Kaathu Vaakula Rendu Kaadhal OTT Release Date And Time | Kaathuvaakula  Rendu Kaadhal OTT Release Date | Kaathuvaakula Rendu Kaadhal OTT Release On  Disney + Hotstar - Filmibeat

இன்றைக்கும் அப்படித்தான்,

பழனியப்பன் சுமதியை நினைக்கும் பொழுதெல்லாம், சீதாலெட்சுமியும் ஞாபகம் வருகிறாள். இது முதல் தடவையில்லை, எப்பொழுதும் இதே கதைதான். சுமதியை எப்படி நினைக்காமல் இருக்க முடியும், ஆனால் இந்த சீதாலெட்சுமி, பழனியப்பன் நினைவுகளின் குறுக்கே வந்து வந்து நிற்பது அவனுக்குப் பிடிக்கவில்லையென்றாலும் தடுக்க முடியவில்லையே.

அந்த ஆஸ்பத்திரி வராந்தா நீண்டு பரந்து கிடந்தது. ஆங்காங்கே சுவர் ஓரம் கிடந்த அலுமினிய நாற்காலிகள் அனைத்தும் காலியாகக் கிடந்தன. பழனியப்பன் தனக்கான பிரத்தியேக வாசனைத் திரவியத்தை அவன் உடம்பில் தெளித்திருந்தாலும் அதையும் மீறி வந்த, ஆஸ்பத்திரிக்கு என உண்டான அந்த பினாயில், டெட்டால் மற்றும் மருந்துக் கலவைகளின் வாடை அவன் மூக்கைத் தாக்கிக் கொண்டிருந்தது.

தூரத்தில் ஒரு ரயில் போகிற ஓசை பக்கத்தில் கேட்டது. இந்த ஆஸ்பத்திரி ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்த ஊரின் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பதால் ரயில் ஓசை அப்பப்ப கேட்கும்போல, என பழனியப்பன் நினைத்துக் கொண்டான்.

தன் நடையைத் தளர்த்தி, வேகத்தைக் குறைத்து வாகனத்தில் பிரேக் போட்டதுபோல் சரியாக நின்று தலை தூக்கிப் பார்க்கும் பொழுது 3B என்று போர்டு காட்டியது. கதவில் ஒரு பிளாஸ்டிக் சதுரத்துக்குள் “சுமதி” என்கிற பெரிய எழுத்துக்களும் கண்ணில் பட, கதவில் கை வைத்துத் தள்ளப் பார்த்தான். கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டு, அறை வாசலுக்குப் பக்கத்தில் போடப்படிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு, பக்கத்து நாற்காலியில் தான் கொண்டு வந்திருந்த பழங்கள், ஹார்லிக்ஸ் அடங்கிய பையை வைத்துவிட்டு, தலைக்கு கைகளை அண்டக் கொடுத்துக் கொண்டு நன்றாக சாய்ந்து அமர்ந்து, தன் கண்களை மூடிக் கொண்டான்.

பழனியப்பனுக்கு, சுமதி ஆஸ்பத்திரிக் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டு இருப்பதாகவும், பக்கத்தில் ஸ்டூலில் அவள் அம்மா உட்கார்ந்து சுமதியின் கையை பிடித்துக் கொண்டிருப்பது போலவும் மூடிய கண்களுக்குள் தோன்றி மறைந்தது.

