குலோத்துங்கன் (தொடர்ச்சி)

முன்கதை: கருணாகரத்தொண்டைமான், சோழப்படையுடன் வடகலிங்கநாட்டின்மேல் படையெடுத்த செய்தியறிந்து, கலிங்கமந்திரி எங்கராயன், கலிங்கமன்னன் அனந்தவர்மனுக்கு அறிவுரை சொன்னான்.
மந்திரி, முடிவில் சொன்னான்: “மன்னரே, இந்தப்படைமுன்னே, நமது படைவலி எத்தன்மைத்தாகும், என்பதைத்தாங்கள் எண்ணித் துணிவீராக. நாளை, அச்சேனை தங்கள் முன் நிற்கும் போது, நான் கூறியதின் உண்மையை நீர் அறிவீர்” என்றான்.
“மந்திரியாரே! பலநாட்கள் போர்த்தொழில் அமையாது இருக்க, என் தோள்கள் தினவெடுத்துக்கிடக்கிறது. நீ இவ்வாறு சொன்னது உன் பேதைமையைக் குறிக்கிறது. நன்று. நமது நாற்படையும் அநபாயன் அனுப்பியப் படையுடன் போர்புரியட்டும்” என்று ஆணையிட்டான். கலிங்கமெங்கும் போர்முரசறிவிக்கப்பட்டது. கலிங்கர் படை புறப்பட்டது. திசைகள் துகள்பட்டன. ஒருவீரனின் உடலுக்கும், மறுவீரன் உடலுக்கும் இடைவெளியில்லாமல் இருக்குமாறு, கலிங்கப்படைகள் கருணாகரனின் படைமுன் தோன்றியது. கலிங்கப்பரணியில் ஜெயங்கொண்டார் இந்தக்கோரக் காட்சிகளை பயங்கரமாக வர்ணித்துள்ளார். சற்றே சாம்பிள் பார்ப்போம்!
பயங்கரப்போர் தொடங்கியது. ‘படை எடும் எடும்’ என்ற ஓசையும், ‘விடும் விடும்’ என்ற ஓசையும், கடலொலிபோல் இருந்தது. விற்களின் நாண் தெறிக்கும் ஓசை திசைகள் வெடிப்பது போலக்கேட்டது. இரண்டு படைகளும் எதிர்நின்றபோது, இருபெருங்கடல்கள் எதிர்நின்றது போல் இருந்தது. குதிரைகளோடு குதிரைகள் சண்டையிடுவது, கடல்அலைகள் எதிர்த்து வந்து சேர்வது போல இருந்தது. யானைகளை யானைகள் எதிர்த்தன. ரதங்களும் ரதங்களும் மேகங்கள் மோதுவதுபோல மோதின. படைவீரர்கள் ஒருவர்க்கொருவர் மோதிக்கொண்டது, புலிகள் மோதிக்கொள்வது போலிருந்தது. சிற்றரசர்களும், சிற்றரசர்களும் மோதிக்கொண்டது, சிங்கங்கள், சிங்கங்களோடு மோதிக்கொள்வது போலிருந்தது.
வீரர்களின் விற்களிலிருந்து பொழிந்த அம்புமழைகளால் இரத்த ஆறு ஓடியது. அந்த ஆற்றில், அரசர்களது குடைகள், நுரையாக மிதந்து வந்தது. அந்தக் குருதியாற்றின் கரையில், போரில் வெட்டப்பட்ட யானைகளின் உடல்கள் இருமருங்கும் குவிந்திருந்தன. அம்புகள் தைக்கப்பெற்றுச் சுருண்டு விழுந்த யானைகளின் கைகள், வளையங்கள் போன்றிருந்தன.

