
ஓர் இரவு முழுவதும் விழித்திருந்தார் ரமேஷ். பிறகும் தூக்கம் வர மறுத்தது. தொடர்ந்து ரமேஷ் படபடப்புடன் மிகவும் வேகமாகப் பேசுவதை நண்பர்கள் கவனித்தார்கள். இத்துடன் ஓரிடத்தில் இல்லாமல் இங்கும் அங்கும் நடந்தவாறே இருப்பதை, கிடுகிடுவென ஏதேதோ யோசனைகளை, திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்ததை, அவசரமாகச் சாப்பிடுவதைப் பார்த்தார்கள்.
மறுநாள் விடியற்காலை மூன்றரை மணிக்கு அவர்களை அவசரமாக எழுப்பி, தீட்டிய திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றதும் பயந்து போனார்கள். மதிய உணவின்போது அவர்கள் தேவை இல்லாமல் உளவு செய்வதாகவும், தன் யோசனைகளை விற்றுப் பணம் செய்வதாகவும் கோபம் பொங்க ரமேஷ் கத்தினார்.
இருபத்தி ஒன்றாவது வயதில் ரமேஷ் பல்கலைக்கழக விடுதியில் வசிக்கும் போது முதன்முறையாக இவ்வாறு ஆனது. பெற்றோரை அழைத்தார்கள். மனநல மருத்துவர் இது மேனியா (Mania) என்று ஊர்ஜிதம் செய்து விளக்கம் அளித்தார். ரமேஷ் இருந்த நிலைக்கு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை தேவை எனச் சொன்னார். நேர்ந்திருந்ததை நிலைப்படுத்த இரண்டு வாரத்திற்கு மருந்துகள் தரப்பட்டன.
மூன்றாவது வாரம் ரமேஷ் விடுதிக்குத் திரும்ப, பல பாடங்கள், எழுதித் தர வேண்டியவை பலவற்று உள்ளன எனத் தெரிந்தும், உற்சாகமற்ற நிலையினால் முடித்துத் தர வேண்டியவற்றைச் செய்ய இயலவில்லை. தன்னைச் சுற்றி உள்ள எல்லோரும் நேரத்திற்கு முடித்துக் கொடுப்பதைப் பார்த்ததும் மனநிலை மேலும் சரிந்தது. இந்த முறை மருத்துவர் மன உளைச்சலுக்கு (Depression) மருந்துகளைக் கொடுத்தார்.
இந்த நிலை நான்கு மாதத்திற்கு நீடித்த பிறகு தெளிந்தது. இப்படியே மீண்டும் இரண்டு முறை மேனியா அதைத் தொடர்ந்து மன உளைச்சல் என்று நிகழ்ந்ததில் இது பைபோலார் டிஸ்ஸார்டர் (Bipolar Disorder) எனத் தீர்மானிக்கப்பட்டது. அப்போது ரமேஷ் புதிதாக வேலையில் அமர்ந்திருந்த நிலை. கிடைத்த வேலை போய் விடுமோ என அஞ்சினார். அப்போது, உளவியல் ரீதியாக உதவ மருத்துவர் அவனை என்னிடம் அனுப்பி வைத்தார்.
நான் பார்த்த போது ரமேஷ் ஆறு மாதமாக மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொண்டிருந்ததால் நிலையான நிலையில் இருந்தார். அப்போது வயது இருபத்தி ஆறு. என்னைப் பார்ப்பதின் குறிக்கோள் அந்த நிலைகளின் அறிகுறிகளை அடையாளம் காண, முடிந்தால் தவிர்க்க, அப்படி வந்தாலும் கூட இருப்பவர்களின் உதவியுடன் வீரியத்தைப் புரிந்து கொண்டு நிலைமையைச் சமாளிக்க எனத் தீர்மானித்தோம்.
மனநலத்தில் மேனியா ஸைகோஸிஸ் (Psychoses) பிரிவில் வரும். இந்தப் பிரிவில் உள்ளவர்கள் தனக்கு என்ன நேர்ந்தது, என்ன சொல்கிறோம், செய்கிறோம் என்பதை அறியமாட்டார்கள். இதை insight (தெளிவாக அறிதல்) என்போம். ந்யூரோஸிஸ் Neuroses பிரிவில் என்ன, ஏன் செய்தோம் என்ற தெளிவு இருக்கும். இரு பிரிவிற்கும் வித்தியாசங்கள் பல உண்டு, அவற்றில் இது ஒன்று.
