நான் கடந்து வந்த பாதையின் மிக சுவாரசியமான பக்கங்களில் “குவிஸ்” பகுதிக்கு நிறைய இடமுள்ளது என எழுதத் தொடங்கிய பிறகே தெரியவருகிறது. எனவே தொடர்கிறேன்.
“கையும் களவும்” குவிஸ் இரண்டு பாகமும் தொலைகாட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. எனவே அதைத் தொடர்ந்து பல சிறப்பு “சிந்திக்க ஒரு நொடி” வரிசை இடம் பெற்றது.
அடுத்து “நகைச்சுவை” பற்றி “சிரிப்பும் சிந்தனையும்” எனும் தலைப்பில் குவிஸ் நடத்தினேன். இந்த முறை நான்கு அணிகளுக்கும் பழங்ககால நகைச்சுவை நடிகர்களின் பெயர்களைச் சூட்டினோம். என். எஸ். கிருஷ்ணன், காளி என்.ரத்தினம், சந்திரபாபு ,காக்கா இராதாகிருஷ்ணன். . முதல் சுற்றில் இவர்களைப் பற்றிய வினாக்களே கேட்கப்பட்டன.
எங்கள் நிகழ்ச்சி பிரபலமாக இருந்ததனால் பல பிரபலங்கள் அணிகளில் போட்டியாளர்களாக வருகை தந்து சிறப்பித்தனர். அந்த வகையில் எங்கள் நகைச்சுவை வினாடி வினாவிற்கு, வந்து பங்கேற்றவர் நடிகர் விவேக். அவர் அப்போதுதான் சினிமாவில் அடியெடுத்து வைப்பவர். தொலைக்காட்சியில் அவரது முதல் நிகழ்ச்சி எங்களதுதான். நடிகர் ராக்கெட் ராமநாதன், சில காமெடி எழுத்தாளர்கள், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் போன்றோரும் கலந்து கொண்டனர். கலை இலக்கிய உலகின் எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரின் படைப்புகளையும், வாழ்க்கைப் பின்னணிகளையும் கொண்டே முழு நிகழ்ச்சியும் அமைந்ததால் இதுவும் பெரிய வெற்றி அடைந்தது. அதில் ஒரு கேள்வி.
தேவனின் நகைச்சுவைக்கு எடுத்துக் காட்டான “துப்பறியும் சாம்பு” வுக்கு கதையில் , மேடையில் ஒரு பட்டம் கொடுப்பார்கள். அது என்ன பட்டம்?
( இந்தக் கடினமான கேள்விக்கு போட்டியாளர் யாரும் பதில் சொல்லவில்லை. வயதான ஒரு பார்வையாளர் பதில் சொல்லி டி. வி. யில் பிரபலமானர். என்ன பதிலா? இந்தக் கட்டுரையில் வரும் கேள்விகளுக்கான பதில்களை குவிகம் மின்னிதழுக்கு எழுதிக் கேளுங்கள்.)
எனது அடுத்த குவிஸ் “மியூசிக் பற்றியது. அணிகள் பெயர்கள் என்ன வைத்தோம் தெரியுமா? ஆம் ! சரியாக ஊகித்துவிட்டீர்கள்.. ராகங்களின் பெயர்கள்தாம் . கல்யாணி ,காம்போதி, மோகனம், சஹானா.
என் இசை குருநாதர் மதுரை ஜி. எஸ். மணி அவர்கள் ஆலோசனையில் நான் கேள்விகள் தயார் செய்தேன். இசை ,இசைக்கலைஞர்கள், அவர்கள் படைப்புகள் எனப் பல தகவல்கள் இடம்பெற்றன. சில உதாரணங்கள்.
திரைப்படங்களில் , தியாகராஜ பாகவதருக்குப் பல பாடல்கள் எழுதிய பாபநாசம் சிவன் அவர்களின் இயற்பெயர் என்ன ?
திரையில் வந்த பாரதியின் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா “ பாடல் ஒரு ராகமாலிகை. அதில் வரும் ராகங்கள் எவை ?
கர்நாடக சங்கீதத்தில் மேளகர்தா ராகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
திமிரி நாயனத்திற்கும் பாரி நாயனத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ?
முகாரி ராகம் ஒரு அழுகை ராகம் . அதில் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் ஒரு காதல் டூயட் போட்டார். எந்தப் படம்? என்ன பாடல்?