சுமதியின் அறைக்கு நேர் எதிரில் இருக்கும் அறையில் இருந்து வந்த நர்ஸ் பழனியப்பனைப் பார்த்து “ சார் என்ன வேணும்” என்று கேட்க, இவன் சுமதியை பார்க்க வந்திருப்பதாக சொன்னான். நர்ஸ் கதவைத் தள்ளிப் பார்த்துவிட்டு, “உள்ள பூட்டியிருக்கு, தூங்குறாங்க போல, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றாள். பழனியப்பன் “இங்க கேண்டீன் இருக்கா” என்றான். “இருக்கு ஆனா நாலு மணிக்குத்தான் திறப்பாங்க” என்றாள். பழனியப்பன் அந்த நர்சிடம் ஏதாவது பேசலாம் என நினைத்தான், அப்படியெல்லாம் பேச்சுக் கொடுத்தால் பேசிவிடுபவர் அல்ல என்று தெரிய, எதுவும் பதில் சொல்லாமல் ஜன்னல் வழியாகத் தெரிந்த பவழமல்லிச் செடியைப் பார்த்தான், ஒரு சிறிய பறவை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவி அமர்ந்ததைப் பார்த்தான் அப்படியே,. நர்ஸ் போவதை பின்னால் பார்த்த பழனியப்பனுக்கு, அவள், சீதாலெட்சுமியைப் போல் இருப்பதாகத் தெரிய. “சே” என்று சொல்லிக் கொண்டே கண்களை மூடிக் கொண்டான்.

”சார் கொஞ்சம் காலை மடக்கி உக்காருங்க” என்று தன்னைத் தொட்டு யாரோ சொல்ல கண் விழித்த பழனியப்பன், தூக்கத்தில் தன்னை அறியாமல் கால்களை நீட்டிக் கொண்டதை நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டே “சாரி” என்றான். சொன்னவர் சிரித்துக் கொண்டே நகர, சுமதியின் அறைக் கதவு திறக்கிற சத்தம் கேட்டு திரும்பினான், சுமதியின் அம்மாதான், எழுந்து வணக்கம் சொன்னான்.

“வாப்பா, வந்து ரொம்ப நேரம் ஆச்சா, உள்ள வா, சுமதி முழிச்சிக்கிட்டுதான் இருக்கா”

அழைப்பைத் தொடர்ந்து பழனியப்பன், அறைக்குள் நுழைய, சுமதி அவன் கண்களில் தோன்றியதுபோல், கட்டிலில் மல்லாக்கப் படுத்திருந்தாள். கண்டது புடவையில் இப்பொழுது பார்ப்பது ஒரு சிவப்புக் கலர் நைட்டியில் அவ்வளவுதான் வித்யாசம். அதே சிரிப்பு, கண்களில் அதே அழைப்பு, அவனும் சிரித்துக் கொண்டே கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான், சுமதியின் அம்மா பிளாஸ்கை எடுத்துக் கொண்டு வெளியேறினார்கள்.

பழனியப்பன் பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் சுமதியும் அவள் அம்மா, அப்பா மூவருமாக எதிர் வீட்டுக்குக் குடி வந்தார்கள். அவளுடைய அப்பா ஏதோ ஒரு பிரைவேட் கம்பெனியில் அதிகாரியாக இருக்க இந்த ஊரில் கிளை திறப்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்க என மாற்றலாகி வந்ததாக அவர் சொன்னார் என்று பழனியப்பனின் அம்மா சொல்வாள்.

பழனியப்பன் நன்றாகப் படிக்கக்கூடிய பையன், பிளஸ் 2 ல் நல்ல மார்க் வாங்கி நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து பெரிய கல்லூரியில் விரிவுரையாளராக வேண்டும் என்பதுதான் அவன் கனவெல்லாம். அப்பொழுது சுமதி டென்த் படித்துக் கொண்டிருந்தாள்.

அவர்களுக்கு கன்னியாகுமரிப் பக்கம் ஏதோ சிறிய கிராமம்தான் சொந்த ஊர் என்பதனால், மூவரிடமும் கொஞ்சம் அதிகமாக மலையாள பாதிப்புகள் இருக்கும். சுமதி கொஞ்சம் நிறம் கம்மி என்றாலும் களையான முகம், நல்ல அடர்த்தியான புருவங்கள்,  தினமும் காலையில் குளித்துவிட்டு தலை முடிய விரிய போட்டுக் கொண்டு வீட்டுக்குள் உலாவுவதும், பள்ளிக்கூடம் போகும் பொழுது பின்னிப் போட்டு அந்த அடர்த்தியான கூந்தல் கீழ் முதுகுக்கும் கீழே ஆடி ஆடி செல்வதும், மலையாள உடல் வனப்புமாக பழனியப்பனின் கனவுகளில் தினமும் வரத் தொடங்கினாள்.

