இந்தக் கதை ஹிந்தியில் மமதா காலியா அவர்களால் எழுதப்பட்ட ‘பத்து கதைகள்’ என்ற கதைத் தொகுப்பிலிருந்து எடுத்து சுருக்கி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கதையின் ஓட்டம் ஏதும் தடைபடவில்லை.
டாக்ஸி சத்தம் கேட்டு அவர்கள்தான் என்று கமலிக்குத் தெரிந்து விட்டது. கமலியின் அண்ணா சந்துருவும், மனைவி சாந்தாவும் டாக்ஸிக்கு பணத்தைக் கொடுத்து விட்டு சாமான்களை இழுத்துக் கொண்டு வாசல் தரையில் தொப்பென்று போட்டார்கள். பிறகு தங்களது கைப்பையை எடுத்துக் கொண்டு மேலே வந்து ‘எப்படி இருக்கிறாய், சாமான்களை மேலே கொண்டு வருவதற்கு ஆள் இருக்கிறார் இல்லையா’ என்று கேட்டார்கள். கமலி தனது அறையைப் பார்த்துக் கொண்டாள். ‘ஆள் இல்லை, ஆனால் படிகள் மிகவும் அகலம்’. வீடு மேலும் கீழுமாய் இருக்கிறது. சந்துரு கீழே செல்ல முயன்றார். சாந்தா கமலியின் நெற்றியில் கைவைத்து ‘நீண்ட பயணம், தொலை தூரத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறோம், வழியில் பல கஷ்டங்கள் உண்டாயின, உன்னுடைய அண்ணா உதவி ஒன்றுமே செய்வதில்லை, வண்டியில் மற்றவர்களிடமிருந்து மாற்று இடம் கூட நான் தான் கேட்க வேண்டியிருந்தது’ என்று சொன்னாள். கமலி சிரித்துக் கொண்டாள். சந்துரு ஹோல்டாலை எடுத்துக் கொண்டு வந்தார். ‘அந்த பெரிய பெட்டியையும் யாரையும் தொடவிடாமல் மெது மெதுவாக மேலே கொண்டு வந்து விடுங்கள்’. சந்துரு கஷ்டப்பட்டுக் கொண்டே மறுபடியும் கீழே சென்றார். ‘இது ரயில்வே ஸ்டேஷனில் இருந்து எவ்வளவு தூரம் இருக்கிறது! டாக்ஸியில் வருவதற்கு 35 நிமிடம் ஆகிவிட்டது. ஏன் வீடு மாறினாய்?’ ‘பழைய வீட்டில் இருந்து பஸ்ஸில் ஆபீஸ் செல்வதற்கு எனக்கு 50 நிமிடங்கள் ஆகிறது.’ ‘நீ ட்ரெயினில் போகலாம் அல்லவா?’ ‘ஒரு தடவை கும்பலில் நான் ட்ரெயினிலிருந்து கீழே விழுந்து விட்டேன். அதனால் எனக்கு ட்ரெயினில் செல்வது வெறுப்பாகிவிட்டது. 30 வினாடிகள்தான் ஒரு ஸ்டேஷனில் வண்டி நிற்கும். அதற்குள் ஏறுவது கடினம்’. சந்துரு இதற்குள் பெரிய கருப்பு டிரங்கை எடுத்துக் கொண்டு மேலே வந்தார்.
கமலி வீடு மிகவும் பெரிது என்று நினைத்திருந்தாள். ஆனால் அண்ணாவுடைய சாமான்கள் வந்து வீட்டை நிறைத்து விட்டன. இப்போது அறையில் படுக்கையும் இரண்டு நாற்காலிகளும்தான் தென்படுகின்றன. ‘டீ கிடைக்குமா’ ‘ஆமாம் என்னிடம் காஸ் இருக்கிறது. ஒரு கெட்டிலும் இருக்கிறது’. ‘நீ எப்படி இங்கு வாழ்க்கை நடத்துகிறாய்? ஒரு வேலைக்காரி வைத்துக் கொள்ளலாமே’. கமலி பேசாமல் இருந்தாள். தனியான ஒரு பெண் வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதால் எத்தனை கஷ்டங்கள் என்று அவர்களுக்குச் சொல்வது கஷ்டமாக இருந்தது. வேலைக்காரர்களுடன் கமலிக்கு சீக்கிரமாகவே சண்டை ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் திருடர்கள் அல்லது பொய் பேசுபவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது எதிரில் இருக்கும் பங்களாவிலிருந்து ஒரு வேலையாள் வந்து கொஞ்சம் சாமான்களை தேய்த்துக் கொடுத்துவிட்டு அறையைப் பெருக்கி விட்டுச் செல்கிறான். இதற்கு மேலும் செய்வதற்கு அவனிடம் பலமில்லை. டாக்டர் கமலியின் நிலைமையைப் பார்த்து தானே மருந்து வாங்கிக் கொடுக்கிறார்.
