இரவு மணி பன்னிரெண்டு..

எழுத்தாளர் அஸ்வத்தாமன் தான் எழுதிய கதையை சுடச் சுட மனைவியிடம் படித்துக் காட்டிக் கொண்டிருந்தார். கதை எழுதியவுடன் மனைநெல்லை திரையரங்கம்'பேய்' படம்thearter"ghost movie",நெல்லை திரையரங்கில்  'பேய்' படம் பார்த்தவர் மர்ம மரணம் - a man died in thearter when show the  "ghost movie" - Samayam Tamilவி சுலோசனாவிடம் படித்துக் காட்டுவது ஆதி காலத்திலிருந்தே அவர் வழக்கம். அதுவும் அவர் திகில் கதையாசிரியர் என்பதால் தான் எழுதிய கதையை நள்ளிரவில் தான் படித்துக் காட்டுவார்.. அதைப் படிக்கும் போது மனைவியின் ரியாக்‌ஷனை கவனிப்பார்.. ரியாக்‌ஷன் கொஞ்சம் குறைந்தாலும்.. கதையில் ஏதோ மிஸ்ஸிங் என்று மறுபடியும் மூளையைக் கசக்கி இன்னும் மெருகேற்றுவார்..

பேய், பூதம், 

இது தான் அஸ்வத்தாமனின் கதைகளுக்கு மூலதனம்.

பில்லி, சூனியம், ஏவல்..

இதெல்லாம் அவ்வப்போது வந்து செல்லும் விருந்தாளிகள்.

அஸ்வத்தாமன் இப்போது மனைவியிடம் படித்துக் கொண்டிருந்த கதையின் பெயர் “பேய் விருந்து”.

அவர் கதையைப் படிக்கும் போதே சுலோசனாவின் முகத்தில் பயம் கலந்த ஆர்வம் தெரிந்தது. இதை கவனித்தவர் கதை சக்ஸஸ் என்று தனக்குள் சந்தோஷப் பட்டார்..

“நடு நிசி ராத்திரி.. கும்மிருட்டு.. அப்போது தான் வீடு திரும்பின ராஜேஷ் விளக்கு ஸ்விட்சைத் தட்டினான்.. ஆனால் விளக்கு எரியவில்லை..பவர் கட்.. செல்போன் வெளிச்சத்தில் அலமாரியில் இருந்த மெழுகுவத்தியை எடுத்து ஏற்றி டைனிங் டேபிள் நடுவில் வைத்தான்.. ரொம்பவே பசித்தது.. ப்ரிட்ஜிலிருந்து காலையில் மிச்சம் வைத்திருந்த ப்ரைட் ரைஸை சூடு பண்ணலாம் என்று சமையலறைக்குப் போனான்.. கேஸ் லைட்டரை எடுத்தான்.. அவன் லைட்டரை சொடுக்காமலே கேஸ் அடுப்பு பற்றிக் கொண்டது.. கீழே இருந்த வாணலி தானாக எழும்பி அடுப்பில் உட்கார்ந்துக் கொண்டது.. ராஜேஷ் கையிலிருந்த பிரைட் ரைஸ் பாத்திரம் தானாகவே வாணலியில் கவிழ்ந்தது”

இந்த சமயத்தில் சுலோச்சனாவின் ரியாக்‌ஷன் கொஞ்சம் குறைந்தது.

”என்ன சரியில்லையா? அப்ப மாத்தறேன்.. இந்தக் கதையைப் படிக்கிறவங்களுக்கு ஒவ்வொரு வரிலயும் பேய் பயம் வரணும்.. அப்படியே அரண்டு போகணும்.. இதைத் தானே ஜனங்க எங்கிட்டேர்ந்து எதிர்பார்க்கறாங்க..”

சுலோச்சனா பொறுமை இழந்தாள்.

“இதப் பாருங்க.. நேரமாச்சு.. போய் படுங்க.. காலைல பார்த்துக்கலாம்”

உடனே அஸ்வத்தாமன் மறுத்தார்.

