இறுகப்பற்று

பல இடங்களில் நம்மைக் கட்டிப் போடுகிறது படம். கவனம் சிதறாமல் கொண்டு சென்ற இயக்குனர் யுவராஜ் தயாளனுக்கு பாராட்டுக்கள். கடைசியில் நல்ல படங்கள் செய்யும் ஒரு குறுகுறுப்பு சிந்தனையோடு வெளியேறுகிறோம். மூன்று தம்பதியர் இடையே விழும் முடிச்சு சிக்கல்கள் தான் கதை. மாறி மாறி அவர்களின் தருணங்களைக் காட்டினாலும், ரசிகனை படத்தோடு இணைக்க உளவியல் மருத்துவர் மூலம் தெளிவு காட்டப்பட்டிருக்கிறது. இதில் மனோகரின் ( விக்ரம் பிரபு) பாத்திரம் வினோதம். உளவியல் மருத்துவரான மனைவி மித்ராவின் அறிவுரைகள், பணி தாண்டி வீட்டிலும் ஒலிக்கும்போது, அவனது அழுத்தம் அதிகமாகிறது. டாடா, குட் நைட் படங்களைப் போல நல்ல படங்களும் ஈர்க்கும் என்பதற்கு இப்படம் இன்னொரு உதாரணம். காட்சிப்படுத்துதலை விட்டு விட்டு, வசனங்கள் மூலம் அனைத்தையும் சொல்ல வந்தது தான் இதன் குறை. ஆனாலும் ஆங்காங்கே தெளித்து விடப்பட்ட நகைச்சுவை படத்தை காப்பாற்றுகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
இறுகப்பிடித்தால் எந்த முடிச்சும் அறுந்துவிடும் எனும் பழமொழிதான் இந்தப் படத்தின் ஒன்லைன். அதை மூன்று ஜோடிகள் மூலம் சொல்ல வந்த விதம் அருமை. ஷரத்தா ஸ்ரீநாத், விக்ரம் பிரபு, வித்தார்த், ஸ்ரீ போன்றவர்களின் உணர்ந்த நடிப்பு இதன் பலம். – தி ஹிந்து
நிறைய கொண்டாடப்பட வேண்டிய தருணங்கள். மிகச் சொற்ப குறைகள். அற்புதமான நடிப்பு அனைவரிடமிருந்தும். இது இந்தப் படத்தைக் காப்பாற்றுகிறது.- இண்டியா டுடே.
”கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு காரணம் |தேவையில்லை கணவன் மனைவியாக இருப்பதே ஒரு காரணம்தான் “என்ற யதார்த்தமான டயலாக்குடன் தொடங்குகிறது யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இறுகப்பற்று திரைப்படம். விவாகரத்து செய்ய நினைக்கும் தம்பதிகள் இப்படத்தை பார்த்தால் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. தமிழ் சினிமாவில் தம்பதிகளின் அன்பின் தேவையை உணர்த்தும் படமாக வந்துள்ளது இறுகப்பற்று. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய படமாக இறுகப்பற்று இருக்கும் என்பது உறுதி. – கல்கி இணைய இதழ்
புதிதாக கல்யாணமான தம்பதிகளுக்கு இது ஒரு கோனார் நோட்ஸ். எடுத்தோம் கவிழ்த்தோம் பிரிவோம் என்றில்லாமல் நவீன தம்பதிகள் உளவியல் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது ஆரோக்கிய சினிமா – சினிமா எக்ஸ்பிரஸ்.
பிரச்சார தொனியுடன் கூடிய ஒரு ரசிக்கத்தக்க குடும்ப சித்திரம். புதிதாக எதையும் சொல்லாமல் கவரக்கூடிய விதத்தில் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. – இந்தியா ஹெரால்டு.
