ஏழு வயதான அமித் சிரித்த முகத்துடன் என்னை அணுகும் பொது காலை வணக்கம் சொல்லிக் கொண்டே வந்தான். அவன் கூட வந்த பெற்றோர்கள்
அசோக், அனோக்கி, அவசரமாகக் குழந்தையை நிற்கச் சொல்லிவிட்டு விவரிக்க ஆரம்பித்தார்கள்.
தன்னிடம் இருக்கும் பொருட்களை அமித் மற்றவர்களுக்குக் கொடுத்து விடுவதாகக் கூறினார்கள். இதைப்பற்றி தங்கள் நண்பர்கள் பலர் கேள்விகள் எழுப்ப, பெற்றோருக்குக் குழப்பம் உண்டானது.
அமித் முகத்திலிருந்த மலர்ச்சி மறைந்தது. முகவாய்க்கட்டை துடிதுடித்து, பெற்றோரைப் பார்த்து “இல்லைம்மா, ப்பா..” என்றபடி கண்ணீர் வழிந்தது. அசோக், அனோக்கி அவனை முறைத்து விட்டு, செலவைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறான் என்றும், ஆண்பிள்ளை இவ்வாறு செய்தால் சரி வருமா என்றும் கேட்டார்கள்.
இதற்குப் பதில் சொல்லப் பெற்றோரை மற்றும் அமித்தைத் தனித்தனியாகப் பார்க்கத் தேவை என்றேன். பெற்றோரைச் சற்று வெளியே உட்காரச் சொன்னேன்.
அமித் குணாதிசயங்களைப் புரிந்து கொள்ள அவனுடைய வீடு, பழக்கவழக்கங்கள், நண்பர்கள், பள்ளிக்கூடம் பற்றி எல்லாம் விவரிக்கச் சொன்னேன். செய்தான். அவனைப் பொறுத்தவரை, கூட இருப்பவர்கள் தன்னிடம் இருக்கும் பொருள் ஒன்று இல்லாமல் சங்கடப் பட்டால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக உதவிடுவானாம்.
சிலமுறை கொடுத்த பொருட்கள் திரும்பி வராது. விளைவு, தண்டனை கிடைக்கும். இது ஏன் என்று புரியவில்லை என்றான் அமித். அதாவது அவர்களிடம் இல்லை ஆகையால் அவர்களே வைத்திருப்பது தவறானதா எனக் கேட்டான்.
இந்த சிறுவனுடைய செயல்கள் தன் தாத்தா-பாட்டி செய்வதை மனதில் முழுமையாக வாங்கிக் கொண்டதின் பிரதிபலிப்பு. பொருட்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியதின் முக்கியத்துவத்தை அவர்கள் பலமுறை விளக்கியதால் அமித் மனதில் படிந்து விட, குணாதிசயமாக ஆகிவிட்டது.
அசோக், அனோக்கியின் மன உறுத்தல், அமித் வளர்ந்தபின் இதனால் ஏமாற்றப் படுவானா என. இதை அவர்களாகப் புரிந்து கொள்ள, அமித் பொருட்களைத் தருவதற்கான முடிவுகளை எவ்வாறு எடுக்கிறான் என்றும், அவன் மனதில் நிலவும் உணர்வுகளை அடையாளம் காணவும் பரிந்துரை செய்தேன். ஏனெனில் பெற்றோர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படையாகக் கூறினார்கள். ஆனால் பிள்ளையை, அவன் மனப்பான்மையை அறிந்து கொள்ளாமல் அவன் செயலை நிராகரிப்பது அர்த்தமற்றது என அறிந்து கொள்ளவில்லை.
பெற்றோர் இருவரும் கவனித்ததில் அமித்தின் அணுகுமுறை அவனுடைய தாத்தாவின் சாயலில் உள்ளது எனச் சொன்னார்கள். அவரைப் போலவே ஆடம்பரம் இல்லாத ஆசையும் கூட, இந்த வயதிலேயே. இதை ஏற்றுக் கொள்ளத் தவித்தார்கள், அவன் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற சங்கடம். வேண்டியதை மட்டுமே வைத்திருந்த தாத்தா போல இருப்பானோ என?
பல ஸெஷன்களுக்கு இதை மையமாக வைத்துக் கொண்டேன். அவ்வாறு ஆனதா என்றதைப் பின்னோக்கிப் பார்க்கச் செய்தோம். பல தருணங்களை வர்ணிக்க, நடந்தது வேறு என்றாலும், தாராளத்தால் தமக்கு இல்லாமல் போய் விடுமோ என்ற பயத்தை அசோக் இன்னும் விட்டு விடவில்லை. அனோக்கியும் கணவருக்கு ஆதரவாக இருப்பதாக எண்ணி ஆமோதித்தாள். இப்போது இருவருக்கும் புரிந்தது. தெளிவு பெற்றதால் சுதாரித்துக் கொள்ள முன்வந்தார்கள்.
