12த் ஃபெயில் ( இந்தி/தமிழ்)

விக்ராந்த் மாஸியின் நடிப்பில் அரங்குகளில் வெளியான படம் ஒரு உண்மைக் கதை. பனிரெண்டாவது வகுப்பில் இருக்கும் மொத்த மாணவர்ஸ்களையும் காப்பி அடித்ததாக ஃபெயில் செய்யும் நேர்மையான அதிகாரி. அவரால் ஈர்க்கப்பட்டு மனோஜ் தில்லி போய், மத்திய அரசு நடத்தும் ஐஏஎஸ் தேர்வை எழுதி ஒரு நேர்மையான அதிகாரியாக வலம் வரும் கதை. நாயகனின் ஆளுமையைத் தாண்டி சின்னக் கதாபாத்திரத்தில் வரும் கௌரி வெகுவாக ஈர்க்கிறார். உத்வேகம் கொடுக்கும் இந்தப் படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும். தொழில் நுட்பத்திலும் எது வேண்டுமோ அதை மிகையில்லாமல் தந்த படம் இதுவாகத்தான் இருக்கும். – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
தோல்வி மனப்பான்மையில் இருக்கும் எவருக்கும் இந்தப் படம் ஒரு கிரியா ஊக்கி. விது வினோத் சோப்ரா ஹிட்டடித்து விட்டார். மனோஜ் ஷர்மாவாக விக்ராந்த் மாஸி அதகளம் செய்கிறார். கொள்ளையடிக்கும் திருடர்கள் வாழும் மத்யபிரதேச கிராமத்திலிருந்து, ஒரு மாணவன் உயர்ந்து இந்தியாவின் முதன்மை அதிகாரியாக மாறும் கதை. அவருக்கு நம்பிக்கையை அவ்வப்போது ஊட்டும் தோழியாக மேதா ஷங்கர் அற்புதம். கதை 12ம் வகுப்பு ஃபெயிலாக இருக்கலாம், திரைக்கதை எழுதிய விதத்தில் எந்தப் பிழையும் இல்லை. – தி இண்டியன் எக்ஸ்பிரஸ்.
வித்து வினோத் சோப்ரா இன்னொரு நம்பிக்கை ஊட்டக்கூடிய இறுகிய அணைப்பை நமக்குத் தந்திருக்கிறார். அது ரசிகன் உள்ளத்தில் ஏதோ ஒரு மேஜிக் செய்கிறது. ஒரு காட்சியில் அப்பா சொல்கிறார்: இந்த கட்டத்தில் நம்மால் வெல்ல முடியாது. மனோஜ்: தோற்கவும் கூடாது அப்பா! அடல் பிஹாரி வாஜ்பாயின் கவிதை ‘ஹர் நஹின் மனோகா ( முயற்சியை கைவிடாதே) சரியான இடத்தில் இடம் பெற்று, வெகு பொருத்தமாக ஒலிக்கிறது. சில சமயம் பின்னணி குரல் சற்று இடையூறாக இருக்கிறது. அதை புறம் தள்ளி விட்டால் இது ஒரு அற்புதமான அனுபவம். – தி ஹிண்டு.
ஒடுக்கப்பட்டவர்களின் கதை எப்போதும் சிறப்பு தான். அதிலும் விக்ராந்த் மாஸி பெரும் சுமையை இலகுவாக சுமந்து அவரது சோகத்தை நமக்கு கடத்தி விடுகிறார். அனுராக் பாதக்கின் நாவல் தான் அடிப்படை. அதை சற்றும் சிதையாமல் திரைக்கு கொண்டு வந்த வித்து வினோத் சோப்ராவுக்கு பெரும் பாராட்டு. ஆனாலும் இந்தப் படத்தை இன்னும் இருபது நிமிடங்களுக்கு கத்தரி போட்டிருந்தால் இன்னமும் கூட தெறிப்பாக இருந்திருக்கும் – இண்டியா டுடே.
விக்ராந்த் மாஸே அருமையான நடிப்பை நல்கியிருக்கிறார். கல்வி முறையில் இருக்கும் ஓட்டைகளை சரியாக காட்டியிருக்கிறார் இயக்குனர். 147 நிமிட படத்தில் சில பிரச்சார தொனிகள் உண்டு. அதை களைந்திருக்க வேண்டும். கௌரி பைய்யாவாக வரும் அன்ஷுமன் புஷ்கர் இன்னொரு அற்புத பாத்திரம். தான் தோற்று போய் விட்டாலும் அடுத்தவர் தோற்கக்கூடாது என்று அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பாத்திரம் ஒவ்வொரு ஊரிலும் இருக்க வேண்டும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். – ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

சினிமா கலைக்கானதா? மக்களுக்கானதா எனும் வாதம் தான் ஒன்லைன். அதை சரியாக சொல்ல வந்து நீரின் நடுவே தடுப்பணைகள் போல நீளத்தை அதிகமாக்கி சலிப்பை ஏற்படுத்தி விடுகிறார் கார்த்திக் சுப்பராஜ். நறுக்க வேண்டிய காட்சிகள் ஏராளம். திருவின் ஒளிப்பதிவு பிரமாதம். அதே போல் சந்தோஷ் நாராயணனின் இசை முதல் பாதியில் ஈர்ப்பு இல்லை என்றாலும் வனம் சார்ந்த காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார். லாரன்ஸுக்கு ஆக்ஷன் படங்கள் கை கொடுக்காது என்று இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எஸ் ஜெ சூர்யா ஆர்பாட்டமில்லாமல் நடித்தாலும் ஏதோ குறைகிறது எனும் உணர்வு ஏற்படாமல் இல்லை. மலையாள நடிப்பரசி நிமிஷா விஜயனின் முதல் தமிழ் படம். ஆதிவாசி பெண்ணாக மொழி முதற்கொண்டு பாத்திரத்தை காட்சிப்படுத்துதலில் முன்னணி வகிக்கிறார். மொத்தத்தில் ஜிகர்தண்டா சூடான சோடா. – வலைப்பேச்சு.
கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சமூகத்திற்கான குரலாகவும் பழைய சினிமாவின் பொக்கிஷ மீட்டெடுப்பாகவும் இருக்கிறது. சினிமாவை நேசிப்பவர்கள் பலர். கார்த்திக் போன்ற சிலரே அந்த நேசத்தை சினிமாவில் சொல்ல முடியும். இப்படம் வெல்வதற்கு இரண்டு முக்கிய ஆட்கள் எஸ் ஜே சூர்யாவும் ராகவா லாரன்ஸும். இடைவேளைக் காட்சி தமிழ் சினிமாவின் அற்புதம். இம்மாதிரி சில காட்சிகளால் படம் நெடுக காணப்படும் குறைகள் மறைந்து போகின்றன. – தி இண்டியன் எக்ஸ்பிரஸ்.
நாலு வருடங்களுக்குப் பிறகு அரங்குகளுக்கு ஒரு படம் கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அகன்ற திரையில் பார்க்க வேண்டிய படம் என்று நிரூபித்திருக்கிறார். சரியான திருப்பங்களுடன் கூடிய சமூகப் படம் இது. முதல் படத்திலிருந்து இசைஞர் சந்தோஷ் நாராயணன் கார்த்திக்கிற்கு பல ஹிட்டு பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இதிலும் அப்படித்தான். பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளை வேறு தளத்திற்கு இட்டுச் செல்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா என இரண்டு நடிகர்களுக்குமே , நடிப்பு எனும் காட்டுப்பசியைத் தீர்க்கும் சிறப்பான தீனி இந்தப்படம். தமிழ் சினிமாவின் முதல் கறுப்பு ஹீரோவாக வேண்டும் எனக் கனவு காணும் மதுரை ரவுடி அலியஸ் சீசர் (ராகவா லாரன்ஸ்). கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகரான இவர் தன்னை தமிழகத்தின் ஈஸ்ட்வுட்டாக மாற்றப்போகும் இயக்குநருக்கான தேடுதலில் இருக்கிறார். ‘உங்க சுயசரிதையையே காட்ஃபாதர் ரக உலக சினிமா ஆக்கலாம்’ என அங்கு ஆஜராகிறார் இயக்குநர் ரே தாசன் (எஸ்.ஜே.சூர்யா). அவர் அங்கு வந்த உண்மை காரணம் என்ன, சினிமா இவர்களை என்னவெல்லாம் செய்யவைத்தது என்பதுதான் (ஸ்பாய்லர் இல்லாத) ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இந்த கதை வழியே அரசு இயந்திரத்தால் சுரண்டப்படும் மலைவாழ் மக்களின் இன்னல்களையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். சாதாரண காட்சியையும் தனக்கேயான திரைமொழியால் மேம்படுத்தக்கூடிய அவரது திறன் இந்தப்படம் முழுவதும் வெளிப்பட்டிருக்கிறது. அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். குறிப்பாக இடைவேளை, கிளைமாக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பு. வெல்கம் பேக் கார்த்திக்! சிறப்பான திரை அனுபவமாக சினிமா ரசிகர்களுக்கு இந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தீபாவளி ட்ரீட்!
மிடுக்கான தோற்றம், கம்பீரமான உடல்மொழி என சமீபத்திய படங்களில் நாம் பார்க்காத ராகவா லாரன்ஸ். அலியஸ் சீசராக மிரளவும் வைக்கிறார், கலங்கவும் வைக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன? அவருக்கு இது கொஞ்சம் மாறுபட்ட வேடம்தான். சமீபத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்களின் மீட்டரில் இல்லாமல் சற்றே நுட்பமான கதாபாத்திரம் இது. டிரேட் மார்க் நடிப்பிலிருந்து விலகி கதாபாத்திரத்திற்குத் தேவையானதைச் சரியாகச் செய்திருக்கிறார். இறுதியில் வரும் அழுத்தமான காட்சிகளில் தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். – சினிமா விகடன்
ஜப்பான்

ரவிவர்மனின் ஒளிப்பதிவு உலகத்தரத்தில் இருக்கிறது. குறிப்பாக ஆங்காங்கு இடம் பெறும் சின்ன சின்ன பாடல்களாகட்டும், படத்தில் வரும் சண்டைக் காட்சிகளாகட்டும் ரவியின் கேமரா அதகளம் செய்திருக்கிறது. கார்த்தி வழக்கமான நக்கல் நையாண்டி பாத்திரத்தில் வெகுவாக பொருந்திப் போகிறார். அனு இமானுவேலைப் பொருத்தவரை அவர் ஒரு இலவச இணைப்பு. பெரிதாக ஈக்கப்படாத பாத்திரம். வெகு சாதாரணமான கதைக்களம். அதில் சுவாரஸ்யம் சேர்க்கத் தவறி விட்டது படக்குழு. இந்தக் கதைக்கு தேவையற்ற பல பாத்திரங்கள் உலா வருகின்றன. ஏன் என்பது அவர்களுக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. வில்லன் கதாபாத்திரம் வெறும் மீசை வைத்தால் மட்டும் டெரராக ஆகிவிடுமா? மிகவும் சராசரிக்கும் கீழான படம் தான் ஜப்பான். இங்கு நல்ல இயக்குனர் ராஜு முருகன் தென்படவே இல்லை. பெரிய நடிகரின் கால்ஷீட் கிடைத்த சந்தோஷத்தில், தன்னை வீணடித்துக் கொண்டிருக்கிறார் ராஜு. – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
சொதப்பலான ஆக்ஷன் திரில்லர் ஜப்பான். கார்த்தியின் அறிமுகக் காட்சியிலிருந்து எதிலும் அவர் ஒட்டவேயில்லை. புதுப்புது கதை மாந்தர்களை க்ளைமேக்ஸ் வரையிலும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார் ராஜு முருகன். எதுவும் நம்மை ஈர்க்கவில்லை. ஏதாவது நல்ல விசயம் உண்டென்றால் ராஜு முருகனின் வசனங்கள் சில காட்சிகளில் நிமிர்ந்து உட்கார் வைக்கின்றன. மற்றபடி கடந்து போக வேண்டிய கார்த்தி படங்களில் இதுவும் ஒன்று. – தி ஹிந்து
எதனால் இந்தப் படத்தை அதுவும் தன் இருபத்தி ஐந்தாவது படத்தை..ஒப்புக் கொண்டார் கார்த்தி எனும் கேள்வி எல்லோர் மனதிலும். யதார்த்தத்திற்கு ஒவ்வாத ஹீரோ வேடமா? ஜிப்ஸி படத் தோல்விக்குப் பிறகு ஒரு பழி வாங்கும் உணர்வோடு ராஜு முருகன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறாரா என்றும் தோன்றுகிறது. எழுதிய எதையும் காட்சிப்படுத்தலில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர். உழைப்பைக் கொட்டிக் கொடுத்த கார்த்தியாலும் கூட படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
படம் ஆரம்பித்த விதத்தில் கொள்ளை, விசாரணை எனப் பரபரப்பாக நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் அறிமுகத்துக்குப் பின்னர் தொய்வையே சந்திக்கிறது. திரைக்கதை எதை நோக்கி பயணம் செய்கிறது என்ற தெளிவு இல்லாமல் நம்மை நடந்து ஜப்பானுக்கே கூட்டிச் செல்லும் அளவுக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது படம். வாழ்வில் எதைப்பற்றியும் கவலையில்லாத, நக்கலும் நையாண்டியும் கலந்த கில்லாடி திருடனாக கார்த்தி. பல இடங்களில் அவரின் நகைச்சுவை ஒன் லைனர்கள் ரசிக்க வைக்கின்றன. ஆக்ஷன் காட்சிகளிலும் வழக்கம் போலச் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். ஆனால் இழுத்து இழுத்துப் பேசும் அந்த வித்தியாசமான வாய்ஸ் மாடுலேஷனைத்தான் ஒரு எல்லைக்கு மேல் ரசிக்க முடியவில்லை. வாகை சந்திரசேகருக்குப் படம் முழுக்க கார்த்தியோடு பயணம் செய்யும் கதாபாத்திரம். பைபிள் வசனங்கள் சொல்வது போல அவர் போடும் சில ‘பன்ச்’கள் ரசிக்க வைக்கின்றன. போலீஸ் அதிகாரிகளாக விஜய் மில்டன் மற்றும் சுனில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர். குறிப்பாக கார்த்தியின் மிரட்டலுக்கு ஜெர்க் கொடுத்துப் பதறும் காட்சிகளில் உடல்மொழியால் சிரிப்பை வரவைக்கிறார் சுனில். அவரின் ரீல்ஸ் வீடியோக்களும் ரகளை ரகம்! ‘ஆச்சர்யப்பட’ வைக்கும் ட்விஸ்ட் கொடுக்கும் கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். ஆனால் நடிப்பில்தான் அந்த ஆச்சர்யம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மொத்தத்தில் வசனமாக, ஒன்லைனாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் எழுச்சி கண்ட “ஜப்பான்” என்றால், திரைக்கதையாக, காட்சிமொழியாகப் பார்க்கையில் எழவே முடியாத துயரில் சிக்கித் தவிக்கிறது இந்த `ஜப்பான்’. சினிமா விகடன்.
ரெய்ட்

விக்ரம் பிரபுவும், வெகு நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ திவ்யாவும் நடித்து, புதுமுக இயக்குனர் கார்த்தியின் கைவண்ணத்தில் வெளியான படம். வழக்கமான திருடன் போலீஸ் கதை தான் என்றாலும் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த தகறு எனும் படத்தை உரிமை வாங்கி எடுக்கப்பட்ட படம் இது. இதன் சிறப்பம்சம் இதன் எடிட்டரான மணிமாறன் இம்மாதிரி படங்கள் நீளம் அதிகம் இருப்பதை மனதில் கொண்டு இரண்டு மணி நேரத்தில் படத்தை நறுக்கியிருக்கிறார். அதோடு விக்ரம் ஸ்ரீதிவ்யா பின் கதை சொல்லப்பட்ட விதமும் அதை ஒளிப்பதிவு செய்த விதமும் ஊடாக ஒலிக்கும் இசையும் படத்திற்கு பெரும் பலம். இந்தப் படத்தின் பலவீனம்: கன்னட சூப்பர் ஸ்டார் நடித்த கதையில் விக்ரம் பிரபுவைப் பொருத்தியது தான். திரைக்கதையிலும் புதுமைகளை புகுத்தாமல் பார்த்த படங்களின் காட்சிகளையே வைத்தது இன்னமும் அலுப்பை விதைக்கிறது. படத்தில் வரும் ஒரு பெண் பாத்திரம் கதறுவது போல, ரசிகனும் காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கதற வைக்கும் படம் இது. – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
விக்ரம் பிரபு இன்ட்ரோ பாடலில் “என்கிட்ட மாட்டாத! காணாம போயிருவ” என்கிற பாடல் வரிகளைப் படக்குழுவினர் குறியீடாக அவருக்கு மட்டுமல்ல பார்வையாளர்களான நமக்கும் சேர்த்தே வைத்தார்களா என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். தேவையில்லாத குளோஸ் அப்கள், நகராத கேமரா கோணங்கள் என்று ஒளிப்பதிவாளர் கதிரவன் பழைய படங்களுக்கே உரியப் பாணியில் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார். இப்படி ஒரு திரைக்கதைக்கு எப்படிப் படத்தொகுப்பு செய்வது எனப் படத்தொகுப்பாளர் மணிமாறன் திணறியிருக்கிறார். அதற்காகப் பழைய கல்யாண வீடியோவில் வரும் கீழிருந்து மேல், வலமிருந்து இடம் என நகரும், ஆதிகாலத்து டிரான்சிஷன் முறையைத் தவிர்த்திருக்கலாம். பாடல்களும், பின்னணி இசையும் வேதனை! மொத்தத்தில் திரைக்கதை என்கிற பெயரில் யாரோ ஒருவரைப் போட்டு அடிப்பது, அபத்த வசனங்கள் பேசுவது, பிறகு பாட்டு போடுவது, அதையே மீண்டும் மீண்டும் செய்வது எனத் தலைவலி தைலத்தைத் தேடி ஓட வைத்திருக்கிறது இந்த ‘ரெய்டு’. – சினிமா விகடன்
கிடா

நேர்த்தியாக ஈர்க்கும் உணர்வுபூர்வ படைப்பு. தன் பேரனுக்கு புது துணியை வாங்கித் தர முடியவில்லையே என்ற சோகத்தில் வீட்டுக்குச் செல்வதை தாமதப்படுத்தும் தாத்தாவும், மறுபுறம் புதுத்துணியை வாங்கித் தர தாத்தா வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ஏங்கி தவிக்கும் பேரனுமாக விரியும் காட்சிகள் உணர்வுகளின் வெவ்வேறு கோணங்களையும், ‘நுகர்வு கலாச்சார’த்தின் வீரியத்தையும் அழுத்தமாக உணர்த்துகின்றன. இந்த உணர்வு நிலைகளிலிருந்து பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார் இயக்குநர் ரா.வெங்கட். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளிய படம்.
பெற்றோர் விபத்தில் உயிரிழக்க, பேரனை அரவணைப்புடன் பார்த்துக் கொள்கிறார் செல்லையா (பூ ராமு). வயது முதிர்ச்சி காரணமாக உரிய வேலை கிடைக்காமல் வறுமையில் துவண்டு கொண்டிருக்கும் தாத்தாவிடம் பேரன் கதிர் தீபாவளிக்கு துணி எடுத்து தர சொல்லி கேட்கிறார். பேரனின் ஆசையை மறுக்க முடியாத செல்லையா, கடன் வாங்கியாவது புது துணியை எடுத்து தர வேண்டும் என பல வழிகளில் போராடுகிறார். எல்லா போராட்டங்களும் ஒரு கட்டத்தில் தோல்வியைத் தழுவுகின்றன. இறுதியில் குலதெய்வத்துக்காக நேர்ந்துவிட்ட ‘கிடா’யை விற்கும் முயற்சியில் இறங்குகிறார்.
மறுபுறம் கறி கடையில் வேலை பார்க்கும் வெள்ளைச்சாமி (காளிவெங்கட்), அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு வருவதால் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். இதை எதிர்த்து தான் வேலைபார்த்த கடைக்கு எதிரிலேயே தீபாவளியை முன்னிட்டு புது கடையை திறந்து வியாபாரம் செய்வதாக சவால் விட்டு, அதற்கான கிடா’வை தேடி அலைகிறார். ஒரு வழியாக செல்லையாவின் ‘கிடா’வை வெள்ளைச்சாமி வாங்க வரும்போது, கிடா களவாடப்படுகிறது. இறுதியில் கிடா கிடைத்ததா, இல்லையா? பேரனுக்கு செல்லையா துணி எடுத்து கொடுத்தாரா? வெள்ளைச்சாமியின் சவால் நிறைவேறியதா? – இப்படி பல கேள்விகளுக்கு உணர்வுபூர்வ காட்சிகளுடன் பதில் சொல்கிறது திரைக்கதை.
பேரனுக்காக துணிவாங்க போராடும் ‘பூ’ராமு செல்லையாவாக வாழ்ந்திருக்கிறார். பேரனாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் தீபனின் சிறப்பே அவரது மொழி. ‘ல’, ‘ழ’ உள்ளிட்ட அழுத்தம் கொடுக்கும் வார்த்தைகளை உச்சரிப்பின் வேகத்தில் கடந்து செல்லும் அவரின் தனித்துவ ஸ்லாங்கும், அப்பாவித்தன பாவனைகளும் ஒன்று கூடுமிடத்தில் நாமே துணிவாங்கி கொடுத்திடலாம் என நினைக்க வைக்கிறார். மது போதையில் தள்ளாடுவதும், திருந்தி வாழும் வைராக்கிய போராட்டமும் காளிவெங்கட்டை வெள்ளைச்சாமியாகவே கண்முன் நிறுத்துகின்றன. படத்தின் நடுவில் வரும் காதல் போர்ஷன் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும், மொத்தமாக படம் முடிந்து வெளியே வரும்போது சிலருக்கு காற்றில் பறக்கும் இறகைப் போல லேசான மனமும், சிலருக்கு கண்களில் ஈரம் காய்ந்த கண்ணீரும் இருக்கலாம்! – ஹிந்து தமிழ்
இது கலைப் படமா, கமெர்ஷியல் படமா? மையப்புள்ளியில் சிக்கித் தவிக்கும் திரையாக்கம்! திரைக்கதையில் இரு மைய கதாபாத்திரங்களும் வெவ்வேறு திசையில் பயணம் செய்து ஒரு புள்ளியில் இணைவதே இப்படத்தின் முக்கிய காட்சி. ஆனால் அதைப் படத்தின் தொடக்கத்தில் வைத்தது, அடுத்து என்ன என்கிற சுவாரஸ்யத்தைக் குறைத்து விடுகிறது. ஒளிப்பதிவின் தரத்தில் சில குறைகள் தெரிந்தாலும், இரவு நேரக் காட்சிகளில் சிறப்பான ஒளியுணர்வை தர முயற்சி செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் எம்.ஜெயபிரகாஷ். பின்னணி இசையும், பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை. கறிக்கடை, ஊருக்கு வெளியே தனியான குடிசை எனக் கலை இயக்குநர் கே.பி.நந்து தனது பணியைக் குறை சொல்ல முடியாத வகையில் செய்துள்ளார். இந்த `கிடா’ விருந்து நம் வயிற்றையும் நிரப்பாமல், மனதையும் நிரப்பாமல் திருப்தியில்லா உணர்வோடு எழுந்து வர வைக்கிறது.- விகடன் இணைய இதழ்.
வழக்கமான பாணியில் சொல்லப்பட்டாலும் உணர்வு பூர்வமான அமைக்கப்பட்ட காட்சிகள் கதை மாந்தரோடு நம்மை நெருங்க வைக்கின்றன. முடிவு என்ன என்று யூகிக்க முடிந்தாலும் காட்சிகளின் படிமம் நம்மை பதைபதைக்க வைக்கிறது. மொத்தத்தில் ஃபீல் குட் சினிமாவுக்கு இன்னொரு படம் கிடா. – டைம்ஸ் ஆஃப் இந்தியா
டைகர் 3 ( இந்தி / தமிழ்)

போஸ்டரில் போட்டபடியே இது டைகர் ஜிந்தா ஹை, வார், பதான் படத்தின் தொடர்ச்சி. ஒரு மாஸ் ஹீரோவுக்கு தேவையான, ரசிகனை துள்ளாட்டம் போட வைக்கும் காட்சிகள் என்ன என்ன என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் இயக்குனர் மணீஸ் ஷர்மா. சல்மான் கான், கேத்ரினா கைஃப், இம்ரான் ஹாஸ்மி, கேமியோவில் ஷாரூக்கான். ஒரு சண்டைக் காட்சியில்க் அதகளம் செய்திருக்கிறார்கள் சல்மானும் ஷாருக்கும். சல்மானும் கேத்ரினாவும் சண்டை காட்சிகள் மற்றும் உண்ர்வு பூர்வமான காட்சிகள் என செம்மையாக நடித்திருக்கிறார்கள். இம்ரான் ஹாஸ்மியின் வில்லன் கதாபாத்திரம் சில சமயம் ரசிகனையே கடுப்பேத்துகிறது. அதுவே அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி. இசை, ஒளிப்பதிவு, சவுண்ட் டிஸைன் என எல்லாவற்றிலும் சிறப்பைக் கூட்டியிருக்கிறது இந்தக் குழு. பட்! மூணு மணி நேரம் ஓடுவது எப்ப முடியும் எனும் கேள்வியை நம் மனதில் விதைக்காமல் இல்லை. – ஃபில்மி கிராஃப் அருண்.
ஒரு ஆக்ஷன் படத்திற்கு உண்டான அத்தனை தருணங்களையும் உள்ளடக்கி இருக்கிறது டைகர் 3. கத்ரினா, சல்மானின் பங்களிப்பு எதிர்பார்த்த திரைக்கதையை சற்று வித்தியாசமாக்கி இருக்கிறது. ரமேஷ் பகத்தின் எடிட்டிங் செமை ஷார்ப். ஆனால் ப்ரீத்தமின் இசையைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. நினைவில் இருந்தால் தானே! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
தொடர்பில்லாத பல காட்சிகளைக் கொண்ட சமீபத்திய சல்மான் படம் ஈர்க்க மறுக்கிறது. புதுப்புது திருப்பங்களை கொடுத்தாலும் நிறைவை தர முடியவில்லை இயக்குனர் மணீஷ் சர்மாவால். – ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
சல்மான், டைகர் என்று சொன்ன உடனே கூடுதல் உழைப்பை கொட்டுவார். இதிலும் அப்படியே. தேச பக்தி மற்றும் பண்டிகை கொண்டாட்டத்திற்கு இந்த காக்டெயில் நல்ல விருந்து. தி ஹிந்து
பெரிய சிறுத்தை தான். ஆனா நகங்களை வெட்டிட்டாங்க. – நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
கில்லர்
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்குடன் வெளியாகி இருக்கிறது இந்தப் படம்.
மைக்கேல் ஃபாஸ்பெண்டரும் டேவிட் ஃபின்சரும் இணைந்து இந்த அதிரடி ஆட்டத்தை ஆடி பரபரப்பின் உச்சம் தொட வைத்திருக்கிறார்கள். படம் முழுக்க ஃபாஸ்பெண்டரின் மனக்குரல் தான் நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறது. ஏன்? கட்டணக் கொலைகாரர்களுக்கு மனது விட்டு பேச யாரும் இல்லை எனும் உளவியல் தான் காரணம். அலெக்சிஸ் மேடிஸ் நோலன்டின் காமிக் புத்தகத்திலிருந்து கரு உருவாகி படமாக மாறியிருக்கிறது ஃபின்சரின் கைவண்ணத்தில். கட்டணக் கொலைகாரனுக்கு இருக்க வேண்டிய அத்வாசிய குணங்களைப் பட்டியலிடுகிறார் ஃபின்சர், ஃபாஸ்பெண்டரின் குரலில். இதற்கு இவ்வளவு கவனம் தேவையா என ஆச்சர்யப்படுத்தும் தகவல்கள். உதாரணத்திற்கு கொலைகாரனின் ரத்த அழுத்தம் அறுபதுக்குள் இருக்க வேண்டும் என்பது ஒன்று. அதற்கு தேவையான மருத்துவ பரிந்துரைகள். – தி ஹிந்து
தி கில்லர் இலக்கில்லாத படம். அதன் குறியீடு வாழ்க்கையே இலக்கில்லாதது தானே. ஒரு வசனம் வருகிறது. உனக்குத் தெரியுமா சும்மா இருப்பது எவ்வளவு உடல் சக்தியை வீணடிக்கிறது என்று? அதனால் எதையாவது செய்து கொண்டே இருக்கிறான் கதை நாயகன் அவன் எதிர்ப்பார்க்கும் நொடி வரும் வரை. வித்தியாசமான படம். ஆனால் எத்தனை பேருக்குப் பிடிக்கும் என்பது முக்கியமான கேள்வி. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.
80ஸ் பில்டப்

வெறும் பில்டப் மட்டும்தானா?’ சோதிக்காதீங்க பாஸ்! சிரிக்க வைங்க! காமெடி டிராமாவாகச் சொல்கிறேன் என்று இரண்டு மணிநேரங்கள் நம்மை விடாப்பிடியாகச் சோதித்து வெளியே அனுப்புகிறார் இயக்குநர் கல்யாண். நாயகி ராதிகா ப்ரீத்தி மட்டும் கூட்டத்தில் சற்றே சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். 128 நிமிடங்களுக்குள் படத்தை சுருக்கியதற்காக வேண்டுமானால் எடிட்டர் எம்.எஸ்.பாரதியைப் பாராட்டலாம். மெனக்கெடல் ஏதுமில்லாமல் `ஜோக்’ என்று சொன்னாலே சிரித்துவிடுவார்கள், இரட்டை அர்த்தம் பேசினால் விசில் அடிப்பார்கள் என்று மனப்பான்மையை இயக்குநர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் ரசனை அதைக் கடந்து வந்துவிட்டது என்பதை உணரும் தருணம் இது! – சினிமா விகடன்
தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியமுள்ள நகைச்சுவை. நாம் இடைவேளையை அடையும் நேரத்தில், படம் உண்மையில் முடிந்துவிட்டது போல் உணர்கிறது, எனவே இரண்டாம் பாதியில் நடக்கும் அனைத்தும் மிகைப்படுத்தல் போல் தோன்றி விரைவில் நம்மை சோர்வடையச் செய்கிறது. இ டைம்ஸ்
காமெடியை மையப்படுத்தி வரும் படங்கள் இவ்வாறான அபத்தக் களஞ்சியங்களாக இருப்பது தமிழில் தொன்றுதொட்டு நடந்து வருவதுதான் என்றாலும், ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு பார்வையாளர்களின் ரசனைகள் விரிவடைந்த பிறகும் திரைக்கதையை நம்பாமல் ஆங்காங்கே சிரிக்க வைக்கும் ஓரிரு காட்சிகளை நம்பி ஒரு முழு படத்தையே ஒப்பேற்றுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. – இந்து தமிழ் திசை
ஜோ