தி ரோட்

எதையும் இதிலிருந்து தனித்து எடுத்து ரசிக்க முடியாத அலுப்பான படம். போலவே, திரிஷாவின் போராளி பிம்பத்தை இன்னமும் சாய்த்து கவலையைக் கூட்டுகிறது. திரிஷா சோடையில்லை என்றாலும் மாயழகனாக ஷபீர் கல்லரக்கல் பட்டையை கிளப்புகிறார். தோல்விப் படங்களில் அவரது நடிப்பை இனி வீணடிக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.- தி ஹிந்து
விபத்தா? கொலையா? எனும் புலனாய்வு காட்சிகள் ஈர்க்கின்றன. பாதி வழியில் இன்னொரு கதையை இதோடு இணைத்ததில், நம் கவனம் சிதறுகிறது. இன்னும் சொல்லப்போனால், வில்லனின் கதையைப் பார்த்து அவன் மீது பரிதாபப்பட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்படுகிறோம் எனும் வகையில் இயக்குனர் அருண் வசீகரன் நம்பிக்கை தருகிறார். திருஷாவின் தொலைந்த ஆடு முகம், நமக்குள் அவர் மேல் பரிதாபத்தையும், அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனும் பதற்றத்தையும் விதைக்கிறது. இதற்கு மேல் புதிதாக உத்திகள் இல்லாமல் படம் தடுமாறுகிறது. சாம் சி எஸ்ஸின் காதைக் கிழிக்கும் இசை நம்மை இன்னும் ரணமாக்குகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
நல்ல திரில்லராக வந்திருக்க வேண்டியது. பழைய பாட்டையில் போனதில் புதிதாக எதுவும் நம்மை ஈர்க்காமல் கை விட்டு விடுகிறது. கொலையை ஒரு விபத்தாக கட்டு கட்டும் காவல் துறையின் புறையோடிய வழிகளை மீண்டும் சொல்ல வந்து தோல்வியடைகிறது படம். இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் திரிஷாவால் எது நல்ல படம் என்று தீர்மானித்து தேர்வு செய்ய முடியவில்லை என்பது தான் இன்றைய தீர்ப்பு. – இண்டியா டுடே!
ரத்தம்

மேம்போக் காக எழுதபட்ட கதைக்குப் பொருத்தமான காட்சிகளும் இல்லை. தேவையான நடிப்பும் இல்லை. அதனால் ரத்தமற்று, சோகையாகி, உயிரை விடுகிறது படம். கடைசியில் சில காட்சிகளைத் தவிர எதையும் நினைவில் வைத்துக் கொள்ளாமல் வெளியேறுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதன் எதையும் தெறிக்க விடவில்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
800

முத்தையா முரளீதரனின் வாழ்வு பயணம் நம்மை உட்கார வைக்கிறது என்றாலும், இன்னும் கூட ஆழமாகச் சொல்லியிருக்கலாமோ எனும் ஏக்கமும் வருகிறது. வாழும் நாட்டில் உரிமை மறுக்கப்பட்டு, விடுதியில் தங்கி படிக்கும் முரளியின் வாழ்வு அர்ஜுனா ரனதுங்காவின் ஊக்கத்தால் மாற்றப்படுகிறது. அதே சமயம் வேறு குழு உறுப்பினர்கள் யாரும் உதவவில்லையா எனும் கேள்வியும் எழுகிறது. இரண்டாம் பாதியில் சற்று புரிதல் சேர்க்கப்பட்டிருக்கிறது. முரளி ஈழ போராளி பிரபாகரனை ( நரைன்) சந்திக்கும் கட்டம் அற்புதம். நாட்டில் அமைதி வேண்டும் என விரும்பும் முரளியும், அதற்கு போர் மட்டுமே வழி என்று நினைக்கும் கேப்டனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் பதைப்பு மிகுந்தது. முரளியாக மதூர் மிட்டல் பாத்திரத் தேர்வில் பாஸ். பல கிரிக்கெட் காட்சிகள் நாம் பார்த்தவை என்றாலும் கடைசி போட்டியின் அமைப்பில் சற்று உணர்வுகளை தூண்டி விட்டிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபதி. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
இன்னும் கூட நகாசும் தெளிவும் இருந்திருக்க வேண்டிய படம். சில அருமையான நடிப்பும், திறன் மிக்க கலைஞர்களும் கொண்ட குழு, இன்னும் செய்திருக்கலாம். – இந்தியா டுடே!
