“ப்ரும்ம ஸ்வரூப உதயே, மத்யாஹ்னேது சதா சிவ: அஸ்த காலே ஸ்வயம் விஷ்ணோ, த்ரயீ மூர்த்தி திவாகர:” (உதிக்கையில் பிரும்மனாகவும், மதியத்தில் சதா சிவனாகவும், அந்தி மாலையில் விஷ்ணுவாகவும் முத்தெய்வங்களாக இருப்பவர் சூரியன்.)
அம்மாவுடன் சேர்ந்து பவானியும், சஞ்சையும் ஆதித்ய ஹ்ருதய துதியைச் சொன்னார்கள். பின்னர் அவர்களின் அப்பாவும் சேர்ந்து கொண்டு பத்து சூர்ய நமஸ்காரம் செய்தார்கள்.
“இன்றக்குத்தானே நிகார் ஷாஜி (Nigar Shaji) வருகிறார்கள்?”
‘ஆமாம், ஆன்டி, முப்பது பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டுமான சிறு அரங்கில் ஆதித்யா எல் 1ஐப் (Aditya L1) பற்றி சிறு கூட்டம். என்றான் உள்ளே வந்து கொண்டிருந்த சரவணன்.
“அம்மா, எங்களுக்கெல்லாம், ப்ரேக்பஸ்ட், லஞ்ச் எல்லாமே அந்த அரங்கத்தில்” என்றான் சஞ்சய். சொல்லிக் கொண்டு மூவரும் கிளம்பிச் சென்றார்கள்.
“அந்த மேடம், ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர், செங்கோட்டையச் சேந்தவங்க.”
‘சென்ற வாரம் குவிகம் நிகழ்ச்சில ஆவுடையக்கான்னு ஒரு ஆன்மீகக் கவிஞர் பத்தி பாஸ்கர் என்பவர் பேசினார்ன்னு எங்கம்மா சொன்னாங்க. அவங்களும் செங்கோட்டயச் சேர்ந்தவங்க’
“இப்ப வராங்களே, அவங்க ஸ்பேஸ் சைன்டிஸ்ட். பத்தாவதுல மாவட்டத்துல முதலாகவும், 12 வதுல பள்ளில முதலாகவும் வந்திருக்காங்க திருநெல்வேலில மின்னணுவியல் மற்றும் தொடர்புத் துறைல பட்டதாரி. (Electronics and Communication Engineering) பின்னாடி, மீஸ்ரா, (Mesra) ராஞ்சில இருக்கற பிர்லா தொழில் நுட்பக் கல்லூரில மேற்படிப்பு.”
‘ஒண்ணு தெரியுமா? அவங்க அப்ளை பண்ண ஒரே வேல இஸ்ரோல (ISRO)மட்டும் தானாம். அங்கே நல்ல பணி செஞ்சு இன்னிக்கி ப்ராஜெக்ட் டைரக்டரா வந்திருக்காங்க.’
அவர்கள் மூவரும் அரங்கத்தை அடைந்து விட்டனர். அரங்கத்தின் சுவர்களை நமது பால் வீதியும், விண்மீன்களும், கோள்களும் அலங்கரித்தன. சந்த்ரயான் 2 மற்றும் 3, மங்கள் யான், அவைகளின் லேண்டர், ரோவர், ஏவுகணை இவற்றின் குறு வடிவ மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. முப்பது மாணவ, மாணவியரும் வாயைப் பிளந்து கொண்டு தமக்குள்ளே கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டனர். அரங்கத்தை ஒட்டிய சிறு வளாகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது- இரண்டு கேழ்வரகு தோசை, சிறு தானிய வடைகள், எலுமிச்சை இரசம் சேர்த்த கருப்பஞ்சாறு. பவானி, சந்தடியில்லாமல், ஒரு தோசையை சரூவிற்குக் கொடுத்தாள். சஞ்சய் தானாகவே அவளிடமிருந்து அரைக்ளாஸ் ஜூஸ் எடுத்துக் கொண்டான்.
