சங்க இலக்கியங்களின் காலம்

book4

         சங்க காலப் புலவர்களின் பல்வேறு அறிவியல் சிந்தனைகளை சென்ற இதழ்க் கட்டுரையில் கண்டோம். இக்கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக சங்க இலக்கியங்களின் காலம் பற்றிய செய்திகளைக் காணலாம்.

         சங்க இலக்கியங்களின் காலம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இருப்பினும் கிமு ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி கிபி ஐந்தாம் நூற்றாண்டு வரை சங்க இலக்கியங்களின் காலம் என அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. சங்க காலத்தின் தொடக்கத்தைப் பற்றியும் அதனுடைய காலத்தினைப் பற்றியும் அரிந்து கொள்ள கல்வெட்டுகள் உதவி செய்கின்றன.

         (1) தமிழகத்தில் கிடைக்கும் பழமையான கல்வெட்டுகள் ‘பிராமி’ கல்வெட்டுகள் ஆகும். அதற்கு முந்தைய இலக்கியங்களோ, கல்வெட்டுகளோ கிடைக்கவில்லை. இதனால் சங்க காலத்தின் தொடக்கத்தை கிமு மூன்றாம் நூற்றாண்டு என வரையறுத்துள்ளனர். (2) அசோகர்-இன் கல்வெட்டுகளின் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு. இவருடைய கல்வெட்டுகளில் தமிழகத்தில் உள்ள சேர, சோழ, பாண்டிய அரசுகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. (3) கலிங்க மன்னன் காரவேலன், கிமு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இவனுடைய ‘ஹாதிகும்பா கல்வெட்டில்’ (கல்வெட்டின் காலம் கிமு 155) 113 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட தமிழக அரசுகளின் கூட்டணி பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

         (4) சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு எடுத்த விழாவில் இலங்கை மன்னன் “கயவாகு” கலந்துகொண்டான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கயவாகுவின் காலம் இலங்கையின் “மகாவம்சம்” என்ற நூலில் கிடைக்கிறது. இதன் மூலம் சேரன் செங்குட்டுவனின் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு என முடிவு செய்யப்பட்டுள்ளது. (5) மௌரியர்களின் படையெடுப்பு, நந்த வமிசத்து அரசர்கள் கங்கைக் கரையில் புதைத்து வைத்திருந்த பொன் குடங்கள் பற்றிய குறிப்பு ஆகியவை எட்டுத்தொகையில் காணப்படுகின்றன.

அசோகரின் கல்வெட்டு

         குஜராத் மாநிலம் கத்தியவார் பகுதியில் உள்ள கிர்னார் என்ற ஊரில், ஒரு பெரிய பாறையில் அசோகரின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டாவது கல்வெட்டில்தான் மரம் நடுதலுக்கான ஆணை பொறிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஷாபாஜ்கடி, கால்சி, தவுலி, ஜவுகதா பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளிலும் இந்த உத்தரவு பொறிக்கப்பட்டுள்ளது. பிராகிருத மொழியிலும், பிராமி எழுத்துகளிலும் இந்தக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

         மனிதர்கள், விலங்குகளுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக மருத்துவமனைகள் அமைப்பதற்கான ஆணை இக்கவெல்ட்டுகளில் உள்ளது. மருந்துச் செடிகள், வேர்கள், பழ மரங்கள் ஆகியவற்றைக் கொண்டு மருத்துவ உதவி அளிக்கவும், அவற்றைத் தேவையான இடங்களில் இருந்து வரவழைக்கவும், பயிரிடவும், சாலைகளில் மனிதர்கள், விலங்குகளுக்கு பயன்தரும் மரங்கள் நட வேண்டுமென்றும், கிணறுகள் தோண்ட வேண்டுமென்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

         அசோகர் வென்ற நாடுகளில் எல்லாம் இதுபோன்ற மருத்துவ உதவிகள் செய்யப்பட வேண்டுமென்று விளக்கும் இந்தக் கல்வெட்டு, வேறு சில நாட்டுப் பகுதிகளிலும் இந்த மருத்துவ அமைப்பு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கிறது. இந்த வகையில், சங்ககாலத் தமிழ் மன்னர்களின் பெயர்கள், இலங்கையின் பெயர், யவன அரசன் அந்தியாகோவின் பெயர் ஆகியவை கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. சோடா, பாண்டா, சதிய புத, கேதல புத ஆகிய பெயர்கள் கல்வெட்டில் உள்ளன.

         இந்தப் பெயர்கள், சோழா, பாண்டியா, சதியபுத்ர, கேதலபுத்ர ஆகிய அரசர்களைக் குறிப்பிடுவதாகவும், இவர்கள் அசோகரின் ஆட்சி எல்லையில் அமைந்த நாடுகளின் தலைவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். சோழா, பாண்டியா ஆகியவை தமிழ் மன்னர்களின் பெயர்கள் என்றும், சதியபுத என்பது அதியமான் என்ற குறுநில மன்னரைக் குறிக்கும் என்றும் அறியலாம்.