பழனியப்பனின் அம்மாவுடன் தினமும் வந்து பேசிக் கொண்டு செல்வதும், பழனியப்பனைக் கண்டதும் ஒரு சிறு புன்னகையுடன் தலை குனிந்து கொண்டு ஓடி விடுவதுமாக இருந்தாலும் பழனியப்பனுக்கு சுமதி என்கிற பெயரைச் சொல்லிக் கூப்பிட உடனே வாய் வரவில்லை.  அவனுக்கு. என்னமோ மாதிரி இருந்தது அல்லது வெட்கமாக இருந்தது. இருந்தாலும் கள்ளப் பார்வை பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை, அதுவும் சுமதிக்கு தெரியும் என்பதும் இவனுக்குத் தெரியும்.

ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வரும் பொழுது, பக்கத்தில் ஒரு நிழல் ஒண்டுவது போல் தெரிந்தது. திரும்பிப் பார்க்கும் பொழுது, சுமதி இவனுக்குச் சமமாக சைக்கிள் பக்கம் வந்து சிரித்தாள். கொஞ்சம் சங்கடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு பழனியப்பன் நிற்க, சுமதி அவன் சைக்கிள் கேரியரைப் பிடித்துக் கொண்டு நின்று, “என்ன” என்றாள். பழனியப்பனுக்கு வேர்க்கத் தொடங்கியது.

“என்ன உடம்பு சரியில்லயா”

“இல்ல நல்லாதான் இருக்கேன்”

“ம்” என்றாள்.

சைக்கிளை பழனியப்பன் உருட்டத் தொடங்க, சுமதியும் சரி சமமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். வீட்டை நெருங்கும் பொழுது தன்னுடைய நண்பர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாதே, அம்மா பாத்துட்டா இன்னும் கொஞ்சம் கஷ்டம்தான்னு நினைத்துக் கொண்டு, சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தான்.

“ஊமையா, பேச்சு வாராதோ”

“இல்லை….”

“வீட்டிலிருந்து சைட் அடிக்கும்போது, இந்த பயம் வெட்கமெல்லாம் இல்லியே”

அவ்வளவுதான் பழனியப்பனுக்கு வேர்த்துக் கொட்டி முதுகு தண்டு வழியாக ஒழுக ஆரம்பித்தது.

“எனக்குக் கொஞ்சம் போகணும், வரவா” என்றான்.

“இல்ல யானும் வரும், சாரி, நானும் வரவா”

“இல்ல……….”

“என் பேரு சுமதி தெரியுமோ இல்ல”

”நாளைக்குப் பேசலாம்” சைக்கிள் பறந்தது.

சுமதி வாய்விட்டு சிரித்துக் கொண்டது பழனியப்பனுக்குத் தெரிந்தது.

 வீட்டை நெருங்கும் பொழுது, வாசலில் அம்மாவுடன் உட்கார்ந்து சீதா பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அப்படியே உள்ளே போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டு பேனை முழு வேகத்துக்கு வைத்துக் கொண்டான், ஆனால் வேர்வை அடங்கக் கொஞ்ச நேரம் ஆனது, அதற்குள் அம்மாவும், சீதாவும் வீட்டுக்குள் வர, அத்தை பழனிக்கு, நான் காபி போட்டுக் கொண்டு வரவா எனக் கேட்டாள், ”இல்லம்மா நான் போட்டுக்கிறேன் நீ அவனோட பேசிக்கிட்டிரு, இப்ப வந்துர்றேன்னு” உள்ளே போக சீதா பழனியப்பன் பக்கத்தில் சோபாவில் அமர்ந்தாள், பழனியப்பன் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டான். சீதா சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பழனியப்பன் சுமதியின் நினைவில் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பழனியப்பனின் அப்பா இறந்து போன பொழுது பக்கத்தில் தெருவில் இருந்த உறவினர்களான சீதா குடும்பம் துக்கத்துக்கு வர, அப்படியே ரொம்ப நெருக்கமாக ஆகிவிட்டார்கள். வாரத்துக்கு மூன்று நாட்களாவது சீதாவோ, சீதாவின் அம்மாவோ அல்லது இரண்டு பேருமோ வந்து பழனியப்பனின் அம்மாவிடம் மணிக்கணக்காக பேசிவிட்டுச் செல்வார்கள். தனிமையில் இருக்கும் அம்மாவுக்கு இதெல்லாம் தேவைதான் என்று பழனியப்பனும் எதுவும் சொல்வதில்லை.