மீண்டும் அரங்கத்தில் நுழைந்தவுடன் காணொளிக் காட்சியில் இஸ்ரோவின் தொடக்கம், மற்றும் அதன் வெற்றிகள், தோல்விகள் ஆவணப் படமாகக் காட்டப்பட்டது.
அது முடிந்தவுடன் ஷாஜி மேம் மேடைக்கு வந்தார்.
“இங்கே நான் மட்டுமே பேசப் போவதில்லை. நான் சில கேள்விகள் கேட்பேன், சரியோ, தவறோ நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.”
‘ஓ கே, மேம்’ என்றார்கள் முப்பது பேரும்
“ஆதித்யா எதைக் குறிக்கிறது?”
‘சூரியனை’
“அப்போ, எல் 1 என்பது?”
‘அது லாக்ரேஞ்ச்’ (Lagrange)
“லாக்ரேஞ்சுனா?”
பவானி எழுந்தாள் ‘மேம். அது பூமிக்கும், சூரியனுக்குமான ஒரு அமைப்பு போல. அதாவது, விண்வெளில, சூரியன் மற்றும் பூமி இவை இரண்டின் ஈர்ப்பு சக்தி சம நிலைல இருக்கற ஒரு இடம்.’
“குட், எதுக்கு அப்படி ஒரு இடம் வேணும்?”
‘அப்பத்தான் எந்தக் கருவிய அங்க வச்சு நாம் சூரியன ஆராஞ்சாலும், அதிகமா நடுங்காம, நெலச்சுப் பாக்க முடியும்.’
“குட், அதென்ன 1? வெறும் எல் (L) மட்டுமே சொன்னா போதாதா?”
‘சூரியனுக்கு நேர் எதித்தாப்ல ஈர்ப்பு விச சமமா இருக்கற ஒரு பரப்பு அது. அதனால 1’ என்றான் சஞ்சய்.
“குட் ஆன்சர். அப்போ, எல் 2 உண்டா?”
‘ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப்’ இந்த எல் 2ல இருக்கு.’ என்றாள் பவானி
“பரவாயில்லையே. நெறயத் தெரியுது உங்களுக்கெல்லாம். ஆமா, இந்த ஆதித்யா மிஷன் எதுக்காக?”
‘சூரியன ஆய்வு செய்வதற்காக’ என்றான் ஒரு மாணவன்.
“இன்னும் தெளிவாக யாராவது சொல்கிறீர்களா?”
‘இந்தப் பூமி இருக்கறதே சூர்யனாலத்தான். ஆனா, அதப் பத்தி நாம அதிகமா தெரிஞ்சிக்கல. நம்ம பால் வீதில இருக்கற சூர்யனப் போல பல விண்வெளி மண்டலங்கள்ல பல சூரியர்கள் இருக்காங்க.’
“சரி”
‘நம்ம ஆதித்யா, சூரியனின் கரோனாவில உண்டாகிற வெப்பத்தை, அதுல நடக்கற எரிப்புகளை, வளி மற்றும் நிற மண்டலத்தை, ஒளி வட்ட நிறை வெளியேற்றத்தைக் கவனிக்கும்.’
“அதை நம்ம மிஷன் எப்படிச் செய்யுது?”
‘ஹை எனர்ஜி ஆர்பிடிங் எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீடர்ன்னு (High Energy Orbiting X- ray Spectrometer) ஒரு கருவி. சிம்பிளா ஹிலியாஸ்ன்னு (HELIOS) சொல்லாறங்க. அது ரொம்ப முக்கியமான ஒண்ணு.,
“ப்ரில்லியன்ட். அதப் பத்தி சமீபத்திய செய்தி தெரியுமா?”
‘யெஸ், மேம். உந்து சக்தின்னு சொல்றதா, தூண்டுதல்ன்னு சொல்றதான்னு எனக்குத் தெரியல. அந்த விசையால சூரியன்ல நடக்கற நெருப்பு வீச்சுக்கள (Solar Flares) ஹிலியாஸ் காட்டியிருக்கு பெங்களுருல உள்ள யு ஆர் ராவ் சென்டர் தன்னோட முதல் கவனிப்புல அக்டோபர் 29ம் தேதி இந்த ஸ்பெக்ட்ரோமீட்டர் எடுத்துள்ள படங்கள் மூலமா, சூரியன்ல நடக்கற ஃப்ளேர்ஸ வெளியிட்டிருக்கு.’
