அன்பே! ஆரமுதே !- தி. ஜாவின் நாவலை ஒரே மூச்சில் வாங்கிவந்த சூட்டோடு இரண்டே நாட்களில் படித்தாகி விட்டது. நீண்ட நாட்களுக்கு முன்பு படித்தது. திரும்ப வாங்கிப் படிக்க ஆவல் எழுந்தது. அதற்கேற்ப பெங்களூரில் ஒரு தமிழ்ப் புத்தகக் கண்காட்சி. தி. ஜாவின் நான்கு புத்தகங்கள் எடுத்து வந்தேன். திரும்பவும் போய் பழைய எழுத்துக்களாக இன்னொரு ஆறு புத்தகங்கள்! ஆஹா, இதுவல்லவோ எழுத்து என பிரமிக்க வைத்த எழுத்தாளர்கள். ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டே இருக்கிறேன்.
புத்தக வாசிப்பு – என் தந்தையும் மாமாவும் படிக்கத் தெரிந்த புதிதில் தொடங்கிவைத்த வைபவம் – இன்றும் விடாப்பிடியாக என்னைத் தொற்றிக்கொண்டு இருக்கிறது. அவர்கள் இன்று இல்லை. ஆனால் அவர்களுக்கு என்றென்றும் மனதில் நன்றி கூறிக் கொள்கிறேன். சிறுவயதில் அப்பாவுடன் ரயில் நிலையங்களுக்குச் செல்ல ஆர்வம். ஏனெனில் அங்குள்ள ஹிக்கின்பாதம்ஸிலிருந்து நல்லதொரு புத்தகம் வாங்கித் தருவார். பின்பு, அம்புலிமாமா வாங்கித்தரத் தொடங்கினார். ஆஹா! எத்தகைய நாட்கள் அவை. பின்பு கண்ணன் இதழ் வாங்குவார். நன்றாகப் படிக்க முடிந்ததும், படிக்கும் வேகம் அதிகரித்ததும், நான் ஒன்றையுமே விட்டு வைக்கவில்லை;
பெரியவர்களுக்காக வாங்கப்படும் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் ஆகியன எனக்கும் படிக்கக் கிடைத்தன. அவற்றில், முக்கியமாகக் கல்கியில் வாண்டுமாமா எழுதுவாரே, வீரவிஜயன், மரகதச்சிலை என்று சிறுவர் கதைகள், ஆனந்த விகடனில் துப்பறியும் சாம்பு ஆகியன; கொண்டாட்டம்தான். படித்துவிட்டுப் பள்ளிக்கூடம் சென்று மற்ற மாணவிகளுடன் கதை சொல்லி ‘அனாலிஸிஸ்’ வேறு நடக்கும்!!
பின்பு பிரபல ஆசிரியர்களின் (கல்கி, நா. பா., அகிலன், ஜெகசிற்பியன், இன்னும் சிலர்) சரித்திரத் தொடர்களைப் படிக்க ஆரம்பித்ததும்தான் வேறொரு உலகம் கண்முன் விரிந்தது. சேர, சோழ, பாண்டியர்களின் வீரப் பிரதாபங்களும், நாடாண்ட திறமையும் இன்னபிறவும் நாமும் அந்தக் காலத்தில் வாழ்ந்திருக்கலாகாதா எனும் ஏக்கத்தை என்னுள் எழுப்பிவிட்டன.
பள்ளிக்கூடப் போட்டிகளில் வென்றால் பரிசாகப் புத்தகங்கள்தான் தருவார்கள். அவ்வாறு எனக்குக் கிடைத்த முதல், இரண்டாவது புத்தகங்கள் இன்றும் என்னிடம் உள்ளன. ஒன்று- ‘சிறுவர்களுக்கான பாரதியார் பாடல்கள்’. இரண்டாவது – முன்னாள் அமைச்சர் திரு சி. சுப்ரமணியம் எழுதிய ‘நான் சென்ற சில நாடுகள்’. இந்தப் புத்தகத்தை எத்தனைமுறை படித்திருப்பேன் என நினைவில்லை.
