*பகுதி 3*


*திருமழிசை ஆழ்வார்*
அடுத்து நாம் பார்க்க இருக்கும் ஆழ்வார் திருமழிசை ஆழ்வார். இவர் முதலாழ்வார்களின் சமகாலத்தவர் என்று சொல்லப்படுகிறது. இந்த நான்கு ஆழ்வார்களும் சந்தித்து அளவளாவியதாக பதிவு உள்ளது.
சென்னையை அடுத்த திருமழிசையில் ஒரு முனிவருக்கு குமாரராக அவதரித்தவர். இவர் பிறக்கும்பொழுது ஒரு பிண்டமாக மட்டுமே இருந்தவர். அவரை ஒரு மூங்கில் புதரில் போட்டுவிட்டு, அவரைப் பெற்ற முனிவரும் அவர் துணைவியும் சென்று விட்ட னர். பிறகு அந்த குழந்தைக்கு பெருமாள் அனுக்கிரகப்படி கை, கால்கள் முளைத்தன. திருமகளான பிராட்டியார் உயிர் தந்து, ஞானப்பால் ஊட்டினாள். ( திருஞானசம்பந்தருக்கு உமையவள் ஞானப்பால் ஊட்டிய மாதிரியே. )
அக்குழந்தையை மூங்கில் பிரம்பு விற்கும் தொழிலாளி ஒருவன் தன் குழந்தையாக பாவித்து வளர்த்து வந்தான்.
சிறுவயதில் இருந்து சிறந்த அறிவையும் ஞானத்தையும் ஒருங்கே கொண்டு வளர்ந்து வந்தார் *பக்திசாரர்* என்ற அந்த *திருமழிசைப் பிரான்* .
அந்த குழந்தை வளர்ந்து, திருமழிசை ஆழ்வார் ஆன வரலாற்றை இங்கே விவரிப்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல என்பதால் கடந்து செல்கிறேன்.
திருமழிசை ஆழ்வாரின் *நான்முகன் திருவந்தாதி* மற்றும் *திருச்சந்தவிருத்தம்* ஆகிய இரண்டும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெறும் அருளிச்செயல்கள்.
*நான்முகன்* என்பது பிரம்மனை குறிக்கும். திருமாலின் பெருமையை எடுத்துச் சொல்லும் நூலான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பிரம்மனின் பெயருடன் ஓர் அருளிச்செயல் அமைவது சற்று வித்தியாசமாகப்படலாம்.
ஆனால் அந்த அருளிச்செயல் பிரம்மனை பற்றியது அல்ல.. அதில் உள்ள முதல் பாடல் *நான்முகனை நாராயணன் படைத்தான்* என துவங்குகிறது.. பிறகு முழுவதும் நாராயணனின் பிரபாவமே ..
நான்முகன் என்ற முதல் சொல்லோடு ஆரம்பிக்கும் அந்தாதி என்பதால் இதற்கு நான்முகன் திருவந்தாதி என்ற பெயர் அமைந்தது.
*நான்முகன் திருவந்தாதி* யில் இருந்து எந்த பாசுரம் கண்ணதாசனின் எந்த பாடலை எனக்கு நினைவு படுத்தியது என்பதை *பெரியாழ்வார் பற்றிய அடுத்த கட்டுரையில் சேர்த்து தருகிறேன்* .
இப்போது நான் எடுத்துக் கொள்ள இருப்பது *திருச்சந்தவிருத்தம்* .
சந்தம் என்றால் ஓசை நயம் என்று பொருள். ஓசையின் வண்ணம் அல்லது ஓசையின் அழகு என்பதாகவும் கொள்ளலாம். ஆங்கிலத்தில் சந்தம் என்பதை
Prosody, rhythm என்று சொல்லலாம். ஒரு தாள வாத்தியத்தை தட்டும்போது எழும்பும் சீரான ஒலியைப்போல, ஒரு தாளக்கட்டுடன் சந்தம் அமைந்த பாடலானது சீராகச் செல்லும்.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பொறுத்தவரை அடியேன் LKG வகுப்பில்தான் இருக்கிறேன்.
நான் அறிந்தவரை, புரிவதற்கு மிகவும் சிரமமாக உள்ள கடினமான பாசுரங்கள் உள்ள அருளிச்செயல் திருச்சந்தவிருத்தம் தான். நிறைய பாசுரங்கள் எண்ணலங்காரமாக ( எண்ணிக்கை விளையாட்டு என கொள்ளலாம் ) அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பு.
