
சிறுபாணாற்றுப் படையில் ஒரு பாணர் மற்றொரு பாணரிடம், தான் பரிசு பெற்ற மன்னனிடம் சென்று பரிசு பெற ஆற்றுப்படுத்துகிறார்,. இதை இயற்றியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்பவர் ஆவார். இவர் இடைக்கழி நாட்டின் நல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். தத்தன் என்பது இவர் இயற்பெயர். ந என்னும் சிறப்புப் பொருளைத் தரும் இடைச்சொல் சேர்த்து நத்தத்தன் என்றாயிற்று. இவர் எழுதியதாக வேறு பாடல் எதுவும் கிடைக்கவில்லை. இந்நூல் மொத்தம் 269 அடிகள் கொண்ட அகவற்பாவாலானது.
இந்நூலின் பாட்டுடைத் தலைவன் ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் ஆவான். இவனைப் பற்றிப் புறத்திணை நன்னாகனார் எழுதிய பாடல்கள் இரண்டு புறநானூற்றில் கிடைத்துள்ளன (176, 376).
இவன் மாவிலங்கை என்ற ஊரைத் தன் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.. ஓய்மான்நாடு திண்டிவனம் அருகில் உள்ளது.
விறலியரும் பாணரும் கடம்ப மரத்தின் அடியில் தங்கி இருக்கின்றனர். இந்நூலில் விறலியர் வருணனை சிறப்பாக உள்ளது.
வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி,
நெய் கனிந்து இருளிய கதுப்பின், கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன்
மயில் மயில் குளிக்கும் சாயல், சாஅய்
விறலியர் மென்மையாக விழும், தாழ்வாகப் பெய்யும் மழை மேகத்தின் அழகுடன் இருந்த எண்ணெய் தடவிய கரிய கூந்தலைக் கொண்டவர்கள் . நீலமணி போலும் கண்களையுடைய தோகைகளை விரித்து ஆடும் ஆண் மயில்கள் விறலியரின் அழகுக்கு ஒப்பாகத் தாம் இல்லையே என்று தங்கள் பெண் மயில்களின் பின் மறைவதற்குக் காரணமான மென்மையைப் பெற்றவர்கள்.
அப்பொழுது அங்கு பரிசில் பெற்று வரும் ஒரு பாணன் தங்கியிருக்கும் பாணனிடம் கூறுகிறான். “உலகத்தில் பரிசில் தருவாரை விரும்பி, வள்ளல்கள் இல்லாததால் வெறுப்பு மிக்க வருத்தத்துடன், வறுமைத் துயரம் நின்னைக் கொண்டு போவதால், வழி வருத்தம் தீர்ந்திருந்த, பேரறிவு உடைய பரிசில் நாடுபவனே, நான் கூறுவதைக் கேட்பாயாக!”
குட புலம் காவலர் மருமான், ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த,
எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்,
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே, அதாஅன்று
மேற்குத் திசையைக் காக்கும் சேர மன்னரின் குடியில் பிறந்தவனான, பகைவருடைய வடபுலத்தின்கண் உள்ள இமய மலையின் மேல் சேரரின் சின்னமான வளைந்த வில்லினைப் பொறித்தவனான, கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோள்களையுடையவனான, ஓடும் தேரையுடைய குட்டுவனின், பெருகி வரும் நீரினையும் வாயிலையுமுடைய வஞ்சி நகரத்தில் கிடைக்கும் பரிசும் நான் பெற்று வரும் பரிசிலை விடச் சிறிதே. அது மட்டுமன்று.
முத்து மாலையை அணிந்தவனான, வெண்குடை உடையவனான, கண்ணுக்கு அழகாகத் தோன்றும் மலர்ச்சரத்தை அணிந்தவனான, விரைந்து செல்லும் தேரையுடைய பாண்டியனின் தமிழ் வீற்றிருந்த, பொறுத்தற்கு அரிய மரபையுடைய, மகிழ்வைத் தருகின்ற தெருக்களையுடைய மதுரையில் பெறும் பரிசும் சிறிதே. அது மட்டுமன்று.