அழகு என்று எடை போட்டால் சீதா எந்த அளவுக்கும் சுமதிக்குக் குறைந்தவளில்லை. நல்ல நிறம், உயரம் கூட கொஞ்சம் அதிகம். ஆனால் பேச்சு நடவடிக்கைகளில் சுமதியிடம் இருக்கும் ஒரு அமைதியிருக்காது. சுமதி பேசும் பொழுது ஒரு அமைதியும் சீதா பேசும் பொழுது ஒரு ஆர்பாட்டமுமாக இருப்பதாக பழனியப்பன் உணர்ந்தான்.

சுமதியின் தாழ்ந்த அமைதியான குரலும் பேசும் விதமும் மிகவும் பிடித்திருந்தது. பலத்த காற்றுக்கு அங்கேயும் இங்கேயும் வீசி வீசி அசைந்து கொண்டிருக்கும் மரம் காற்றற்ற பொழுதில் அசையாமல் நிற்கும் பொழுது ஏற்படுகிற அமைதியென அவன் அதை ரசிக்கத் தொடங்கினான். சீதா ஓயாது வீசும் கடல் அலையெனவும், ஓசையும் அடங்காது அலையும் ஓயாது என நினைத்துக் கொள்வான்.

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த பொழுது பழனியப்பனின் அம்மா, உறவினர் கல்யாணம் என்று வெளியூர் போயிருக்க, சுமதி கையில் எதையோ எடுத்துக் கொண்டு வந்து “சாரே, சாரே, எவ்விட இருக்கு” என கேட்டுக் கொண்டே பழனியப்பனின் வீட்டுக்குள் வந்தாள். பழனியப்பன். அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்து இடுப்பில் கட்டிய துண்டுடன் தலை வாரிக் கொண்டிருந்தான்.

“சோப்பு சந்திரிகாவோ”

“சோப்பு மட்டுமில்ல எல்லாமே கேரளாதான்” என்றான்.

“சுமதி தலை குனிந்து கொண்டே “புட்டும், பப்படமும் அம்ம, கொடுத்துச்சு” என்றாள்.

“நீ எதுவும் தரமாட்டியா” என்றான்.

உதட்டைக் குவித்து சைகை காட்டியதும் ”சீ” என்று சொல்லிக் கொண்டே, அடிப்பது போல கையை உயர்த்திக் காட்டிவிட்டு, வாசலை நோக்கி ஓடும் பொழுது, வாசலைத் தாண்டி சீதா கையில் ஒரு டிபன் பாக்சுடன் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், அப்படியே நின்றதுமில்லாமல் பழனியப்பனிடம் “உன் ஆளு வருது” என்றாள்.