சாகச வீரனைப் பற்றிய கதையை, சராசரியாக சொல்லும் படம். ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு சாதனை வீரரின் முத்திரை காட்சிகளை சரியாகப் பதிவாக்கி இருக்கிறது. முரளியின் வாழ்வில் வந்த சிக்கல்: பந்து வீச்சா அல்லது எறிதலா? இதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதும் ஒரு குறை. – தி ஹிந்து
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில், அவரை துரத்திக் கொண்டே இருக்கும் ஒரு கேள்வி, அவர் யார் என்கிற அடையாளம் தான். கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே அவர் தன்னை ஒரு சிங்களர் என்றா இல்லை தமிழரா? எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது பற்றி படம். மைதானத்தில் நடக்கும் காட்சிகள் அப்படியே வருகிறது. ஆனால் முத்தையாவின் இறுதி போட்டியில், கொஞ்சம் டிராமா கலந்து, கனவுகளுடன் இருப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதுடன், ஒரு திறமைசாலியின் சாதனையை தனித்து காட்டுகிறார்கள். மொத்தத்தில் பாதி கிணறு – சமயம் தமிழ்.
எனக்கு எண்டே கிடையாது

சராசரி படமாக இருக்கும் என்று பார்க்க உட்கார்ந்தால் மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார்கள். முதல் பாதி க்ரைம் திரில்லராகவும், இரண்டாம் பாதியை பிளாக் காமெடி க்ரைம் டிராமாவாகவும் எடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குனர் விக்ரம் ரமேஷ். ஒரு வீடு. நான்கைந்து கதாபாத்திரங்கள். அதற்குள் அடுத்து என்ன எனும் பதைப்பை விதைத்த விதத்தில், இப்படத்தின் திரைக்கதை செமையாக எழுதப்பட்டு, காட்சிகளாகவும் அப்படியே திரையில் காட்டப்படுகிறது. பிரபல முகங்கள் இல்லாமல், கதைக்கு பொருந்தும் நடிகர்களை தேர்வு செய்த விதத்தில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். கலா சரணின் இசை இந்தப் படத்திற்கு பெரிய பலம். கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு ஏற்ற படம் – ஃபில்மி கிராஃப் அருண்.
ஷாட் பூட் த்ரீ

ஆர்ப்பரித்து கொண்டாடக்கூடிய படமில்லை. கைத்தட்டலும் விசில்களும் கூட இருக்காது. ஆனால் படம் முடிந்து, பெயர்கள் உருண்டு மறையும்போது, நம் நெஞ்சம் லேசான பஞ்சு போல ஆவது உண்மை. நல்ல படம் தான். ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது இந்த ஜாமூன் படத்தில். -சினிமா எக்ஸ்பிரஸ்
ஒரு சரியான குழந்தைகளுக்கான படம். ஆரோக்கியமான சரியான திட்டமிடலுடன் கூடிய ஒரு சுவையான விருந்து. ஒரு இந்திய படம் குழந்தைகளையும் நாய்களையும் மையப்படுத்தி எடுத்திருப்பதே சாதனை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா
முக்கியமான அவசியமான செய்திகளை,அறிவுரைகளை சரியான விகிதத்தில் கொண்டு சேர்க்கும் அற்புதமான சிறுவர் படம் இது. – சவுத் ஃபர்ஸ்ட்.
லியோ

படத்தின் ஆரம்பக் காட்சிகள் கவனமாக மித வேகத்தில் செலுத்தப்படுகிறது. அதுவே திரையின் அற்புத தருணங்கள். பார்த்திபனின் குடும்பம்; அதில் இருக்கும் பாசம், நேசம் எனக் கொண்டாட்டம் கொப்பளிக்க. வில்லர்கள் அவர் நடத்தி வரும் உணவு விடுதியை நாசம் செய்ய வரும்போது படம் வேகம் எடுக்கிறது. விஜய் ஒரு நட்சத்திரம் மட்டுமல்ல; நல்ல நடிகரும் கூட என்பதை சிரத்தையோடு வெளிக்காட்ட முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் பாதி வண்ணம் என்றால் பின் பாதி சாயம் போன வர்ணம். சரியாக எழுதப்படாத காட்சிகள், படத்தை தொங்கலில் விடுகின்றன. திரிஷா அருமையாக நடித்திருக்கிறார். அதை பிரியா ஆனந்த் விசயத்தில் சொல்வதற்கில்லை. முதல் பாதியை பரபரவென்று எழுதி இரண்டாம் பாதியில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். அதனால் இது ஒரு சராசரி படமாக ஆகிவிட்டது. – 123 தெலுகு
இலக்கை எட்டாத படத்தில் விஜய் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். இந்தப் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஒரு பின்னடைவை சந்தித்திருக்கிறார். ஒன்றை பாராட்ட வேண்டும். எதிலிருந்து சுட்டோம் என்பதை மறைக்கும் இயக்குனர்கள் நடுவில், இதிலிருந்து தான் ஈர்ப்பு என்று பட்டவர்த்தனமாக டேவிட் க்ரோனென்பெர்க்கின் ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் எனும் படத்தை அறிவித்த நேர்மையை பாராட்ட வேண்டும். திரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன் எல்லோரும் அருமையாக நடிக்க, அர்ஜுன் மட்டும் சோடை போயிருக்கிறார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட். அனிருத்தின் இசை படத்தை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு செல்கிறது. லியோ, விஜய்யின் நடிப்பிற்காக பார்க்க வேண்டிய படம். லோகேஷின் இயக்கத்திற்காக அல்ல. – இண்டியன் எக்ஸ்பிரஸ்.