பெரிய வாச்சான் பிள்ளை, அண்ணங்கராச்சாரியார் போன்ற
உரையாசிரியர்கள் உரை இல்லாமல் இவற்றை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் என்பதைத்தாண்டி, முடியவே முடியாது என்பது அடியேன் எண்ணம்.
ஆனால் திருச்சந்தவிருத்தத்தில் உள்ள ஓசை நயம், நம்மை தாளம் போட வைக்கும் என்பதில் ஐயமில்லை.
உதாரணத்திற்கு ஒன்று மட்டும், விளக்கத்துடன் இங்கே தருகிறேன்.
*பூநிலாய ஐந்துமாய்*
*புனற்கண் நின்ற நான்குமாய்*
*தீநிலாய மூன்றுமாய்ச்*
*சிறந்த கால் இரண்டுமாய்*
*மீநிலாயது ஒன்றுமாகி* *வேறுவேறு தன்மையாய்*
*நீநிலாய வண்ண*
*நின்னை யார் நினைக்க வல்லரே?*
இப்பாசுரத்தில், பஞ்சபூதங்களையும் ( five elements – நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) அவற்றோடான ஐங்குணங்களின் தொடர்பையும் மிக அழகாக சொல்கிறார் ஆழ்வார்.
ஐங்குணங்கள் என்பது ஐம்புலன்களால் அறியக்கூடியவைகள் :
காதால் கேட்கக்கூடிய *ஓசை* , மெய்யால் ( உடம்பால்) உணரக்கூடிய *தொடுகை* , கண்ணால் பார்க்கக்கூடிய *உருவம்* ,
வாயால் ருசிக்க கூடிய *சுவை* , மற்றும்
மூக்கால் நுகரக்கூடிய *மணம்* .
பாசுரத்தில் உள்ள
பூ என்பது பூமியையும் (நிலம்),
புனல் என்பது நீரையும் (ஏரி, ஆறு, கடல்..),
தீ என்பது நெருப்பையும்,
கால் என்பது காற்றையும்,
மீ என்பது ஆகாயத்தையும் குறிப்பன.
நிலாய என்றால் “நிலவியிருப்பது அல்லது தங்கியிருப்பது”
பூநிலாய ஐந்துமாய் —
பூமியின் *ஓசை, தொடுகை, உருவம், சுவை, மணம்* என்ற 5 குணங்களாகவும்
புனர்க்கண் நின்ற நான்குமாய் — நீருக்குரிய
ஓசை, தொடுகை, உருவம், சுவை என்ற 4 குணங்களாகவும் (பொதுவாக நீருக்கு மணம் கிடையாது. Pure water is odourless)
தீநிலாய மூன்றுமாய் — நெருப்புக்குரிய ஓசை, தொடுகை, உருவம் (சுவை, மணம் இல்லை) என்ற 3 குணங்களாகவும்
சிறந்த கால் இரண்டுமாய் — காற்றின் ஓசை, தொடுகை என்ற 2 குணங்களாகவும் (உருவம், சுவை, மணம் இல்லை)
மீநிலாயது ஒன்றுமாகி — (அண்டவெளி ஆகிய) ஆகாயத்தின் ஒலி என்கிற ஒரே குணமாகவும் (உருவம், சுவை, மணம் இல்லாததோடு, அண்டவெளியைத் தொடுகையாலும் உணர இயலாது)
வேறு வேறு தன்மையாய் — ஒவ்வொன்றிலும் வேறு வேறான தன்மைகளோடு
(உதாரணத்திற்கு, ‘தொடுகை’ என்பது காற்றில் மெல்லிய வருடலாகவும், நெருப்பில் அனலாகவும், நீரில் குளிர்ச்சியாகவும், திடமான நிலத்தில் கடினமாகவும் விளங்குகின்றது )
நீநிலாய வண்ண நின்னை — நீ நின்று நிலவியிருக்கும் வகையையும், உன்னையும்
யார் நினைக்க வல்லரே? — எவர் தான் சிந்தித்து அறிய, விவரிக்க இயலும்? (அது எவர்க்கும் மிகக்கடினமே!)
இதைப் போன்று எண்ணிக்கை விளையாட்டு உள்ளடக்கிய பாசுரங்கள் மேலும் இருக்கின்றன. சிலவற்றை ஆடியோ பதிவில் கூறுகிறேன்.
திருமழிசை ஆழ்வாரின் *எண்ணிக்கை* ஈடுபாடு , நமது *கவிஞர் கண்ணதாசனை* எவ்விதம் தொற்றிக் கொண்டது என்பதை இப்போது பார்ப்போம்.