“என்ன பழனி, அம்மா இட்லி கொடுத்து விட்டுருங்காங்க”

“இல்ல சீதா வேணாம், இப்பத்தான் சுமதி புட்டும், பப்படமும் கொடுத்திருக்கா”

“இட்லிய விட புட்டு நல்லா இருக்குமா”

“அப்படியில்லை, சுமதி அம்மா முதல்ல கொடுத்துவிட்டாங்க” “இரண்டையும் சாப்பிட முடியாதில்ல, வேஸ்ட் பண்ண வேண்டாம்”

“இல்ல இட்லி அருமையா இருக்கும், இதைச் சாப்பிடு, அது வேணாம்”

“சீதா சொன்னாக் கேளு”

“நான் சொல்றத நீ கேளு”

சுமதி கைகளைப் பிசைந்து கொண்டும், பக்கத்தில் இருந்த சோபாவின் கைப்பிடிகளை மெதுவாகத் தடவிக் கொண்டும், அப்பப்ப இருவரையும் பார்த்து கொண்டும் நின்று கொண்டிருந்தாள்.

“பழனி……..”

“சொன்னாக் கேளு, எடுத்துட்டுப் போ”

“என்னயவிட இவ முக்கியமா”

“இப்படியெல்லாம் பேசாத”

“இல்ல பதில் சொல்லு”

“சரி ஏதோ எதிர்பார்த்துக் கேட்கிற சொல்லீர்றேன், உன்னய விட இவதான் முக்கியம் போதுமா”

“எந்த விதத்தில, நான் உனக்கு சொந்தக்காரி தெரியுமா”

சுமதி வாசலைப் பார்த்து நகரத் தொடங்கினாள், பழனி கொஞ்சம் சத்தமாக, “சுமதி நில்லு, நீயும் கொஞ்சம் இதையெல்லாம் கேட்டுட்டுப் போயிரு, நல்லாக் கேட்டுக்க சீதா, நீ இவளைவிட நிறம்தான், சொந்தக்காரிதான், கொஞ்சம் நன்றாகவும், தைரியமாகவும் இருக்கிற பொண்ணுதான், இருந்தாலும் எனக்கு சுமதியைத்தான் பிடிக்குது, போதுமா”

சீதா, கண்களைக் கசக்கிக் கொண்டே கொண்டு வந்திருந்த பாத்திரத்தோடு வேகமாக வெளியேற, சுமதி அவன் அருகில் வந்து நின்றாள், கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், இருவர் கண்களும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தன, பழனியப்பன் இலேசாக சிரிக்க, சுமதி சட்டென்று அவன் இரண்டு கன்னங்களையும் பிடித்துக் கிள்ளி தன் உதட்டில் வைத்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, “செல்லம்” என கூறிவிட்டு ஓடிவிட்டாள், பழனியப்பன் வாசலை எட்டிப் பார்க்கும் பொழுது, எதிரே, தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு இவனைப் பார்த்து சிரித்துவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.    

பழனியப்பன் தான் கொண்டுவந்திருந்த பையை எங்க வைக்க என சுமதியைக் கேட்டதும், அவள் சிரித்துக் கொண்டே ”பழைய சுமதிக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்க” என்றாள்.

“எனக்குத் தெரிஞ்சத வாங்கிட்டு வந்திருக்கேன், உனக்கு வேண்டியதைக் கேளு, வாங்கிட்டு வர்றேன்”

“எனக்கு வேண்டியதுதான் கிடைக்கலயே” சொல்லும் பொழுதே சுமதியின் கண்களில் இலேசாக ஈரம் படர்ந்ததும் பழனியப்பன் பார்க்காதது போல அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டான்.

அன்று காலையில் பழனியப்பன் தனது வங்கியில் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, தனக்கு முன் நிழலாட நிமிர்ந்து பார்த்தான், எங்கோ பார்த்த முகமா இருக்கிறதே என சிரிக்க, “தம்பி நீ பழனி, பழனியப்பன்தானே” என் அந்த அம்மா சிரிக்க அப்பவே அது சுமதியின் அம்மாதான் என தெரிந்து கொண்டு கேண்டீனுக்கு அழைத்துக் கொண்டு சென்றான்.