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும்
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்,
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே, அதாஅன்று
இடி தன்னுடைய கழுத்தினால் உரசும் கதவையுடைய பகைவரின் உயர்ந்த தொங்கும் கோட்டையை அழித்தவன் சோழன். அவன் ஒளியுடைய கடகம் அணிந்த பெரிய கைகள் உடையவன். தான் தேடாது அடைந்த நல்ல புகழையுடையவன். நல்ல தேர்களையுடைய சோழனின் குடிமக்கள் நாட்டை விட்டு விலகாத சோழ நாட்டின் உறந்தையில் கிடைக்கும் பரிசும் சிறிதே. அது மட்டும் அன்று” என்று கூறிய அப்பாணன் கடை ஏழு வள்ளல்கள் பற்றிக் கூறுகிறான், சங்க நூல்களில் இதிலும் புறநானூறு-158-ஆம் பாடலிலும் கடை ஏழு வள்ளல்கள் காட்டப்படுகின்றனர்
பேகன்
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்
மழை பொய்க்காமல் பெய்ததால் செழிப்பாக உள்ள மலைப் பக்கத்தில் குளிரால் அது வருந்துகிறது என்று எண்ணி, ஒரு காட்டு மயிலுக்குத் தன் போர்வையைக் கொடுத்த, பெறுவதற்கு அரிதான வலிமையையும் அழகையுமுடைய, ஆவியர் குடியில் பிறந்த அண்ணலும், பெரிய மலையின் தலைவனுமான பேகனும்,
பாரி
……………சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்
வண்டுகள் உண்ணுவதற்காகத் தேனைச் சொட்டும் நறுமணமான மலர்களையுடைய நாக மரங்கள் கொண்ட நீண்ட வழியில் உள்ள, சிறிய மலர்களையுடைய முல்லைக் கொடிக்குத் தன் பெரிய தேரினைக் கொடுத்தவனும், நிறைந்த வெள்ளை அருவிகள் மலைச் சரிவிலிருந்து விழும் பறம்பு மலையின் மன்னனுமான பாரியும்,
காரி
……………………… கறங்கு மணி
வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல் தொடித் தடக் கை காரியும்
ஒலிக்கும் மணிகளையும் வெள்ளைப் பிடரி மயிரினையுமுடைய குதிரைகளுடன், உலகத்தோர் வியக்கும்படி, அன்பான நல்ல சொற்களைப் பொருள் வேண்டி வருபவர்களுக்கு அளிப்பவனும், சினம் மிகுந்த, சிறப்புடைய, இமைக்கும், அச்சத்தை உண்டாக்கும் பெரிய வேலினை உடையவனும், சுழல இட்ட கடிகைகளையுடைய (வளையல்களையுடைய) பெரிய கைகளையுடைய காரியும்,
ஆய் அண்டிரன்
…………… நிழல் திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்து புலர் திணிதோள்
ஆர்வ நன் மொழி ஆயும்
ஒளியுடன் விளங்கும் நீல மணியையும், பாம்பு கொடுத்த ஆடையையும், ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவனுக்கு விருப்பத்துடன் கொடுத்தவனும், வில்லைத் தாங்கிய சந்தனம் உலர்ந்த உறுதியான தோளினை உடையவனும், ஆர்வத்துடன் நல்ல சொற்களைக் கூறுபவனுமான ஆயும்,
அதிகன்
……………………….. மால் வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும்
உயர்ந்த மலையின் கமழும் பூக்களையுடைய மலைச் சரிவில் உள்ள அழகான அமிர்தமாகிய, விளைந்த இனிய நெல்லிக்கனியை, ஒளவைக்குக் கொடுத்தவனும், வலிமை உடைய சினம் நின்று எரியும் பெரிய வேலையும், ஒலிக்கும் கடலைப் போன்ற படையை உடையவனுமாகிய அதிகனும்,
நள்ளி
…………………………. கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை,
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும்
தங்கள் மனதில் உள்ளதை மறைக்காது, தன்னிடம் அன்புடன் இருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை இடையூறு இல்லாது நன்றாக வாழ்வதற்காக எல்லையில்லாதுப் பொருட்களைக் கொடுத்தவனும், போரில் வெற்றி பெற்ற பெரிய கைகளையுடையவனும், துளியையுடைய மழை பொய்யாது பொழியும், காற்றுத் தங்கும் உயர்ந்த உச்சிகள் கொண்ட அடர்ந்த மலைகளையுடைய நாட்டையுடைய நள்ளியும்,
ஓரி
…………………….. நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரியும்
நறுமணமான மலர்கள் நெருங்கி இருந்த இளமை முதிர்ந்த சுரபுன்னை மரங்களையும் சிறிய மலைகளையும் உடைய நிலங்களைக் கூத்தாடுபவர்களுக்குக் கொடுத்தவனும், காரி என்ற பெயரையுடைய குதிரையையுடைய காரி என்பவனோடு போரிட்டவனும், ஓரி என்ற பெயரையுடைய குதிரையையுடைய ஓரியும்,என்று கடை ஏழு வள்ளல்கள் காட்டப்படுகின்றனர்.
