‘டக டக டக’ சத்தம் கேட்டு வாசலுக்கு வந்து பார்த்தான் ராகவ்.

ஒரு தமிழ்நாடு கிராமத்தில் தெருவில் வித்தை செய்கிறார்கள் கணவனும் மனைவியும். குழந்தை மத்தளம் கொட்டுகிறது. அந்தப் பெண் மட்டும் கயிற்றில் உயரே நடக்கிறாள்.

பட உதவி : மைக்ரோசாப்ட் இமேஜ் கிரியேடர்  (AI)

 வித்தை காட்டுகிற அம்மா அப்பா இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பம் வாசலில் நின்றிருந்தது. அம்மா சுத்தமாகத் தரையைப் பெருக்கி கற்களையெல்லாம் அப்புறப்படுத்தினாள். குழந்தைகள் கரித்துண்டால் பெரிய வட்டம் போட்டனர். அப்பா இருபக்கமும் குழி தோண்டி குச்சிகளை முக்கோணமாக நட்டுக் கொண்டிருந்தான். நடுவில் ஒரு மெல்லிய கயிறையும் அழுத்தமாக கட்டிக் கொண்டிருந்தான். கயிறு அறுந்து விடாமல் பலமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

 அம்மா டமாரம் தட்டிக் கொண்டிருந்தாள். இரண்டு குழந்தைகளும் சின்னச் சின்ன வித்தை காட்டிக் கொண்டிருந்தனர். சின்ன சைக்கிளை நின்று கொண்டே ஒருவர் ஓட்டுவது, அவன் மேல் மற்றொருவள் ஓடிப் போய் ஏறிக் கொள்வது, சைக்கிளைத் திருப்பி ஓட்டுவது, இரண்டு மூன்று முறை பல்டி அடிப்பது என்று இப்படி சின்ன சின்ன வித்தைகளைக்  காட்டிக் கொண்டிருந்தனர். சிறு குழந்தைகள் கூட்டம் கூட ஆரம்பித்து பின்பு பெரியவர்களும் கூடிவிட்டனர். மற்றவர்கள் கஷ்டப்பட்டு செய்யும் வித்தையை வேடிக்கை பார்ப்பது மனிதனின் சுபாவம் அல்லவா!

ராகவ் ஓடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து ‘வேடிக்கையாக செய்தாலும் பாவம் ஒருவேளை சாப்பாட்டிற்காக அவர்களுக்கும் கஷ்டம் இருக்கத் தானே செய்யும்!’ என்று எண்ணிக்கொண்டே அவனும் அந்த கும்பலில் ஓர் ஆளாக நின்றான்.

 கடைசியாக பெரிய வித்தையாக மூங்கிலில் அப்பா ஏற மற்ற மூவரும் ஒரு சிறிய விரிப்பை பக்கத்தில் விரித்துவிட்டு, அந்தக் கயிற்றின் கீழே ஒரு விரிப்பைப் பிரித்து பிடித்துக் கொண்டனர். சர்க்கஸில் கீழே பிடித்துக் கொள்ளும் ஒரு வலை மாதிரி இல்லாமல் அவர்களது சக்திக்கு ஏற்ற மாதிரி ஒரு சிறிய துணியை பிடித்துக் கொண்டிருந்தனர். ஆயிற்று, இந்த மனிதன் மெது மெதுவாக கயிற்றில் நடக்க, கூடியிருந்த கும்பல் கைதட்டி ஆர்ப்பரித்தனர். ஆனால் பல இடங்களில் செய்திருந்தும் அன்று அவன் கைதவறி கீழே விழுந்து விட்டான். விழுந்தவன் மூர்ச்சை ஆகிவிட்டான். மொத்த கும்பலும் அவசர அவசரமாக சில நாணயங்களை அந்தத் துணியில் போட்டுவிட்டு, சிலர் ஏமாற்றிவிட்டு, அங்கிருந்து பயந்து கொண்டு ஓடி விட்டனர்.

