
ஹோமர் தனது ‘ஒடிஸி’ இதிகாசத்தின் துவக்கத்தில் நம்மை ஓடிசியசின் சொந்த ஊரான இத்தக்காவிற்கு அழைத்துச் செல்கிறார்.
ஓடிசியஸ் அந்த ஊரை விட்டு டிரோஜன் யுத்தத்திற்காக சென்று பத்து ஆண்டுகள் ஓடி விட்டன டிரோஜன் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்த அவன் மட்டும் இன்னும் ஊர் வந்து சேரவில்லை. மற்ற கிரேக்கத் தலைவர்களெல்லாம் ஊர் வந்து சேர்ந்துவிட்டார்கள்.
![]()
ஓடிசியஸ் அரண்மனையில் நிலைமை படுமோசமாகிவிட்டது ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஓடிசியஸ் இறந்திருக்க வேண்டும் என்று நம்பினர். ஆனால் அவனது மனைவி பெனிலோப் மற்றும் வளர்ந்து வாலிபனான மகன் டெலிமாக்கசும் இன்னும் ஓடிசியஸ் உயிருடன் இருக்கிறான் என்று உறுதியாக நம்பினர்.
இத்தாக்காவில் இருந்த அனைத்து செல்வந்தர்களும் ஓடிசியஸின் மனைவியை மறுமணம் செய்து கொள்ளும்படி வேண்டிக்கொண்டனர். அந்த நாட்டில் உள்ள பிரபுக்கள் அனைவரும் அவளது கரத்தைப் பற்றி அவளைத் திருமணம் செய்து கொள்ளத் துடித்தனர். அவளது அழகு அத்தனை பேரையும் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. அத்துடன் ஓடிசியஸஸின் செல்வத்தைக் கவரவும் அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் ஓடிசியஸின் மனைவி அவள் அந்த அனைவரையும் நிராகரித்தது மட்டுமல்லாமல் அவர்களை வெறுக்கவும் தொடங்கினாள்.
தன் கணவன் இன்னும் உயிருடன் இருப்பதாக அவள் உறுதியாக நம்பினாள் அவன் வருவது சந்தேகம் என்ற எண்ணம் அவளுக்கு அடிக்கடித் தோன்றினாலும் அவன் இன்றும் இறக்கவில்லை என்று எண்ணம் அவள் ஆழ்மனதில் நிலைத்திருந்தது. அவர்கள் மகனும் தன் தந்தையை எப்படியும் உயிருடன் பார்ப்போம் என்று உறுதியாக நம்பினான்.
அன்னை மகன் இருவரது பிடிவாதமும் இத்தாக்கவின் பிரபுக்களுக்கு ஆத்திரத்தை விளைவித்தது. ஓடிசியஸின் அரண்மனைக்குள் ஒவ்வொருவராக வந்து அட்டகாசம் செய்யத் தொடங்கினர். ஓடிசியஸ் இல்லத்தில் இருந்த அவர்களுடைய ஆடு மாடு பன்றி மற்ற கால்நடைகளை ஆசை தீர உண்டு புசித்தனர். மது வகைகளைக் குடித்தனர். உணவுப் பண்டங்களைத் தின்று தீர்த்தனர். அவர்களது கோரிக்கை என்னவென்றால் அவர்களுள் ஒருவரை ஓடிசியஸ் மனைவி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான். அதை அவள் முடிவு செய்யும் வரை அந்த வீட்டிலேயே அவர்கள் தொல்லை தொடரும் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்தனர். தாயையும் மகனையும் வார்த்தைகளாலும் செயல்களாலும் அவமானப்படுத்தினர். அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாத தாயும் மகனும் தாங்க முடியாத துயரில் தவித்தனர்.
அவர்களை அமைதிப்படுத்த ஓடிசியஸ் மனைவிக்கு ஒரு திட்டம் தோன்றியது. சமீபத்தில் இறந்து போன அவள் மாமனாரின் சவப்பெட்டிக்கு ஒரு கம்பளி துணி உரை செய்யும் வரை தான் திருமணம் பற்றி யோசிக்க முடியாது என்று கூறினாள். இறந்த உயிருக்குச் செய்யும் இறுதிச் சடங்கைத் தடை செய்யக் கூடாது என்று அந்த அக்கிரமக்காரர்களும் அதை முடிக்கும் வரை தொந்தரவு செய்வதில்லை என்று அறிவித்தனர்.
ஆனால் ஓடிசியஸின் மனைவி காலை முதல் மாலை வரை செய்த நூலை இரவில் பிரித்து விடுவாள் இதனால் அந்த வேலை முற்றுப் பெறாமல் தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்று வந்தது. பிரபுக்களுக்கு சந்தேகம் ஒரு சிறு பொறியாகத் தோன்றியது அவர்கள் வீட்டு வேலைக்காரியை மிரட்டியதும் அவள் உண்மையைச் சொல்லி விட்டாள். அதனால் அவர்கள் இன்னும் அதிகமாக ஓடிசியசின் மனைவியைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர்.
இது ஓடிசியஸ் போரை முடித்து அலைந்து திரிந்த பத்தாவது ஆண்டில் நடைபெற்றது.
ஓடிசியஸ் ஏன் இப்படி பத்து ஆண்டுகள் அலைந்து திரிந்தான்?
