Durga Idol Immersion Royalty-Free Images, Stock Photos & Pictures |  Shutterstock

தசரா கொண்டாட்டம், துர்கா பூஜை, கடலில் (நீரில்) அந்த அழகான சிலையை (பொம்மைகளை) கரைப்பதைப் பார்த்ததில், 35 வருடத்திற்கு முன் டி வி யில் பார்த்த “ஏக் கஹானி” நியாபகம் வந்தது. இதோ அந்த பெங்காலிக் கதை
ஒரு பொம்மை செய்யும் கலைஞரின் வீடு.  பொம்மை என்றால் கொலுப்படியில் வைக்கும் சிறிய பொம்மை இல்லை.  பெரிய துர்கை பொம்மை / சிலை.  கல்கத்தாவில் 10 நாள் கோலாகலமாக பூஜிக்கப் பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் கும்பிட்டு பின்னர் நீரில் கரைக்கப்படும் பிரம்மாண்டமான பொம்மை. அவரின் சிலைக்கு மிகுந்த மதிப்பு உண்டு. மிக மிக நேர்த்தியாக செய்வார்.  நல்ல விலை கொடுத்து வாங்கிப் போவார்கள். 
அந்த மாதிரி ஒரு பொம்மை செய்து கொண்டிருக்கும் காட்சியோடு தொடங்குகிறது கதை. ஒவ்வொரு அங்குல த்தையும் நுணுக்கமாக பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருப்பார்.  தள்ளி நின்று பார்ப்பார். திருப்தியானால் அடுத்த பாகத்துக்குப் போவார்.  வண்ணங்கள் பூசிக் கொண்டு இருக்கிறார்.  இரண்டு நாளில் முடிக்க வேண்டும். 
அப்போது அவளுடைய மகள் ஊரிலிருந்து ஒரு பெட்டியோடு வருகிறாள். எல்லாவற்றையும் இப்படியே போட்டுவிட்டு “மகளே” என்று சந்தோஷத்தோடு கூறிக்கொண்டு பெட்டியை வாங்கிக் கொள்கிறார். பெரும் குரலில் மனைவியை அழைக்கிறார். அவளும் வந்து சந்தோஷத்தோடு கட்டிக்கொண்டு பின்னால் மாப்பிள்ளை வருகிறாரா என்று பார்க்கிறாள்.  அப்பா அம்மாவிடம் ஜாடையாக பேசாமல் உள்ளே போகச் சொல்கிறார். 
அன்று முழுவதும் என்ன என்னமோ பேசுகிறாள்.  ஆனால் மாப்பிள்ளை பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. பெற்றவர்களுக்கு கேட்கத் தயக்கமாக இருக்கிறது.  ஏதோ சர்ச்சரவு. என்ன என்று தெரியவில்லை.  தானாகத் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். இவளே சொல்லட்டும் என்று  எண்ணுகின்றனர். 
அப்பா பொம்மை செய்யும் இடத்தில் சென்று அவருக்கு உதவியாக இருக்கிறாள்.  அப்பாவின் திறமை கண்டு வியக்கிறாள்.  பல முறை பார்த்ததுதான்.  ஒவ்வொரு முறையும் அதே ஈடுபாட்டோடு செய்கிறார்.  ரசித்து ரசித்து செய்கிறார். 
பொம்மை செய்து முடித்து பணம் கொடுத்து எடுத்துச் சென்ற பின்பும், தினமும் சென்று பார்க்கிறார்கள்.  மற்றவர்கள் வியந்து பாராட்டும் போது, வணங்கும் போது, மனதுக்குள் மகிழ்ச்சி.  பார்ப்பவர்களுக்கு இதை செய்தவர் இவர்தான் என்று தெரியாது. 
பின்னர் பூஜைகள் முடிந்து துர்க்கையை தண்ணீரில் கரைக்கும் நாள்.
பெரிய ஊர்வலம். மேளதாளம், பட்டாசு, ஆடல்-பாடல் எல்லாம் முடிந்து துர்க்கை பொம்மை பெரிய தண்ணீர் தடாகம் / கடல் அருகே தோள்களில் தூக்கி வருகிறார்கள்.  தண்ணீர் அருகே கீழே வைக்கிறார்கள்.  பின்னர் சிலர் உள்ளே இறங்கி பொம்மாயை தண்ணீருக்குள் தள்ளுகுறார்கள். சிலர் அடுத்த பக்கத்திலிருந்து இழுக்கிறார்கள்.  பெரிய பொம்மை என்பதால் முழுவதும் மூழ்க வில்லை.  பலம் கொண்டவரை சிலர் அமுக்குகிறார்கள்.  மெல்ல மெல்ல அது தண்ணீருக்குள் பெரிய முயற்சிக்குப் பின் மூழ்கி விடுகிறது.
மகள் கேட்கிறாள் “அப்பா நீங்க பாத்துப் பாத்து, ஆசை ஆசையாய் செய்த பொம்மை இப்படி ஆகும்போது, உனக்கு வருத்தமா இல்லையா?  கஷ்டமா இல்லையா? “
“இல்லை அம்மா, அது செய்யும்போதே இப்படி ஆகும் என்று தெரிந்துதான் செய்தேன்.  இது படைக்கப் பட்டது இதுக்குத்தானே” என்கிறார். 
“என்னையும் இப்படி விட்டு விடுவியா அப்பா?” என்று கேட்டு கண் கலங்கி கையைப் பிடிப்பாள். 
“எப்படியம்மா விடுவேன், நீ உயிருள்ள, என் உயிர்.  உன்னை எப்படி விடுவேன்” என்று சொல்லி தோளோடு அணைத்துக் கொள்வார்.  
அந்த அணைப்பபு, வார்த்தை அந்த பெண்ணுக்கு, கதகதப்பா இருக்கும் (எனக்கும் இருந்தது – அன்றும்  இன்றும்) 
என்ன பிரச்சனை, ஏன் வந்தாள் எதையும் கதையில் சொல்லவில்லை. அவர்களும் கேட்கவில்லை.  அவர் படைத்த பொம்மையோடு தன்னை தொடர்பு படுத்தி அவள் கேட்பது, அப்பாவின் பதில்.  உணர்வு பூர்வமான கதை சொல்லல்