ராகவ்விற்கு அங்கிருந்து செல்ல கால் எழவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தான். அவர்கள் இதைக் கேட்டவுடன் ஆம்புலன்ஸுக்கு செய்தி அனுப்பும்படி கூறினர். ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்காக ஆட்களைத்  தேடினால் ஒருவரும் அங்கு இல்லை. பிறகு கஷ்டப்பட்டு தன்னுடைய நண்பர்களைக் கூப்பிட்டு எல்லோரும் சேர்ந்து அந்த மனிதனை ஆம்புலன்ஸில் ஏற்றினர். சில நாட்களில் இந்த விஷயத்தை மறந்தும் விட்டான்.

 ஆயிற்று ஒரு நாலஞ்சு மாதங்கள் கழித்து மீண்டும் வீட்டு வாசலில் அதே சத்தம். இந்த முறை வித்தை பார்ப்பதற்கு மட்டும் அல்லாமல் அதே குடும்பம்தானா, அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பார்ப்பதற்கும் ஆவலாய் ராகவ் வெளியே வந்தால், ஆம் அதே குடும்பம் தான். ஆனால் அந்த மனிதன் சிறிது நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தான். இவன் எப்படி கயிற்றின் மீது நடப்பான் என்று யோசித்துக் கொண்டே ராகவ் அந்த கும்பலில் ஓர் ஆளாய் நின்று கொண்டான்.

தங்களது வித்தைகளை ஒவ்வொன்றாக காட்ட ஆரம்பித்தனர். குட்டிக்கரணம் அடித்தல், பின்பக்கம் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டே செல்லுதல் என்று தங்களது வயதுக்கு ஏற்ற மாதிரி செய்து கொண்டிருந்தனர். ராகவ்வும் அந்த குச்சிகளையும் கயிறையும் பார்த்துவிட்டு எப்படி இந்த மனிதன் இதன் மேல் நடக்கப் போகிறான் என்று ஆவலுடனும் கவலையுடனும் யோசித்துக் கொண்டிருந்தான். அந்த நேரமும் வந்துவிட்டது.

இந்த முறை அவன் மனைவி மெதுமெதுவே அந்தக் கயிற்றில் நடக்கலானாள். ஆச்சரியம்! மெதுவே நடந்து கீழே இறங்கி விட்டாள்! அந்த கும்பலில் இதை பார்த்துக் கொண்டிருந்த சில இளவட்டங்கள் மிகவும் இரசித்தனர். பிறகு தனது பையை எடுத்துக்கொண்டு அவன் மனைவி எல்லோரிடமும் நீட்டி காசு வாங்கலானாள். சிலர் காசு போட்டனர், சில பெண்கள் வீட்டில் இருந்து அரிசி கோதுமை எடுத்துக் கொண்டு வந்து போட்டனர். இதில் ஓர் இளம் வயது பையன் ஐந்து ரூபாய் எடுத்து அவள் கையைப் பிடித்து இழுத்து மெதுவே கையில் அழுத்தினான். ராகவ்வும்  இதைப் பார்த்துவிட்டு அவள் என்ன செய்கிறாள் என்று யோசித்துக் கொண்டிருந்தான்!

 அவள் மெதுவே அந்த பணத்தை அந்தப் பையனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு அவன் காதோடு ‘நாங்கள் வித்தை காட்டுபவர்கள்தான், ஆனால் எங்களுக்கும் மான மரியாதை உள்ளது, குழந்தைகளை வளர்ப்பதற்காக நாங்கள் கிராமத்திலும் தெருவிலும் சுற்றுகிறோம், ஆனால் வேறு எந்த விதமான தொழிலும் செய்வதில்லை, என் கணவரை இந்தக் கிராமத்தில் உள்ள ஒரு கண்ணியமான மனிதர் காப்பாற்றினார், அந்த நன்றி உணர்ச்சி எங்களுக்கு எப்போதும் உண்டு’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்.