வீரமென்றால் இது தான் வீரமோ? இரண்டு கால்களும் வாளால் வெட்டப்பட்ட வீரர்கள் வாளாவிருக்கவில்லை! தன்னை எதிர்த்து வந்த யானை மயங்கிவிழுமாறு, தங்களது வெட்டுப்பட்ட காலொன்றை, தங்கள் கைகளாலேயே எடுத்து வீசியெறிந்தனர். அத்துடன் நிற்காமல் (காலிழந்த அவர்கள் எப்படி நிற்கமுடியும்!), வெட்டப்பட்ட மற்றொரு காலை, இனி வரும் யானைகளைத் தாக்குவதற்கு என்று எடுத்து வைத்துக் கொள்வார்களாம்.
சில வீரர்கள், தம் மீது பாய்ந்த அம்புகளை, ஈட்டியால் எடுத்து எறிந்தனர். எதிரிகள் தன்னை நோக்கி அம்பை வில்லின் நாணேற்றும்போது, தங்கள் அம்பறாத்தூணியில் அம்பு இல்லாதது கண்டு, மார்பில் சூடியிருந்த பகழியை எடுத்து வில்லில் தொடுத்து எய்வர். தலையிழந்த உடல் கூத்தாட, அதன் பின் பேய்கள் களித்தாடுமாம். அது ஆடல் ஆட்டுவிக்கும் ஆடலாசிரியன் போல இருந்ததாம்.
இப்படிப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, வண்டையரசன் கருணாகரத்தொண்டைமான், தன் யானை மீதிருந்து போர்க்களத்தில் முன்னிருந்து போரை நடத்தினான். அவனது படையும் அவனுடன் சேர்ந்து முன்னேறிச் சென்றது. இருபுறமும் கடல் போலப் படைகள் இருக்க, இந்தப்போரை விரைவில் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று கருணாகரன் எண்ணினான். உக்கிரத்தை அதிகப்படுத்தினான். கலிங்கத்தின் யானைகள் வெட்டப்பட்டன. கலிங்கத்தின் தேர்கள் முறிக்கப்பட்டன. கலிங்க வீரர்களின் செத்த உடல்கள் குருதியில் மிதக்க, அவற்றைக் கழுகுகளும் காகங்களும் உண்டு களித்தன. ஆயிரம் யானைகளைக்கொண்டு சோழனை வெல்வோம் என்று கலிங்க மன்னன் உரை செய்திருக்க, வந்த கலிங்க வீரர்கள், தங்கள் யானைகள் அழிவது கண்டு, போரின் உக்கிரம் தாளாமல் ஒதுங்கினர். இந்த எதிரிகளின் படை, மாயப்படையோ என்று அலறி, நிலை குலைந்து விழுந்து ஓடினர். ஒருவர் முன்னர் ஒருவர் ஓடினர். அவ்வாறு கலிங்கரின் பலப்பல யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், தேர்கள், மணிக்குவியல்கள், மகளிர்கள் அனைத்தையும் கருணாகரனது படைவீரர்கள் கைப்பற்றினர். கைப்பற்றிய வீரர்களே அவற்றின் அளவைக் கணித்துரைப்பது அருமையென்றால், நாம் எவ்வாறு அவற்றைக் கணித்துரைக்க இயலும்? (என்று அங்கலாய்க்கிறார் ஜயங்கொண்டார்).
இவற்றைக் கவர்ந்தபின் “இனி கலிங்க மன்னனைக் கைக்கொண்டு வருக! முதலில் அவனிருக்கின்ற இடத்தையறிக” அன்று கருணாகரன், தன் படைத்தலைவர்களிடம் ஆணையிட்டான். சோழவீரர்கள், பல திசைகளிலும், காடுகளிலும், மலைகளிலும் தேடினர். முடிவில், ஒரு மலை முகட்டில், கலிங்கமன்னன் இருப்பதை அறிந்தனர். அதைச் சூழ்ந்து, மேலும் படைகளை அனுப்புமாறு கருணாகரனுக்குச் செய்தி அனுப்பினர். கருணாகரன், அதிகப்படைகளை அதிவிரைவில் அனுப்பி வைத்தான். அந்தப்படை வரும்வரை, அந்த வீரர்கள் வேலாலும், வில்லாலும், ராத்திரி பகலாகக் காத்து நின்றனர். கலிங்க மன்னன் தப்பித்துப் போக முடியாதபடி காவல் காத்தனர். மாலையில் கதிர் சாயுமுன், கலிங்க மன்னனைப் பிடித்தனர். கருணாகரனிருக்குமிடம் அவனைக் கொணர்ந்தனர்.