மிக நீண்ட சந்திப்பாக அது அமைந்துவிட, தன் அம்மா இறப்பு, சுமதியின் அப்பா இறப்பு சுமதிக்கு தீராத வயிற்று வலி, சென்ற வாரந்தான், அறுவை சிகிச்சை, இப்ப ஆஸ்பத்திரியில, எல்லாம் சொல்லி முடித்துவிட்டு, வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு சுமதி அம்மா வெளியேற, பழனியப்பன் இப்ப சுமதியின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான்.

“எங்க அம்மாவ இன்னும் காணோம்”

“கேண்டீன் இப்பத்தான் திறந்திருப்பாங்க, இவ போய் அங்கக் காத்துக்கிடந்து காப்பி வாங்கிட்டு வருவா, இன்னைக்கு ஸ்பெஷல் கெஸ்ட் வந்திருக்கிறதால, நல்ல காபியா வாங்கிட்டு வருவா” சொல்லிவிட்டு, சுமதி தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள்.

சுமதியும், பழனியப்பனும் எதுவும் பேசாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார்கள். ”உங்களுக்குத் தெரியுமா பழனியப்பன்” எது என்பது போல பழனியப்பன் சுமதியைப் பார்த்தான்.

“எங்க அப்பாவுக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும், நீங்க எப்பவுமே படிப்பில கெட்டியா, அதுதான் அவருக்கு மிகப் பிடிக்கும், தனக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை இல்லையென்கிற நினைப்பே உங்களப் பாத்தா வரலேன்னு அடிக்கடி சொல்வார்”

பழனியப்பன், சுமதி ஏற்ற இறக்கங்களுடன் இனிமையான குரலில் விவரிப்பதை ஒரு நல்ல இசையை ரசிப்பது போல் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தான்.

”உங்களிடம் நேரடியாக கேட்க நினைத்தார், ஆனால் நீங்கள் முடியாது என்று சொல்லிவிட்டால், தயங்கினார், அந்தத் தயக்கம் அவருக்கே உண்டானது, அப்படி ஒரு தயக்கம் எந்த ஆணுக்கும் உயர்வானது, உங்களைப் பற்றியும், ஆண்ட்டியைப் பற்றியும் எப்பவும் உயர்த்தித்தான் சொல்வார். எங்க அம்மா அதைவிட அதிகமாகத்தான் இதுவரை சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் எங்கோ இண்டர்வியூவுக்கு சென்னை போயிருக்கும் பொழுது அப்பா, ஆண்ட்டியைப் பார்த்து, சுமதி ஆசைப் படுகிறாள் என்று சொல்லி கேட்டிருக்கிறார்கள், ஆண்ட்டி பிடிவாதமாக மறுத்துவிட, அப்பா தனக்கு டிரான்ஸ்பர் கேட்டு அங்கிருந்து சென்று விட்டோம்”

“இதெல்லாம் எனக்குத் தெரியாதே, அம்மா சாகிற வரைக்கும் இதெல்லாம் எங்கிட்ட சொல்லவேயில்லையே”

”ஆண்ட்டி நீங்கள் இருவருமே அம்மாவுடன் பேசவில்லை. அம்மாவுக்கு ஆண்ட்டியுடன் உட்கார்ந்து பேச விருப்பம், ஆனால் எதுவுமே நடக்கவில்லை, எனக்குள் ஒரு சூன்யம், அப்பாவுக்கு அவ்வளவு சீக்கிரம் டிரான்ஸ்பர் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை, நீங்கள் எங்கோ வெளியூர் போயிருந்தீர்கள், நாங்கள் உங்களிடம் சொல்லாமல் கிளம்ப வேண்டியதாகிவிட்டது”

”இதெல்லாம் எனக்குத் தெரியாது, நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை காலி செய்துவிட்டுப் போனதால், நீங்கள், எங்களை அவமதித்துவிட்டதாக அம்மா சொல்லிக் கொண்டேயிருந்தாள், நானும் கூட சுமதி இப்படி பண்ணீட்டாளேன்னுதான் நேத்துவரை நினைச்சுக்கிட்டு இருந்தேன்”.

சுமதி, கொஞ்சம் நிறுத்தி, அந்த சீதா…என்றாள்.

