குவிகம் நண்பர்கள் சந்திப்பு – ஒரு நன்றியுரை
‘அடாது மழை பெய்தாலும் விடாது குவிந்திடுவோம் ‘ என்ற சொல்லடைக்கு உதாரணமாகத் திகழ்ந்தது நவம்பர் முப்பதாம் தேதி மாலை தியாகராய நகர் மத்ஸ்யா உணவகத்தில் நடந்த குவிகம் சுந்தரராஜன் , கிருபானந்தன், ராமமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ‘ புத்தக வெளியீடும் நண்பர்கள் சந்திப்பும் ‘ நிகழ்வு. வந்திருந்த நண்பர்களின் அன்பின் குவிகம் .
அந்த உணவகத்தின் தனி மினி ஹால் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வுக்குச் சென்றவுடன் கிடைத்த பழ ஜூஸ் நிகழ்வின் இனிப்பான ஆரம்பம் .
பேங்க் ஆப் பரோடா பெண்மணி நண்பர் அவர்களின் இனிமையான இறை வணக்கத்தோடு ஆரம்பித்த நிகழ்வில் தொடர்ந்த கிருபானந்தன் அவர்களின் வரவேற்பு உரை அவரின் வழக்கமான நகைச்சுவை பஞ்ச் களோடு அமைந்தது. அடுத்து சுந்தரராஜன் அவர்கள் குவிகம் குழுவின் வரலாற்றை விவரித்த விதத்தில் பலருக்குத் தெரியாத பல தகவல்கள் அடங்கி இருந்தன. அடுத்து குவிகம் மின்னிதழில் பங்கேற்கும் அனைவரைப் பற்றியும் அவர்களது சிறப்பினையும் அவர்களின் படைப்புகளின் சிறப்புகளையும் சுருக்கமாக அவர் விவரித்த விதம் அருமை.
தொடர்ந்து குவிகம் பதிப்பகத்தின் இரு புத்தகங்கள் வெளியீடு .
சுந்தரராஜன் அவர்களின் ‘ குவிகம் இதழில் மலர்ந்த மலர்கள் ‘ புத்தகத்தை திருமதி வேதா கோபாலன் அவர்கள் வெளியிட்டு சிறப்பான புத்தக அறிமுக உரை நிகழ்த்த, தொடர்ந்து சுந்தரராஜன் அவர்களின் இளவல் ‘யாரோ ‘ ராமமூர்த்தி அவர்களின் ‘ பச்சைப் பெட்டி ‘ புத்தகத்தை திரு. நாகேந்திர பாரதி அவர்கள் வெளியிட்டு புத்தக அறிமுக உரை நிகழ்த்தினார் .
இருவரின் உரைகளும் புத்தகங்களை வாங்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்ததாக , நிகழ்வில் கலந்து கொண்ட கல்கி ஆசிரியர் திரு ரமணன் அவர்கள் குறிப்பிட்டதே அந்த உரைகளின் சிறப்புக்குச் சான்று .
தொடர்ந்து ஒவ்வொருவராக குவிகம் நண்பர்கள் தங்களது குவிகம் அனுபவத்தையும், சுந்தரராஜன் அவர்களுடனும் , கிருபானந்தன் அவர்களுடனும் ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்த போது , குவிகம் உறுப்பினர் என்ற முறையில் மிகவும் பெருமையாகவும் , நெகிழ்வாகவும் இருந்தது . அப்போது அப்பிடைசர் சூப் அவரவர் இருக்கையிலேயே வழங்கப்பட்டது சூடாகவும் சுவையாகவும் இருந்தது .
நண்பர்கள் ‘ கர்ம வீரர் ‘என்று கிருபானந்தன் அவர்களைக் குறிப்பிட்ட முறையும் .’ இனிய நண்பர் ‘ என்று சுந்தர்ராஜன் அவர்களை உரிமையோடு அடைமொழியோடு குறிப்பிட்டதும் ‘ உண்மை , வெறும் புகழ்ச்சி இல்லை ‘ என்று அனைவராலும் கைதட்டலால் வரவேற்கப் பட்டது . அதற்கு அவர்கள் அடுக்கிய உதாரணங்களை எல்லாம் , நீங்கள் விரைவில் வெளிவரும் , நிகழ்வின் முழுமையான குவிகம் வீடியோவில் , குவிகம் யூடியூப் சேனலில் கண்டு மகிழலாம். இவற்றையெல்லாம் மேடையில் அவர்கள் அருகே அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்த ‘புன்னகை மன்னன் ‘ ராமமூர்த்தி அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அத்துடன் நிகழ்வில் இங்குமங்கும் உற்சாகமாக உதவி செய்து கொண்டிருந்த ராஜாமணி அவர்களையும் குறிப்பிட வேண்டியது கடமை. அவரை இறுதியில் நன்றி உரை சொல்ல தேர்ந்தெடுத்து இருந்ததும் அருமை.
தொடர்ந்து நடந்தது அழகியசிங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து, அவரையும் அவரது துணைவியாரையும் அழைத்து கேக் வெட்டி கொண்டாடியது. கிருபானந்தனும் சுந்தர்ராஜனும் அழகியசிங்கர் அறியாமலே ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு அழகியசிங்கருக்கு மிகுந்த நெகிழ்வை ஏற்படுத்தியது அவரது உரையில் தெரிய வந்தது. அது மட்டும் அல்ல, சுந்தர்ராஜன் அவர்களுக்கும் , கிருபானந்தன் அவர்களுக்கும் நிகழ்வில் நண்பர்கள் கொடுத்த அடை மொழிகளான ‘ இனிய நண்பர் ‘ ‘ கர்ம வீரர் ‘ இரண்டுக்கும் உதாரணமாகவும் திகழ்ந்தது இந்த ஏற்பாடு .