அக்கடையெழு வள்ளல்கள் மேற்கொண்ட ஈகையாகிய பாரத்தை, பரந்த கடலை வேலியாகக் கொண்ட அகன்ற உலகம் தழைக்க, ஒருவனாகத் தானே தாங்கிய வலிமையுடைய முயற்சியை உடையவன் நல்லியக்கோடன் என்ப்து கீழ்க்கண்ட
அடிகளால் காட்டப்படுகிறது.
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்,
விரிகடல் வேலி வியலகம் விளங்க,
ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள்
மேலும் ”தொன்மையான பெருமைமிக்க இலங்கையின் பெயரை, நகரம் தோன்றிய பொழுதில் இருந்து கொண்ட, அழித்தற்கு அரிய மரபை உடைய, மாவிலங்கையின் சிறந்த மாவிலங்கை மன்னர்கள் பலருள்ளும் மறு இல்லாது விளங்கும், பழியில்லாத குறியைத் தப்பாத வாளினையுடைய, புலியைப் போன்ற மிகுந்த வலிமையுடையவன் அவன். ஓவியர் குடியில் பிறந்த பெருமான். களிற்றைச் செலுத்தியதால் ஏற்பட்ட தழும்பு உடைய அசையும் வீரக் கழல்களை அணிந்த திருத்தமான அடிகளையும், பெண் யானைகளை வாரி வழங்கும் மழையைப் போன்ற வள்ளன்மையுடைய பெரிய கைகளையும் உடையவன். பல இசைக் கருவிகளையுடைய கூத்தர்களைப் பாதுகாப்பவன்” என்று மன்னனின் பெருமையைப் பேசுகிறான்.
அடுத்து தாங்கள் சென்றதைக் கூறுகிறான். ”பெரும் புகழையுடைய நல்லியக்கோடனைக் காண்பதற்கு, விரும்பிய கொள்கையுடன், மற்றவர்களால் பொறுத்தற்கு அரிய மரபையுடைய அவனைப் பற்றியும் அவனுடைய தந்தையைப் பற்றியும் அவனுடைய வானைத் தீண்டும் உயர்ந்த மலையின் வளமையையும் பற்றிப் பாடிச் சில நாள்களுக்கு முன் நாங்கள் அவனிடம் சென்றோமாக.
அவனைக் கண்பதற்கு முன் கூரையின் கைம்மரம் தளர்ந்து விழும் பழைய சுவரில் கூட்டமாகிய கறையான் அரித்த புழுதியில் உள்துளையுடைய காளான் பூத்த, வருந்துவதற்குக் காரணமான பசியால் ஒடுங்கிய மெலிந்த இடையையும், வளையல் அணிந்த கையையும் உடைய என் கிணைப் பறையை அடிக்கும் மனைவி, அவளுடைய பெரிய நகத்தினால் கிள்ளிக் கொணர்ந்த குப்பையில் வளரும் வேளைக்கீரையை உப்பு இல்லாமல் வேக வைத்து, பழித்துப் பேசுபவர்கள் காண்பதை நாணி, கதவை அடைத்து விட்டுப் பெரிய சுற்றத்தார் ஒன்றாக இணைந்து உண்ணும் நிலைமை பெற்றிருந்தோம்”
உப்பு இல்லாமல் கீரையை உண்பதைப் பிறர் கண்டால் பழிப்பரே என்று வெட்கப்பட்டுக் கதவை அடைத்தார்கள் என்பது அவர்களின் செம்மையைக் காட்டுகிறது.