இதில் ஆழ்வாரின் எந்த பாசுரத்தின் பொருளை மனதில் கொண்டு அந்தத் தாக்கத்தில் விளைந்த கவிஞரின் பாடல் எது என்பதாக பார்க்கப்போவதில்லை.
திருச்சந்த விருத்தத்தில் உள்ள எண்ணலங்கார பாசுரங்களின் தாக்கம் கண்ணதாசனின் பாடல்களில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை பார்க்கப் போகிறோம் .
எண்ணத்திற்கு எட்டாத இறைவனின் புகழை எண்களுக்குள் அடக்கிய கண்ணதாசனின் , காலத்தால் அழியாத ஒரு பாடல் –
*திருவிளையாடல்* படத்தில் .
மாமா கேவி மகாதேவன் இசையமைத்து, வெண்கல குரலில் கே பி சுந்தராம்பாள் பாடி, பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த கவிஞரின் பாடல் :
*ஒன்றானவன்*
*உருவில் இரண்டானவன்* ( அர்த்தநாரீ)
*உருவான செந்தமிழில் மூன்றானவன்*
( இயல், இசை, நாடகம்)
*நன்றான வேதத்தில் நான்கானவன்*
( ரிக், யஜுர், சாம, அதர்வண)
*நமசிவாய என ஐந்தானவன்*
( ஐந்தெழுத்து)
*இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்*
( இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு-உப்பு, கார்ப்பு-காரம்)
*இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்*
( ச ரி க ம ப த நி )
*சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்*
( அஷ்டமாசித்தி)
*தித்திக்கும் நவரச வித்தானவன்*
(நவரசங்கள்)
*பத்தானவன்* – நெஞ்சில் பற்றானவன்
*பன்னிரு* கை வேலவனைப் பெற்றானவன்
முற்றானவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
..
..
இதில் 10 க்குப்பிறகு 12 க்கு கவிஞர் சென்று விட்டாரே என்று 11 ஐ தேடுபவர்களுக்கு, கவிஞரே பதில் சொல்லிவிட்டார் – இறைவன் *முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்* என்று – அதாவது 10 க்கும் 12 க்கும் நடுவான 11 அதில் அடக்கம் என்று.
எண்ணலங்காரம் உள்ள கண்ணதாசனின் வேறு பல பாடல்களும் உள்ளன. அவற்றுள் சிலவற்றை என் ஆடியோ பதிவில் தருகிறேன்.
அடுத்த ஆழ்வாருடன் கைகோர்க்கச் செல்லும் கண்ணதாசனோடு சேர அடுத்த பகுதிக்கு செல்வோம்.
*பகுதி 4*
*பெரியாழ்வார்*
ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனம் ஒன்றை அமைத்து , வில்லிபுத்தூர் பெருமாள் வடபத்ர சாயிக்கு திருத்துழாய் மாலைகளும் நறுமண மலர் மாலைகளும் அணிவித்து கைங்கரியம் செய்து வந்தார் விஷ்ணு சித்தர். அந்த துளசி வனத்தில் அவர் கண்டெடுத்து வளர்த்த பெண் குழந்தை தான் கோதை நாச்சியார் என்ற ஆண்டாள்.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பகுதியாக இருக்கும் பெரியாழ்வாரின் அருளிச்செயல்கள், *திருப்பல்லாண்டு* மற்றும் *பெரியாழ்வார் திருமொழி* .
திருப்பல்லாண்டையும் உள்ளடக்கியதுதான் பெரியாழ்வார் திருமொழி என்று சொல்பவர்களும் உண்டு. அந்த விவாதம் இப்போது முக்கியமல்ல.
அவ்வளவு ஆழ்வார்கள் இருக்க விஷ்ணு சித்தருக்கு மட்டும் ஏன் பெரியாழ்வார் என்ற பட்டம்?
அதற்கு பல காரணங்கள்.
1. பூமி தேவியின் அம்சமான ஆண்டாள் என்ற கோதை நாச்சியாரின் வளர்ப்பு தந்தை விஷ்ணு சித்தர். ஆண்டாளை, பெற்ற மகளாகவே கடைசிவரை *பா* வித்தவர். பூமிபிராட்டிக்கு தந்தை என்கிற பெருமையால் இவர் “பெரியாழ்வார்” என சொல்லலாம்.
2. தன் மகளான கோதை நாச்சியாரை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஆனார். பெருமாளுக்கே மாமனார் என்பதால் பெரியாழ்வார் என்ற சிறப்புப் பெயர் என்று கொள்ளலாம்.
3. பெருமாளுக்கு யார் கண்ணாவது பட்டு விடுமோ என பயந்து திருஷ்டி கழிக்கும் முகமாக, எம்பெருமான் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் வாழ பாசுரம் புனைந்தவர்.