அவர்களை அமித்தின் வகுப்பு மாணவர்கள், உதவியாளர்கள், ஆசிரியர்களுடனும் உரையாடப் பரிந்துரைத்தேன். எல்லோரும் கூறியது, அமித் வேறுபாடு இல்லாமல் எல்லோருடனும் பழகுவதால் எல்லோர் மனதிலும் தனியிடம் பிடித்திருந்தான். ஒரு எடுத்துக்காட்டாக ஆகினான்.
தாம் எப்படி இதை அறியாமல் விட்டோம் என அசோக், அனோக்கி வியந்தார்கள். இதுவரை தங்களது கண்ணோட்டம் குதிரைக்குக் கடிவாளம் போட்டது போல் இருந்ததை உணர்ந்தார்கள்.
அமித்தைப் பொது இடங்களில் கவனித்து வர, தாத்தாவின் சாயல் தெரிந்தது. அவரைப் போலவே எல்லோரையும் சரிசமமாக நடத்துவது, மிருதுவான வார்த்தைகள் உபயோகித்தல் எனப் பல. அவனுடைய மானிட மேன்மையைப் பார்க்கப் பார்க்க, அது குறை அல்ல பலம் எனப் புரிந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு
பூஜா என்ற இருபத்தி ஏழு வயதானவள் எங்களை அணுகினாள். மணம்புரிந்து எட்டு மாதமாகியது. ஒரு அவசரம், பரபரப்பு. அவளிடமிருந்து பல கேள்விகள், சந்தேகங்கள் குவிந்தது. அவளுடைய சூழலை, விவரங்களை அறிய பூஜாவை விவரிக்கச் சொன்னேன்.
அவளுடைய அலுவலகத்தின் சமூகத் தொண்டில் பங்கேற்பு செய்து வருவதாகச் சொன்னாள். ஒரு பக்கம் மனதிற்குச் சுகமாக இருப்பதைக் கவனித்திருக்கிறேன் என்றாள். அதே சமயம் இந்த நிலையைப் பற்றிப் பயந்ததாகவும் வெளிப்படையாகச் சொன்னாள். உள்மனத்தில் இதில் மனம் லயித்து விட்டால் சம்பாத்தியம், வேலை உயர்வில் ஈடுபாடு போய் விடுவோமோ என்ற அச்சம் மனதைக் குடைந்தது என்றாள்.
சமீபத்தில் இவையெல்லாம் மறைந்தது என நினைத்தாள். கடந்த ஆறு மாதமாக மீண்டும் தலையைக் காட்ட ஆரம்பித்தாகக் கூறி, மேலும் இதனால் தனக்குக் கணவரின் மேல் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதால் வருத்தமாக இருப்பதாகக் கூறினாள்.
இதற்கெல்லாம் கணவரே பொறுப்பு என்றாள், உறுதியாக!
இதை மையமாகக் கொண்டு பலமுறை விளக்கத்தைக் கேட்டேன். முதன்முதலாகக் கணவரை இவர்கள் தொண்டு செய்யும் இடத்தில் சந்திக்க நேர்ந்தது. அவருடைய கருணை, அமைதியான சுபாவம், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் எல்லோருக்கும் உதவுவதைப் பார்த்து வியந்தாள். அது மிகவும் ஈர்க்க, அவரையே மணம்புரிய வேண்டும் என்ற எண்ணத்தைத் தன் பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் அவருடைய பெற்றோரை அணுகி முடிவு செய்தார்கள். அப்போது இந்த மாதிரியான உதாரண புருஷன் அடைவதே போதும் எனத் தோன்றியது. பூஜாவின் பெற்றோர்கள் மாப்பிள்ளையைப் பற்றி மிகத் திருப்தியாக இருந்தார்கள். இதுவும் பூஜைவைக் கோபமூட்டியது, இப்போது. அவர்களும் கணவரின் பாதையைச் சரி என்று சொல்கிறார்கள். தன்னை தனித்து விட்டார்கள் என நினைத்தாள்.
கணவரின் மேல் சலிப்பு வந்த இந்த நிலையைத் தானாக விவரிக்க ஆரம்பித்தாள். கணவரின் பரோபகாரம், உதவுவது, வாழ்க்கையில் எளிமையாக இருப்பதால், தானும் தன் ஆசைகளை அடக்கி வைத்து, சினேகிதிகள் போல விதவிதமான புடவை, அலங்காரங்களைச் செய்யத் தயங்குவதாகக் கூறினாள். கணவர் தடுத்து விடுகிறாரா என்பதற்குச் சரியான பதில் அளிக்காததால் கணவரை அழைத்து வரப் பரிந்துரைத்தேன். வந்தார்கள்.