பைபோலார் உடையவரின் சிகிச்சை நிலைத்து நிற்க, மருந்துகளைச் சரி பார்க்க மனநல மருத்துவர், உளவியல் ரீதியானவர்கள் நாங்கள், எல்லோரும் இணைந்து சிகிச்சைக்குச் செயல்படுவோம் என எடுத்துக் கூறினேன். கலந்தாலோசித்து ஒப்புதல் ஏற்பட்டபின் கூடி சிகிச்சை முறையை வகுப்போம். மீண்டும் பைபோலார் அறிகுறிகள் நேர்ந்தால் நடந்தவை குழுவினருடன் பகிர்ந்து கொள்ளப் படும்.
பைபோலார் உள்ளவர்களுக்குச் சிலமுறை மேனியா ஏற்படும், அதாவது உடலில் சில ரசாயனங்கள் அளவுக்குமீறி சுரப்பதால், நிதானத்தை இழந்து அளவுக்கு மீறிய உத்வேகம், ஆற்றல், படப்புடன் ஓய்வின்றி தூக்கமின்றி செயல்படுவார்கள், உணர்ச்சிகள் பொங்கும், எதையும் சாதிக்க முடியும் என்று நினைப்பார்கள், பெரிதளவில் திட்டங்கள் தீட்டுவார்கள். சற்று நேரத்திற்குப்பின் (சில மணிநேரம், அல்லது சில நாட்கள் என்று வேறுபடலாம்) இந்த உச்சக்கட்டம் அடங்கும். நாளடைவில் ரசாயனங்கள் சரியாகச் சுரக்காமல் பாதாள நிலைக்குப் போவார்கள், ஆற்றல் இழந்து மந்தமாகக் கிடப்பார்கள், எதையும் செய்ய இயலாது, தான் எதற்கும் பிரயோசனமில்லை என நம்புவார்கள். இப்படி மாறி மாறி உச்ச நிலை – பாதாள நிலை ஏற்படுவதற்குப் பெயர்தான் பைபோலார்.
நடந்ததை அறிந்துகொள்ள, சிகிச்சையில் உதவ, நான் ரமேஷின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் சேர்த்துக்கொண்டேன். நாங்கள் புரிந்துகொண்டது, பாடங்கள் அதிகரித்ததும், அவற்றைக் கையாளுவது எவ்வாறு என ரமேஷுக்குத் தெரியவில்லை. இந்த அழுத்தத்தினால் இரவு முழுதும் தூக்கமில்லாமல் தவித்தார், நாளடைவில் மது அருந்தத் தொடங்கினார். இந்தக் கட்டத்தில் முதன்முறையாக மேனியா நேர்ந்தது.
இப்படி நினைவூட்டல், பாதிப்பு ஏற்பட்ட போது நிலை அறிதல், இவை மறுபடி பிரச்சினை ஏற்பட்டால் அடையாளம் கண்டுகொண்டு தற்காப்பு செய்துகொள்ள உதவும்.
அதற்காகவும் ரமேஷ் புரிந்து கொள்ளவும் விலாவாரியாக மேனியா மற்றும் மன உளைச்சல் நேர்ந்தபோது நடந்த நிகழ்ச்சிகள், நடத்தை விதங்கள், அறிகுறிகள் இவை எடுத்துச் சொல்லப் பட்டன. நேர்ந்தபோது தோன்றிய சிந்தனை, உணர்வுகள், நடத்தை, உடலில் கண்டவை, இவற்றை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை முழுமையாக நினைவூட்டிப் பகிரப் பரிந்துரைத்தேன்.
சேகரித்தபோது வந்த தகவல்களிலிருந்து ரமேஷ் நலத்துடன் இருந்தபோதும், மேனியா, மற்றும் மன உளைச்சல் ஆனபோதும் நடத்தை முறைகளை வேறுபடுத்திக் காட்டினேன். இதிலிருந்து ரமேஷின் மாறிய நடத்தை மூலம் பிரச்சினை ஆரம்பித்தவுடன் அதை அடையாளம் காண்பது எப்படி என்று புரிந்து கொண்டார்கள்.
எவ்வாறு மன உளைச்சலில் வேலையில் முடிக்க வேண்டிய பணிகளைச் செய்யாமல் விட்டுப் போகிறது என்றும் புரியவந்தது. வேலைக்குப் போகாமலிருந்தாலும் இதே மந்த நிலை. மாறாக, நன்றாக ஆனதும் உழைப்பை உற்சாகமாகச் செய்து நேரத்திற்குத் தந்த வேலைகளை முடித்துத் தர முடிகிறது. மாறாக, மேனியா நிகழும்போது, உத்வேகமாகப் பல இரவுகள் கண் விழித்து, வேலையை அதி உத்தமமாகச் செய்யும் முயற்சியில் சாப்பிடுவது தவிர்க்க நேர்கிறது. பேசும் விதம், திட்டம் போடுவது எப்படி மாறுகிறது. இவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்தால் ரமேஷும், சுற்றம் சூழலில் உள்ளவர்களும் மாற்றங்கள் ஆரம்பித்ததும் உஷாராகலாம். இதற்காகவே குடும்பத்தினரை நாங்கள் சேர்த்துக் கொள்வோம்.
