ஒலிம்பிக்ஸ் மலையிலிருந்து சென்ற அதீனா நேராக ஓடிசியசின் சொந்த நாடான இத்தாக்காவிற்குச் சென்றாள் . அவளுக்கு ஓடிசியசின் மகன் டெலிமாக்கசை மிகவும் பிடிக்கும் அவனுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவள் மிகவும் விரும்பினாள் . அதனால் அவள் தன்னை ஒரு கடல் வாணிகர் போல போல மாற்றிக்கொண்டு சென்றாள் . டெலிமாக்கசும் இல்லத்திற்கு வந்திருந்த விருந்தாளியை அன்புடன் வரவேற்று உபசரித்தான்
அதே நேரத்தில் அவன் வீட்டில் வீட்டில் நடைபெறும் மற்ற பிரபக்களின் தொந்தரவுகளையும் அவள் பார்த்தாள் . அவனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் இதனால் அவளுக்கு வலுப்பெற்றது.

அது மட்டுமல்லாமல் டெலிமாக்கஸ் அந்த ஊரிலேயே இருந்தால் அவனுக்கு இன்னும் துன்பம் நேரிடும் என்பதை உணர்ந்து அவனை அந்த ஊரைவிட்டு வெளியூருக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு கட்டினாள் . ஓடிசியஸ் வரும் நாள் இன்னும் அதிக தூரத்தில் இல்லை; அவன் வந்து இங்கு ஆராவரம் செய்யும் பிரபுக்களின் கொட்டத்தை அடக்குவான் என்று அவள் அவனுக்கு ஆறுதல் கூறினாள். அதைக் கேட்ட அவன் மனஉறுதி பெற்றான்.

மேலும் ஆதினா டெலிமேக்கசிடம் ஓடிசியசின் நண்பர்கள் நெஸ்டர் மற்றும் மெனிலியஸ் இருவரையும் சந்தித்து தந்தையைப் பற்றி விசாரிக்கும்படி ஆலோசனை வழங்கினாள் .
அதுமட்டுமல்லாமல் அவன் புறப்படுவதற்கு ஒரு கப்பலையும் தயார் செய்தாள் .
.
தன் தந்தையைத் தேடி தான் கடல் பயணம் மேற்கொள்ளப் போவதாக டெலிமேக்கஸ் அறிவித்ததும், அந்த நாட்டு பிரபுக்களும் மற்ற ஊர் மக்களும் அவனைப்பார்த்து எள்ளி நகையாடினார்கள். ‘இது தேவையில்லாத பயணம், ஓடிசியஸ் திரும்பி வர வாய்ப்பேயில்லை; அவன் கண்டிப்பாக உயிரோடு இல்லை’ என்று அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள்.

யார் சொல்வதையும் கேட்காமல் இரவோடு இரவாக அன்னையிடம் மட்டும் கூறிவிட்டு டெலிமேக்கஸ் கடலுக்குச் சென்று அங்கு அவனுக்காக காத்துக்கொண்டிருக்கும் அதீனாவிடம் சென்றான். அதினா அப்போது கப்பல்தலைவன் வேடத்தில் இருந்து தேவையான மாலுமிகளுடன் புறப்படத் தயாரானாள் . டெலிமேக்கசுக்கு தைரியத்தையும் கூறி அவனை அழைத்துக்கொண்டு கடல் வழியாக ஓடிசியசின் நண்பர் நெஸ்டர் இருக்கும் நாட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

அங்கே நெஸ்டரும் அவன் மகன்களும் கடற்கரையில் தேவதைகளுக்கு பலிகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். கப்பலில் வந்து இறங்கும் டெலிமேக்கசைப் மிகவும் அன்புடன் வரவேற்றனர். ஆனால் அவரால் ஓடிசியஸ் பற்றி எந்தத் தகவலும் தர இயலவில்லை. இருவரும் ஒன்றாகத்தான் ட்ராய் நகரை விட்டு புறப்பட்டார்கள் ஆனால் புறப்பட்ட பிறகு ஏற்பட்ட சூறாவளிக் காற்றினால் ஒவ்வொருவரும் பிரிந்து வெவ்வேறு திசையை நோக்கிச் சென்று விட்டதாகக் கூறினார். கிரேக்கத்தின் மாபெரும் மன்னன் மெனிலியசிற்குக் கண்டிப்பாக ஓடிசியஸ் பற்றித் தெரிந்திருக்கும் என்றும் கூறினார். மெனிலியஸ் இருக்கும் ஸ்பார்ட்டாவிற்கு கடல் வழியே போவதை விட ரதத்தில் செல்வது மிகவும் சுலபமாக இருக்கும் என்று நெஸ்டர் கூறி, தன்னுடைய மகன்களில் ஒருவரையும் அவனுக்கு வழிகாட்டுவதற்காக அனுப்பி வைப்பதாகக் கூறினார்.

மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு அதினாவிடம் விடை பெற்றுக் கொண்டு மெனீலிஸ் நாட்டை நோக்கி டெலிமேக்கஸ் புறப்பட்டான். நெஸ்டரின் மகனும் அவன் வயதை ஒத்தவன் ஆகையால் இருவரும் பழகிய நண்பர்களைப் போல மகிழ்ச்சியுடன் ரதத்தில் சென்றனர்.

அங்கே ஸ்பார்ட்டாவில் அவனுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு காத்துக் கொண்டிருந்தது. ஒரு இளவரசனை வரவேற்றுவது போல் அவனை வரவேற்றார்கள். வெள்ளி குளியல் தொட்டியில் மணக்கும் வாசனை திரவியங்களுடன் அவனைக் குளிப்பாட்டினார்கள் அவனுக்காக சிறந்த ஆடையும் மதுவும் வழங்கப்பட்டது . நண்பர்கள் இருவரும் அவற்றையெல்லாம் ரசித்து ஏற்றுக் கொண்டனர்.

மெனிலியஸ் தானே வந்து அவர்களுக்கு விருந்து ஒன்று படைத்தான். அப்பொழுது யாரும் எதிர்பார்க்காதவாறு விருந்து மேடையில் அழகுத் தேவதை மெனிலியசின் மனைவி ஹெலன் அங்கே தோன்றினாள். அவளே அவர்கள் இருவருக்கும் விருந்து பரிமாறினாள்.
ஓடிசியஸ் பற்றி தகவல் தெரிந்து கொள்வதற்காகவே டெலிமேக்கஸ் அங்கு வந்திருக்கின்றான் என்று நெஸ்டரின் மகன் அவர்களிடம் கூறினான். தந்தையை பற்றி தகவல் தெரிந்தால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அவனும் பணிவுடன் வேண்டிக்கொண்டான்.

 

மெனிலியஸ் ஓடிசியஸ் பற்றித் தான் அறிந்துகொண்ட விவரத்தை எடுத்துரைத்தான்.
“அது மிகப்பெரிய கதை,  ஓடிசியஸ் பற்றி பல ஆச்சரியகரமான தகவல்கள் கேள்விப்பட்டேன். நாங்கள் திரும்பிவரும்போது எங்கள் கப்பலும் சூறாவளியால் திசை மாறியதில்  நாங்கள் எகிப்தில் தஞ்சம் புகுந்தோம். அந்த நாட்டு மன்னன் எங்களைச் சிறைப் படுத்தி அங்கிருந்து தப்பிக்க முடியாமல் செய்தான். எங்கள் மரக்கலங்களிலும் உணவு தீர்ந்து போகும் நிலைமையில் இருந்தது. அந்த தீவிலிருந்து எங்களால் வெளியே செல்வதற்கு வழியும் தெரியவில்லை.  கடல் தேவதையிடம் எப்படியாவது எங்களுக்கு உதவும் படி வேண்டிக் கொண்டேன்.  அதற்கு அவள் தன் தந்தை  ஒருவருக்குத் தான் அந்தத் தீவிலிருந்து ஆபத்தில்லாமல் தப்பித்துச் செல்ல  வழி தெரியும்  என்றும் அவர்  தினமும்  கடலிலிருந்து கடற்கரைக்கு வந்து தன் பொக்கிஷத்தைப் பதுக்கி வைத்திட வருவார்.  அவரைக்  கட்டிப்  பிடித்து வைத்துக் கேட்டால் அந்தப் பிராந்தியத்தில் கடலைப் பற்றிய அனைத்து செய்திகளையும்  தெரிவிப்பார்  என்று கூறினாள். அங்கிருந்து செல்லும் வழியையும் அவர் கூறமுடியும் என்றாள். 

நாங்களும் அவன் வரும் வழியைப் பார்த்துக் கொண்டு அந்த வயதான கடல்தேவனுக்காகக்  காத்துக் கொண்டிருந்தோம். அவர்  வந்தவுடன் நானும் என் நண்பர்கள் மூவருமாக அவரை இறுக்கப் கட்டிப் போட்டோம். அவர்  உருவம் மாறும் திறமை படைத்தவர்.  சிங்கமாகவும் பயங்கர டிராகனாகவும் முடிவில் மரமாகவும் மாறினார். ஆனால் நாங்கள் அவரை விடவில்லை கடைசியில் அவன் எங்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்.