”இப்பொழுது மதம் வடிகின்ற கன்னத்தையும், கொடுமையுடைய வலிமையையும், அசையும் மணிகளையும், சிறிய கண்களையுமுடைய யானையுடன், பெரிய தேரினையையும் அவனிடம் பெற்றவர்களாக, அங்கிருந்து நாங்கள் வருகின்றோம். நீங்களும் எயிற்பட்டினத்திற்கு நெய்தல் நிலம் வழியாகச் செல்லுங்கள்.பரதவர் பெண் அரித்த, பழையதாகிய கள்ளைப் பரதவர் உங்களுக்குக் கொணர்ந்துக் குடிக்கக் கொடுப்பார்கள். மலர்க் கொத்துக்களையுடைய தோட்டங்களை உடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன், அரும்பு அவிழ்ந்த (மலர்ந்த) மாலையை அணிந்த நல்லியக்கோடனைப் பாடி, தாள இறுதி உடைய குழலின் தாளத்திற்கு ஆடும் விறலியருடன் நீங்கள் உலர்ந்த குழல் மீன் குழம்பை மனைதோறும் மனைதோறும் பெறுவீர்.
வேலூரை நீங்கள் அடைந்தால் மிகுந்த வெயிலுக்கு வருந்துகின்ற வெப்பம் விளங்குகின்ற குடிசைகளில் உள்ள எயினக் குலத்து மகளிர், இனிய புளியை இட்டுச் சமைத்த வெப்பமான சோற்றை, இனிய மாமரத்தின் தளிர்போன்ற மேனியையும் சில கை வளையல்களையும் அணிந்த நும் குடும்பத்தின் பெண்களோடு, நீவீர் ஆமான் சூட்டு இறைச்சியுடன் நும் பசி கெடுமாறு பெறுவீர்.
ஆமூரை அடைந்தால் மருதநில உழவரின் தங்கை வைரம் பாய்ந்த மரத்தினால் செய்த உலக்கையின் பூணின் முகத்தைத் தேயச் செய்த குற்றுதல் அமைந்த மாட்சிமைப்பட்ட அரிசியினால் செய்த கட்டியாகிய வெள்ளைச் சோற்றை, பிளந்த காலையுடைய நண்டின் கலவையுடன் உங்களுக்குத் தருவாள்.
நல்லியக்கோடனின் விழாக்கள் கொண்டாடப்படும் தெருக்களையுடைய பழமையான ஊர், தொலைவில் இல்லை. சிறிது அண்மையில் தான் உள்ளது.அவன் அரண்மனை வாயில் கதவுகள் எப்பொழுதும் அடைக்கப்படமாட்டா
தான் கூறுவதை அறியாத அறியாமை உடையவர்களிடம் அறியாமையுடையவன் போல் தோன்றுதலும், தன்னை ஒத்த அறிவுடையோரிடம் அறிவைக் காட்டுதலும், பரிசிலரின் தகுதியை அறிந்து ஏற்றவாறு கொடுத்தலும், எல்லையில்லாமல் கொடுத்தலும் ஆகிய பண்புகளால், பிறரிடத்தில் பொருளைப் பெற்று வாழும் பரிசிலர் அவனைப் புகழ்வார்கள்.,
விண்மீன்கலாகிய சுற்றத்தார் நடுவில் வெண்ணிலவைப் போல வீற்றிருக்கும் அவனை அணுகி பாடும் துறைகள் யாவும் பாடுதற்கு அமைந்த பயன் விளங்குகின்ற கூடுதல் இசையைக் கொண்டது இனிய யாழ். இசை நூல்கள் கூறுவதைப் போல் செம்மையாக ஆக்கி அவனைக் குறையாது நீவீர் பாடுவீராக.அவன் என்ன செய்வான் தெரியுமா?”
