நடுக்கடலில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்!                                        (க்ரூஸ் அனுபவங்கள்!) 

Carnival Miracle

‘ஒரு வாரம் க்ரூஸில் போகிறோம்’ என்ற போது எனக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. சின்ன வயதில் ஆ.வி., குமுதம் பத்திரிகைகளில் வந்திருக்கும் SS Rajula பயணிகள் கப்பல் – அந்த நாட்களில் சிங்கப்பூர், மலேசியா செல்லும் பயணிகளுக்காக – விளம்பாம் நினைவுக்கு வந்தது. உடனேயே ‘டைடானிக்’ படமும் ! 

நான்காவதோ, ஐந்தாவதோ படிக்கும் போது ஒரு சம்மரில் மாமாவுடன் ஒரு சிறிய படகில்  பிச்சவரம் ஏரியில் பயணித்தது நினைவுக்கு வந்தது. ஒரு முனையில் ஒருவர் துடுப்புகள் போட, படகின் குறுக்குப் பலகையில் அமர்ந்துகொண்டு, கைகளை நீரில் அளைந்தவாறு பயணித்ததும், நீர்த்தாவரங்களை விலக்கியவாறு குறுகிய நீர்ப்பாதையில் சென்றதும், வறுத்த வேர்க்கடலை, அவித்த பனங்கிழங்கு, சுட்ட சோளம், பலாச்சுளை என வாய்மூடாமல் தின்றதும் மனதில் நிழலாடின! இதே இடத்தில் இதயக்கனியில் எம் ஜி ஆர் மோட்டார் படகில் பயணித்து செய்யும் சண்டை சாகசங்களும் நினைவில் வந்தன. அப்போதில்லாத பயம் இப்போது வந்தது – டைடானிக்கினால் இருக்கலாம்!

சுமார் 33 பேர் – இதில் 13 குழந்தைகள் (3 லிருந்து 11 வயது வரை) – ஒரு குரூப்பாகக் கிளம்பினோம். சான் ஹுசேவிலிருந்து லாஸ் ஏஞ்சலிஸ் வரை வான் வழியும்,  எல் ஏ விமான நிலையத்திலிருந்து  துறைமுகம் வரை தரை வழியும் பயணம் செய்தோம். துறைமுகத்தில் கண்னெதிரே பிரம்மாண்டமான க்ரூஸ் ஷிப் – பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றைக் கப்பலின் மீது ஏற்றி வைத்தாற்போல – அண்ணாந்து பார்க்க வைத்தது. 

லாஸ் ஏஞ்சலிலிருந்து கிளம்பி, மெக்ஸிகோ சென்று அங்கு மூன்று நகரங்கள் பார்த்துவிட்டுத் திரும்பி எல் ஏ வருவதான பயணம். மூன்று நாட்கள் பகலில் மட்டும் காபோ, மசால்டான் மற்றும் வல்லார்டா (மெக்ஸிகோ) இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு குரூஸ் வந்துவிட வேண்டும். மற்ற நாட்கள் மற்றும் இரவுகளில் குரூஸில் பயணம் – ஜன்னல் வழியே அல்லது மேல் டெக்கிலிருந்து வெளியே பார்க்கும்போதுதான் ஒரு பெரிய கப்பலில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடியும். உள்ளே இருக்கும் வரை ஒரு சின்ன ஜெர்க் அல்லது ஆட்டம் இல்லாத சொகுசுப் பயணம்! 

ராயல் கரீபியன் இண்டர்னேஷனல் – Navigator of the seas – சுற்றுலாப் பயணங்களுக்காகவே இயங்குகின்ற கப்பல்கள்!

140000 டன் எடையுள்ள ராட்சஸக் கப்பல்! சுமார் 311 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகலமும் கொண்டது. 22 ktS வேகத்தில் செல்லக்கூடியது ( One knot is one nautical mile per Hr – சுமார் 1.15 miles per hour). 15 டெக்குகள் (அடுக்குகள்), சுமார் 1694 அறைகள், 1230 பணியாளர்கள், 3970 பயணிகள் கொண்டது! 

