இரயில் பயணங்களில்


இரயில் பயணங்கள் சுகமானது. நான் கூட பலர் கூறக் கேட்டுள்ளேன், எழுதப் படித்துள்ளேன். நானும் பேசியுள்ளேன்.
அந்த சுகம் என்று புகை வண்டி, மின்சார இரயில் வண்டியானதோ, அன்றே தொலைந்து போனதோ என்பதுதான் என் கவலை.
புகையைக் கக்கிக் கொண்டு மிதமான வேகத்தில் ஓடும் புகை வண்டி, வழியில் காணும் நிலையங்களில் எல்லாம் நின்று நிதானமாகக் கிளம்பும். சிறு வயதில் பகல் நேர புகைவண்டிப் பயணம் பெற்றோருடன் பயணிப்பது ஏதோ இந்திரலோகம் சென்று வருவது போன்ற சந்தோசத்தைக் கொடுத்தது.
‘தலையை வெளியே நீட்டாதே’ இரயில் போற பக்கம் தலையை நீட்டாதே, கண்ல கரி விழும்’ அப்பா அனுபவத்தில் அதட்டுவதெலாம் நம் காதில் விழாது.
இப்ப family time அப்படின்னு சொல்லுகிறோமே அதைக் கொட்டிக் கொடுத்தது புகை வண்டிப் பயணம். யார் கைகளிலும் மொபைல் இருக்காது. பேச்சும், விளையாட்டும்தான். ஜன்னல் ஓரத்திற்கு சண்டை நடக்கும். அப்பா சிரித்து பேசுவதை கண்டு இரசிக்கலாம்.
எதிர்த் திசையில் நம்மை கடந்து செல்லும் மரம், செடி, கொடிகளும், மின் கம்பியில் வரிசையாக அமர்ந்து நம்மை வேடிக்கை பார்க்கும் குருவிகளும் ஒவ்வொரு முறையும் பார்ப்பவைதான், இருந்தாலும் சலிக்காது.
பெரிய இரயில் நிலையங்களில் வண்டி நிற்கும் பொழுது சாவகாசமாக இறங்கி பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து வரலாம்.
டீ, காபியோடு வடை முறுக்கு வாங்கி சாப்பிடுவதில் அலாதி சுகமிருந்தது.
சற்று நீண்ட பயணத்தில் எடுத்துச் செல்லும் புளியோதரையும், தயிர் சாதமும் அமிர்தம் எப்படியிருக்கும் என்று எடுத்துச் சொல்லும்.
நான் படித்த நாட்களில் இரவு 9 மணிக்கு சென்னை, எழும்பூரில் கிளம்பும் புகை வண்டி மறுநாள் காலை 6 மணிக்கு நிதானமாக திருச்சி சென்று சேரும். இடைப்பட்ட நேரத்தில் நல்ல கனவோட ஒரு நீண்ட தூக்கம் தூங்க, ஶ்ரீரங்கம் அடைந்தவுடன் இரயில் பெட்டியே பரபரத்து நம்மை எழுப்பி விடும். நாம் திருச்சி அடைவதற்குள் பல் துலக்கி முடித்திருப்போம்.
நிலக்கரி எஞ்சின் காட்சிப் பொருளானது. டீசல் எஞ்சின் என்னவானது தெரியாது. இப்பொழுது நான்கு திசையிலும் மின்சாரத்தில் ஓடும் இரயில்கள் அலறிக்கொண்டு புயலாக ஓடுகின்றன. நமக்கும் வேறு வழியில்லை நீண்ட பயணம் என்றால் சகித்துக் கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது.
அப்படி ஒரு பயணம்தான் நான் சமீபத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணித்தது.
கடந்த வாரம் திருச்சி ஒரு பணி நிமித்தம் செல்ல வேண்டி வந்தது. பகல் பொழுதில் வேலை முடித்து அன்றே திரும்பவும் வேண்டும்.
மலைக்கோட்டை விரைவு வண்டியில் சென்று வரத் திட்டம். இரவு 11.40 க்கு எக்மோரில் வண்டி கிளம்பும். வீட்டிலிருந்து 15 நிமிட தூரம்தான். எனக்காக வீட்டில் அனைவரும் விழித்திருக்க வேண்டுமே. இரவு 9.30 மணிக்கே இரயில் நிலையம் வந்துவிட்டேன். அமர இடம் தேடி நடை மேடையில் அங்கும் இங்கும் அலைந்தேன்.
ஒருவர் பையை தலைக்கு வைத்து முழு பெஞ்சையும் ஆக்ரமித்து தூங்கிக் கொண்டிருந்தார். என்ன களைப்போ. மற்றொருவர் தனது உடைமைகளை பெஞ்சில் வைத்து விட்டு அவர் நின்று கொண்டிருந்தார் பாவம். அவர் மனைவி மட்டும் உட்காற சற்று இடம் இருந்தது. மற்றுமொரு பெஞ்சில் இரு இளசுகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தொந்திரவு கொடுக்க விரும்ப வில்லை. இப்படியே மேலும், கீழும் நடந்த பொழுது திடீரென நிறைய பெஞ்சுகள் காலியானது.
அப்பாடி! என அமரச் செல்லும் பொழுது நான் செல்லும் வண்டி உள்ளே வந்து கொண்டிருந்தது. மணி 11. பரவாயில்லை வண்டியில் அமர்ந்து விட்டேன். அந்த பகுதியில் இருவர் மட்டுமே இருந்தோம். நான்கு பெர்த்கள் காலி. நிம்மதியாகத் தூங்களாம். இரவு பயணத்தில் ஜன்னல் வழியே தாம்பரம் வரை விளக்கொளியை வேடிக்கை பார்க்க பிடிக்கும். ஆனால் இருண்ட கண்ணாடி வழி முழுதும் இருட்டையே காட்டியது. படுக்கையை விரித்துப் படுத்தேன். டிக்கெட் பரிசோதகர் வரும் வரை விழித்திருக்க வேண்டுமே. வந்தார், அதற்குள் நடு ஜாமம் தாண்டி விட்டது.
கண்களை மூடி தூக்கத்தை வரவழைத்து ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன். கல கலவென சத்தம். என் பகுதியிலிருந்த நான்கு பெர்த்திற்கும் பயணியர். அவர்கள் பேசியதிலிருந்து அது விழுப்புரம் எனத் தெரிந்தது. அதிலிருந்த மூன்று பெண்களுக்கும் ஶ்ரீரங்கத்தில் இறங்காமல் தூங்கி விட்டால் என்ன செய்வது என்ற கவலை.
பின்னர் என்ன? அந்த மூன்று பெண்களின் பெயர்கள் எனக்குத் தெரியும், அவர்கள் மாமியார் கொடுக்கும் கஷ்டங்களை சுவாரசியமாக கேட்டுக் கொண்டு வரும் பொழுதே லால்குடி வந்து விட்டது. அவர்கள் லைட்டைப் போட்டு பிரஷைத் தேடி ஒவ்வொருவராக பல் துலக்கி வந்தார்கள். ஒருவழியாக ஶ்ரீரங்கம் வந்தது. அவர்களும் இறங்கினார்கள்.
என்ன பயன்? காலை மணி 4.30. இன்னும் 15 நிமிடங்களில் நான் இறங்க வேண்டுமே.
இப்பொழுது சொல்லுங்கள். இரயில் பயணம் இனிமையானதா?