“இல்லை சுலோ.. நீ போய் தூங்கு.. இந்தக் கதையை நல்ல படியா முடிக்காம எனக்கு தூக்கம் வராது.. இன்னொரு விஷயம் தெரியுமா? இந்தக் கதை பத்திரிகைக்கு மட்டுமில்லை.. சினிமாவுக்கும் கேட்கறாங்க.. இந்தப் படத்தைப் பார்த்துட்டு தியேட்டர்ல அவனவன் பேய் அலறல் அலற வேண்டாம்? அதனால நல்லா யோசிச்சு நிறைய திகில் ஏத்தணும்.. நீ போ..”

சுலோசனா அங்கிருந்து நகர அஸ்வத்தாமன் சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்.

காலிங் பெல் ஒலித்தது.

“இந்த நேரத்துல யாரு?”  

மனதில் கேள்வியுடன் வாசக் கதவைத் திறந்தார்.

வெளியே யாரும் இருக்கவில்லை.

”யாரு?”

கேட்டபடி வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.

“யாருங்க?”

பின்னால் வந்த சுலோசனாவும் எட்டிப் பார்த்தாள்.

இருவர் முகத்திலும் பயம் கலந்த அதிர்ச்சி.

காரணம்.. அங்கே வெள்ளை சேலை.. வெள்ளை ஜாக்கெட் அணிந்த ஒரு பெண் நின்றிருந்தாள். கரு கருவென்று நீள முடி. வழித்து வாரியிருந்தாலும் ஒன்றிரண்டு இழைகள் முகத்தில் ஊசலாடியது. நெற்றி வெறுமையாக இருந்தது.. முகத்தில் எந்த வித சலனமும் இல்லாமல் தலை குனிந்து நின்றிருந்தாள்..

”வந்து.. யாரு?”

என்னதான் பேய் கதை மன்னனாக இருந்தாலும் அந்த சூழ்நிலையில்.. அந்த கும்மிருட்டு ராத்திரி வேளையில்.. அஸ்வத்தாமனின் குரலில் நடுக்கம் தெரிந்தது.

அந்தப் பெண் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னைத் தெரியலை?”

அஸ்வத்தாமன் கொஞ்சம் கூர்ந்து பார்க்க முயன்றார். சத்தியமாக அந்த மங்கிய இரவு வெளிச்சத்தில் அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

“யாரும்மா நீ?”

”என்ன சார்.. எப்பவும் என்னைத் தான் நினைச்சிட்டிருக்கீங்க.. என்னை சுத்தித் தான் உங்க உலகமே இருக்கு.. சொல்லப் போனா நான் உங்க ஹ்ருதயத்துல இருக்கேன்.. என்னைப் போய் யாருன்னு கேட்கறீங்க?”

அந்தப் பெண் இதைக் கூறியவுடன் சுலோசனா பதட்டப் பட்டாள்.

“ஐயையோ.. என்னங்க சொல்றா இவ? இவளைச் சுத்தித் தான் உங்க உலகமே இருக்கா? உங்க ஹ்ருதயத்துல இருக்காளா? அப்ப இவளை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? ஐயையோ.. நான் மோசம் போயிட்டேனே..”

என்று புலம்ப ஆரம்பித்தவளை..

“அடச் சீ.. கம்னு இரு.. நானே என்ன ஏதுன்னு புரியாம முழிக்கறேன்”

மனைவியை அடக்கி விட்டு அந்தப் பெண்ணிடம் திரும்பி..

“இதப் பாரும்மா.. நீ யாருன்னு எனக்குத் தெரியாது.. தப்பான விலாசத்துக்கு வந்திருக்கேன்னு நினைக்கறேன்”

“நீங்க தானே எழுத்தாளர் அஸ்வத்தாமன்?”

“ஆமா..”