கப்பலுக்குள் செல்லும் முன்பே, நம் பெட்டிகளை அறை எண்களிட்டுப்  பணியாளர்கள் எடுத்துச் சென்று விடுகிறார்கள் – கிரெடிட் கார்டு போன்ற ஒரு அட்டை ஒவ்வொருவருக்கும் தரப்படுகின்றது. அதுதான் அந்தக் குருஸில் உங்களுக்கான ஆதார் கார்டு! உள்ளே செல்வதற்கும், அறையைத் திறந்து மூடும் சாவியும், ஸ்டார் பக்கில் காபி, பாரில் பீர், சில உணவகங்களில் சாப்பிடவும் இந்தக் கார்டு மிகவும் அவசியம். கப்பலைவிட்டு வெளியே செல்லவும், திரும்பவும் உள்ளே வருவதற்கும் இந்தக் கார்டே பிரதானம்!

அந்தக்கால கருப்பு வெள்ளை ‘வார் மூவீஸ்’ களில் வருவதைப்போல், தற்காலிக ‘ரேம்பு’களில், தலைமுடி காற்றில் பறக்க ஏறி, கப்பலின் வெளி வராந்தாவை அடைந்தோம். மஞ்சள் கலரில் லைஃப் போட்டுகள் வரிசையாகத் தெரிந்தன!  அருகிலேயே ‘தற்காப்பு, பாதுகாப்பு முறைகள்’ எனப் பாடம் கேட்டோம். அபாயச் சங்கு கேட்டால் உடனே வர வேண்டிய இடம் சொன்னார்கள்! கேட்டுக்கொண்டோம். பின்னர்தான் அறைக்கான சாவி – கார்டு – கொடுக்கப்பட்டது!

ஒவ்வொரு டெக்கிலும் இருப்பவை என்ன? எப்படிச் செல்ல வேண்டும்? அன்றைய நிகழ்ச்சிகள் என்னென்ன? இவற்றையெல்லாம் அட்டவணைப் படுத்தி ஒளிரும் போர்டாக வைத்திருக்கிறார்கள். மேலும் அன்றைய நிகழ்ச்சிகள் எங்கு, எத்தனை மணிக்கு என்பதையும், கப்பலின் எந்தப் பகுதிக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும், இண்டரேக்டிவ் திரையில் விரல் நுனியில் அறியலாம்!

கடலைப் பார்த்தபடி பால்கனியுடன் உள்ள அறைகள், பால்கனி இல்லாத அறைகள், கப்பலின் உள்பக்கம் பார்த்தபடியான அறைகள், வட்டவடிவ கண்ணாடி ஜன்னல் வைத்த சின்ன அறைகள் என கப்பலின் முன்னும் பின்னும், பக்க வாட்டிலும் அறைகள் உள்ளன. அறையில் கட்டில், மேஜை நாற்காலி, சின்ன பிரிஜ், லாக்கர், துணிகளுக்கான அலமாரி, வாஷிங் பேஸின், கண்ணாடியுடன் ‘அட்டாச்டு’ பாத் ரூம் என வசதியான அறை.  கண்ணாடி ஜன்னல் வழியே காலையில் சூரியனையும், இரவில் சந்திரனையும் பார்க்கலாம். கப்பல் போகும்போது கடல் நீர் எதிர்த்திசையில் வேகமாகச் செல்வதும், தூரத்தில் நிலா கூடவே வருவதும் பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும்.  265 சதுர அடியிலிருந்து, 1337 சதுரஅடி வரை தனி அறைகளும், ‘சூட்’ களும் உண்டு!  எந்த ஒரு நான்கு நட்சத்திர ஓட்டலின் அறையுடன் ஒப்பிடக்கூடிய வசதிகளுடன் அறைகள், மற்றும் அவற்றின் பராமரிப்பு!

சிறுவர்கள், சிறுமிகள், இளம் தம்பதிகள், நண்பர்கள், குடும்பங்கள், சீனியர் சிடிசன்கள் என வித விதமாக மனிதர்கள்! பல நாட்டினரும் ஒன்றாகக் கூடி, ஒரு வேறுபாடும் இல்லாமல் பயணித்தது சிறப்பு.  

