தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – கவி.கா.மு ஷெரீப் | TheNEWSLite

தமிழ் திரையுலகில் சிறப்பான பாடல்கள் தந்த கவிஞர்களில் ஒருவர் கவி கா.மு. ஷெரீஃப்.

கண்ணதாசன் கூறுவார் – நான் பேனா பிடிக்கும் முன்னரே, இவரின் கவிதைத் தொகுப்பு வந்து விட்டது . இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் அவரே மூத்தவர் என்பார். கவி கா மு ஷெரீஃப் அவர்களின பல பாடல்கள் இன்றும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல்கள்,.

அன்னையை போலொரு தெய்வ மில்லை
அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை”
துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே – நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்”

இந்தப் பாடல், பட்டினத்தாரின்,

அரிசியோ நான் இடுவேன்
ஆத்தாள் தனக்கு
வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல்
உருகி உள்ள தேனே அமுதமே
செல்வத் திரவியப் பூமானே
என்றழைத்த வாய்க்கு

என்ற வரிகளை நினைவுக்கு வர வைக்கிறது அல்லவா.

ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே
என்னருமைக் காதலியே என்னை கொஞ்சம் பாரு நீயே

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதன் இல்லை

வானில் முழு மதியை கண்டேன்
வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்
வானமது மதியைப் போல
மங்கை அவள் வதனம் கணடேன்

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இது தானடா
வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டுச் சிரிக்கும்
வாழ்ந்தரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்

நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்

போன்ற பல பாடல்கள் இவர் பெயர் கூறும்.

டவுன் பஸ் என்ற திரைப் படத்தில வரும் இரு பாடல்கள் இரு வித சோக ரசனையைக் கொண்டவை .

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா
எனை விட்டுப் பிரிந்த கணவன் இன்னும் வீடு திரும்பலே
தெருவில் வந்து நின்னு நின்னு காலும் கடுக்குது
வழியைப் பாத்து பாத்து கண்ணும் நோகுது

என்ற எம் எஸ் இராஜேஸ்வரி அவர்களின சிட்டுக் குரலில் இசைத்துள்ள பாடல் அகத்துறை அலங்காரம் என்றே கூறலாம்.

இன்னொரு பாடல்

பொண்ணான வாழ்வு மண்ணாகிப் போமா
துயரம் நிலை தானா

என்ற பாடல், நான் மாணவனாக இருந்தபோது, இலங்கை வானொலியில் தினம்தோறும் ஒலிபரப்பப்படும்.

பண்போடு முன்னாளில்
அன்பாக வாழ்ந்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய்
இன்றென்னை விடுத்தாரே
என் அன்பை மறந்தாரே

ஜெயலட்சுமி (ராதா) குரலுடன், எம் எஸ் இராஜேஸ்வரி மற்றும் திருச்சி லோகநாதன குரல்களைமறக்கவே முடியாது.

முதல் பாடலில் வேலை நிமித்தம் பிரிந்த சோகம். இரண்டாவது பாடல் வேண்டாம் என பிரிந்து போன சோகம். இப்படி கணவன் அகன்று போன நிலையை ஒரே கோப்பையில் இரு பானங்களாக தரும் அழகு, ஷெரீஃப் அவர்களின கவி ரசனையை கூறுகிறது.

மந்திரி குமாரி திரைப் படத்தில், இவரும் மருத்காசியும் இணைந்து எழுதிய இரண்டு பாடல்களும் அன்றும் இன்றும் என்றும் இசை அமுதம்.

வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உந்தன் பாட்டுக்கேன்றே தாளம் போடுதே

என்ற இரண்டு பாடல்கள் தாம் அவை.

திருவாரூர் அருகே அபிவிருதீஸ்வரம் என்ற ஊரில் பிறந்தவர். கவி கா. மு. ஷெரீப் பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்.முறையாகப் பள்ளிக்கூடம் சென்று பயின்றவரல்ல. 5 வயது முதல் 14 வயதுவரை சொந்தமாகவே ஆசிரியர் ஒருவரிடம் தமிழ் கற்றார். தாய் தந்தையாரின் தூண்டுதல் காரணமாகத் தமிழ் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றார். இளமையிலேயே அவர் கவிதை இயற்றும் திறன் பெற்றிருந்தார்.
இவர் தான் கருணாநிதி அவர்களை நாடக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் – கண்ணதாசனையும் கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைத்தவர், என்பார்கள்.
சிவாஜி’ என்ற இதழின் துணையாசிரியராகச் சில ஆண்டுகள். 1948-ல் ‘ஒளி’ என்ற மாத இதழைத் தொடங்கினார். 1952-க்கும் 1969-க்கும் இடைப்பட்ட காலத்தில் , தமிழ் முழக்கம் ஆகிய இதழ்களை நடத்தினார். ம.பொ.சி.யின் ‘செங்கோல்’ வார இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். தனது வாலிபப் பருவத்தில் காங்கிரஸின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர் ‘1942 வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டார்.