“அப்ப சரியான விலாசத்துக்குத் தான் வந்திருக்கேன்.. வழக்கமா எனக்கு கதவு தட்டற பழக்கம்லாம் கிடையாது.. நேரிடையா உள்ள வந்துருவேன்.. ஆனா நீங்க பெரிய எழுத்தாளர்.. அதான் கொஞ்சம் மரியாதை கொடுக்கலாமேன்னு காலிங் பெல்லை தட்டினேன்”

அஸ்வத்தாமனுக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை.

“இதப் பாரு.. ஜிலேபி சுத்தாதே.. குழப்பாமச் சொல்லு.. நீ யாரு?”

“இப்படி அர்த ராத்திரில வந்திருக்கேன்.. வெள்ளை டிரெஸ் போட்டிருக்கேன்.. தலையை விரிச்சுப் போட்டிருக்கேன்..  இன்னுமா உங்களுக்குப் புரியலை?”

“சத்தியமாப் புரியலை”

“ஹும்.. நீங்க ஒரு திகில் எழுத்தாளர்!!..”

நக்கலாகச் சிரித்தாள் அந்தப் பெண்.

“சரி புரியும்படியாவே சொல்றேன்.. நான் தான் உங்க மூல தனம்”

அஸ்வத்தாமனின் முகத்தில் மேலும் குழப்பம்.

“இன்னுமாப் புரியலை?.. உகும்.. நீங்க சுத்த வேஸ்ட்.. சரி.. நல்லாக் கேட்டுக்குங்க.. நான் உங்களுக்குப் பிடிச்ச பேய்”

இதைக் கேட்டு அஸ்வத்தாமனும் சுலோச்சனாவும் வெலவெலத்தார்கள்.

“என்ன  பேயா?.. என்ன சொல்றே?”

“ஆமா.. உங்க கதைகள்ளலாம் எழுவீங்களே.. இப்ப எழுதற ’பேய் விருந்து” கதைல கூட உமான்னு எனக்கு ஒரு பேர் கொடுத்திருக்கீங்களே.. சாட்சாத் அந்தப் பேய் நான் தான்”

முகம் வெளிரிப் போய் “ஐயோ.. பேய் பேய்” என்று கத்தியபடி அவசரமாக மனைவியை வீட்டுக்குள் தள்ளி தானும் புகுந்து கதவை அவசரமாக சாத்தினார் அஸ்வத்தாமன்.

“இதுக்குத் தான் ராத்திரி வேளைல பேய் கதை எழுதாதீங்க.. படிக்காதீங்கன்னு சொன்னேன்.. கேட்டீங்களா? இப்பப் பாருங்க உங்களைத் தேடிக்கிட்டு பேயே வந்திருக்கு”

சுலோசனா புலம்பினாள்.

“ஐயோ புலம்பாதே.. அதான் கதவை சாத்திட்டோமே.. இனிமே கவலை இல்லை.. வா.. உள்ள போகலாம்”

ஆனால் உள்ளே போனவர்களுக்கு மயக்கமே வந்தது.

சோபாவில் சம்மணமிட்டு பேய் உட்கார்ந்திருந்தாள்.

“நீ.. நீ இங்க?..”

அஸ்வத்தாமனின் வாய் குழறியது..

“அதான் சொன்னேனே.. மரியாதை கொடுத்து காலிங் பெல் அடிச்சேன்.. ஆனா நீங்க கதவைச் சாத்திட்டீங்க.. அதான் வழக்கமான என் ரூட்டுல உள்ள வந்துட்டேன்”

இப்போது கணவன் மனைவி இரண்டு பேருடைய உடம்பும் குளிர் ஜுரம் வந்தது போல் நடுங்கியது. அதைப் பார்த்து பேய் வாய் விட்டுச் சிரித்தது.

அஸ்வத்தாமன் மேலும் நடுங்கினார்.

“ஐயோ சிரிக்காதே.. பேய் சிரிப்பா இருக்கு.. ஐ ஆம் ஸாரி.. நீ பேய் தானே.. வேற எப்படிச் சிரிப்பே?”

இதைக் கேட்டு பேய் இன்னும் பலமாகச் சிரித்தது.

“இப்படி சிரிக்காதேம்மா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு”

சுலோசனா மலேரியா குரலுடன் கெஞ்சினாள்.

