‘இன்னிக்கி நாங்க லேப்ல மின் உற்பத்தி செய்தோம். ஹையா’ என்று குதித்தாள் பவானி.
“சரி, சரி. பாலைக் குடி. ஏடு படியறது பார். அப்றமா பேசலாம்” என்றார் அம்மா.
‘வெறும் பாலா, கொஞ்சம் கொறிக்க ஏதாவது..?’ என்றாள் பவானி.
“எங்களுக்கும் சேத்து” என்று குரல் கொடுத்தபடியே சரவணனும், சஞ்சையும் உள்ளே வந்தனர்.
‘அம்மா, எதுக்கும் எனக்குத் தனிக் கிண்ணத்தில கொடு. இரண்டு பகாசுரர்கள், காக்காய்க்கு மூக்ல வேக்கற மாரி வந்துட்டாங்க.’ என்று சிரித்தாள் பவானி.
“உன் மின்சாரப் பிரதாபத்தை அவாகிட்ட சொல்லு. நான் எல்லாருக்குமா கொண்டு வரேன்” என்று நகர்ந்தார் அம்மா.
‘ஒரு வெற்றிடக் குழாய்ல இரு முன, அதாவது, தென், வட துருவ முகப்புகள். எலெக்ட்ரிசிடிய சேமிக்க கலன். ஒரு பக்கம் அனோட்- நேர் மின் முன, மத்தது கேதோட்- எதிர் மின் வாய். கேதோட் மூலம் உள்ள வர மின் அணுக்கள், அனோட் மூலமா வெளி வரது. மின் கலன்ல சேவ் ஆறது.’
“எத்தனத்தான் படிச்சாலும், பரிசோசிச்சுப் பாத்தா அது அருமையா இருக்கும்.” என்றான் சஞ்சய்.
“லேப்ல மின்சாரம் தயாரிக்கற மாரி, வானத்துல மின்சாரம் தயாரிச்சிருக்கிறாங்க நம்ம இஸ்ரோ” என்றான் சரூ.
‘வாவ், நான் கேள்விப்படலடா. எப்படா?’
‘நான் இந்த மாசம் 6ம் தேதி அதக் காணொளியாப் பாத்தேன். என்ன செஞ்சாங்க தெரியுமா? நம்ம சி 58 ராக்கெட் ஒரு சாதனத்த ஏத்திண்டு போச்சு.’
“ம் ம்”
‘அந்தப் பேலோடுக்கு போயம்னு பேரு.’
“ரொமான்டிக்கான பேரு.”
‘அது குட்டியா வச்ச பேரு. Payload – Polymer Electrolyte Hydrogen Cell Module- POEM’
“அழகா இருக்கு பேரு. அது என்ன பண்ணித்து?”
‘நீ சொன்னியே கேதோட், அதுல அழுத்தப்பட்ட திரவ நெலயில ஹைட்ரஜன் . நம்ம கேஸ் சிலிண்டர்ல வாயு திரவ நிலயில தான இருக்கு, அதப் போல. இது உள்ள செலுத்தப்படுது. ஆக்ஸிஜனோட வின செஞ்சு வெப்பமும், தண்ணீரும் வரது. அந்த அனோட் இருக்கறதால மின்சாரம் உற்பத்தி ஆறது.’
“அட்டகாசம்டா. பூமில என்ன மாரி மின்சாரத்தக் கொண்டு வரோமோ அத ஆகாசத்துலயும் செய்யலாம்னு காட்டிட்டாங்க.”
‘180 வாட் உற்பத்தி ஆகியிருக்கு.’
“முக்கியமா, தண்ணி. மின்சார உற்பத்திதான் முதன்மைனாலும், அந்தத் தண்ணீரும், வெப்பமும் ஆஹா, ஆஹா”
‘நாளப் பொழுதுல மனுஷன் விண்வெளிக்குப் போய் நெடு நாள் இருக்கணும்னா இந்த மூணுமே முக்கியமாச்சே.’
‘கரெக்ட். அதுலயும், ஹைட்ரஜன் செல் எரி பொருளா இருக்கறதால, கார்பன் டை ஆக்சைட் வெளிப்படாது. பூமில நாம ஃபாஸில் எரி பொருட்கள, கரியப் போல, பயன்படுத்தறதால பசும் குடில் பாதிப்பு ஏற்படுது, அது பூமிய வெப்பமடைய வைக்குது, அதனால, மாசு அதிகரிக்குது. கொஞ்சம் கொஞ்சமா இயற்கய அழிச்சுண்டே வரோம்.’
“ரொம்ப சரிடா; உலக முழுசும் இப்ப எலெக்ட்ரிக் வாகனங்களை பயன் படுத்தச் சொல்றாங்க. சூரிய செல்களை உபயோகிச்சு மின்சாரம் தயாரிக்க வலியுறுத்தறாங்க.’
“நாம சுவாசிக்கற காத்துல ஏகமா தூசு இருக்கு; குடிக்கற தண்ணியும் சுமார். அதனால, இந்த ஹைட்ரஜன் எரி பொருள், நல்ல மாத்தத்தைக் கொண்டு வரலாம்.”
‘அது சரிடா, விண்ணில மின்சாரம் பண்ணிட்டாங்க. நாம தான் முதலா?’
‘இல்லடா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா முன்னாடியே செஞ்சுட்டாங்க. அதனால தாழ்ந்து போயிடல நாம.’
‘கரெக்ட். இத ஏன் பெருமளவுல பண்ணக்கூடாது?’
‘செய்யலாம், சைன்ஸ் இருக்கு, தொழில் நுட்பம் இருக்கு, வழி முறை தெரிஞ்சிருக்கு, ப்ராடெக்டா மாத்தணும்னா துட்டு வேணும். நமக்கு நிதி ஒதுக்கீடு நம்ம பட்ஜெட்ல ரொம்பக் கொறவு. ஆனா, நம்ம நிதி நிலையையும் பாக்கணுமில்ல. 142 கோடி நாம, இப்பத்தான் வளந்துண்டு வரோம், ஆனா, நாம நிச்சயமா முன்னேறுவோம், புதுசு புதுசாக் கண்டுபிடிப்போம், அத்தனையும் மனுஷ முன்னேற்றத்துக்காக. உலகம் நம்ம வியக்கப் போறது பாரேன்.’
“ரொம்பப் பேசிட்டோம்டா. ஆன்டி, திரட்டிப்பால் எப்போதும் வச்சிருப்பேளே, எனக்கு ஒரு ஆறேழு ஸ்பூன்.” என்றான் சரூ
பானுமதி ந