ரமேஷ் இயங்குவதை மேலும் சமநிலையில் வைக்க, இப்போது செய்து வரும் மூன்று வகையான வேலையைத் தேர்வு செய்து நடத்தை முறைகளைக் கண்காணிப்பது ஆரம்பமானது.
இந்தத் தெளிவு பெற, சில உளவியல் பயிற்சியின் யுக்திகளைப் பயிலுவதும் ஆரம்பமானது. தனது உணர்வின் வீச்சு, ஏற்றத்தாழ்வுகள் கண்டுகொள்ள ரமேஷ் பயின்றார். நடத்தையிலிருந்து மேனியா உத்வேகம் ஏற்படுகிறது என்று கண்டுகொண்டால், உடனடியாகத் தன்னை தனித்துக் கொள்ள வேண்டியது. சிந்தனையில் உதவாதது எவை எவை எனப் புரிய வந்தது. இப்படிப் பயின்றபின், பலமுறை பிரச்சினை ஏற்படப்போகிறது என்று தன்னுள் ஒரு சிறிய அதிர்வு வரும்போதே, அடையாளம் கண்டுகொண்டு ரமேஷ் தானே மீண்டு வர முடிந்தது. ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் இப்படி உணர்வுகள், நடத்தையைக் கண்காணிப்பதைத் திடமாகச் செய்தார்கள்.
இந்தக் கட்டம் மீண்டும் வந்தால் அதை எதிர்கொள்ள வழிமுறைகள் வகுத்தோம். ரமேஷுக்கு நிறங்கள் விருப்பம் என்றதால் அதற்கு ஏற்றபடி செயல்பட்டோம். பச்சை விளக்கு என்றால் நன்றாக இருக்கும் நிலையைக் குறிக்கும். இது நிலவும்போது, இந்த நிலையை நிலை நாட்டச் செய்ய வேண்டியதை வரிசைப் படுத்தப் பட்டது. வேளாவேளைக்குத் தூக்கம், சாப்பிடுவது. பொறுப்பை, வேலையை அளவிற்குச் செய்யப் பட்டியலிட்டோம், ஏனெனில் ரமேஷ் தன்னை வதைத்துக் கொள்வதைத் தவிர்க்கவே.
மஞ்சள் (amber) நிறம், ரமேஷின் நிலைமை மாறி வருவதைக் குறிக்கும். இந்த நிலையில் தானாக எவையெல்லாம் செய்ய முடியும் என்று வகைப் படுத்தினோம். ஒரு வேளை மேனியா அல்லது மன உளைச்சல் நேர்ந்தது என்றால் உடனடியாக நடந்ததை குறித்து வைத்து, அதன் பிரதிகளை உடல் மனநல குழுவினரிடம் அனுப்பி வைக்க வேண்டும். ரமேஷ் குடும்பத்தினரையும் ஓரிரு நண்பர்களையும் இதில் சேர்த்துக் கொண்டோம்.
தன் உணர்வுகளையும் நடத்தையும் கண்காணித்து, ரமேஷ் தானே அதற்கான நிற விளக்கை எடுத்து வைப்பார், கூட இருப்பவர்களும் தாங்கள் கவனித்தால் எடுத்து வைப்பார்கள். விளக்கைப் பார்த்து அனைவரும் அதன்படி செயல்படுவார்கள்.
இப்போது ரமேஷ் பைபோலார் நேர்ந்தால் தற்காப்பு செய்யும் அணுகுமுறையை அறிந்ததே தனக்கு மனதிடம் தந்ததாகக் கூறினார். எதிர்காலம் பயம் தரவில்லை என்றும் கூறினார். இதிலிருந்து ரமேஷ் என்னைப் பார்க்க வேண்டிய ஸெஷன் மெதுவாகக் குறைக்கப்பட்டது. மருந்துகள் தொடர்ந்து இருந்ததால் மன நல மருத்துவரைப் பார்த்து வந்தார். இன்னல் மீண்டும் நேர்ந்த போது ஸெஷன்கள் இருந்தன, தெளிவு பெறுவதுடன் பெற்ற திறன்களை மேம்படுத்தவும். போகப்போக இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் செஷன்கள் தேவையாக இருந்தது.
*