மூன்றாவது டெக்கில் ராயல் தியேட்டர் (பல குவிஸ் ஷோ, மாஜிக் ஷோ, நிறைவு விழா எனக் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி நேர நிகழ்வுகள்!), நான்காவது டெக்கில் சில காஃபி, மற்றும் ஸ்நாக்ஸ் ஷாப், தாண்டினால் ‘Casino Royale’ – லாஸ் வேகஸை நினைவுபடுத்தும் கேளிக்கை மற்றும் சூதாட்ட கியாஸ்குகள்! ஐந்தாவது டெக்கில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள், மேடைகள், கடைகள் – செண்ட், கைக்கடியாரங்கல், துணிமணிகள், தொப்பிகள் என ஷப்பிங் மால்! புத்தகங்களே இல்லாத ஒரு லைப்ரரி, சீட்டு, செஸ் ஆட மேஜைகள் என ஒரு டெக். 

பதினோராம் டெக் – வானம் பார்த்தது! பெரிய நீச்சல் குளம், சுற்றிலும் சாய்ந்தவாறு படுத்துக்கிடக்க சாய்நாற்காலிகள், வேண்டுவோருக்கு இளநீரும், எலுமிச்சையும் கலந்த மதுபானங்கள், இலவசமாக எப்போதும் கோன் ஐஸ்கிரீம், பலவிதமான சிற்றுண்டிகள், குளிர்பானங்கள். சிறுவர்களுக்கான சின்ன நீச்சல் குளம்! ஓரிடத்தில் ஒரு மேடை – அதில் தினமும் காலை குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்தபடியே சொல்லிக்கொடுக்கும் பெண்மணி – எல்லா வயதினரும், பாடலை ரசித்தவாறு உடற்பயிற்சி செய்வது பார்ப்பதற்கு அழகு! எல்லோரும் பார்க்கும்படியாக ஒரு பெரிய எல் ஈ டி திரையில் (Jumbotron screen) சினிமா – உடற்பயிற்சி, கடல்வாழ் உயிரினங்கள், வீட்டுச் செல்லப் பிராணிகள் பற்றிய படங்கள், பழைய ஆங்கிலப் படங்கள் (நான் பார்த்தது ‘அப்பாஸ்’) என நாள் முழுதும் ஓடிக்கொண்டிருக்கும்! பகலில் சூரிய ஒளியுடனும், இரவில் நிலவொளியுடனும், கடற்காற்றின் சுகத்துடன் சாய்வு நாற்காலியில் மணிக்கணக்கில் மயங்கிக்கிடக்கும் அரைகுறை ஆடை மனிதர்கள் – பாசாங்குகளை உதிர்த்து, தன்னுலகில் தனித் தனியாக வாழும் கூட்டத்தினர்! சிறிது தவறினாலும், கால் இடறி படுத்திருக்கும் நபர் மேல் விழுந்துவிடும் அபாயம் இருந்தது! மறக்க முடியாத டெக்!

சுமார் 12 அடி விட்டமுள்ள வட்டக் கிணறு (SPA pool)- நான்கு அடி ஆழத்திற்கு இதமான சூட்டில் குமிழிகளுடன் கடல் நிற நீர்! உள்ளே அமர்ந்து கொள்ள வட்டமான மேடை. சிறு துளைகள் வழியே இதமாய்ப் பிடித்துவிடும் நீர்க் குழல்கள்! கழுத்துவரை நீரில் சாய்ந்து அமர்ந்துகொண்டு வானத்தையோ அல்லது வானம் போல விளக்குகள் மினுக்கும் கூரையையோ பார்த்துக்கொண்டு கனவுகாணலாம்! (Jacuzzi – சுடுநீர் உள்ள குளிக்கும் தொட்டிகள். நீருக்குள் குழாய்கள் மூலம் சுடுநீர் செலுத்தி, உடல் வலிகளைப் போக்க வடிவமைக்கப்பட்டவை – அமைத்தவர்கள் ஜகுஸி சகோதரர்கள் – அவர்கள் பெயராலேயே இந்த வட்டத்தொட்டிகள் அழைக்கப்படுகின்றன!). 10 – 12 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்துகொண்டு அரட்டை அடிக்க முடியும் – நம்ம ஊர் குளத்தங்கரை போல!

12 வது டெக்கில் நடைபாதை – 8 சுற்று சுற்றினால் ஒரு மைல்! நல்ல நடைப் பயிற்சி செய்யலாம். 