கல்லூரி நாட்களில் மாணவிகள் விடுதியில் நூலகமும் உண்டு. ஆனால் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே! ஆங்கிலம் படிக்கும் வழக்கமும் ஆரம்பித்தது – Georgette Heyer, Milla& Boon – டீன் ஏஜ் மாணவிகளுக்கான புத்தகங்கள்! பின்பு பல்கலைக் கழக மாணவியர் விடுதியில் தோழிகளுடன் படிக்காத புத்தகமில்லை. நினைவில் நிற்பவை – Gone with the Wind எனும் தடிமனான நாவல். இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து படித்து அடுத்தநாள் பரிசோதனை சாலையில் துவண்டு போனது நன்றாக நினைவிருக்கிறது. இதில் என்ன என்றால் அந்த நாவலின் முடிவு என்னைப் பெரிதும் பாதித்தது; பல நாட்களுக்கு உற்சாகம் குன்றி விட்டது. இதைப்போன்றதே, The Pearl, Old Man and the Sea, டாக்டர் ஷிவாகோ வும். அந்தக் கதைகள் நடந்த காலகட்டத்தில் நானும் வாழ்ந்தது போன்ற பிரமையை உண்டுபண்ணின இவை. நல்ல நாவல்களின் அடையாளமோ என்னவோ!
நான் அறிவியல் ஆராய்ச்சி மாணவி. தமிழில் ஆராய்ச்சி செய்யும் மாணவிகளிடமிருந்து தி. ஜா. நாவல்களையும், நா. பா., அகிலன், ஜெயகாந்தன் இவர்களின் நாவல்களையும் நூலகத்திலிருந்து அவர்கள் ஆய்வுக்குக் கொண்டுவரும்போது வாங்கிப் படித்திருக்கிறேன். அசுர வேகத்தில் படித்திருக்கிறேன்.
பின் பல ஆண்டுகள் ஆராய்ச்சி தொடர்பான நூல்களைப் படிப்பதில்தான் சென்றன. எப்போதோ ஓரிரு நாவல்களைப் படித்ததுடன் சரி. ஆனால் தமிழ் வார இதழ்களில் (ஆனந்த விகடன், கல்கி) வரும் சிறுகதைகள், சில தொடர்கள் ஆகியவற்றைப் படிப்பேன். இந்தக் காலகட்டத்தில்தான் நான் படிக்காமல்விட்ட ஸ்ரீ வேணுகோபாலன் அவர்களின் திருவரங்கன் உலா, மதுரா விஜயம், மோகினி திருக்கோலம் ஆகியன ஆத்மாவை ஈர்த்து அழவே வைத்தன. இப்படியும் ஒரு அதிசய எழுத்தா எனச் சிந்திப்பேன்.
சில புத்தகங்களைப் படித்தால் இந்தப் பிறவிக்கு இது போதும் எனும் நிறைவும் ஆத்ம திருப்தியும் ஏற்படும். ஜெயகாந்தன் அவர்களுக்கு ஞானபீட விருது கிடைத்தபோது நானும் என் தங்கையும் (அவளும் அவர் எழுத்துக்கு விசிறி) ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை வீட்டில் வீடியோவில் பார்த்துக் களித்து அதனைக் கொண்டாடினோம்.
இன்றும் எனது பலவிதமான பணிகளுக்கு நடுவிலும் என் வாசிப்பு இடையறாது தொடர்கிறது. மலைபோலப் படித்த புத்தகங்கள் குவிந்துள்ளன. ஆயினும் என் காலத்திற்குப் பின்தான் அவை எங்கெங்கு கொடுக்கப்பட வேண்டும் என எழுதியே வைத்துள்ளேன். படித்துக் கொண்டே இருப்பது என்பது வாழ்க்கையில் பரம சுகம் என அறிந்தது ஒரு அழகான அருமை பெருமையான பாடம்.
நம்மிடையே தற்காலத்தில் எத்தனை அருமையான எழுத்தாளர்கள் உள்ளனர். வாசிப்பு என்பது நாம்மை வேறோர் உலகிற்கு அழைத்துச்செல்கிறது. அது நிஜமாக இருக்கலாம். கடந்தகாலமாக இருக்கலாம். ஆனால் பலவற்றைப் பற்றி அறிந்துகொள்ளத் துணை செய்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் படித்தவை பற்றி கட்டாயம் பகிர்ந்து கொள்வேன்.
~~~~~~~~~~~~~