இது தவிர ,ஒலி சுற்றில் பல பிரபலங்களின் பாடல்கள் கேட்கப்பட்டன. அந்தக்கால இசை மற்றும் வாத்தியக் கலைஞர்களின் புகைப்படங்கள் காட்டப்பட்டு ,அவை தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டன.
தமிழிசை பற்றி ஒரு தனிச் சுற்று நடத்தப்பட்டது.
கேள்விகளின் தரத்தினாலும், கர்நாடக, திரையிசைக் கலைஞர்கள் பங்குபெற்ற காரணத்தினாலும் நிகழ்ச்சி வெற்றி பெற்றது.
தமிழ் இலக்கியம் தவிர , கவிதைகள் பாடல்கள் பற்றியே ஒரு குவிஸ் நடத்தினேன். 1990 முதல் 2005 வரை பல வினாடி வினா நிகழ்ச்சிகள்.
1990-95 காலகட்டத்தில் தொலைகாட்சியில் “ஸ்பான்சர் புரோக்ராம்” தமிழில் இரண்டாவது அலைவரிசையில் ( செகண்ட் சேனல்”) அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. நிறைய தமிழ் சீரியல்கள், திரைப்பாடல் நிகழ்ச்சிகள், அறிவியல் , ஆன்மிக நிகழ்ச்சிகள், சமுதாய நல கருத்துக்கள் கொண்ட நிகழ்ச்சிகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பலர் இதில் விண்ணப்பித்தனர். பல திரைப்பட இயக்குநர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவற்றையெல்லாம் பார்த்த போது நான் ஏன் விண்ணப்பிக்கக் கூடாது என்று எண்ணி செயல்படத் தொடங்கினேன்.
ஸ்பான்சர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நேரம் அது. அப்போது விண்ணப்பதாரர்களுக்கு பதிமூன்று எபிசோடுகளே அளிக்கப்படும். அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு வினாடி வினா தொடரை நான் தயாரித்தேன்.
போட்டியாளர் தகுதி: சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்; பிரிலிமினரி போட்டிகள் வெளியே நடத்தப்பட்டு முப்பத்திரண்டு அணிகள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு அணியிலும் இருவர் இருப்பார்.
முதல் எட்டு எபிசோடுகளில் , ஒரு எபிசோடுக்கு நான்கு என்று கால் இறுதிச்சுற்று நடக்கும். அதிலிருந்து பதினாறு அணிகள் அரை இறுதிச் சுற்றில் கலந்து கொள்வார். பதிமூன்றாம் எபிசோடு நிறைவு சுற்று. மூன்று பரிசுகள்.
அறிவியல், இசை, கலைத்துறை, மற்றும் பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்படும். ( குவிஸ் மாஸ்டர் தீர்ப்பே இறுதியானது என்றும் ஒரு வரி சேர்த்துவிட்டேன்)
மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு நிகழ்ச்சிக்கு “எதிரும் புதிரும்” என்று தலைப்புக் கொடுத்தேன்.
மேற்படி தகவல்களோடு தொலைக்காட்சி மையத்திலிருந்து பெற்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவைத்தேன். இது விளம்பரதாரர் நிகழ்ச்சி என்பதால் , நிகழ்ச்சி சுவையாக இல்லாவிட்டால் யாரும் விளம்பரம் தர முன்வர மாட்டார்கள் என்று எண்ணி பலரும் சினிமா பின்னணி, பிரபலங்களோடு பேட்டி , நகைச்சுவை சீரியல்கள் என்றுதான் விண்ணப்பித்திருந்தனர். நான் ஒருவன்தான் “குவிஸ்” நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்து இருந்தேன். அதனாலோ என்னவோ கிடைப்பது கடினம் என்று நினைத்த எனக்கு, நூற்றுக் கணக்கான விண்ணயபங்கள் நடுவே ஒரு வாய்ப்பு கிடைத்தது. நானே தயாரித்து நடத்த இருக்கும் டி. வி. குவிஸ் தொடர்! அன்று பெற்ற மகிழ்ச்சிக்கு அளவில்லை.
ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சியை டி. வி. க்கு தயாரித்து அளிப்பதில் எத்தனை சிக்கல்கள் ஏற்படும் என்று அப்புறம்தான் தெரிந்தது.. எங்கள் தயாரிப்பு குழுவின் இயக்குனர், காமிராமேன் , ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் அமர்ந்து பேசி ஒரு பட்ஜெட் தயார் செய்தேன். அடுத்த தேடல் விளம்பரதாரர்.