         மேலே சொல்லப்பட்ட காரணங்களால் கிமு ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி கிபி ஐந்தாம் நூற்றாண்டு வரை சங்க இலக்கியங்களின் காலம் என அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

வானிலையியல்

         வானிலை, காலநிலை பற்றிய அறிவியல் பல துறைகளோடு தொடர்புடைய ஓர் அறிவியல் துறையாகும். சங்க இலக்கியத்திலும் பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய செய்திகள் கானக் கிடைக்கின்றன என முன்னரே பார்த்தோம். வானிலையியல், காற்று, மேகங்கள் ஆகியவற்றின் இயக்கங்களைப் பற்றி ஆய்வு செய்கையில் இயற்பியலோடும், பசுங்குடில் வாயுக்கள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி ஆய்வு செய்கையில் வேதியியலோடும், வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களால் தாவரங்களும் உயிரினங்களும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்கையில் தாவரயியல் மற்றும் உயிரியளோடும் எனப் பல்வேறு அறிவியற் துறைகளோடு தொடர்புடையது.

         வானிலை என்பது வெதர் (weather) என்றும் காலநிலை என்பது கிளைமேட் (climate) என்றும் ஆங்கிலத்தில் வழ்ங்கப்படுகிறது.

         “காலநிலை என்பது நாம் எதிர்பார்ப்பது; வானிலை என்பது            உண்மையில் நிகழ்வது. (Climate is what we expect      and weather is        what we get)”

என்பது மார்க் ட்வைன் அவர்களின் கருத்தாகும். வானிலை, காலநிலை ஆகியவை பற்றிய கல்வியினை மெடியராலாஜி (Meteorology) என்ற ஆங்கிலச் சொல்லால் அழைக்கின்றனர். காலநிலை பற்றிய கல்வி, காலநிலையியல் என்ற ஒரு தனித்துறையாக கிளைமேடாலஜி (Climatology) என்ற ஆங்கிலச் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. வானிலையியல் என்பது

  • விமான வானிலையியல் (Aviation Meteorology)
  • வேளாண் வானிலையியல் (Agricultural Meteorology)
  • கடல் சார்ந்த வானிலையியல் (Marine Meteorology)
  • நுண் வானிலையியல் (Micro Meteorology)
  • பரந்த வானிலையியல் (Macro Meteorology)
  • சமநேர வானிலையியல் (Synoptic Meteorology)
  • நிகழ்வியக்க வானிலையியல் (Dynamic Meteorology)

என்று பல பிரிவுகளை உள்ளடக்கியது.

         வானிலை என்னும் சொல் வளி மண்டலம் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிவிக்கும் சொல்லாகும். அதாவது பூமியை ஒட்டியுள்ள காற்று அல்லது வளிமண்டலம் வெப்பமாக உள்ளதா? குளிராக உள்ளதா? ஈரமாக அல்லது உலர்ந்து உள்ளதா? காற்றோட்டமே இல்லாமல் அமைதியாக உள்ளத? அல்லது புயல் வீசுகிறதா? மேகமற்று உள்ளதா? அல்லது வானம் மேகங்களால் மூடப்பட்டிக் காணப்படுகிறதா? என்பதனையே வானிலை எனக் கருதுகின்றனர்.

         எனவே வானிலை என்பதனை ஒரு குறிப்பிட்ட இடத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வானிலைக் கூறுகளின் தொகுப்பு எனலாம். எடுத்துக்காட்டாகச் சென்னையில் காலை எட்டுமணிக்கு நிலவும் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றழுத்தம், காற்றின் திசைவேகம், பார்வைத்தூரம், மேகங்களின் வகைகள், அளவு, உயரம், ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் அந்நேரத்தில் மழை, இடி, பனி, ஆகியவை உள்ளனவா? எனக் கூறும் வானிலைத் தரவுகளின் தொகுப்பே சென்னையின் வானிலையாகும்.

         காலநிலை என்பது ஒரு பெரிய பகுதியின், ஒரு பெரிய கால அளவில் சராசரியாக வானிலை எவ்வாறு இருந்தது என்பதைனைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக சனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழகம் குளிர்ந்த காலநிலையோடு, பெரும்பாலும் மழையின்றி, தெளிவான வானத்தோடு காணப்படும் என்பது தமிழகத்தி குளிர்கால காலநிலையைக் குறிப்பிடுகிறது.

         வானிலையும் காலநிலையும் மனிதன் உருவாவதற்கே காரணமாய் உள்ளவை. 18,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதோர் புவிவெப்பமயமாதலின் காரணமாய் மெசபடோமிய நாகரிகம் தோன்றியிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். மொகஞ்சதாரோ-ஹராப்பா நாகரிகம் அழிந்ததற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.