அஸ்வத்தாமன் கொஞ்சம் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு..

“மிஸ் பேய்.. வந்து.. நீ மிஸ்ஸா இல்லை மிஸ்ஸஸா?.. எதுவா இருந்தா என்ன.. மொத்தத்துல பேய்.. இப்படி பாதி ராத்திரில வந்து எங்களை காபரா பண்ணறயே.. நியாயமா?”

பேய் அவர்களை ஆதரவாகப் பார்த்தது.

“கவலைப் படாதீங்க.. உங்களை நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்”

“அப்ப எதுக்கு இங்க வந்திருக்கே?”

“வேற எதுக்கு.. டீலிங் பேசிட்டுப் போகத் தான்”

“டீலிங்கா?”

அஸ்வத்தாமன் புரியாமல் விழித்தார்.

“ஆமா டீலிங்.. என்னை வெச்சுக் கதை எழுதி.. நாடகம் எழுதி.. சினிமாவுக்கு எழுதி. எவ்வளவு சம்பாதிக்கறீங்க?”

“அது வந்து..”

“நீங்க சொல்ல வேண்டாம்.. உங்க வரும்படி என்னன்னு எனக்கேத் தெரியும்..”

“வந்து.. ஆமா நல்லா சம்பாதிக்கறேன்.. என் பேய் கதைகளுக்கு அவ்வளவு டிமாண்ட்”

“ஆக.. நீங்க கதை எழுதி சம்பாதிக்க நான் தான் காரணம்”

“கண்டிப்பா.. அதுல சந்தேகம் என்ன?”

“அப்ப என் பங்கை மட்டும் ஏன் கொடுக்க மாட்டேங்கறீங்க?”

“உன் பங்கா?”

“ஆமா.. ராயல்டி.. நீங்க என்ன சம்பாதிக்கறீங்களோ.. அதுல முப்பது பர்சண்ட் எனக்கு வர வேண்டாமா?”

“என்னது முப்பது பர்சண்டா?”

“ஏன்.. இன்னும் அதிகமா கேட்கணுமா? உகும்.. நான் ரொம்ப நியாயமான பேய்.. முப்பது பர்சண்ட் போதும்..”

சாதாரணமாகவே பத்து காசு செலவு பண்ண பத்தாயிரம் முறை பட்ஜெட் போடும் அஸ்வத்தாமனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“இது அநியாயம்.. அதெல்லாம் தர முடியாது”

“தர முடியாதா? அப்ப சரி.. இனிமே நீங்க கதை எழுத முடியாது.. தினம் ராத்திரி வந்து என் சுயரூபத்தைக் காட்டி உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிருவேன்.. சாம்பிள் பார்க்கறீங்களா? இந்தக் கையால தானே கதை எழுதறீங்க?”

என்று அஸ்வத்தாமனின் கையைப் பார்த்து “ஜூம் ஜலகா” என்று கூற அவர் வலது கை தானாகவே பின்னுக்கு இழுக்கப் பட்டு முறுக்கப் படுகிறது. அவர் வலி தாளாமல் “ஐயோ.. ஐயோ” என்று அலற..

சுலோசனா “தயவு செய்து அவரை ஒண்ணும் பண்ணாதே” என்று கெஞ்ச..

“அப்ப எனக்கு முப்பது பர்சண்ட் தரீங்க”

”முப்பது பர்சண்ட்னா..”

அஸ்வத்தாமன் மனக் கணக்குப் போட..

“ஐயோ.. இப்பப் போய் உங்க கஞ்சத்த்னத்தைக் காட்டாதீங்க.. சரின்னு சொல்லுங்க”

சுலோசனா பட படத்தாள்.

“சரி.. தரேன்.. என்னை விட்டுரு.. ப்ளீஸ்”

என்று வேறு வழியில்லாமல் அஸ்வத்தாமன் கெஞ்ச “ஜூம் ஜலகா” என்று அந்தப் பேய் கூற அவர் கை விடு படுகிறது.