சாந்தா தன்னுடைய பெரிய உடம்பை சமாளித்துக் கொண்டு எழுந்து சமையலறை சென்றாள். கமலி சந்துருவிடம் அன்றைய செய்தித்தாளைக் கொடுத்துவிட்டு கண்களை மூடிக் கொண்டாள். கமலிக்கு பேசக் கூட சக்தி இல்லை. சிறிது பேசினாலே மிகவும் களைத்து விடுகிறாள். இந்தக் களைப்பை திரும்பத்திரும்ப டாக்டரிடம் சொல்லி அவர்களையும் பயமுறுத்தியத்தில் கமலிக்கு கார்டியோகிராம் பண்ணும் அளவிற்கு சென்று விட்டது. ஆனால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. தான் கார்டியோகிராம் பண்ணுவதற்கு ஆஸ்பத்திரி செல்லும்போது மிகவும் களைத்து விட்டதால் அந்த ரிப்போர்ட் தவறாக இருக்குமோ என்று எண்ணம் கமலிக்குத் தோன்றியது.
சாந்தா அறையிலிருந்து குழப்பத்துடன் வெளியே வந்து ‘நான் எல்லாவற்றையும் தேடி விட்டேன், சர்க்கரை கிடைக்கவில்லை, டீ தூள் கிடைக்கவில்லை’ என்று சொன்னாள். ‘எல்லாம் கட்டிலுக்குக் கீழே இருக்கிறது’. ‘பாலுமா?’ ‘ஆமாம் அதனுடைய டப்பாவும் கீழே வைத்துள்ளேன்’. பிறகு சாந்தா ஒரு ட்ரேயில் எல்லாவற்றையும் கொண்டு வந்து ‘நீங்களே டீ செய்து கொள்ளுங்கள்’ என்று சொன்னாள். சந்துரு தன்னுடைய டீ நிரப்பிக் கொண்டார். ‘நான் இப்படிப் படுத்து விட்டது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அல்லவா? என்னுடைய உடம்பு மிகவும் துவண்டு விட்டது. இல்லாவிடில் நானே எழுந்திருப்பேன்’. ‘இல்லை இல்லை இது பிரயாணக் களைப்பு. இல்லாவிடில் இவள் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டாள்’ என்று அண்ணா சொன்னார். கமலியுடைய அலமாரியில் இருந்த எக்ஸ்ரே, இரத்தம், சிறுநீர் ரிப்போர்ட்களை அண்ணா கையில் எடுத்தார். ‘சிறுநீர் ரிப்போர்ட் தான் சரி இல்லை’. ‘சர்க்கரை இல்லை அல்லவா?’ ‘சர்க்கரை இல்லை, ஆனால் சீழ் இருக்கிறது. அது இருக்கட்டும். சமையல் அறையில் டபுள் ரொட்டி, வெண்ணை, ஜாம் இருக்கிறது நீங்கள் இருவரும் சாப்பிடுங்கள்’. ‘நான் சிறிய சமோசா கொண்டு வந்திருக்கிறேன், ஊறுகாய் இருந்தால் கொடு’ என்று சாந்தா சொல்லவும் ‘நான் ஊறுகாய் சாப்பிட்டு ஐந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன’ என்று கமலி சொன்னாள்.