லோகேஷின் மோசமான படத்தை தட்டி எழுப்ப முயன்றிருக்கிறார் விஜய். ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொன்னாலும் அதைத் தாண்டி இன்னும் ஆழமான படிமங்களை விதைக்க முயன்றிருக்கிறார் லோகேஷ். இலக்கை தவற விட்டாலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக படமாக இருக்கும். அதனால் லோகேஷை திரை ரசிகன் கைவிட மாட்டான். – தமிழ் ஹிந்து.
இது ஒரு அதிரடி சண்டைப் படம் என்பதில் சந்தேகமில்லை. அதில் விஜய்யால் அபூர்வமான நடிப்பை தர முடிந்தது ஆச்சர்யம். இதில் அனிருத்தின் பங்கு மிகவும் முக்கியம். பல இடங்களில் இசை படத்தை வேறு தளத்திற்கு இட்டுச் செல்கிறது. இது கொடுத்த காசுக்கு நட்டமில்லாத படம். – இந்தியா டுடே.
வழக்கமான பாட்சா கதை தான். ஆனால் பெரிய தாதா லியோதாஸ் இப்போது திருந்தி ஹிமாசலப் பிரதேசத்தில் பேக்கரி வைத்திருக்கும் குடும்பஸ்த்தர் பார்த்திபன் எனும் சஸ்பென்ஸை கடைசி வரையில் கொண்டு சென்றது இயக்குனரின் சாமர்த்தியம். நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், மிஸ்கின் போன்றவர்களிடம் நல்ல நடிப்பை வாங்கியது இயக்குனரின் புத்திசாலித்தனம். விஜய்யை மாஸ் ஹீரோவாக காட்டாமல், நடிகராக காட்டிய விதத்தில் இப்படம் வித்தியாசப்படுகிறது. அனிருத்தின் பின்னணி இசை இல்லையென்றால் இந்தப் படத்தை இந்தளவு ரசித்திருக்க முடியாது. பெரும் உழைப்பை போட்டிருக்கிறார் ராக் ஸ்டார். மடோனா சபாஸ்டியனின் பாத்திரம் சரியாக எழுதப்பட்டு, படம் முடிந்தபின்னும் மனதில் நிற்கிறது. மனோஜின் ஒளிப்பதிவில், குளிர்சாதனம் இல்லாத் திரையரங்குகளிலும் குளிர் எடுக்கும் அற்புத படிமங்கள்.- வலைப்பேச்சு.
சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜின் மோசமான படத்தில் விஜய். சொந்த திறமையை நம்பாமல், புகழ் போதையில் சிக்கியிருக்கிறார்ல் இயக்குனர். திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார் என்றாலும், விஜய்யின் மற்ற மாஸ் படங்களைப் போலல்லாமல் வித்தியாசமான நடிகர் விஜயை காட்டிய விதத்தில் பாராட்டு பெறுகிறார். பல முடிச்சுகளைப் போட்டு அதை நம்பும் விதமாக அவிழ்ப்பதில் லோகேஷ் கெட்டிக்காரர். இதிலும் கழுதைப் புலியை அடக்கும் ஆரம்பக் காட்சியுடன் நிற்காமல், பார்த்திபன் எனும் விஜய், வீட்டு நாயைப் போல மாற்றிய காட்டு விலங்கிற்கும், ஏற்றுக் கொள்ளக் கூடிய முடிவை க்ளைமேக்ஸில் தந்திருப்பது அவரது புத்திசாலித்தனம். தேவையற்று அவருடைய பழைய படங்களின் பாத்திரங்களை இதில் கோடிட்டிருப்பது அனாவசியமாகப் படுகிறது. இது லியோ பார்த்திபன் கதையாக மட்டும் இருந்தால் இன்னும் கூட சுவையாக இருந்திருக்கும். அனிருத்தின் தொப்பியில் இறகு. லோகேஷுக்கு சின்ன சறுக்கல்.– இண்டியன் எக்ஸ்பிரஸ்.
தீக்கங்கு போல நடித்திருக்கும் விஜய்யால் கூட லோகேஷின் லியோவை காப்பாற்ற முடியவில்லை. இந்தப் படம் இயக்குனரின் இன்னொரு சுவாரஸ்ய படமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் லோகீஷ் மீது ரசிகன் வைத்திருக்கும் நம்பிக்கை அடுத்த படம் வரை தாங்கும்.– தி ஹிண்டு.
நல்ல சுவாரஸ்யமான ஆக்ஷன் திரில்லருடன் ஒரு குடும்பக் கதையையும் இணைத்து சுவையான படமாக வந்திருக்கிறது லியோ – ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
எதிர்பார்க்காத திருப்பங்கள்; அதிரடி சண்டைக் காட்சிகள். தூவப்பட்ட நகைச்சுவை. கவன சிதற வைக்காத பின்னணி இசை. இவைதான் லியோவின் யூ எஸ் பி. அதை நன்றாக புரிந்து தங்க தட்டில் விஜய் எனும் கலைஞரை ரசிகனுக்கு காட்டியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ். மொத்தத்தில் அதிகம் எதிர்பார்க்காமல் போனால் ஏமாற்றமில்லை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
தனது முந்தைய படங்களில், போதைப் பொருட்களை மையப்படுத்திய கதையாகக் கொடுப்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வழக்கமாக இருந்தது. இந்தப் படத்திலும் அப்படித்தான் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்த்தால், அதை ஒரே ஒரு காட்சியுடன் நிறுத்தி விட்டு, ஒரு குடும்பச் சித்திரமாக மாற்றி இருக்கிறார். லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான ‘விக்ரம்’ படத்துடன் ஒப்பிடும் போது இதில் ‘ஸ்கிரிப்ட்’ன் வேகம், அழுத்தம் குறைவு. மொத்தத்தில் லியோ கொஞ்சம் யோ..நிறைய யோவ். – தினமலர்
கர்ஜனையாக ஆரம்பித்து முனகலாக முடிகிறது லியோ – சினிமா எக்ஸ்பிரஸ்.
அன்பெனும் ஆயுதம்’ என்ற மெலோடி அமைதியான நீரோடை என்றால், `நான் ரெடிதான் வரவா’ பாடல் அரங்கம் அதிரும் அடைமழை! பின்னணி இசையில் இரண்டு ஆங்கிலப் பாடல்கள், `பேட் ஆஸ் தீம்’ என ரியல் ராக்ஸ்டாராகப் பல காட்சிகளைக் காப்பாற்றி இருக்கிறார் அனிருத். `நான் ரெடிதான்’ பாடலில் தினேஷ் மாஸ்டரின் நடன வடிவமைப்பு சிறப்பு. பனிப்பிரதேசத்தின் குளிர்ச்சி,, புகையிலை தொழிற்சாலையின் வெக்கை என இருவேறு இடங்களைத் தனது ஒளியுணர்வால் சிறப்பாக வேறுபடுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. படத்தின் ஓர் அங்கமாகவே பயணிக்கும் சண்டைக் காட்சிகளைக் கதையின் முதுகெலும்பாகக் கருதி வடிவமைத்துள்ளார்கள் அன்பறிவு மாஸ்டர்கள். ஆனால் முதற்பாதியிலிருந்த இந்த முழுமையும் நிதானமும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். பிளாஷ்பேக் தொடங்கிப் பல இடங்களில் தள்ளாடுகிறது திரைக்கதை. நம்பத்தன்மையே இல்லாத ட்விஸ்ட்டுகள், தேவையற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதையின் சுவாரஸ்யத்தை மழுங்கடிக்கின்றன. அதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘லியோ’ கதாபாத்திரம் படத்திற்குச் சாதகமாக இல்லாமல், பாதகமாகக் காலை வாரியிருக்கிறது.- விகடன் இணைய இதழ்.
