
(கம்சன் இறந்ததை அறிந்த, அவன் மாமனார், மகத நாட்டு மன்னன் ஜராசந்தன், பழி வாங்க வடமதுரை மேல் படையெடுத்து வந்தான்)
.ஜராசந்தன் போர் தொடுத்தல்
மகதமன்னன் பெரும்படையைத் திரட்டி வந்தான்
மதுரையினை அழிப்பனென ஆர்த்தான், ஆனால்
தகவிழந்து, படையிழந்து, தோற்றுப் போனான்,
தனியாளாய்த் திரும்பித்தன் நாடு சேர்ந்தான்.
மிகமுயன்று பதினேழு முறைவு ழன்று
வீரமுடன் போரிட்டும் தோல்வி யுற்றான்
அகமகிழ்ந்தான் முகில்வண்ணன், நிலத்தின் பாரம்
அப்போரில் அழிந்தவரால் குறைந்த தென்றான்.
புதிய நகரைத் தோற்றுவித்தல்
(கண்ணன் கட்டளைப்படியே, தேவதச்சனான விசுவகர்மா ஒரு புதிய நகரத்தைக் கடல்நடுவே தோற்றுவித்தான்)
மடமயில்கள் நடமாடும் தோட்டம்,பூங்கா,
வனப்புடைய பெருவீதி, மாளி கைகள்,
தடம்,பொழில்கள் மண்டபங்கள், கல்விச் சாலை,
தகைசான்ற கலைக்கூடம் யாவும் கொண்டு,
கடல்நடுவே புதியதொரு நகரைத் தக்கக்
காவலுடன் கவலையின்றி மக்கள் வாழ,
இடமகன்ற வகையினிலே தேவ தச்சன்
எழிலிவண்ணன் கட்டளையால் சமைத்தான் நன்கு.
துவராபுரி( துவாரகை)
நெடுமாளிகை, அகன்வீதிகள், நிழற்சோலைகள் இருக்கும்
மடுவாவிகள், மலர்க்காவனம், மணிநீர்க்குளம் சிறக்கும்
இடுவோரிலை, பெறுவோரிலை, எழில்மாநகர் திகழும்
நடுவேயமை துவராபுரி நனிகாவியம் புகழும்
(நடு-நீதி)
(நடுவே யமை – நீதி விளங்கும்)
ருக்மிணி திருமணம்
விதர்ப்ப நாட்டின் இளவரசி,
வேற்கண் அழகி ருக்மிணியாள்,
பதித்தாள் உளத்தில் கண்ணனையே,
பலரும் போற்றிச் சொலக்கேட்டு.
விதித்த முறைகள் மீறியவள்
விடுத்தாள் காதல் மடலொன்று.
மதித்த முதிய அந்தணரை
மகிழ்ந்து தூதாய் அனுப்பிவைத்தாள்
(தூது சென்ற அந்தணன்,கண்ணனிடம் ருக்மிணியின் காதல் கடிதத்தைத் தருகிறான்)
ருக்மிணியின் காதல் கடிதம்
(பாகவதத்தில் உள்ள “ருக்மிணி சந்தேசம்” – கருத்தைத் தழுவி எழுதிய பாடல்கள் )
ஞாலத்தின் எழிலுருவே! நற்பண்பு மிளிர்நறவே!
கோலத்தைக் கேள்செவியின் குறைகளையும் குளிர்நிறைவே!
சாலக்கண் விழைவதெலாம் தருகின்ற தனியழகே!
வாலைப்பெண் நாண்துறந்துன் வடிவழகில் மனம்பதித்தேன்!
முகுந்தாவுன் குலம்,பண்பு, மூளுமெழில், அறிவிளமை,
மிகுந்தவளம், செல்வாக்கு, மேதினியில் எவர்கொண்டார்?
உகந்துலகம் மகிழ்கின்ற உனைமணக்கும் பேறதனைத்
தகுந்தகுடி மெல்லியலாள் தான்மறுத்தல் உண்டோசொல்!
அண்ணலுனைத் துணைவனென அடைவதற்கே எனையீந்தேன்
கண்ணிமைக்கும் பொழுதினிலே கைப்பிடிக்க வாராயோ?
பெண்ணணங்கு கண்ணனுக்கோ? பேதைசிசு பாலனுக்கோ?
திண்ணமிகு சிங்கத்தின் திகழ்பொருளும் சிறுநரிக்கோ?
கற்புடைய நற்பெண்டிர் கடைபிடிக்கும் நோன்புகளைப்
பொற்புடனே செய்திருந்தால், புண்ணியங்கள் புரிந்திருந்தால்,
வெற்பன்ன திண்தோளன், வேய்ங்குழலோன் மணக்கட்டும்.