அடுத்து அறுசுவை உணவு. பபே முறையில் ஏற்பாடு செய்திருந்த இந்த இரவு உணவு அவரவர்க்குத் தேவையான அளவு விருப்பமான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடும் வகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . அத்துடன் கூடவே மினி ஹாலில் அவரவர் மேஜைக்கே வந்தே பரிமாறப்பட்ட சூடான தோசையும் சட்டினியும் பல முறை நண்பர்களைக் கேட்டு வாங்கிச் சுவைக்க வைத்தது நாம் பலரும் அறிந்த ‘ மத்ஸ்யா உணவகத்தின் உணவு ருசிக்கு அடையாளம்.
அதையும் தொடர்ந்தது ஒரு அதிசயம். கல்யாண வீடுகளில் அளிக்கப்படும் தாம்பூலப் பை போல் ஒரு பை வந்திருந்த அனைவர்க்கும் வழங்கப்பட்டது . குவிகம் நண்பர் ஒருவரின் உபயமாக வழங்கப்பட்ட அதில் சத்துமாவுப் பொட்டலமும் நாட்டுச் சர்க்கரைப் பொட்டலமும். வரவேற்பு ஜூஸோடு இனிப்பாக ஆரம்பித்த வைபவம் இனிப்புப் பொட்டலங்களோடு நிறைவுற்றது ஒரு சுவையான முடிவு .
மொத்தத்தில் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்த ஒரு திருமண வரவேற்பு போல் நடந்து முடிந்த இந்த குவிகம் நண்பர்கள் சந்திப்பு நம் நெஞ்சில் நிறைந்து ( வயிற்றிலும் தான் ) நம் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் . குவிகத்திற்கு நன்றி.
சிறகு ரவி அவர்களின் தொகுப்பு:
குவிகம் கண்டு உண்டு மகிழ ஒரு சந்திப்பு 👏
முன்னொரு காலத்தில் தேவநேயப்பாவாணர் அரங்கில் எந்தப் புத்தக வெளியீட்டாக இருந்தாலும் முடிவில் இரவு உணவு உண்டு. அது பாக்கெட்டாக இருக்கலாம்.. இல்லை பாக்குத் தட்டாக இருக்கலாம். காலப்போக்கில் அது குறைந்து போய் தேனீர் பிஸ்கெட் என்று ஆகி விட்டது.
இன்றைய நிகழ்வு அதை உடைத்து விட்டது.
ஆறு மணிக்கு ஆரம்பித்து ஏழரைக்கு முடிந்த நிகழ்வு தேனீருடன் ஏழரையாக நில்லாமல் புஃபே டின்னராக பரிமளித்தது ஏற்பாட்டாளர்களின் இரையாண்மை.
சிறு கூடத்தில் நாற்பது குசன் நாற்காலிகள் லவலேசும் முதுகை உறுத்தாமல்! வந்திருந்தவர்கள் முப்பது சொச்சம். முக்கால்வாசி பேருக்கு அறுபது சொச்சம். குவிகம் வெளியிட இரட்டை நாயனத்தில் ஒருவரான சுந்தர்ராஜன் எழுதிய குவிகம் இதழில் மலர்ந்த மலர்கள் ஒன்று. அவரது இளவல் யாரோ ராமமூர்த்தி எழுதிய மக்கள் மன்னன் இரண்டாவது என இரு நூல்கள் வெளியீடு.
ஒருங்கிணைத்த கிருபானந்தன் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாகப் பேசி நெறியாள்கையை சிறப்பாகக் கையாண்டார்.
வேதா கோபாலன், நாகேந்திர பாரதி இருவர் இரு புத்தகங்களைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்த இனிதே நடந்தேறியதில் ஏற்புரைகள் பாயச முந்திரி.
ஒரு சிலர் அனுமதிக்கப்பட்ட இரண்டு நிமிடங்களுக்கு மேல் பேச நிகழ்வு சடுதியில் மேசை மாறி உணவுக்குப் போனது.
நாலைந்து வகை இனிப்புகள்; ரக வாரியாக சிற்றுண்டிகள், ரசம், தயிர் என சாத வகைகள்; நடுவில் கவிதையாக புலவ்!
நாளை விருட்சம் மௌலிக்கு பிறந்தநாள் என்று இன்றே அவரைக் கேக்காமல் கேக் வெட்டச் செய்த பெருந்தன்மை வேறு ஒரு பதிப்பாளருக்கு வருமா என்பது சந்தேகம்.
ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் இருந்து பழைய பழகிய நட்பூக்களைப் பார்த்த என் உவகை சொல்லில் அடங்கா! ஒரு திருமணம் போல செல்பவருக்கு தாம்பூலமாக சத்து மாவு மற்றும் நாட்டுச் சக்கரை பாக்கெட் கொடுத்ததும் புதுமை.
வீட்டருகில் விருகம்பாக்கம் அருகில், உவந்து இறக்கி விட்ட மகிழுந்து தென்காசி முனைவர் கணேசன் நட்பை பெரிதும் மதிப்பவர் என்று சொல்லவும் வேண்டுமோ!
வெளியிட்ட புத்தகங்கள் தவிர இன்னபிற நூல்களும் கைத்தலம் பற்ற, கனா கண்ட தோழியானேன்!
நிகழ்வின் காணொளி காண இங்கே சொடுக்கவும்:












