உன் மனம் நான் அறிவேன்
PICTURE THROUGH MICROSOFT IMAGE CREATOR USING AI
“செயற்கை நுண்ணறிவு – அதாவது ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸை உபயோகித்து, நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள், மனிதனின் மூளையிலிருந்த ஒளிப்படத்தை வெளிக்கொணறுவதில் வெற்றி கொண்டுள்ளனர். ஜப்பானிய ஆய்வாளர்கள், மூளையின் செயல்பாட்டிலிருந்து, மூளையின் நினைவலைகளைக் கொண்டு, அதை நகல் எடுப்பதில் வெற்றி பெற்றார்கள். “ என்றாள் அல்லி.
அங்கயர்க்கண்ணி மாமி, “சுத்தம். ஒரு எழவும் புரியல.. ” என்றாள்.
“மாமி! ஜெராக்ஸ் காப்பி தெரியுமல்லவா?” என்றாள்.
“தெரியும்”.
“அதைப் போல உங்கள் மனதில் இருப்பதைக் காப்பி எடுத்தால் எப்படி?” என்று கேட்டாள் அல்லிராணி.
“சரி. இன்றைக்கு நீ விடும் உடான்ஸ் தான் என்ன?” என்றாள் மாமி.
“அறிவியல் மாமி இது. நீங்கள் மனதில் ஏதாவது உருவத்தை எண்ணிக்கொள்ளுங்கள். அதை நான் கண்டுபிடிக்க முடிந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்” என்றாள் அல்லி.
“மேலே.. சொல் சொல்!” என்றாள் மாமி.
“இந்தப்படங்களைப் பாருங்கள்” என்றாள் அல்லி.
மாமி உடனே பகபக என்று உரக்கச் சிரித்து விட்டாள்.
“சிறுத்தையை நினைத்தது.. கழுதையாய் முடிந்ததா?” என்று சொன்னவள் சிரித்து முடிக்க சில நேரம் ஆயிற்று.
ஆசுவாசப்படுத்திக்கொண்ட மாமி, “சாரிடி அல்லி, இதுவே முன்னேற்றம் தான். காது , கண், வாயெல்லாம் அப்படியே இருக்கே “ என்று சொன்னவள் மீண்டும் “எனக்குத் தாங்கலே” என்று மீண்டும் பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினாள்.
அல்லியின் முகம் சிறுத்ததைப் பார்த்த மாமி அடங்கினாள்.
“ரொம்ப சாரிடி..நீ மேலே சொல்” என்றாள்.
“இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் 1200 படங்களைக் காட்டினர். ஆய்வாளர்கள், அவர்களது மூளையின் நினைவலைகளைக் கொண்டு , functional magnetic resonance imaging (fMRI) என்ற தொழில்நுட்பத்தால், படங்களாக மாற்றியுள்ளனர். இந்தத் தொழில் நுட்பத்தால், கனவுகள், மாயத்தோற்றம் (hallucination), மாயை (illusion) அனைத்தையும் ஒருநாள் அறியக்கூடும்”
என்று சொன்ன அல்லி, மாமியின் முகத்தைப்பார்த்துச் சொன்னாள்:
“மாமி, பல தொழில்நுட்பங்கள் தொடங்கும் போது நகைப்புக்கிடமாகத் தான் தோன்றும். அந்நாளில், கால்வனி (Galvani) என்ற ஆய்வாளர், தவளையின் கால்கள் மின்சாரக் கம்பி தொட்டதால் துடித்ததைப் பதிவு செய்தார். அதைப் பார்த்தவர்கள் சிரித்துமிருப்பார்கள். ‘இது என்ன ஆராய்ச்சி’ என்று. ஆனால், மின்சாரம் இல்லாமல் இன்று நம்மால் சுகமாக வாழ முடியுமா?” என்றாள் அல்லி.
“உண்மை தான் அல்லி. எதிர்காலத்தில், ஒருநாள், மனங்களை அறிவது என்பது ஜெராக்ஸ் காப்பி போல ஆகிவிடக்கூடும்” என்றவள் , “இந்தத் தொழில் நுட்பத்தால், எதிர்காலத்தில், எத்தனை திருமணங்கள் பாதிக்கப்படுமோ” என்றாள் மாமி.
அதன் உண்மையை உணர்ந்த அல்லி, “ஆமாம் மாமி, தொழில்நுட்பத்தை உபயோகிப்பதில் ஒரு தர்மம் (ethics) வேண்டும்” என்று முடித்தாள்.
இது ஒரு அதிசய உலகம்!