மேலும் கீழும் செல்ல நான்கு பக்கமும் கண்ணாடிக் கூண்டு போன்ற லிஃப்டுகள் – முதல் தளத்திலிருந்து, மேலே 15   

ஆம் தளம் வரை இடைவிடாத சர்விஸ்! க்ரூஸின் முன் பக்கமும், பின் பக்கமும் லிஃப்டுகள் – உள்ளிருந்தே கப்பலின் உள்ளே பல தளங்களையும் பார்த்தபடி செல்லலாம்!

ஐஸ் ஸ்கேடிங், பாலே டான்ஸ், மேற்கத்திய கிளாஸிகல் பாடல்கல், இசையும் நடனமும் என எப்போதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தவண்னம் இருக்கிறது! நம் விருப்பம் போல் எங்கு வேணுமானாலும் சென்று பார்க்கலாம் – சில இடங்களுக்குக் கட்டணமும் உண்டு! சிறுவர்கள், பெரியவர்களுக்கான ‘வாட்டர் ஸ்போர்ட்ஸ்’ – நீர்க்குழாயில் சறுக்கல், நீர் ஸ்கேடிங் என எப்போதும் பிஸியாக இருந்தது அந்தப் பகுதியின் க்ரூஸ்!

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு எல்லாம் இரண்டு மூன்று இடங்களில் கிடைக்கின்றன. அமெரிக்கன், மெக்ஸிகன், காண்டினெண்டல், தாய், இத்தாலியன், இண்டர்நேஷனல் என எல்லாவகை உணவுகளும் கிடைக்கின்றன. நம் விருப்பம்போல், எடுத்துக்கொள்ளலாம்! Windjammer தான் மெயின் டைனிங் ஹால். க்ரூஸின் பின் பகுதியில், 11வது தளத்தில், நீச்சல்குளத்தைத் தாண்டிப் போனால் இருக்கிறது. உள்ளே நுழையும் முன், சோப் போட்டுக் கைகளைக் கழுவுவது கட்டாயம்! எல்லாவகை உணவுகளும் ஆங்காங்கே சின்னச் சின்ன ஸ்டால்களில், பெயருடன் அழகாக வைக்கப்பட்டுள்ளன. வெஜிடேரியன், வீகன் உணவுகளும் உண்டு. எங்கள் குரூப் பெரியதாகையால், எங்களில் சிலருக்காக ரஸம், கிச்சடி, கீரை, ஊத்தப்பம், பீன்ஸ் பொறியல் எனச் செய்து கொடுத்தவர் நம்ம ஊர் தென்காசி அலிபாய்! ஜூஸ் வகைகள், பிரட் வகைகள், முட்டையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், பழங்கள், சீரியல் வகைகள், பால், காப்பி, டீ என எதற்கும் குறைவில்லை. சத்தமின்றிச் செல்லும் கப்பலில், கண்ணாடி ஜன்னல் வழியே தூரத்தில் தெரியும் தொடுவானத்தையும், நீலக் கடலையும் பார்த்தவாறு சாப்பிட்டது வித்தியாசமாக இருந்தது.

இரண்டு இரவு டின்னர்கள் ஸ்பெஷல் உடையில் வரலாம் – கப்பல் புகைப்படக் கலைஞர்கள், போட்டோக்கள் எடுத்தனர். வேண்டும் போட்டோக்களைத் தேர்வு செய்து பின்னர் வாங்கிக்கொள்ளலாம்!  

எப்போதும் விடுமுறைக் காலங்களில் க்ரூஸில் செல்லும் மேற்கத்தியப் பாட்டி ஒருவர் சொன்னது: ‘இந்த க்ரூஸில் கூட்டமும், குழந்தைகளும் அதிகம். அமைதியாக, வேளைக்குச் சாப்பிட்டு, தூங்கும் க்ரூஸில்தான் நன்கு ரிலாக்ஸ் செய்யமுடியும். தூங்கி விட்டால் கூட, வந்து போர்வை போர்த்திவிடுவார்கள் – அந்த அளவுக்கு கவனிப்பார்கள்’.  

ஏழு நாட்கள் க்ரூஸில் பயணித்தபடி வாழ்ந்தது, வித்தியாசமான அனுபவமாக இருந்தது!  வீட்டுக்கு வந்தபிறகும் கப்பலில் செல்வது போலவே இருந்தது!