இத்துடன் இந்த அத்தியாயத்தை முடித்திருக்கலாம். ஆனால், தோற்றோடிய கலிங்க வீரர்களின் அதோகதியை ஜயங்கொண்டார் நகைச்சுவையோடு விவரிப்பதை எழுதாமல் முடிக்க நமக்கு மனமில்லை.
வீரர்கள் கலிங்க மன்னனைக் கைது செய்து திரும்பும் போது எதிர்ப்பட்ட கலிங்க வீரர்களை ஹதம் செய்து கொண்டே வந்தனர். அதற்கு அஞ்சிய பல கலிங்க வீரர்கள் தங்கள் உடல் முழுதும் வண்ணம் பூசி, தலை மயிரைப் பறித்தெடுத்து, இடுப்பிலிருந்த கலிங்கத்தைக் களைந்து (கலிங்கம் என்றால் ஆடை என்றும் பொருளுண்டு) திரிந்தனர். எதிர்ப்பட்ட சோழவீரர்களிடம், ‘ஐயா! நாங்கள் சமணர்கள்; கலிங்க வீரர்களல்ல” என்று கூறிப் பிழைத்துச் சென்றனர். சிலர், தங்கள் வில்லின் நாணை மடித்து முப்புரி நூலாக அணிந்து கொண்டு ‘ஐயா, நாங்கள் கங்கை நீராடப்போய்க்கொண்டிருந்தோம். விதியின் காரணமாக இங்ககப்பட்டுக்கொண்டோம். நாங்கள் கலிங்க வீரர்களல்லர்” எனச் சொல்லி உயிர் பிழைத்தனர். குருதி தோய்ந்த கொடித்துணிகளைக் காவியுடையாக உடுத்திக்கொண்டு, தலையினை மொட்டையடித்துக்கொண்டு, ‘ஐயா, எங்கள் உடையைக்கண்டவுடன் எங்களைச் சாமியார்கள் என்று அறியமாட்டீர்களா?’ என்று சொல்லிப் பிழைத்தனர். சிலர் யானைகளின் மணிகளை அவிழ்த்துத் தாளமாகக் கையிற் பிடித்துக்கொண்டுக் கும்பிட்டு, “ஐயா, நாங்கள் தெலுங்கப்பாணர்கள்! சேனைகள் மடிகின்ற இந்தப்போர்க்களத்தைக் கண்டு திகைத்து நிற்கிறோம். மற்றபடி, எங்களுக்கும் கலிங்கத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை’ என்று சொல்லிப் பிழைத்துப்போயினர். மொத்தத்தில் ஜயங்கொண்டார் சொல்வது இதுதான்: ‘இவ்வாறு பிழைத்துச் சென்றவர்கள் தவிர, கலிங்க நாட்டில் வேறு ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை’ என்கிறார்.
எப்படிப்பட்ட யுத்தம் இது! நிர்மூலமென்பது இதுதானோ?
கலிங்கத்தை வென்று, வாகைமாலைசூடிய கருணாகரத் தொண்டைமான், யானைகளுடன், நிதிக்குவியல்களையும் பிறவற்றையும் கவர்ந்து கொண்டுவந்து, குலோத்துங்கசோழன் முன்னர் வைத்தான். மகிழ்ந்த குலோத்துங்கன், தொண்டைமானது போர்வீரத்தைப் பலவாறு பாராட்டி, ௮வனுக்குப் பல வரிசைகள் செய்தான்.
நாமும் இளையபல்லவனை (கருணாகரபல்லவனை), அந்த வெற்றி விழாவில் விட்டு விட்டு நகர்ந்து செல்வோம். சரித்திரம், மேலும் பல கதைகளை நமக்குச் சொல்லக் காத்திருக்கிறது.
.