மார்கழி திங்கள்

எதிர்பார்க்காமல் போனால் சில இன்ப அதிர்வுகள் கொண்ட படமாக இது இருக்கும். பிரபல இயக்குனர் (பாரதிராஜா) மகனாக இருக்கும் சங்கடம் மனோஜ் பாரதிராஜாவுக்கு உண்டு. அதீத எதிர்பார்ப்புகளுடன் ரசிகன் படம் பார்க்க வருவான். ஆனாலும் ஒரு சுத்தமான காதல் கதையை கொடுத்த விதத்தில் மனோஜ் சோடை போகவில்லை. கவனமான எழுத்து இதன் பலம். கவிதாவின் ( ரக்ஷனா) மீது நமக்கு ஈர்ப்பை விதைக்க திரைக்கதை தவறவில்லை. ஆனாலும் இரண்டு மணி நேரத்திற்கு குறைவான நீளம் கொண்ட படம் சில சமயம் ஆமை வேகத்தில் போகிறதோ என்று தோன்றாமலில்லை. சிறிது நேரமே வந்தாலும் இயக்குனர் சுசீந்திரனின் பாத்திரம் ஆழமானது. அதே போல் இளையராஜாவின் இசை, பல வகைகளில் படத்தை முன்னெடுத்து செல்கிறது. மனத்தை அசைக்க வைக்கும் பழைய பாணி படம் இது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா
ரசவாத காதல் கதை பழைய தொழில் நுட்ப வித்தைகளால் கைவிடப் படுகிறது. கடைசி கால் பாக படத்தில் விழித்துக் கொள்கிறார் இயக்குனர் மனோஜ் பாரதி ராஜா. சில திருப்பங்களால் பதைபதைப்பை விதைக்கிறார். அதற்குள் படத்தின் விதி கை மீறி விடுகிறது. – நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
திண்டுக்கல் மாவட்டம் நெய்காரபட்டியில் தன் தாத்தாவுடன் (பாரதிராஜா) வாழ்ந்து வருகிறார் தாய், தந்தையை இழந்த கவிதா (ரக்ஷனா). பத்தாம் வகுப்பு படிக்கும் கவிதாவிற்கும், அவரின் சக வகுப்பு மாணவரான வினோத்திற்கும் (ஷியாம் செல்வம்), யார் முதல் மதிப்பெண் எடுப்பது என்ற போட்டி எழுகிறது. அது மோதலாக… அப்படியே காதலாகவும் மாறுகிறது. தன் மீது உயிரையே வைத்திருக்கும் தன் தாத்தாவிடம், வினோத் மீதான தன் காதலைப் பற்றிச் சொல்கிறார் கவிதா. ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவரான தாத்தா, தன் பேத்தியை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வினோத்திற்குத் திருமணம் செய்து வைக்கத் தயங்குகிறார். அதனால், காதலை முழுமனதாக ஏற்கவும் இல்லாமல், மறுக்கவும் இல்லாமல், காதலர்களுக்கு ஒரு நிபந்தனையை விதிக்கிறார். அந்த நிபந்தனை என்ன? அந்த நிபந்தனையாலும் காதலுக்கு எதிராக நிற்கும் ஆதிக்க சாதியினராலும் காதலர்களின் வாழ்க்கை என்னவாகிறது? என்பதைப் பேசுகிறது மனோஜ் பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’. அறிமுக நடிகர் ரக்ஷனா, தன் தேர்வை நியாயப்படுத்தியிருக்கிறார். சில காட்சிகளில் செயற்கைத்தனம் எட்டிப்பார்த்தாலும், அக்கதாபாத்திரத்திற்குத் தேவையான காதல், ஏமாற்றம், கோபம், இயலாமை ஆகியவற்றைக் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார். அறிமுக நடிகர் ஷியாம் செல்வம், சில காட்சிகளில் மட்டும் பாஸ் மார்க் வாங்குகிறார். தன் தளர்ந்த உடலாலும், குரலாலும் படத்திற்கு