
———————————————————————————————————————————–
இவற்றுள் ந பானுமதி எழுதிய ‘மாதவிப் பொன்மயிலாள்’ என்ற இந்த சிறுகதையை 2023, டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கதையாகத் தேர்வு செய்து ஆசிரியருக்குப் பாராட்டுகளை அளிக்கிறேன் – ரேவதி ராமச்சந்திரன்
———————————————————————————————————————————————–
சிறுகதை என்பது சுருக்கமான, ஒரு மையக் கருத்தை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் கதை கூறும் புனைவுவகை இலக்கியமாகும்.
சிறுகதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும், கரு இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்க முடியாது. ஒரு தீப்பொறி போதும் பெரிய நெருப்பாவதற்கு! கதை, கட்டுரை, கவிதை எதுவும் மனதில் முட்ட வேண்டும். ஒரு கதை என்பது பிரசவத்தில் பெற்றெடுக்கும் குழந்தையாகும். ஆகவே எல்லா கதைகளும் ஏதோ ஒரு விதத்தில் பரிமளிக்கும்.
டிசம்பர் 23 மாதத்திற்கான ‘எழுத்தாளர் சிவசங்கரி – குவிகம் சிறுகதைத் தேர்வு’ செய்யும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. எனக்கு சிறிய வயதிலிருந்தே கதைகள் கேட்பது, படிப்பது, சொல்வது, எழுதுவது மிகவும் பிடித்தமானதால் இந்தப் பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.!
இரணியகசிபு எந்தத் தூணைக் காட்டுவான் என்று தெரியாததால் அவதாரத்திலேயே மிகவும் கஷ்டமானது நரசிம்மாவதாரம் என்று பகவான் சொன்ன மாதிரி, எந்தக் கதையை தேர்வு செய்வது என்பது கடினமாக இருந்தது.
அட நமக்கு இப்படித் தோன்றவில்லையே என்று சில கதைகள் ஆச்சரியப்படுத்தின, சில ஆனந்தப்படுத்தின, சில சிந்திக்க வைத்தன, சில சிரிக்க வைத்தன, சில அழ வைத்தன, சில பாடம் கற்பித்தன. எதையும் தள்ள முடியவில்லை! ஆனால் எதற்கும் ஒரு பரிசு தானே தர முடியும்! இது ஒரு நல்ல ஆனந்தமயமான அனுபவம். இந்த அனுபவத்தைத் தந்த குவிகத்திற்கும் எழுத்தாளர்களுக்கும் நன்றியும், வணக்கமும்.
மொத்தம் 57 கதைகள், தேர்ந்தெடுத்த கதைகள் ஆறு கீழ்க்கண்டவாறு:
பாவமன்னிப்பு – அரவிந்தன் – விகடன்
தனது பள்ளிக்கூடம் விடுமுறையாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டது இயற்கையின் சீற்றமாக உருவெடுத்ததாக ஒரு பிஞ்சுக் குழந்தை தவறாக எண்ணிக் கொண்டு பாவமன்னிப்பு கோருவது மனத்தை இளக்குகிறது.
குற்றத்திற்குத் திரும்புதல் – கா ரபீக் ராஜா – வாசகசாலை
சமூகம் எப்படி ஒருவனை திரும்பவும் குற்றம் செய்ய தூண்டுகிறது என்று குறியீட்டு காட்டும் எளிமையான கதை.
கிளிச்சிறை – தேவிலிங்கம் – விகடன்
அடிமட்ட மனிதன் படும் அவஸ்தையும், திருடும் குற்றம் தவிர்க்க அவன் பாடுபடுவதையும் கிராமத்து மொழியில் அழகான சொற்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருள்வெளிச்சம் – விஜயகுமார் சம்மங்கரை – சொல்வனம்
வெளிச்சத்திலும் இருட்டைக் காணும் சுகம், இருட்டை புதையலாகப் பார்த்து, ஆம், இருவித மனங்களைக் காவியமாக வடித்துள்ளார் ஆசிரியர்.
கரிக்குருவிகள் நூறு – மஞ்சுநாத் – சொல்வனம்
மனிதர்கள் இல்லாத நகரம் விரைவில் வனமாக மாறும் என்கிற நம்பிக்கையின் விகசிப்பில் தங்கள் முட்டையின் மீது மகிழ்ச்சியாக அமரும் கரிக்குருவிகளின் அடிப்படையில் சமுதாய அவலங்களை எடுத்துரைக்கும் கதை இது.
மாதவிப் பொன்மயிலாள் – பானுமதி ந – சொல்வனம்
சாந்தலா என்ற நாட்டியமங்கையும் மலிதம சிற்பியும் சேர்ந்து வடித்த காவியம் இது. பாட்டும் சிற்பமும் முதன்மையாக்கப்பட்டுள்ளது. மதங்களின் நெறிமுறை சரியான அளவில் சொல்லப்பட்டு, கலை மதத்திற்கு அப்பாற்பட்டு உயர்ந்து நிற்பதாகக் காட்டப்பட்டுள்ளது. கலையின் அழகுணர்ச்சி வாத விவாதங்களில் முழுவதும் பரவி நிற்கிறது.
இவற்றுள் ‘மாதவிப் பொன்மயிலாள்’ என்ற இந்த சிறுகதையை 2023, டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கதையாகத் தேர்வு செய்து ஆசிரியருக்குப் பாராட்டுகளை அளிக்கிறேன்.