விளம்பரதாரரை நேரிலே சென்று தேடுவதைக் காட்டிலும், விளம்பர நிறுவனங்கள் மூலமாகத்தான் அணுகவேண்டும் என்று தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு எபிசோடுக்கும் தொலைக்காட்சி நூற்றிருபது வினாடிகள் விளம்பர நேரம் கொடுக்கும் அதை விளம்பரதாரரிடம் விற்று நாங்கள் தயாரிப்பு செலவை ஈடு கட்டவேண்டும். என் நண்பர் ஒருவர் மூலமாக சென்னையிலுள்ள அட் சைட்ஸ் நிறுவனத்தை அணுகி அதன் தலைவர் திரு வாசுதேவன் என்பவரை சந்தித்துப் பேசினேன். அவர் என்னுடைய டி. வி. நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பார்த்துள்ளார். அவர் என்னுடைய “ஸ்கிரிப்டைப்” படித்துப் பார்த்தார்.
“உங்கள் வினாடி வினா நிகழ்ச்சிகள் சுவையாக இருக்கும். பைனல் எபிசோடுக்கு யாரேனும் திரைப் பிரமுகரை அழைத்துப் பரிசு கொடுக்கச் சொல்லுங்கள். எளிதாக விற்றுவிடலாம். உங்கள் பட்ஜெட் மொத்தமும் நானே ஏற்றுக் கொள்கிறேன். தயாரிப்பைத் தொடங்குங்கள் “ என்று அக்ரிமெண்ட் போட்டு அட்வான்ஸும் கொடுத்துவிட்டார்.
“ ஆஹா எத்தனை விரைவாக முடிவெடுத்து எனக்கு முன்பணமும் கொடுத்துவிட்டார் “ என மகிழ்ச்சியுடன் அன்று மாலை எங்கள் குழுவை சந்தித்தேன். ஆனால் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. நாங்கள் போட்ட பட்ஜெட் ரொம்ப “லோ பட்ஜெட்”. . அடிப்படையிலே சில தவறுகள் செய்துவிட்டோம். நிகழ்ச்சியை ஏதாவதொரு பள்ளி அரங்கிலோ அல்லது மண்டபத்திலோ “ஷூட்” வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். ஒரு காமிரா போதும் என்று கணக்கிட்டோம். எனது காமிராமேன் நாடகம் சீரியல் எடுப்பவர். ஒவ்வொரு சீனாக எடுத்துப் பழக்கப்பட்டவர். ஆனால் குவிஸ் நிகழ்ச்சிக்கு அது பொருந்தாது. குவிஸ் மாஸ்டர் கேள்வி கேட்பதை எடுத்துவிட்டு ,பிறகு நிறுத்தி அதே கேள்விக்கான பதிலைச் சொல்லும் அணியிடம் கொண்டு எடுக்க முடியாது. குவிஸின் உடனடித் தன்மை (Spontaneity) போய்விடும் . தவிர நான்கு அணிகள் பக்கமும் கேமரா சுற்றிவர வேண்டும் ;மேலும் ரீயாக்ஷன் ஷாட்ஸ் எடுக்கணும். இதுஎல்லாம் தவிர மிக முக்கியமாக ஆடியோ வீடியோ சுற்றுக்களில் காமிரா பணி இன்னும் சிறப்பாக அமையவேண்டும். இதற்கு மினிமம் இரண்டு காமிராக்கள் வேண்டும். இதையெல்லாம் சரியான லைட்டிங் இல்லாமல் செய்ய இயலாது. எனவே இந்த நிகழ்ச்சியை ஸ்டுடியோவில் வைத்துதான் ஷூட் செய்யவேண்டும். ஒரு பெரிய ஸ்டூடியோவை மினிமம் ஐந்து நாட்களுக்கு வாடகைக்கு எடுக்கவேண்டும். ஒரு எக்ஸ்ட்ரா காமிராமேன் வேண்டும். இதெல்லாம் கூட்டினால் பட்ஜெட் எங்கேயோ எகிறிவிட்டது.
மறுபடியும் வாசுதேவனிதம் சென்று விஷயத்தச் சொல்லி செலவு அதிகமாகும் என்றேன்.