யாரும் எதிர்பாராத திருப்பத்தோடு ஒரு நிறைவான ஃபீல் குட் திரைப்படமாக ஜோ திரைப்படம் அமைந்திருக்கிறது. குறிப்பாக யாரும் எதிர்பாராத வகையில் அமைந்திருக்கும் கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தையும் கரை சேர்த்து இருக்கிறது. நாம் ஏற்கனவே பலமுறை பார்த்து பழகிய காதல் படத்தை போல் இது இருந்தாலும், காட்சிகளும் திரைக்கதை அமைப்பும் பிரஷ்ஷாக அமைந்து, அதற்கு வலு சேர்க்கும் விதமாக படத்தின் இசையும் அமைந்து எந்த இடத்தில் சிரிக்க வேண்டுமோ, எந்த இடத்தில் அழ வேண்டுமா, எந்த இடத்தில் நெகிழ வேண்டுமோ அந்தந்த இடங்களில் அந்தந்த உணர்ச்சிகளை சரிவர கலவையாக கொடுத்து, ஒரு முழு நீள பீல் குட் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹரிஹரன் ராம். – நக்கீரன்
அர்ஜுன் ரெட்டி, மவுனராகம், ராஜா ராணி போன்ற படங்களில் சாயலில் கதை. படத்தில் ஒரு வசனம் வருகிறது: உன் வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று தெரியாவிட்டால் போய் தேடிக் கண்டு பிடி! படத்தை பற்றியும் இதையே சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தப் படத்தின் அர்த்தம் என்ன? பலவீனமான திரைக்கதையால் வீழ்ந்து போகிறது ஜோ! – சினிமா எக்ஸ்பிரஸ்.
சில நொடிகளில்
ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த் நடிப்பில் வெளியான திரில்லர் படம். வினேய் பரத்வாஜ் இயக்கம். ஃபேஷன் உலகின் மர்மங்கள்; அதில் இருக்கும் அபாயங்கள் எனும் புதிய களம். நடித்த கலைஞர்களின் அப்பழுக்கில்லாத நடிப்பால் இயக்குனர் நம் கவனத்தை படத்தை விட்டு அகலா வண்ணம் இயக்கியிருக்கிறார். – டைம்ஸ் நௌ.
கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர், மர்டர் மிஸ்ட்ரி என அத்தனை வகைப் படங்களின் அம்சங்களையும் கலந்துகட்டி, 94 நிமிடங்கள் பரபரப்பாக கடந்தோடும் படம். லண்டனிலுள்ள செம்ஸ்போர்டு நகரத்தின் ரசிக்க வைக்கும் அழகை, வியக்க வைக்கும் பிரமாண்டத்தை தன் கேமரா கண்களால் வளைத்துச் சுருட்டி பரிமாறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன்! ஹாலிவுட் பட பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கான பின்னணி இசையை, கதையோட்டத்திற்கு பொருத்தமாக தந்துள்ளார் பாலிவுட் இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி! கள்ளக் காதல், துரோகம் என கதை குறுகிய வட்டத்துக்குள் சுற்றிச் சுழன்றாலும் நிறைவுக் காட்சியில், அதுவரை நடந்த சம்பவங்களின் பின்னணியில் புதைந்திருந்து விடுபடும் மர்மங்கள் எதிர்பாராதது! சில நொடிகளில்… திரைக்கதைக்காக இன்னும் சில மணி நேரம் செலவிட்டிருக்கலாம்! -ஸ்டார்ட் கட் ஆக்ஷன்.
முழுக்க முழுக்க லண்டனில் நடக்கும் கதையை லண்டனிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வினய் பரத்வாஜ். பாலே நடன பாணியில் புன்னகைப் பூ கீதா ஒருவருடன் சேர்ந்து ஆடும் நடனம் பலே சொல்ல வைக்கிறது.
எதிர்பாரா திருப்பங்களும் சஸ்பென்ஸும் படத்தை வேறு லெவலுக்கு கொண்டு செல்கிறது. ஹாலிவுட் படங்களைப்போல் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் படமாக்கப்பட்டிருக்கிறது.
சுமார் ஒன்றரை மணி நேரம் ஒடும் இப்படத்தில் வசனங்களும் குறைவு. பாடல்களை நீக்கிவிட்டு கொஞ்சம் நீளத்தையும் குறைத்து ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட்டால் நல்ல வரவேற்பை பெறக்கூடிய படம் சில நொடிகளில். – நியூ சினிமா எக்ஸ்பிரஸ்
குய்கோ

குடியிருந்தகோயில் எனும் தலைப்புக்கு உரிமம் கிடைக்கவில்லை போல..அதை சுருக்கி குய்கோ என்று வைத்து விட்டார் இயக்குனர் அருள் செழியன். தலைப்பு சற்று தயங்க வைத்தாலும் உள்ளே போனால் ஒரு அச்சு அசல் கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அதிலும் யோகிபாபு மண்டேலா படத்திற்குப் பிறகு உண்மையாகவே நடித்திருக்கிறார். ஃப்ரீஸர் பாக்ஸ் வாடகைக்கு விடும் நபராக சிறு வேடத்தில் வரும் அருள்நிதி இதை ஏற்று செய்திருப்பது பெரிய மனது. வசனங்கள் அனைத்தும் அருமை. அம்மாவுக்கு அரசு மரியாதைன்னு கேக்கறீங்களே! அம்மான்னாலே மரியாதை தாண்டா எனும் யோகியின் வசனம் பல அடுக்குகளைக் கொண்டது. அந்தோணி தாஸ் கிராமப் படங்களுக்கு இசையமைப்பதில் சூரர் என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறார். போனால் நிச்சயம் நனைந்த கைக்குட்டையுடன் வெளியே வருவீர்கள். – வலைப்பேச்சு.