எங்களுக்குத் தப்பிக்க வழியைச் சொன்னவரிடம் உன் தந்தையைப் பற்றிக் கேட்டோம். அப்பொழுது அவர்  ஓடிசியஸ் ஒரு பயங்கரத் தீவில் காலிப்ஸ் என்ற ஒரு கொடுரத் தேவதையின் ஆதிக்கத்தில் இருக்கின்றான் என்ற  தகவலைக்  கூறினார் அதனால் ஓடிசியஸ் ர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று நாங்கள் உணர்ந்து கொண்டோம். அதற்குப் பிறகு பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் அங்கிருந்து கிளம்பி எங்கள் ஸ்பார்ட்டா நாடு வந்து சேர்ந்தோம்.

அதைக் கேட்டவுடன் டெலிமேக்கஸ் தனது தந்தைக்காக அழுதான். மற்ற அனைவரும் டிராய் யுத்தத்தில் இறந்துபட்ட தங்கள் உறவினர்கள் பற்றி நினைத்துக் கண்ணீர் விட்டார்கள். ஹெலன் கண்களில் இருந்தும் கண்ணீர் பிறந்தது. ஆனால் அது யாருக்காக என்று யாருக்கும் தெரியவில்லை. பாரிஸை நினைத்து அழுதிருப்பாளோ என்று யோசிக்கத் தொடங்கினர்.

இதற்கிடையில் ஜீயஸ் கடவுளால் அனுப்பப்பட்ட தூதுவர் அந்த தீவிற்கு வந்ததும் காலிப்ஸின் ஆதிக்கத்தில் ஓடிசியஸ் இருப்பதை பார்த்தார். மிகுந்த சோகத்துடன் ஓடிசியஸ் அவளின் பிடியிலிருந்து விலகி விட முடியாமல் இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டார். அவள் ஓடிசியசை மீண்டும் தன்னாடு செல்ல வேண்டிய உதவி செய்யவேண்டும் என்ற ஜீயஸ் கடவுளின் உத்தரவை அவளிடம் கூறினார்.

காலிப்சோ அதனைச் செவிமடுக்க சம்மதிக்கவில்லை. “ஓடிசியசின் கப்பல்கள் பொசைடன் கோபத்தால் அழிந்துவிட்டன. அவனை நான் கஷ்டப்பட்டுக் காப்பாற்றி  என்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவனை நான் ஏன் விடுவிக்கவேண்டும்? அவன் என்னுடையவன்” என்று அவள் கூறியதும், அந்தத் தூதுவர், ஜீயஸ் கடவுளின் கட்டளையை மீறினால் என்னாகும் என்பதை நீயே அறிவாய் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

வேறு வழியின்றி காளிப்ஸ் , ஜீயஸ் கட்டளைப்படி  ஓடிசியஸ் தன் நாடு செல்ல உதவுவதாகக் கூறினாள் . அவன் பயணத்திற்குத் தேவையான  கப்பல் ஒன்றைக் கட்டும்படி அவனுக்கு உத்தரவிட்டாள் . அவளும் அதற்கு உதவியாக வந்தாள் . ஓடிசியசால் அதை நம்பவே முடியவில்லை.ஆனாலும் ஓடிசியஸ் மிகுந்த ஆசையுடன் கப்பல் ஒன்றைத் தயார் செய்யத் தொடங்கினான். அந்தக் கப்பலில் பயணத்திற்குத் தேவையான உணவும் மதுவும் காளிப்சே தந்தாள்.

அந்தத் தூதுவர் வந்த ஐந்தாம் நாள் ஓடிசியஸ் காலிப்சுக்கு நன்றி கூறிவிட்டு அந்தத் தீவிலிருந்து புறப்பட்டான்.

பதினேழு நாட்கள் அவன் கண் தூங்காமல் கடலில் பயணம் சென்ற பின் ஒரு பெரிய மலையைக் கண்டான். அதைக் கண்டதும்  அவனுக்கு தன்  கடல் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நம்பிக்கை  பிறந்தது.

அனால் அப்போதுதானா  பொசைடன் தன் காதலியுடன் கொஞ்சிவிட்டு அந்த வழியில் வரவேண்டும்?

தன் பரம விரோதி ஓடிசியஸ் தன் பிடியிலிருந்து தப்பிச் செல்கிறான் என்பதை உணர்ந்தான். இது மற்ற கடவுளர்களின் சதி என்பதையும் உணர்ந்துகொண்டான். அப்போது பொசைடன். ‘இந்த நம்பிக்கைத் துரோகி ஓடிசியஸ் கடலிலிருந்து தப்பி நிலத்திற்குச் செல்வதா? அதை நான் அனுமதிப்பதா?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அவன் மனதில் ஒரு பயங்கர எண்ணம் தோன்றியது.
(தொடரும்)