*பெரியாழ்வார்* ( *தொடர்ச்சி* )

பன்னிரு ஆழ்வார்கள்: ஓர் அறிமுகம்- Dinamani

பாரதியையும் பாரதிதாசனையும் ஒப்பீடு செய்து கண்ணதாசன் கவிதைகள் | Tamil News Maalaimalar Special articles

ஆழ்வார்களும் கண்ணதாசனும் கட்டுரை தொகுப்பு – பகுதி 4 தொடர்பான ஆடியோ பதிவில் பெரியாழ்வாரின் மற்றொரு பாசுரத்தை எடுத்துக்கொண்டு ஆழ்வாரையும் கண்ணதாசனையும் இணைக்க விருப்பம் என கூறியிருந்தேன்.

அதன்படி எழுதப்பட்டதே இக்கட்டுரை.

பெரியாழ்வார், தன்னை யசோதையாக பாவித்து ஒரு தாய் ஸ்தானத்தில் முன்னிறுத்தி கண்ணன் அவதார சிறப்பு, அவனது பல குறும்புகள், சிறுவயது விளையாட்டுக்கள், அவனை பாலூட்டி , சீராட்டி , தாலாட்டி வளர்த்தது என்று மிகுந்த அன்புடனும், பரிவுடனும் பாசுரங்கள் புனைந்திருப்பதை முந்தைய பதிவில் சொல்லி இருக்கிறேன்.

கண்ணன் சற்றே வளர்ந்து விடுகிறான். அவன் மேல் ஆய்ச்சியர்கள் மையலுறுகிறார்கள்.
சரியான‌ மணப்பருவம் அடையாமலேயே, இளம் பிராயத்திலே இவ்வாறு கண்ணனை மோகித்திருக்கிறார்களே என்று என்று அந்தப் பெண்களின் தாயார்கள் எப்படி வருத்தம் அடைவார்களோ அதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு தாயின் நிலையிலிருந்து பத்து பாடல்கள் பாடி இருக்கிறார் பெரியாழ்வார்.‌ ( மூன்றாம் பத்து ஏழாம் திருமொழி ). இவற்றை அவர் தன் மகள் ஆண்டாளை நினைத்தே எழுதியிருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.

அதன் பிறகு , கண்ணன் தன் மகளை வசப்படுத்தி உடன் கொண்டு செல்வதைக்கண்டு, அந்த தாயார் பல வகைகளில் மனம் வருந்தி பாடுவதாக ஒரு பத்து பாசுரங்கள் வருகின்றன.
( மூன்றாம் பத்து – எட்டாம் திருமொழி ). அதில் ஒன்றுதான் நான் எடுத்துக் கொண்டுள்ளது .

அரங்கனோடு ஐக்கியமான தன்மகள் ஆண்டாளின் பிரிவை தாங்க முடியாமல்தான் இப்பாசுரத்தை பெரியாழ்வார் எழுதியிருக்கிறார் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.

முதலில் பாசுரம் , பிறகு பொருள்.

*ஒரு மகள் தன்னை உடையேன்*

*உலகம் நிறைந்த புகழால்*

*திருமகள் போல வளர்த்தேன்*

*செங்கண் மால் தான் கொண்டு* *போனான்*

*பெரு மகளாய்க் குடி வாழ்ந்து*

*பெரும்பிள்ளை பெற்ற அசோதை*

*மருமகளைக் கண்டு உகந்து*

*மணாட்டுப் புறம்செய்யுங்* *கொல்லோ?*

பொருள் :

ஒரே மகளை உடையவளாகிய ( உடையவனாகிய ) நான், உலகமெங்கும் பரவிய கீர்த்தியோடு அவளை மகாலட்சுமியைப் போல் வளர்த்தேன். இப்படி வளர்ந்த இவளை செந்தாமரைக் கண்ணனான ஸ்ரீமன் நாராயணன், தானே வந்து கொண்டு போனான்.‌ ( பிரிவின் துயரம் தாளாமல் கூறப்படும் வார்த்தைகள் இவை ).

போனால் போகட்டும்.

ஆயர்பாடியில், சிறப்பான குடியில் பெருமையாக வாழ்ந்த, பெருமை மிக்க பிள்ளையைப் பெற்றவளான யசோதைப் பிராட்டியானவள் , தன் மருமகளான என் மகளை கண்டு மகிழ்ந்து ,
மணவாட்டிக்குச் செய்யக் கடவதான சீர்மைகளை ( சீரையும் சிறப்பையும் ) செய்வாளோ ( அல்லது மாட்டாளோ) என்று தாயுள்ளம் கலங்குவதாக அமைந்துள்ள பாசுரம்.