உயிரூட்டப் போராடியிருக்கும் பாரதிராஜா படத்திற்குப் பலம். அவரை இன்னும் ஆழமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஓரிரு வசனங்களை மட்டும் பேசி விட்டு, செட் பிராப்பர்ட்டி போலப் படம் முழுவதும் வந்து போகிறார் அப்புக்குட்டி. வில்லனாக தன்னைக் காட்டிக்கொள்ள ஒவ்வொரு காட்சியிலும் பெரும் முயற்சி செய்கிறார் இயக்குநர் சுசீந்திரன். ஆனால், குறைந்தபட்சம் ஒரு பிரதான கதாபாத்திரம் என்ற ரீதியில் கூட அக்கதாபாத்திரம் பார்வையாளர்கள் மனதில் நிற்கவில்லை. கவிதாவின் தோழியாக வரும் அறிமுக நடிகர் நக்ஷா, தன் கச்சிதமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார். சுசீந்திரனின் திரைக்கதையும், செல்லா செல்வத்தின் வசனங்களும் இறுதிக்காட்சியில் மட்டும் வாய் திறக்கிறது. கருப்பொருளுக்குத் தேவையான எதார்த்தமும் சுவாரஸ்யமும் நிறைந்த திரைக்கதையும், நேர்த்தியோடு ரசிக்கும்படியான திரையாக்கமும் இல்லாமல் போனதால், இந்த மார்கழி திங்கள் பிரகாசத்தைத் தராமல் டல் அடிக்கிறது. – விகடன் இணைய இதழ்
கூழாங்கல்

சோனி லிவ் தளத்தில் காணக்கிடைக்கிறது பல விருதுகளைப் பெற்ற இந்தப் படம்.
இணையாத சில காட்சிகள். ஆனால் படம் முழுவதையும் பார்த்த பின் அவை கதையோடு ஒத்துப் போவதை உணர முடிகிறது. குறைவான வசனங்களால் இயக்குனர் வினோத்ராஜ் சொல்ல வந்ததை பொட்டில் அறைகிறார். வசனமற்ற காட்சிகள், பாத்திரங்களுக்கு கடக்கும் முன்னரே பார்வையாளனை உணர்வில், நெகிழ்வில் மூழ்கடித்து விடுகிறது. எந்த கதை மாந்தருக்கு சோகம் பீடிக்கப்படுவதில்லை. ஆனாலும் படம் நெடுக கசியும் சோகம் நிரந்தரமாக தங்கி விடுகிறது. எந்த பிரச்சாரத் தொனியும் இல்லை. எந்த ஒரு துக்கத்திற்கும் தீர்வு சொல்லப்படவில்லை. இவர்கள் வாழ்வு இப்படித்தான் எனும் யதார்த்த தொனி படத்தின் பலம். திரைக்கதை மற்றும் காட்சியமைப்பில் நவீனம் இல்லை என்பது குறை என்றாலும் சில விஷயங்களை நவீனம் கெடுத்து விடும் எனும் உண்மையை உணர்ந்து இயங்கியிருக்கிறார் இயக்குனர். அதனால் முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரையை பதித்திருக்கிறார். – தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
பல படங்களில் எது குறைகிறது..அது பிரபல நட்சத்திரங்கள் நடித்த படமாக இருந்தாலும் என்பதை அழகாக புரிந்து வைத்திருக்கிறார் இயக்குனர் வினோத்ராஜ் தன் முதல் படத்தை இயக்கிய விதத்திலேயே புரிய வைத்து விடுகிறார். அதனால் கூழாங்கல் உணர்வு பூர்வமான அழுத்தமான படமாக வந்திருக்கிறது. – தி ஹிந்து.
எடுக்க வந்த கதைக்கு உண்மையாக இருந்திருக்கிறார் இயக்குனர் வினோத்ராஜ். அவரது உழைப்பு படம் நெடுக தெரிகிறது. அதுவே நயன் தாராவை ஆஸ்கர் வரை கொண்ட செல்ல தூண்டியிருக்கிறது. – இந்தியா டைம்ஸ்.

Why no posters for thiraikadambam? It looks bland.
LikeLike