அஸ்வத்தாமனுக்கு பயத்தில் மூச்சு வாங்கியது..

“இதப் பாருங்க.. ஏற்கனவே சொன்ன மாதிரி நான் ரொம்ப நியாயமான பேய்.. நேத்து உங்களுக்கு அந்த சினிமா தயாரிப்பாளர் கிட்டேர்ந்து ரெண்டு லட்ச ரூபாய் அட்வான்ஸ் வந்துதே.. அதுலேர்ந்து கணக்கை ஆரம்பிச்சாப் போதும்.. பழைய கணக்கெல்லாம் வேண்டாம்.. ரெண்டு லட்சத்துல முப்பது பர்சண்ட்.. அறுபதாயிரம் ரூபா.. எனக்கு வந்தாகணும்”

“ரொம்ப அதிகம்”

“சரி.. ஜூம்..”

பேய் ஆரம்பித்தவுடன் கிழக்கும் மேற்குமாகத் தலையாட்டினார் அஸ்வத்தாமன்.

“சரி.. கண்டிப்பாத் தரேன்.. ஆமா உனக்கு எப்படிப் பணம் கொடுக்க? உனக்கும் பேங்க் அகௌண்ட் இருக்கா?”

என்று கேட்க..

“ஓ இருக்கே..”

”அட பரவாயில்லையே.. பேய்க்கு பேங்க் அகௌண்டா?.. இதைத் தான் அக்கௌண்ட் பேயின்னு சொல்லுவாங்களா? சரி.. உன் அகௌண்ட் விவரம் சொல்லு”

என்றவுடன் பேய் அவரை நிதானமாகப் பார்த்து..

“மக்கள் நல அக்கௌண்ட்”

அஸ்வத்தாமன் புரியாமல் விழித்தார்.

“என்ன சொல்றே?”

“ஆமா.. மக்கள் நல அக்கௌண்ட்.. எனக்கு சேர வேண்டிய தொகைல மக்களுக்கு நல்லது பண்ணுங்க.. இப்ப சென்னை மழைல பாதிக்கப் பட்டவங்களுக்கு உணவு, உடைன்னு ஏதாவது உதவி பண்ணுங்க.. அது என் ராயல்டி அக்கௌண்டுல கிரெடிட் ஆயிரும்.. என்ன பண்ணுவீங்களா? இல்லை ஜூம் ஜலகா..”

சிரித்தபடி பேய் மறைய..

“ஐயோ.. ஜூம் ஜலகா வேண்டாம்.. நான் பணம் கொடுத்துடறேன்.. ஜூம் ஜலகா வேண்டாம்.. ஜூம் ஜலகா வேண்டாம்”

என்று அஸ்வத்தாமன் அலற..

சுலோசனா அவரைத் தட்டி எழுப்பி..

“என்னங்க.. என்னாச்சு?.. விழிச்சுக்குங்க.. என்ன.. ஏதாவது கனவு கண்டீங்களா?”

சோபாவில் சாய்ந்திருந்த அஸ்வத்தாமன் திடுக்கிட்டு எழுந்து..

“கனவா.. எல்லாம் கனவா?” என்று மலங்க மலங்க விழிக்க..

“ஆமா.. கதை யோசிக்கறேன்னு சோபாவுல சாய்ஞ்சீங்க.. அப்படியே தூங்கிப் போயிருக்கீங்க.. ஆமா என்ன கனவுங்க?”

சுலோசனா ஆர்வத்தோடு கேட்டாள்.. அதற்கு பதில் சொல்லாமல்..

“நாளைக்கே மழைல பாதிக்கப் பட்ட மக்களுக்கு அறுபதாயிரம் ரூபா செலவு பண்ணி உதவி பண்ணணும்”

அஸ்வத்தாமன் மிரட்சியோடு சொன்னார்.. பத்து காசு செலவு பண்ண பத்தாயிரம் முறை யோசிக்கும் கணவரிடமிருந்து இதை எதிர்பார்க்காத சுலோசனா குழம்பி நின்றாள்.