ஒரே மகள் – அவளை அருமையுடன் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து மகிழ்ந்திருந்தேன் ; அவளை, ஸ்ரீமன் நாராயணனாகவே இருந்தாலும் அவன் கொண்டு சென்று விட்டானே , இந்த பிரிவை எப்படி தாங்குவேன் என்று மிகவும் வருந்தி , பிரிவாற்றாமை மனதை அழுத்த *செங்கண்மால் தான் கொண்டு போனான்* என்று பெரியாழ்வார் கூறுவதை நான் ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் என் கண்கள் கசிவதை என்னால் கட்டுப்படுத்த முடியாது.‌

இப்பாசுரத்தில் நான் முதலில் உணர்ந்து வியந்தது என்ன என்றால் , பெரியாழ்வாருக்கு ஆண்டாள் வளர்ப்பு மகள் தான் ; இருப்பினும் தன் மகளாகத்தான் சொல்கிறார்.
அதேபோல யசோதைக்கு கண்ணனும் வளர்ப்பு மகன் தான்.‌ தேவகி தான் பெற்ற தாய்.‌
இருப்பினும், *பெரும்பிள்ளை பெற்ற யசோதை* என்று பெரியாழ்வார் கூறுகிறார்.
சிறப்பு.
பெற்றால்தான் பிள்ளையா ? இல்லை என்பதை பெரியாழ்வாரும், யசோதை பிராட்டியாரும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி வழியொற்றி , சில நயமான விவரங்கள்:

1. என் மகளுக்கு மாமியாரான யசோதைப்பிராட்டி, என் மகளுடைய அழகு மற்றும் நற்குணங்களைக்கண்டு “பெறாப்பேறு பெற்றோம்” என மகிழ்ந்து, கல்யாணப் பெண்ணுக்குச் செய்யவேண்டிய சீர்மைகளைக் குறையறச் செய்வாளோ? அல்லது, மனசாட்சி இன்றி கடுமையாக நடத்துவாளோ என்று தாய் உள்ளம் தவிக்கிறதாம். புகுந்த இடத்தில் பெண் நன்றாக இருக்க வேண்டுமே, நன்றாக நடத்தப்பட வேண்டுமே என்ற தாய்மை உணர்வு மேலோங்கி உள்ளது.

2. தன் மகளை, அவனுடன் இணைத்துக் கொள்வதற்கு சரியான சமயம் பார்த்து , பெருமாள் பல இரவுகள் கண் விழித்திருந்ததனால் , கண்கள் சிவந்து, செங்கண்மாலாயினன் என்பது ஒரு விசேஷ அர்த்தம்.

3. ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சீடர்களில் ஒருவர் *கூரத்தாழ்வான்* .‌ இவரைப்பற்றி நான் ஒரு தனி கட்டுரை எழுதி உங்களில் பலருடன் பகிர்ந்திருக்கிறேன்.

” நீர் எனக்கு ஆச்சார்யனாக இருத்தல் வேண்டும், மாறி நீர் என்னை ஆச்ரயித்து கொண்டீர் ( அணுகி பணிந்தீர் ) ” என்று ராமனுஜராலேயே கூறப்பட்ட பெருமை வாய்ந்தவர்‌ கூரத்தாழ்வான்.
தன்னுடைய 123-ஆம் வயதில் கூரத்தாழ்வான் திருநாட்டுக்கு எழுந்தருளினார். ( மண்ணுலகை விட்டு விண்ணுலகு சென்றார் ). மிகவும் வருத்தமுற்ற ராமானுஜருக்கு கூரத்தாழ்வானே ஆறுதல் கூறி, தான் சிஷ்யன் என்ற முறையில் பின்னதாக மேலுலகத்துக்கு வரவிருக்கும் ஆச்சாரியனான ராமானுஜரை, முறைப்படி வரவேற்கவே, தான் முன்னரே திருநாடு செல்வதாக கூறிச் சென்றாராம். அப்படியும், கூரத்தாழ்வான் உயிர் நீத்த போது பிரிவாற்றாமைத் துயரத்தை வெளிப்படுத்தும் பெரியாழ்வாரின் மேற்கண்ட பாசுரத்தை நினைவு கூர்ந்து, அதிலும் குறிப்பாக *செங்கண்மால் தான் கொண்டு போனான்* என்ற வரிகளில் ஆழ்ந்து, கதறி அழுதாராம் ராமானுஜர்.‌ கூரத்தாழ்வான் மீது ராமானுஜர் கொண்ட அபிமானம் அப்படி.‌
துறவியாக இருந்தாலும், தானும் மனிதன்தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்த அந்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியான ஒன்று.