ஆக, அன்பிலும், அபிமானத்திலும் பெரியவனானதால், ‘‘பெரியாழ்வார்” என்று பெயர் பெற்றார் என்று கூறலாம். ( பிரபந்தத்தில் உள்ள 4000 பாசுரங்களின் முகப்பாக , முதலில் பாடப்படுவது பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு தான். )
4. இவை ஒரு புறம் இருக்க, தனது *உபதேச ரத்தினமாலை* என்ற நூலில் வைணவ ஆச்சாரியார் *மணவாள மாமுனிகள்* , பெரியாழ்வாரின் பெயர் காரணத்தை தெளிவாக எடுத்துச் சொல்கிறார் :
*மங்களாசாசனத்தில்*
*மற்றுள்ள ஆழ்வார்கள்*
*தங்கள் ஆர்வத்தளவு* *தானன்றி* –
*பொங்கும் பரிவாலே* *வில்லிபுத்தூர் பட்டர்பிரான்* *பெற்றான்*
*பெரியாழ்வார் என்னும் பெயர்*
விளக்கம் :
*மங்களாசாசனம்* என்பது வைணவ மரபுச் சொல்.. எம்பெருமானையும் அவன் உறையும் திவ்ய தேசத்தையும் வாழ்த்தி, போற்றி பாடுவதையே அந்த சொல் குறிக்கிறது.
எம்பெருமானிடம் மற்றுள்ள ஆழ்வார்களை மிஞ்சும் அளவுக்கு ப்ரீதி ( வாஞ்சை / பரிவு ) கொண்டிருந்ததாலே, “பெரியாழ்வார்” என்கிற திருநாமத்தைப் பெற்றார்.
அப்படி என்ன வாஞ்சை என்றால், தன்னை யசோதையாக பாவித்து ஒரு தாய் ஸ்தானத்தில் முன்னிறுத்தி கண்ணன் அவதார சிறப்பு, அவனது பல குறும்புகள், சிறுவயது விளையாட்டுக்கள், அவனை பாலூட்டி , சீராட்டி , தாலாட்டி வளர்த்தது என்று மிகுந்த அன்புடனும், பரிவுடனும் அவர் எழுதிய பாசுரங்களை படித்தவர்கள் நெகிழாமல் இருக்க முடியாது.
தனிப்பட்ட முறையில், என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஆழ்வார் என்று சொன்னால் அது பெரியாழ்வார் தான். அவரது பல பாசுரங்களில் என் மனதை பறிகொடுத்துள்ளேன். அவற்றுள் சிலவற்றை எடுத்துக் கொண்டு விரிவான கட்டுரைகளையும் எழுதி பகிர்ந்திருக்கிறேன்.
சரி, பெரியாழ்வாரின் ஒரு பாசுரத்தை பார்ப்போம். அது கண்ணதாசனின் எந்த பாடலில் பிரதிபலிக்கிறது என்பதையும் பார்ப்போம். இங்கே பிரதிபலிப்பு என்பது முழு பாசுரமும் திரைப்பாடலாக உருவெடுத்தது என்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏதேனும் ஒரு சொற்றொடரோ, பாசுரக் கருத்தோ , ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அந்த தூண்டுதலில் வேறு பாடலில் ஒரு பல்லவியாகவோ சரணமாகவோ உருப்பெறும்.
பெரியாழ்வார் திருமொழியில் ஒரு பாசுரம்:
*பொன்னைக்கொண்டு* *உரைகல்மீதே நிறமெழ* *உரைத்தாற்போல்*
*உன்னைக்கொண்டு என்* *நாவகம்பால் மாற்றின்றி* *உரைத்துக் கொண்டேன்*
*உன்னைக் கொண்டு என்னுள்* *வைத்தேன்*
*என்னையும் உன்னில்* *இட்டேன்*
*என்னப்பா என் இருடீகேசா* *என்னுயிர்க் காவலனே* .
தங்கத்தை அதன் நிறம் ( தரம் ) அறிவதற்காக உரைகல் மேல் உரைப்பது போல உன்னை என் நாக்கின் உள்ளே ( நா அகம் பால்) உரைத்துக் கொண்டேன். உன்னை எனக்குள் வைத்தேன் என்னையும் உனக்குள் இட்டேன்,
என்கிறார் ஆழ்வார்.