தமிழ் சினிமாவில் மக்களின் வாழ்வியல் பற்றிய படங்கள் அவ்வப்போது வருவது உண்டு. அப்படிப்பட்ட படங்களிலும் இன்னும் சொல்லப்படாத பல கதைகள் இருக்கின்றன என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் புரியும். ஒரு சிறிய உணர்வுபூர்வமான விஷயத்தை வைத்து அதில் எந்த அளவுக்கு நகைச்சுவையை வைக்க முடியுமோ, சமுதாயத்தில் சில விஷயங்களை விமர்சிக்க முடியுமோ அந்த அளவிற்குச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அருள்செழியன். எளிமையான கதை, எளிமையான மனிதர்கள், அவர்களின் வாழ்வியல்கள், அதோடு சுவாரசியமான காட்சிகள் என ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலப்பாக நகர்கிறது இந்த ‘குய்கோ’.- தினமலர்.
காவல் துறையின் அலட்சியத்தால் பாதிக்கப்படும் ஒரு இளைஞன் மற்றும் வளைகுடா நாட்டில் இருந்து திரும்பி வரும் மற்றொரு இளைஞன் செய்யும் அலப்பறைகள் என இருவரை சுற்றி கதை நகர்கிறது. இரண்டு வெவ்வேறு பிரச்சனைகளை தனித்தனியாக காட்சிப்படுத்தாமல், இரண்டையும் ஒரே புள்ளியில் செல்வது போல் காட்டியுள்ளார் இயக்குநர். வன்முறை இல்லாமல், இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் சிறு பட்ஜெட்டில் ஒரு நல்ல வாழ்வியலை சொல்லும் படமாக வந்துள்ளது குய்கோ. இந்த படம் பார்க்கும் போது நம் வாழ்வில் பார்த்த, பார்த்துக்கொண்டிருக்கும் யதார்த்த மனிதர்கள் நினைவுக்கு வரலாம். – கல்கி இணைய இதழ்
அருள் செழியனின் கதை எளிமையானது மற்றும் துரதிர்ஷ்டவசமாக முழுவதும் அப்படியே உள்ளது, இது மீண்டும் ஒரு மோசமான அம்சம் அல்ல. நமக்குள் உள்ள மையத்தை உலுக்கிய ஒரு உறுதியான கதையின் காரணமாக பல கிராமப்புற கதைகள் பல ஆண்டுகளாக மறக்க முடியாதவையாக உள்ளன. வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஏதாவது இருந்தால், மலையப்பன் மற்றும் முத்துமாரியின் (துர்கா) காதல் பாடலுக்காக உருவாக்கப்பட்ட தும் பாஸ் ஆயே பாடலின் மகிழ்வான தமிழ் மொழிப்பாடல் எனக்கு நினைவிருக்கும். இல்லையெனில், குய்கோ கதையின் தலைப்பைப் போலவே முட்டாள்தனமாக இருக்கிறது, அதை விளக்கினாலும், படம் அதன் அர்த்தத்தையோ நோக்கத்தையோ வழங்கவில்லை. – சினிமா எக்ஸ்பிரஸ்.
லாக்கர்

நாயகன் விக்னேஷ் பலரை ஏமாற்றி வாழ்ந்து வருகிறார். நாயகியை துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகன், காதலிக்காக தான் செய்யும் திருட்டு தொழிலை விடுகிறார். பின் நாயகனை தனக்காக ஒருவரை ஏமாற்று என கேட்கும் காதலிக்காக மீண்டும் திருட்டு தொழிலுக்கு வருகிறார், நாயகன். பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை. எதிர்பார்க்க கூடிய திரைக்கதை.ஆனாலும் சுவாரஸ்யமாகச் சொல்லத் தெரிகிறது இயக்குனர் ராஜசேகரனுக்கு. இன்னும் கூட பலமான திரைக்கதை அமைத்திருந்தால் கல்லா கட்டியிருக்கும் படம். -ஷாட் கட் ஆக்ஷன்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் போலவே இல்லை முதல் பாதி. அதை மொத்தமாக காலி பண்ணி விடுகிறது சரியான திட்டமிடல் இல்லாத இரண்டாம் பாதி. – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
காதலில் விழுவதும் ஏமாற்றுக் களவில் ஆழ்வதுமான கதை. இரட்டை இயக்குனர்கள் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணனின் இப்படம் திரில்லர் ரசிகர்களையும் கொஞ்சம் காதலை விரும்பும் நபர்களையும் கவரும். ஒரு தடவை பார்க்கலாம் ரகம் என்றாலும் சில குறைகளைக் களைந்திருந்தால் இன்னும் உயரம் தொட்டிருக்கும். இப்போதைக்கு புதிய பாதை இல்லை. பழைய பழகிய ராஜபாட்டை. – டைம்ஸ் நௌ நியூஸ்.