அற்பனவன் சிசுபாலன் அவனைமனம் மறுக்கட்டும்.
நாளைக்கென் மணவினைகள் நடக்கின்ற நேரத்தில்,
வாளக்கொள் வீரருடன் வளைப்பாயே விதர்ப்பத்தை.
மூளைக்குள் புல்முளைத்த மூர்க்கரைச் சிதறடித்தோர்
வேளைக்குள் காரிகையென் கைப்பிடிப்பாய் வீரத்தால்.
அம்பிகையின் அருள்வேண்டி ஆலயத்திற்(கு) ஊர்வலமாய்,
நம்பிமிக முதல்நாளில் நங்கையர்கள் செல்லுகையில்,
வம்பலர்நல் தொடையானே, வருத்தமன்றி வந்தென்னைச்
செம்பொன்தேர் தனிலேற்றிச் சிறப்புடனே செல்வாயே!
தாமரைக்கண் அழகாவுன் தாள்பணிந்து சிவனுகப்பான்,
ஏமமுற உனைச்சேர்வேன்; இல்லையெனின் உயிர்துறப்பேன்.
பூமிதனில் நூறெனவே புதுப்பிறவி பலவெடுத்தும்,
ஆமெனவே உன்னருளை அடைவதுமென் விழைவாகும்!
கடிதம் கண்ட கண்ணன் செயல்
காதலைக் கண்டான், அன்பின்
கனிவினைக் கண்டான், உள்ளம்
மோதிய உணர்வின் வெள்ளம்
மூண்டெழு கவிதை ஆக
ஆதலைக் கண்டான்,பெண்ணின்
அறிவினைக் கண்டான், அந்த
வேதியன் உடன்தன் தேரில்
விடியுமுன் விதர்ப்பம் சேர்ந்தான்
கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்ற ருக்மிணியைக் கண்ணன் கவர்தல்
ஊர்வலம் கோவில் நோக்கி
உற்றவ ரோடு மங்கை
கார்வணன் வரவைப் பார்த்துக்
கண்களால் தேடிச் சென்றாள்.
தேர்வரும் கண்ணன் கையைத்
தெற்றெனப் பற்றிக் கொண்டாள்
போர்வரும் என்ப தாலே
புயலென விரைந்து சென்றார்.
ஆத்திர முற்ற மன்னர்
அவர்களைத் துரத்திச் செல்ல,
மூத்தவன் படைக ளோடு
மோதவே வந்து சேர்ந்தான்.
தீத்திற மன்னர் தோற்றுத்
திரும்பினர், மங்கை அண்ணன்
கோத்தனன் வாளி வில்லில்
கொல்லவே பாய்ந்து சென்றான்
(மூத்தவன்- பலராமன்)
(மங்கை அண்ணன்- ருக்மிணியின் அண்ணனான ருக்மி என்பவன்)
போரினில் அவனைக் கண்ணன்
பொழுதினில் வென்று தள்ளிக்
கூரிய வாளால் கொல்லக்
குறித்தனன், தங்கை நல்லாள்
சீரிய உள்ளம் கொண்டு
செற்றுதல் விடுவீர் என்றாள்
மாரியின் மனத்தான் ஏற்று
மங்கையை அழைத்துச் சென்றான்.
ருக்மிணி-கண்ணன் திருமணம்
மாவிலைத் தோர ணங்கள்,
மங்கல மாக்கோ லங்கள்,
மேவின இல்லம் தோறும்,
வீதியில் பாட்டும் கூத்தும்.
ஓவிய எழிலின் பாவை,
ஒண்ணுதல், திருவன் னாளைக்
காவியத் தலைவன் கண்ணன்
கடிமணம் புரிந்தான் வாழி!

வாழ்த்து!
அன்னையும் தந்தையும் வாழ்த்துரைத்தார்;
அருமுனி, ஞானியர் வாழ்த்துரைத்தார்;
முன்னவன் மேழியான் வாழ்த்துரைத்தான்;
மொழியறி பாவலர் வாழ்த்துரைத்தார்;
பொன்மணி யசோதையின் கண்மணியாம்,
பொற்புறு மாநகர் துவாரகையின்
மன்னவன் மலரடி வாழ்கவென
வாழ்த்தியே அவனருள் வேண்டுவமே!
(மேழியான்- கலப்பை ஏந்திய பலராமன்)
(நிறைவுற்றது)
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

Anna, you marked your step in this world! Great! Congrats! – Surejamee
LikeLike
நிறைவு பகுதி மனதுக்கு நிறைவாக இருந்தது
LikeLike