இருந்த இளைஞனிடம், “தம்பி, உனக்கு என் பேரனின் வயது இருக்கலாம். நீ பாட்டி என அழைத்தால் நான் கோபிக்க மாட்டேன். ஆனால் முன்பின் பார்க்காத என்னைப் பெயர் சொல்லி அழைத்தால் நன்றாகத்தான் இல்லை,” எனக்கூறி விட்டேன்!

           இவை அனைத்துமே ஒரு சம்பிரதாயத்தின் அடிப்படையில், ஒருவர் வளர்க்கப்பட்ட முறையில், ஒரு நாகரிகத்தின் பிரதிபலிப்பானவை. அமெரிக்காவில் ஒருவரை ஆன்ட்டி என்றோ, அங்கிள் என்றோ, பாட்டி என்றோ சுலபத்தில் அழைத்துவிட முடியாது. உடனே தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு விடுவார்கள். அதே போல, அமெரிக்க நாகரிகத்தை (முதல் பெயரைச் சொல்லி, முன்பின் தெரியாத பாட்டி முதல் பேரன்வரை அழைப்பதை) மட்டும் நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

           சிந்திக்க வேண்டும். காரண காரியங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

           எனக்கு இதுவும் இன்னொரு வாழ்க்கைப் பாடமாகத் தோன்றுகிறது.

           கால்போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறோமோ என அச்சம் ஏற்படுகிறது.

           ___________________________________________