அவர்கள் இருவரும் சமையல் செய்வதில் மிகவும் கஷ்டப்பட்டார்கள். கல்யாணம் ஆனதிலிருந்து மன்னி இப்படித்தான். இப்பொழுது அண்ணாவும் அவளை மாதிரி ஆகிவிட்டார். இருவரும் ஏதோ ஆபரேஷன் செய்வது போல் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்கள் தன்னை எப்படிப் பார்த்துக்கொள்வார்கள் என்று கமலிக்குப் புரியவில்லை. கமலிக்கு தன் மேலேயே கோபம் வந்தது. ஏதோ ஓர் உணர்ச்சிவேகத்தில் கமலி அண்ணாவிற்கு ‘உடம்பு சரியில்லை, தனிமையாக உணறுகிறேன்’ என்று கடிதம் எழுதி விட்டாள். அண்ணாவும் ‘இதுவரை இந்த வருடம் லீவு எடுக்காததால் நான் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டார்.
அண்ணா மறுநாள் மீதி ரிப்போர்ட்டையும் வாங்கி வந்தார். டாக்டர் மருந்துகள், ஊசிகள் எழுதிக் கொடுத்துவிட்டு ‘சிறுநீரகத்தில் இன்பெக்சன் இருக்கிறது, ஆப்ரேஷன் பண்ண வேண்டியத் தேவையில்லை, ஆனால் நீண்ட நாள் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும், நல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டும், இன்பெக்சன் சரியாக சரியாக ஜுரமும் குறைந்துவிடும்’ என்று கூறிவிட்டார். ‘99 ஒன்றும் ஜுரம் இல்லை என்று அண்ணா சொல்வார்கள், நாங்கள் இந்த ஜுரத்தில் கூட வீட்டில் சமைப்போம், துணிகளைத் துவைப்போம்’ என்று மன்னி சொன்னாள். மன்னிக்கு ஜுரம் வரும் என்று கமலியால் கற்பனைக் கூட பண்ண முடியவில்லை. எழுந்து கொள்ளும் போதெல்லாம் கமலிக்கு பூமி கீழே போகிற மாதிரி இருந்தது. ஜுரம் வந்தவுடனே நடப்பதைக்கூட எப்படி மறந்து விட்டோம் என்று ஆச்சரியமாக இருந்தது. சந்துரு காலையும் இரவும் சமையலறையில் தன் மனைவிக்கு உதவி செய்தார். அதற்குப் பிறகு என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. கமலி செய்தித்தாளைக் கொடுத்தால் அதை முகத்தால் மூடிக்கொண்டு தூங்கி விடுவார். சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும்தான் இத்தனை தூரம் வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இவர் ஆபீஸில் வேலை பார்த்திருப்பார் என்று கமலிக்கு நம்பிக்கை இல்லை!
ஒருநாள் அவர்களை வெளியே சென்று வருவதற்காக அனுப்பி விட்டாள். ஒன்றரை மணி நேரத்திலேயே அவர்கள் திரும்பி வந்து விட்டனர். அவர்கள் ஸ்டேஷனில் நாலாம் நம்பர் பஸ்ஸில் உட்கார்ந்து விட்டு அதிலேயே திரும்பி வந்து விட்டனர். ’யாரும் உன்னைப் பார்க்க வரவில்லையே? உன்னுடைய அண்ணா ஒரு நாள் லீவு எடுத்தாலும் ஆபீஸில் இருக்கும் அத்தனை பேரும் வந்து விடுவார்கள்’ என்று சாந்தா சொன்னாள். அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யாமல் வெளியே எப்படி செல்வது என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
கமலி ஜுரத்தில் படுத்தபொழுது ஆஃபீஸில் இருந்து ஐந்து பேர் வந்து பார்த்தார்கள். ஐந்து பேருக்கும் உட்காரக் கூட இடம் இல்லை. எல்லோரும் கல்யாணம் ஆனவர்கள், அதனால் கமலியுடைய கட்டிலுக்கு ஓரத்தில் உட்காருவதற்கு அவர்கள் விருப்பப்படவில்லை. கடைசியில் மேஜையில் இருக்கும் மருந்து பாட்டில்களை தள்ளிவிட்டு அங்கே இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டனர். அவர்கள் ஆபீஸில் இருந்து நேரே வந்தனர். அதனால் தங்களுடைய கைப்பை, குடை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு டீ தேவையாக இருந்தது. ஒருத்தர் எல்லோருக்கும் சமையல் அறையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார். அவர்கள் எல்லோரும் கமலியினுடைய வியாதியைப் பற்றி கேட்க வரவில்லை. ரேடியோவில் பாட்டு கேட்டனர். தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் அறையின் அழகைப் பற்றி பேசிக்கொண்டிருந்து விட்டுச் சென்று விட்டனர். தன் ஜூரத்தைப் பற்றி பேசுவது கமலிக்குப் பெரிதாகப்பட்டது. இந்த ஜுரம் எப்படி வந்தது, இதற்காக 155 ரூபாய் மருந்துக்கு, 125 ரூபாய் எக்ஸ்ரேக்காக செலவழித்திருக்கிறேன் என்று சொல்ல முற்பட்டாள்.