பூஜாவுடன் வந்தது அமித். அவரிடம் விவரங்களைக் கேட்டேன். அவருடைய சிறுவயதில் எவ்வாறு தன்னிடம் அதிகமாக இருப்பதைப் பகிர்ந்து கொண்டாரோ அதையே இப்போதும் செய்வதாகக் கூறினார். இதனால், இருவரின் இடையில் சிறிய விரிசல்.
இந்தமுறையும் அமித்தின் மனோபாவத்தைப் புரியப் பிரயத்தனம் ஏதும் பூஜா செய்யவில்லை. அதேபோல பூஜா தன்னுடைய பயம், சந்தேகத்தை அமித்துடன் பகிரவில்லை. சஞ்சலம் நேர்ந்தது.
இருவருக்கும் இந்த நிலையினால்தான் மனஸ்தாபம் ஏற்படுகிறது எனப் புரிவதற்குப் பல செஷன்களானது. இருவரும் கல்யாண ஆரம்பக்காலத்தில் ஒருவருக்கு ஒருவர் மிக அனுசரணையாக இருந்தார்கள். அதுவே இப்போது உபயோகமானது.
இருவரும் செஷன்களில் பகிரப் பகிர மற்றவரைப் பற்றிப் புரிய நேர்ந்தது. பூஜாவிற்கு அமித்தின் மேல் நம்பிக்கை வளர்ந்தது. இருவரும் தங்களது ஆதங்கத்தை, சந்தேகங்களை, மனம் விட்டுப் பேச ஆரம்பித்தார்கள். பூஜா பயந்திருந்த பணப் பற்றாக்குறை ஏதும் இல்லை என்பது தகவல்கள் மூலம் தெளிவாயிற்று.
அமித்-பூஜா வாழ்க்கை நன்றாகச் சென்றது.
பூஜா தன் ஒரு சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொண்டாள். அமித்தின் ஆரோக்கியம் மிக நன்றாக இருப்பதைப் பற்றித் தெளிவு பெற வேண்டும் என. அதற்கு, ஆராய்ச்சித் தாள்களை பூஜாவிடம் கொடுத்துப் படிக்கப் பரிந்துரைத்தேன்.
மற்றவர்களுக்கு நேரம், வளம் , பொருட்கள் பகிர்வதில் ஆராய்ச்சிகள் நலன் மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது!
அதே நேரத்தில் வேறொன்றையும் பூஜா சங்கடமாக இருப்பதாகத் தெரிவித்தாள். அமித் எப்போதும் அமைதியாக இருப்பதைத் தோழிகள் கேலி செய்வதால் இந்த குணத்தைக் கேள்விக்குறியாகப் பார்த்தாள். இதைப் பல கண்ணோட்டத்தில் பூஜா பார்க்க செஷன்களை அமைத்தேன். ஆராய்ச்சிகளைத் தானாகத் தேடிப் படிக்கக் கூறினேன். பூஜாவின் நல்ல குணம், சொல்வதைச் செய்வதே. மிக மெதுவாக அமித் வெவ்வேறு குணங்களைக் கூர்மையாகக் கவனிக்க, அதன் பொருளைப் புரிந்து கொண்டாள்.
மற்றவரின் நன்மையை மனதில் வைப்பதால், தன்னலம் இல்லாததால் பணிவு, ஏற்றுக்கொள்ளும் தன்மை, தாராள குணம், இவை வெளிப்படையாகத் தெரிந்தது. முக்கியமாக பூஜா இதையும் புரிந்துகொண்டாள், அமித் இந்த குணத்தை மற்றவரின் கவனத்தைக் கவரவோ அல்லது புகழ் பெறவோ செய்வதில்லை.
தன் சார்பில் அமித் செஷன்கலில் இதுவும் உணர்ந்தார், தனக்கு இப்படி இருப்பது பிடித்திருக்கிறது, அதே சமயம் பூஜாவிடம் சுதந்திரமாகச் செய்யத் தான் சொல்லாததால் இந்த மனபேதங்கள் உருவாயிற்று என்று. பிறரைப் பற்றி யோசித்தவன் பூஜாவைப் பார்க்காததை உணர்ந்தார். தன்னை அறியாமல் எதிர்மறையான எண்ணங்களை நுழையவிட்டதை உணர்ந்தார். இப்போது, இதை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறோம்.