திராவிட அரசியலை விட்டு, ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் சேர்ந்தார். அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். தமிழக எல்லைப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

1970-ம் ஆண்டுக்குப் பின் ஆன்மிகப் பாதைக்குத் திரும்பி சீறாப்புராணத் தொடர் சொற்பொழிவுகளைப் நடத்தினார். சீறாப்புராணத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் உரைகள் எழுதினார்.

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குன்னாகம் என்ற ஊரிலுள்ள தேநீர்க் கடையொன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அப்போது அங்கிருந்த வானொலிப் பெட்டியில், நடிகர் திலகம் நடித்த அன்னையின் ஆணை திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, அவர் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை’ என்ற கவியின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட அந்த இளைஞன் உணர்ச்சி வயப்பட்டு “கெட்டவருடன் சேர்ந்து பெற்ற தாயின் மனதை நோகடித்தவன் நான்; நன்றி கெட்டவன்” என்று குமுறி அழுதிருக்கிறார்.

“இப்படி திடீரென்று தேநீர்க் கடையில்தான் உன் தவறு புரிந்ததா? “ என அவனிடம் கடைக்காரர் கேட்டபோது அதற்கு அவன், “ஆமாம், இந்தப் பாடல் என் மனத்தை மாற்றிவிட்டது. இனி என் தாயை உயிரினும் மேலாகக் கொண்டாடிக் காப்பாற்றுவேன். உங்களுக்கு என் நன்றி” என்று கூற, அதற்கு அந்தக் கடைக்காரர், “உன் நன்றிக்கு உரியவர் தமிழ் முழக்கம் கா. மு. ஷெரிப். அவர்தான் இந்தப் பாடலை எழுதியவர்” என்றாராம்.

சிலோன் விஜயேந்திரன் எழுதியுள்ள ‘அறுபதாண்டு காலத் திரைப்பாடல்கள்’ என்ற நூலில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி! பத்தியம் இருக்கணும்; ரசிகனை அவன் புள்ள மாதிரி நேசிச்சு எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுங்கிற பொறுப்புணர்வோட எழுதணும்” என்று கூறுவார் திரு ஷெரீஃப். . அவர் சொன்னதற்கேற்ப இந்தச் சம்பவமும் நடந்திருக்கிறது.

யாரிடமும் சிபாரிசு அல்லது வாய்ப்பு தேடி சென்றதில்லை. கீரையோ கீரை என்று கூவி விற்பது போல, எனது பாட்டைத் தூக்கி கொண்டு போகும் அவசியம் எனக்கில்லை என்பாராம்.

திரு கருணாநிதி அவர்களை சிறு வயது முதலே தெரியும் என்றாலும் , அவர் மனைவி கூறியும், இவர் தனது மகளுக்காக , அவரிடம் செல்லவில்லை . அண்ணன் ஷெரீஃப் சிபாரிசை விரும்பமாட்டார் என்று சொல்லி, தம்பி கருணாநிதியும் செய்யவில்லை, ஷெரீஃப் அவர்கள், அவரது குடும்பத்தாரிடம், கருணாநிதி அவர்கள் முதல்வர் பதவியில் இல்லாதபோது தான் அவரை சந்திப்பேன் என்று கூறி இருக்கிறார்.

அதேபோல, எம் ஜி ஆரைப் பற்றிக் கூறும் போது, ராமாவரம் போகா வரம் வேண்டும் என்று கூறினாராம்.

எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இடம் பெற்ற நான் மாந்தோப்பில் நின்று இருந்தேன் அவள் மாம்பழம் வேண்டும் என்றாள் என்ற பாடலையும், ஏ குட்டி என்னா குட்டி என்ற தேர்த் திருவிழா திரைப்படத்தின் பாடலையும் குறிப்பிட்டு, இது போன்ற பாடல்கள் என்னை திரை உலகத்தில் இருந்து துரத்தி விட்டன என்று வருத்தத்துடன் கூறினார்.

இன்றைய சமுதாயம் என்ற கவிதை நூலும், மச்சக்கன்னி, பீஷ்மர் என்ற குறுங்காப்பியங்களும் தந்தவர்.

நல்ல இஸ்லாமியராக இருந்து, புலால், மது, புகை என்று எந்த வழக்கமும் இல்லாமல் இருந்தவர். சினிமாவின் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாதவர் ஷெரீஃப் என்று ஜெயகாந்தன் தனது புத்தகத்தில் கூறுவார். ஆரம்பத்தில் திராவிட கொள்கைகள், நாத்திகம் என்று பேசி இருந்தாலும, சில காலத்திலேயே இறை நம்பிக்கையுடன் வாழ்ந்தவர்.

 

அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி.

 

.