அண்ணாவினுடைய லீவு முடியும் தருணம். அவர் டாக்டரிடம் கமலி எப்போது சரியாக ஆவாள் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு கமலி சீக்கிரம் சரியாக வேண்டும் என்று கவலை ஏற்பட்டது. ‘எங்களுடன் அகமதாபாத் வந்துவிடு, உனக்கும் அங்கே வந்தால் ஒரு மாற்றம் இருக்கும்’ என்று சொன்னார். கமலிக்கு அத்தனை தூரம் பிரயாணம் செய்வதற்கு சக்தி இல்லை. நிஜத்தில் மன்னியுடன் மனம் ஒன்றுபடுமா என்று தெரியவில்லை. கல்யாணம் ஆகாத பெண்ணிற்கு எப்படி சிறுநீரகத்தில் இன்பெக்க்ஷன் வரும் என்று மன்னிக்கு ஒரு சந்தேகம் இருந்தது. கமலி தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்து ஒரு தடவை இதைப்பற்றி அண்ணாவிடம் பேசினாள். சந்துரு ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார். ‘இந்த மாதிரி நிலைமையில் நீ ஆஸ்பத்திரியில் இருப்பதுதான் நல்லது, முன்னமேயே ஆஸ்பத்திரி சென்றிருக்க வேண்டும், உன்னை இங்கே தடுப்பவர்களும் யாரும் இல்லையே?’ என்று சந்துரு சொன்னார். கமலியும் அப்போதைக்கு ஆமோதித்தாள்.
சந்துரு இந்த மாதிரி வேலைகளில் வல்லவர். மூன்று மணி நேரங்கள் அலைந்து திரிந்து மாலையில் வியர்வை வழிய வீட்டிற்கு வந்தார். சாந்தாவும் அவருடைய வெற்றியை ஊகித்து சந்தோஷத்துடன் அவருக்காக டீ செய்ய சமயலறை சென்றாள். கமலி சில துணிகளை எடுத்து ஒரு பெட்டியில் வைத்தாள். கமலியுடைய ஆஸ்பத்திரி சம்பந்தமான மற்ற எல்லா காகிதங்களையும் சந்துரு சேகரித்தார்.
‘நீ எனக்காக எத்தனை செலவழித்து இருக்கிறாய்’ என்று கமலி சந்துருவிடம் கேட்டாள். சந்துரு தன்னுடைய பர்சிலிருந்து எல்லாவற்றையும் தேடி ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அதில் கமலிக்காக இங்கும் அங்கும் அலைந்த செலவும், வாங்கி வந்த பழங்களின் செலவும் எழுதப்பட்டிருந்தது. ‘என்னிடம் பணம் கொஞ்சம் இருக்கிறது, அது எனக்குத் தேவைப்படும், நீங்கள் செக் வாங்கிக் கொள்வீர்களா?’ என்று கேட்டவுடன் சாந்தா தலை ஆட்டிக் கொண்டே ‘ஆம் ஆம் பேங்கில் அக்கவுண்ட் இருக்கிறது’ என்று உடனே சொன்னாள். கமலி ஒரு செக் சந்தருவிற்குத் தந்தாள். மற்றொரு செக் ஆஸ்பத்திரிக்கு எழுதி பர்சில் வைத்துக் கொண்டே வீட்டிற்கு செல்வதற்காக டாக்ஸியை எதிர் நோக்கிக் காத்திருந்தாள்!