டிரோஜன் யுத்தத்தில் அதீனா தேவதை கிரேக்கர்களுக்கு ஆதரவாக இருந்தாள். அதிலும் அவளுக்கு பிரியமான ஓடிசியஸ் வெற்றி பெற வேண்டியது அனைத்தையும் செய்தாள். அவனுடைய சமயோஜித புத்திசாலித்தனத்தையும் போர் தந்திரத்தையும் எதிரிகளை ஏமாற்றும் திறமையையும் அவள் வெகுவாகப் பாராட்டினாள்.
ஆனால் கிரேக்கர் அனைவரும் கசாந்தராவை கேவலமாக நடத்தியதிலும் கடவுளர் அனைவருக்கும் தரவேண்டிய பலியை மறந்ததையும் கண்டு அவள் கிரேக்கர் அனைவரையும் துன்பக் கடலில் தத்தளிக்க வைக்க முடிவு செய்தாள். அதில் ஓடிசியஸும் மாட்டிக் கொண்டான். வெற்றிகரமாக டிராயைக் கைப்பற்றி ஹெலனை மெனிலியஸ் கையில் திருப்பிக் கொடுத்துவிட்டு கிரேக்க வெற்றிக்கு முக்கியக் காரணமான ஓடிசியஸ் மகிழ்ச்சியுடன் தன் வீரர்களுடன் தன் சொந்த ஊரான இத்தாக்காவிற்குச் செல்லும் பாதையில் கப்பலைச் செலுத்தினான்.

அதீனாவின் கோபத்தாலும் கடல் தேவன் பொசைடனின் ஆத்திரத்தாலும் ஓடிசியஸ் கப்பலும் திசை தடுமாறி சொந்த ஊரான இதாக்காவிற்குப் பதிலாக வேறு இடத்திற்கு செல்லும் படி நேரிட்டது. ஓடிசியஸ் வழி தடுமாறிப் போய் பத்து வருடங்களாகத் தன் சொந்த ஊருக்கு வர இயலாமல் தவித்தான். அது மட்டுமல்லாமல் அவன் சென்ற பல இடங்களிலும் பல தீவுகளிலும் பலவிதமான ஆபத்துகள் அவனைச் சூழ்ந்தன. ஆனால் ஒவ்வொன்றிலும் தன் அறிவின் திறமையால் தப்பிப் தப்பி வந்து கொண்டிருந்தான் ஓடிசியஸ்.
10 ஆண்டுகள் இப்படி கழிந்தன.
கடவுளர்களின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தனிய ஆரம்பித்தது. ஓடிசியஸ்க்காக அனைவரும் வருத்தப்பட ஆரம்பித்தனர். பொசைடன் என்ற கடல் தேவனைத் தவிர. மற்ற கடவுளர்கள் அனைவரும் அவனைக் காப்பாற்ற துடித்தனர். அதீனாவும் தான் அவனை கடுமையாக தண்டித்ததை நினைத்து மிகவும் வருந்தினாள். அவனது துன்பத்திற்கு ஒரு முடிவு கட்டவும் தீர்மானித்தாள். அவனைத் தன் நாட்டிற்கு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த தொடங்கினாள். ஆனால் பொசைடன் ஓடிசியஸ் மீது கொண்ட கோபத்தை குறைத்துக் கொள்ளவே இல்லை. அவனை இன்னும் கடலில் அலைகழிக்கவேண்டும் என்று அவன் யோசித்தான். அதை மாற்ற ஒரு மாற்று வழி யோசித்தாள் அதீனா.
ஒரு சமயம் பொசைடன் ஒலிம்பஸ் மலை யில் கடவுளர்கள் நடத்திய கூட்டத்திற்கு வர இயலவில்லை. அவன் வெகு தூரத்திற்கப்பால் இருக்கும் ஒரு கடற்கரைப் பட்டினத்திற்குச் சென்றிருந்தான். அங்கே அவனது பிரியமான கடற் காதலி இருந்தாள். அவளுக்குப் பொசைடனைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ளவேண்டும் என்று கொள்ளை ஆசை. அதனால் பொசைடன் திரும்பத் தன் கடலுக்குத் வருவதற்கு நாளாகும் என்பதை ஆதினா அறிந்துகொண்டாள். பொசைடனுக்குத் தெரியாமல் ஓடிசியசைக் காப்பாற்ற இதுதான் சரியான சந்தர்ப்பம்.என்று உணர்ந்து அதற்கான முயற்சியில் இறங்கினாள்.

ஒலிம்பஸ் மலையில் மற்ற கடவுளர்களிடம் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல இயலாமல் தவிக்கும் ஓடிசியஸின் சோகக் கதையைக் காட்டி அவர்கள அனைவரது அனுதாபத்தையும் பெற்றாள். கடவுளர் தலைவர் ஜீயஸ் அனைத்துக் கடவுளர்களிடம் ஓடிசியஸ் பத்திரமாக விரைவில் சொந்த நாட்டிற்குத் திரும்பச் செல்ல உதவுமாறு உத்தரவிட்டார். அனைத்துக் கடவுளர்களை மீறி பொசைடனாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று அதீனாவும் கூறினாள். ஜீயஸ் உடனே ஒரு தேவதையை பொசைடனின் கடற்காதலியிடம் சென்று ஓடிசியஸ்க்கு உதவும்படி உத்தரவு பிறப்பித்தார்.
மிக மகிழ்ச்சியுடன் அதீனா அங்கிருந்து நேராக ஓடிசியசின் ஊரான இத்தாக்காவிற்குச் சென்று தன் திட்டப்படி காய்களை நகர்த்தத் தொடங்கினாள்.
(தொடரும்)
