குட்டீஸ் லூட்டீஸ்:

வெள்ளிக் கிழமை..!
நானும் மகள் மிதிலாவும் டி.வி.யில் ஒரு சீரியல் பார்த்துக் கொண்டிருந்தோம்.
பார்த்துக் கொண்டிருந்த மிதிலா திடீரென்று ‘ஏன்பா.. இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி.. போன வருஷம் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஒளி பரப்பப்பட்ட இந்த ஸீரியலில், ஒரு டாக்டர் அந்த தாத்தாவிற்கு ஹார்ட்லே ப்ராப்ளம்..க்ரிடிகல் ஸ்டேஜ்லே இருக்கார். உடனே ஆபரேஷன் செய்யணும். வர வெள்ளிக் கிழமை ஆபரேஷன் வெச்சுக்கலாம்னு சொன்னார். அதுக்கப்புறம் பல நாட்கள்.., மாதங்கள் ஓடிடுச்சு.. இதோ இன்னிக்கு அடுத்த வருடம் ஏப்ரல், மாதம் ஒன்றாம் தேதியும் வந்துடுத்து.. இன்னும் அந்த வெள்ளிக் கிழமை வரலையேப்பா…? அது எப்ப வரும்பா..?’ என்றாள்.
அந்தத் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த நான் பரிதாபமாகச் சிரித்தேன்.
வேறு என்ன செய்ய… ?…
எக்ஸ்டென்ஷன்..
டி.வி பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி ‘அப்பாடா.. அந்த வில்லியைக் கொன்னுட்டாங்க இனிமே இந்த ஸீரியல் ரெண்டு மூணு நாள்லே முடிஞ்சுடும். வேறு ஒரு தொடர் ஸ்டார்ட் பண்ணுவாங்க. நமக்கு நிம்மதி..’ என்றாள்.
கேட்டுக் கொண்டிருந்த என் மகள் மிதிலா, ‘ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதே.. என் ஃப்ரண்ட் அம்மா சொல்லிட்டிருந்தாங்க… இந்த ஸீரியலுக்கு எக்ஸ்டென்ஷன் கொடுத்திருக்காங்களாம்.. அதனாலே பார்… நாளைக்கு அந்த வில்லியின் அம்மா மெதுவா அவள் காதுலே ‘எக்ஸ்டென்ஷன் கிடைச்சிருக்கு’ன்னு சொல்வா… அப்போ ஐஸ் மாதிரி ஜில்லுன்னு இருக்கும் உடம்புலே சூடேற ஆரம்பிக்கும்… அவள் விரல்கள் மெதுவாக அசையும்.. டாக்டரைக் கூப்பிடுவாங்க.. டாக்டர் வந்து பார்த்து ‘மெடிகல் மிராக்கிள்’னு சொல்லி ஒரு இஞ்செக்ஷனைப் போடுவார். அடுத்த நாளே அவள் எழுந்து அடுத்து நாயகியை எப்படிக் கொடுமைப் படுத்தலாம்னு திட்டம் போடுவா பாரேன்..’ என்றாள்.
அங்கே எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று…