…………………………………………….மாசில்
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇப்,
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன் முன்
பனி வரை மார்பன் பயந்த நுண் பொருள் 240
பனுவலின், வழாஅப் பல் வேறு அடிசில்
மாசு இல்லாத மூங்கிலின் தோலை உரித்தாற் போன்ற ஆடையை உடுக்கச் செய்து, பாம்பு சினந்து எழுந்தது போன்ற எழுச்சியைத் தரும் கள்ளைக் கொடுத்து, நெருப்புக் கடவுள் வேண்டியதால் காண்டவம் என்ற காட்டினை எரித்த அம்பையுடைய அம்புறாத்தூணியையும் பூக்கள் வரைந்த கச்சை அணிந்த அருச்சுனனின் அண்ணனாகிய, பனியுடைய இமயத்தைப் போன்ற மார்பையுடைய வீமசேனன், எழுதிய நுண்மையான சமையல் குறிப்புகளுடைய நூலினின்றும் வழுவாது, பல்வேறு உணவு வகைகளைத் தாமே அருகில் நின்று உம்மை உண்ணச்செய்வான்.பின்னர் வலிமையுடைய வெற்றியுடன், பகைவரை அவர்களுடைய நிலத்திலிருந்து அகற்றி, வெற்றியை உடைய மன்னர்களின் அரண்களை அழித்து, அங்குக் கிடைத்த பொருளால் தன்னிடம் விரும்பி வருபவர்களுக்கும் பாணர்களுக்கும் உதவி, அவர்களுடைய துன்பத்தைத் தீர்த்த பின்னர், தன்னுடைய படை மறவர்கள் கொண்டுவந்து தந்த மிகுந்த பொருள்களுடன்,அழகிய தேர் ஒன்று தருவான்.குதிரையின் ஓட்டத்தைப் பின் நிறுத்தும் மிக்க வலிமையுடைய கால்களையும் ஒளியுடைய முகத்தையுடைய எருதையும், அதனைச் செலுத்தும் பாகனுடன் தருவான். அன்றே உங்களுக்கு அவன் பரிசிலைத் தருவான்” என்று பாணன் கூறுகிறான்.
………………………………………………….மென் தோள்
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர்,
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்
மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி,
துணி மழை தவழும் துயல் கழை நெடுங்கோட்டு, 265
எறிந்து உரும் இறந்து ஏற்று அருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான், கொய் தளிர்க் கண்ணி
செல் இசை நிலைஇய பண்பின்
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே.
மேலும்,” மென்மையான தோள், ஆடை அணிந்த இடை, தளர்ந்த தன்மையையுடைய மகளிர் அகில் புகையை ஊட்டுவதற்கு விரித்த அழகும் மென்மையுமுடைய கூந்தல் போலே, நீலமணியின் நிறத்தையுடைய மயிலின் தோகையை மஞ்சின் இடையே விரித்து, தெளிந்த முகில் தவழும் அசையும் மூங்கிலையுடைய நெடிய உச்சியில் இடி இடித்துப் பிறர் ஏறுவதற்கு அரிதாக உள்ள மலைகள் மிக்க நாட்டிற்குத் தலைவன், கொய்யப்பட்ட தளிரினால் தொடுத்த மாலை அணிந்த பிறர்பால் நில்லாது செல்லும் இயல்புடைய புகழ் தன்னிடத்தில் நிலைத்து நிற்பதற்குரிய பண்பையுடைய நல்லியக்கோடனிடம் நீவிர் விரும்பிச் செல்லுங்கள்” என்று சிறுபாணன் ஆற்றுப்படுத்துவதாகச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

என் கல்லூரிக் காலத்தில் பாடமாகப் பயின்ற ‘சிறுபாணாற்றுப்படை’யை மீண்டும் எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர் வளவ துரையன் அவர்களுக்கு நன்றி!
LikeLike