“நீங்க கேட்ட தொகையை நான் குறைவு இன்றி ஒப்புக் கொண்டு அக்ரிமெண்ட்டும் போட்டாச்சு. இதுக்கு மேல எங்களுக்கும் ஆபீஸ்ல பட்ஜெட் இல்லை. ஒண்ணு ஒத்துக்குங்க ; இல்லைன்னா கேன்சல் பண்ணிடலாம் “ என்றார்.
நான் மறுபடியும் நண்பர்களை சந்தித்தேன். இதுக்கு மேல பட்ஜெட்டுக்கு யாரும் ஒத்துப்பாங்களா என்பது தெரியாத நிலை. தொலைக்காட்சி கொடுத்த கடிதத்துக்கு ( Offer letter ) இன்னும் மூன்று நாட்களில் பதில் கொடுக்கவேண்டும். புரோகிராம் எடுத்துக் கொண்டால் நஷ்டம் வர வாய்ப்புண்டு; வேண்டாம் என்றால் ஒரு நல்ல வாய்ப்பை இழக்கும் ஆபத்து வந்துசேரும் . ஒரே குழப்பம்.
அப்போதுதான் ஆபத்பாந்தவனாக ஒருவர் வந்தார். அவர் ஒரு ஆடிட்டர்.. ஏ.வி. எம் ஸ்டுடியோவில் பணி புரிபவர். கலையுலகில் மிகுந்த நாட்டம் உள்ளவர். பல சீரியல்களில் இன்றும் நடித்துக் கொண்டு பெயரோடு திகழும் ஆடிட்டர் ஸ்ரீதர். இனிய நண்பர். என் மேல் மாறாத பாசமுள்ளவர்.
“வவேசு சார்! நோ பிராப்ளம் எங்க ஏவிஎம் ஆடியோ ஸ்டூடியோவை நீங்கள் பயன்படுத்தினால் செலவு குறையும். சரவணன் சாரைத்தான் உங்களுக்குத் தெரியுமே ! கேட்கலாம் என்றார்.
கம்பன் விழா போன்ற இலக்கிய விழாக்களில் கண்டு அவரோடு எனக்கு அறிமுகம் உண்டு. விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் நான் என்றும் தெரியும். இந்த நிகழ்ச்சியை நான் வணிக நோக்கில் செய்யவில்லை என்றும் புரிந்து கொண்டார். ஓகே சொல்லிவிட்டார்.
நிகழ்ச்சிக்கான அனைத்து வேலைகளையும் உடனே தொடங்கி விட்டேன். கல்லூரிப் பணிக்கு எந்தவித தடங்கலும் இல்லாமல் சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் இவற்றை வைத்துக் கொண்டேன்.
பொதுவாகவே என்னுடைய இலக்கியப் பணிகளும், ரேடியோ,டி. வி. நிகழ்ச்சிகளும், கல்லூரிப் பணிகளுக்கு இடையூறு செய்யாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன். இவை போன்ற நிகழ்வுகளுக்காக நான் கல்லூரியில் ஒரு போதும் விடுப்பு எடுத்தது கிடையாது. எங்களுக்கு ஓர் ஆண்டில் பன்னிரண்டு நாட்கள் “காஷுவல் லீவு “ உண்டு. நான் பணி புரிந்த நாற்பது ஆண்டுகளிலும் , ஒரு ஆண்டு கூட இதை நான் முழுவதும் பயன்படுத்தியது கிடையாது. மிக முக்கியமான தேவை என்றால்தான் லீவு அப்ளை செய்வேன்.
நான் எங்கள் கல்லூரியில் முதல்வராக இருக்கையில் ஒரு பேராசிரியர் காஷுவல் லீவு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். காரணம் எதுவும் எழுதவில்லை. ஏன் என்று கேட்டால் , “அது காஷுவல் லீவு சார் . எனக்கு எலிஜிபிள் உண்டு. “ என்றார்.
“ எலிஜிபிலிட்டி இருந்தாலும் எந்த லீவும் காரணம் இல்லாமல் கொடுக்கப்பட்ட மாட்டாது. இது அரசு விதிகளில் ஒன்று எனக் கடுமையாகச் சொன்னேன்.
“லீவு வேஸ்டா போறது. அதனால எடுத்தேன் “ என்றார். . எப்படி இருக்கிறது. பாருங்கள் !
சரி! கல்லூரிப் பணிகளுக்கு இடையில் இதை சமாளித்து நிகழ்ச்சியை எப்படித் தயாரித்தேன் ?
(தொடரும்)