“அருமை. இது நேஷனல் ஓஷியானிக், அட்மாஸ்பியரிக், அட்மினிஸ்ட்ரேஷன் (National Oceanic and Atmospheric Administration) முன்னர் காட்டிய ஒளி வளைவுகளோட (Light Curves) ஒத்து இருப்பது நமக்கான வெற்றி.”
“சரி, நாம எப்போ ஆதித்யாவ விண்ணிற்கு அனுப்பினோம்?”
‘செப்டம்பர் 2,2023 அன்று.
“அது எத்தன கி மீ போயிருக்கு?”
‘1.5 மில்லியன் கி மீ மேம்.’
“பர்ஃபெக்ட். இப்ப என்னப் பத்திச் சொல்றேன். எங்கப்பா ஷேக் மீரான் ஒரு கணித ஆசிரியர். நாங்க நான்கு பிள்ளைங்க. அம்மா சைதூன் பீவி. நாங்க எல்லோரும் நல்லா படிச்சு நல்ல நெலமைக்கு வரணும்னு எங்க பெற்றோர்கள் பாடுபட்டாங்க. அம்மா, எந்த நெலையிலும் எங்கள விட்டுக் கொடுத்ததில்ல. அப்பா, எனக்காக சில நேரங்கள்ல வீட்டுப் பாடமெல்லாம் எழுதிக் கொடுத்திருங்காங்க; ஆனா, எப்போதும் இல்ல. எனக்கு சோர்வா இருக்கற போது தான்.
இந்த சூர்ய ஆய்வுத் திட்டத்த நாங்க சிக்கனப் பொறியியல், புதுமை, துல்லியத் திட்டமிடல் மூலமா சாதிச்சிருக்கோம். இதுல பல வெளி நிறுவனங்களும் பங்கேற்றன. சின்ன உதிரி பாகங்கள், சோதனை ஓட்டங்கள், கம்ப்யூடர் சிமேலேஷன் மூலம் தவறுகளத் திருத்தற குழு, அவ்வளவு ஏன், டீ, காஃபி கொடுத்தவங்க உட்பட அனைவருக்கும் சிறந்த பங்கிருக்கு.”
‘இப்ப என்ன திட்டம், மேம்?’
“விண்வெளில இணைப்புச் செயல்பாடுகள்,(SPADEX- Space Docking) சந்திரனில் எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு வருதல், (Lunar Materials) கோள்களுக்கிடையேயான பல்வேறு ஆய்வுகள், (Inter Planetary Mission) இப்படி எத்தனை எத்தனையோ நடந்து வர்றது.”
‘மேம், எனக்கொரு சந்தேகம். நாம உரையாட ஆரம்பிச்ச போது பூமி, சூரியனுக்கிடையேயான ஈர்ப்பு சம நிலைப் பகுதியைப் பற்றிப் பேசினோம். சந்திரனின் விசை?’ என்றான் சரூ.
“நல்ல கேள்வி, மை டியர். சந்திரனின் ஈர்ப்பு விசையைத் தாண்டித்தான் லாக்ரேஞ்சசை நோக்கி ஆதித்யா பயணம் செய்தது. அதுவும் நம்ம திட்டப்படி நடந்தது. நாம பூமிச் சுற்றைத் தாண்டி1.5 மில்லியன் கி மீ பயணித்து விட்டோமே?”
அனைவருக்கும் லஞ்ச் தயாராக இருக்கிறது என்று அறிவிப்பு வந்தது. கதம்ப சாம்பார் சாதம், முளைக் கீரை கூட்டு, பொரித்த அப்பளம், கொத்தமல்லி சாதம், பழப் பச்சடி, சிறு திராட்சைகள் இட்ட தயிர் சாதம் இவற்றையெல்லாம் நம் சரூ ஒரு கை பார்த்தான் என்று சொல்லவும் வேண்டுமா, என்ன?