“அம்மாவுக்கு நான் சீதாவைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளனும்ன்னு ஆசை, ஆனால் நான் முடியாதுன்னு சொல்லிட்டேன், ஆனா அங்கதான் நான் ஒரு தப்புப் பண்ணீட்டேன், அப்படியே உன்னைப் பத்தியும் சொல்லியிருக்கணும்” பழனியப்பன் தனது கைகளை ஆட்டி ஆட்டி சொல்லிக் கொண்டிருக்க சுமதி அவனைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்

“சொல்லியிருக்கலாம்ல”

“அதான் சொல்லலேயே”

இரண்டு பேரும் வாய்விட்டு சிரித்துக் கொண்டார்கள்.

இப்பொழுது சுமதியின் கைகளை பழனியப்பன் பற்றிக் கொண்டிருந்தான், சுமதி, அவன் கைகளின் வெப்பத்தை உணர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

கதவைத் திறந்து கொண்டு, சுமதியின் அம்மா பிளாஸ்க்குடன் வர, விரைவாக சுமதி கையை உருவினாள். சுமதியின் அம்மா, அப்படியே இருங்கள். ரெண்டு பேருக்கும் காபி எடுத்துட்டு வர்றேன், நல்ல சூடா இருக்கு என்றாள்.

எனக்கு வேண்டாமே, நீங்க குடிங்கன்னு பழனியப்பன் சொன்னதும், ”இல்லைம்மா எனக்கு வேணும் மூணு பேருக்கும் கப்பில ஊத்து” என்றாள், பழனியப்பன் சுமதியின் கண்களைப் பார்த்து சிரித்துக் கொண்டான்.

காபிக் கப்பை எடுத்துக் கொண்டே, “தம்பி கல்யாணம் ஆயிருச்சா, பொண்ணு எந்த ஊரு”

“இல்ல ஆண்ட்டி”

“நிஜமாவா” சுமதி கண்களை உயர்த்தி பெரிய ஆச்சர்யமாகக் கேட்டாள்.

“இதில என்ன பொய், நிஜமாதான்”

சுமதியின் அம்மா காபி கப்களைக் கழுவ பாத்ரூமுக்குள் போக, சுமதி ஏன் என்றாள்.

மழை வரும்போல இருட்டிக் கிடந்த அந்த அறையில் பழனியப்பன் பலவற்றை சொல்ல நினைத்தான். முக்கியமாக பள்ளிக்கு அருகில் இருந்த கிரிக்கெட் மைதானத்தை பார்த்தபடி அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் ஸ்டேடியத்தில் சுமதியின் கைகளைப் பற்றிக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்ததை, சுமதியின் உடலில் இருந்து வரும் தேங்காய் எண்ணை வாசமும், அது தன்னுள் புகுந்து பரவி படர்ந்து கிளர்ந்ததையும், இப்படி எத்தனையோ ஆனால் எதையும் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த உலகத்தில் இப்படித்தானே எத்தனையோ விஷயங்கள் எப்படியும் சொல்லலாம், சொல்லாமலும் விட்டுவிடலாம் என்பதாகவே இருக்கின்றன.

நினைத்ததை எதையும் சொல்லாமல் பொதுப்படையாக, உனக்கும் ஆகல, எனக்கும் ஆகல. சொல்லிக் கொண்டே பழனியப்பன், சுமதியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

சுமதியின் கண்கள் பழனியப்பனின் கண்களைச் சந்தித்து எதையோ சொல்ல நினைப்பது தெரிந்தது, பழனியப்பனுக்கு, மங்கியிருந்த அறையில் வெளி வெயில் பிரகாசமாக அறைக்குள் பரவ, ஒரு குளிர் புனல் பழனியப்பனுக்குள் புகுந்து கிளர்ந்தெழுந்தது.

சுமதி எதுவும் பேசாமல், பழனியப்பனின் கைகளை இறுகப்பற்றி எடுத்துத் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.