இந்த பாசுரத்திற்கான விரிவான உரை மிகவும் ருசிகரமானது. அதை தனி கட்டுரையாக இன்னொரு சமயம் பகிர்கிறேன். இப்பொழுது நான் எடுத்துக்கொண்டுள்ள வரிகள் :
*உன்னைக் கொண்டு என்னுள்* *வைத்தேன்*
*என்னையும் உன்னில்* *இட்டேன்*
இது அப்படியே இருக்கட்டும்.
இதற்கு முந்தைய பகுதியில் *திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதி* யிலிருந்து ஒரு பாசுரம் பற்றிய குறிப்பை, பெரியாழ்வார் பற்றிய கட்டுரையில் குறிப்பிடுவதாக சொல்லியிருந்தேன். அதை ஞாபகம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஷொட்டு.
அந்த பாசுரம் :
*இன்றாக நாளையேயாக* *இனிச்சிறிதும் நின்றாக*
*நின்னருள் என் பாலதே* – *நன்றாக*
*நான் உன்னை அன்றி இலேன்* *கண்டாய், நாரணனே*
*நீ என்னை அன்றி இலை*
நாராயணனே, உனது அருளானது எனக்கு இன்று கிடைக்கட்டும், அல்லது நாளை கிடைக்கட்டும், இல்லை இன்னும் கொஞ்சம் காலமாகட்டும் – அதனால் பரவாயில்லை .
உன் அருள் கண்டிப்பாக எனக்கு கிட்டும். காரணம் நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நீயும் இல்லை.
இந்த பாசுரத்திற்கான விரிவான. உரையும் மிகவும் ருசிகரமானது. அதையும் தனி கட்டுரையாக இன்னொரு சமயம் பகிர்கிறேன்.
இந்த திருமழிசை ஆழ்வாரின் பாசுரத்தில் நான் எடுத்துக்கொண்டுள்ள வரிகள் :
*நான் உன்னை அன்றி இலேன்* *கண்டாய், நாரணனே*
*நீ என்னை அன்றி இலை*
பெரியாழ்வார் கூற்றான,
*உன்னைக் கொண்டு என்னுள்* *வைத்தேன்*
*என்னையும் உன்னில் இட்டேன்*
என்பதும்,
திருமழிசை ஆழ்வார் கூறிய
*நான் உன்னை அன்றி இலேன்* *கண்டாய், நாரணனே*
*நீ என்னை அன்றி இலை*
என்பதும் ஒரே கருத்துதானே!.
இப்போது கண்டிப்பாக கண்ணதாசனின் எந்தப் பாடலை நான் சொல்ல போகிறேன் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
அதேதான்.
*படித்தால் மட்டும் போதுமா* படத்தில் *விஸ்வநாதன் – ராமமூர்த்தி* இசையமைப்பில் *T M சௌந்தரராஜன், P B ஸ்ரீனிவாஸ்* இணைந்து பாடும் *கண்ணதாசனின்* பாடல்..
*பொன் ஒன்று கண்டேன்* *பெண் அங்கு இல்லை*.
படக்கதையின்படி சிவாஜியும் பாலாஜியும் கசின்ஸ். மிகவும் நெருக்கமானவர்கள். கதை சூழல் படி, படித்த பாலாஜிக்கு வந்திருக்கும் வரனான படித்த ராஜ சுலோசனாவை பாலாஜியின் சார்பில் சிவாஜி பெண் பார்க்க செல்கிறார் .
படிக்காத சிவாஜிக்கு வந்திருக்கும் வரனான படிக்காத கிராமத்து பெண்ணான சாவித்திரியை சிவாஜி சார்பில் பாலாஜி பெண் பார்க்க செல்கிறார்.
இருவரும் , பெண்களைப் பார்த்துவிட்டு , மகிழ்ச்சியுடன் அந்நிகழ்ச்சியை ஒருவர் மற்றவரிடம் சொல்வதாக அமைந்திருக்கும் பாடல் இது.
அதன் சரணத்தில் வரும் வரிகள் :
*என் விழியில் நீ இருந்தாய்*
*உன் வடிவில் நான் இருந்தேன்*
*நீ இன்றி நான் இல்லை*
*நான் இன்றி நீ இல்லை*
இவ்வரிகள், பெரியாழ்வாரையும் திருமழிசை ஆழ்வாரையும் எப்படி நினைக்க வைக்காமல் இருக்கும் ?
பெரியாழ்வாரின் மற்றொரு பாசுரம், கண்ணதாசனின் எந்த பாடலை எனக்கு நினைவு படுத்தியது என்பதை *குலசேகர ஆழ்வார்* பற்றிய கட்டுரையில் சேர்த்து தருகிறேன்.
இப்போது அடுத்த பகுதிக்கு செல்வோம்.