கண்ணதாசனை கூப்பிட வேண்டிய நேரம் வந்துவிட்டது.‌ மேற்கூறிய பெரியாழ்வார்
பாசுரத்தை நான் எப்போது படித்தாலும், கேட்டாலும் கண்ணதாசனின் ஒரு பாடல் ஞாபகம் வருவதை என்னால் தடுக்க முடியாது.‌

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலே விவரித்துள்ள பாசுரத்தின் *தாக்கத்தினால்* வந்திருக்கக்கூடிய திரைப்பாடல் என்பதாக , நான் குறிப்பிடவிருக்கும் பாடலை கருதவில்லை. கதைச்சூழலுக்கான பாடல் என்பதாக மட்டும் அதை எடுத்துக் கொள்ளலாம்.

அதேசமயம், இந்த பாசுரத்துடன் கண்ணதாசனின் அந்தப்பாடல் ஒருவகையில் மிகவும் இசைந்து போவதாக – வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள் ஒத்திருப்பதாக என் மனதிற்குள் அழுத்தமாக தோன்றுகிறது. 

சரி, இந்த பீடிகையை முடித்துக் கொண்டு விஷயத்திற்கு வருகிறேன்.‌

சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா, முத்துராமன் மற்றும் பலர் நடித்து , ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த, *நெஞ்சிருக்கும் வரை* படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில், டி எம் சௌந்தரராஜன் பாடிய நமது கவியரசரின் பாடல், *பூ முடிப்பாள் இந்த பூங்குழலி* .

ஒரு அண்ணன் ஸ்தானத்தில் சிவாஜி இருந்து, தங்கை ஸ்தானத்தில் உள்ள கே ஆர் விஜயாவுக்கு முத்துராமனுடன் நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணி, மனதாலேயே அந்த திருமணக்காட்சிகளை ஓடவிட்டு, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக பாடும் பாடலாக இது அமைந்துள்ளது.‌ ( யூடியூபில் இந்த பாடலை காண்பவர்கள், பாடல் காட்சியில் நடிக்கும் எல்லோர் முகத்திலும் ஏன் எண்ணை வழிகிறது, முத்துராமன் ஏன் கல்யாணக் காட்சியில் ‘ உர் ‘ என்று இருக்கிறார் என்றெல்லாம் ஆராய வேண்டாம் .‌ முழுக்  கதையையும் இங்கு சொல்ல முடியாது ).

” பூ *முடிப்பாள்* இந்த பூங்குழலி ” என ஆரம்பிக்கும் இப்பாடலில், திருமணம் முடிந்ததும் வரும் வரிகள் :

“கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ

கடமை முடிந்தது கல்யாணம் ஆக

அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ

ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட “

( பெரியாழ்வார் விஷயத்தில் சாக்ஷாத் ஆண்டவனே. இங்கு திரைப்பாடலில் ‘ஆண்டவன் போல்’ . அதுதான் வித்தியாசம். ).

அதைத் தொடர்ந்து :

பூ *முடித்தாள்* இந்த பூங்குழலி

புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி

என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி

அதை பார்த்திருப்பேன்

கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி….
கண்ணில் நீரெழுதி…..

என்று திரைப்பாடல் முடியும்.

இந்த கடைசி வரிகளை கண்ணில் நீருடன் அரங்கனுடன் ஐக்கியமான ஆண்டாளை நினைத்து பெரியாழ்வார் சொல்வதாக எனக்குப் படும்.

பாசுரத்தில் தன் பெண்ணிற்கு சீர்மை ( சீரும் சிறப்பும் ) கிட்டுமா என்று ஆழ்வார் கவலைப்பட்டார்.‌ இங்கு ” புது சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவி ” என்று அந்த கவலைக்கு முற்றுப்புள்ளி இட்டு விட்டார்‌ கவிஞர்.‌

இத்தொகுப்பின் அடுத்த பகுதியில் வேறொரு ஆழ்வாரும் கண்ணதாசனும் .
ஆனால், அங்கு பெரியாழ்வாரும் வருவார்.‌ பொறுத்திருக்கவும்.

அன்புடன்

சௌரிராஜன்