அப்பொழுது கும்பலில் யாரோ ‘ராகேஷ் இப்பொழுது நீதியை நிலைநாட்டுகிற போலீஸ் பயிற்சியில் உள்ளான்’ என்று சொன்னார்கள்.

அதைக் கேட்ட அந்தப் பெண் ‘நீங்கள் எப்படி இந்தத் தேசத்தைக்  காப்பாற்றப் போகிறீர்கள், உங்களுடைய குணங்களையே காப்பாற்ற முடியாத உங்களால் உங்களுடைய தாய், சகோதரி, இந்த கிராமம் எதுவுமே காப்பாற்றப்பட முடியாது, நாங்கள் சென்று விடுவோம், மீண்டும் வரமாட்டோம், நீங்கள் என்னை ஒரு சகோதரியாகவோ ஒரு தாயாகவோ கருதினால் திரும்பி வருவேன், நிச்சயம் வருவேன்’ என்று கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

அன்று இரவே எல்லோரும் சென்று விட்டனர்.

கிராமத்தில் உள்ள அனைவரும் ராகேஷைக் கண்டித்தனர், நிலைமையைப் புரிய வைத்தனர். அவனுக்கும் இது அவமானமாக இருந்திருக்க வேண்டும். மௌனமாக அங்கிருந்து சென்று விட்டான். எல்லோரும் அவனிடம் பேசுவதையே தவிர்த்து விட்டனர். நண்பர்களும் அவனை வெறுத்து ஒதுக்கினர். இப்பொழுது அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை! பேசாமல் வெளியேறி விட்டான். சில வருடங்களுக்குப் பிறகு ராகேஷ் தனது கிராமத்திற்குத் திரும்பி வந்தான்.

அப்பொழுது ‘இன்று வித்தை காட்டுபவர்கள் நமது கிராமத்திற்கு வருவார்கள்’ என்று சொன்னான். எல்லோரும் ஆச்சரியமாக அவனைப் பார்த்தனர்.

‘உனக்கு எப்படித் தெரியும் அவர்கள்தான் வருவார்கள் என்று? நீ எப்படி இப்படி நிச்சயமாகச் சொல்கிறாய்?’

‘நான் வெளியேறி பல நல்ல காரியங்கள் செய்தேன், அக்னியில் எரிந்து கொண்டிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்த குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தேன், இதைக் கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் என்னைப் பாராட்டி எனக்குப் பரிசளித்தார்கள், அந்தப் பரிசை வாங்கிக் கொண்டு வெளியே வரும்பொழுது அந்த வித்தை காட்டும் குடும்பத்தையும் அந்தப் பெண்ணையும் பார்த்தேன், ‘நில் தமக்கையே நில்’ என்று உரத்த குரலில் கூறினேன், முதலில் அவள் என் குரலை அடையாளம் கண்டு கொள்ளவில்லை, திரும்பவும் கூப்பிட்டவுடன் தன்னைத்தான் கூப்பிடுகிறார்கள் என்று திரும்பி வந்தாள். ‘என்னைத் தெரியவில்லையா, நான் அந்த கிராமத்தில் இருந்தவன், தாங்கள் ஒரு தடவை வித்தை காட்டுவதற்காக எங்கள் கிராமத்துக்கு வந்த பொழுது நான் செய்த ஒரு செயலைக் கண்டித்து இந்தத் தேசத்தைக் காப்பாற்றுவது பற்றி சொல்லி எனக்கு அறிவுறித்தினீர்கள், அதில் தான் இந்த கிராமத்து மரியாதை இருக்கிறது என்று எனக்கு சுட்டிக்காட்டினீர்கள், தங்களால் தான் எனக்கு இப்பொழுது இந்த பரிசு கிடைத்துள்ளது, நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், நீங்கள் என்னை அன்று கண்டித்திருக்காவிடில் நான் எப்படி இருந்திருப்பேன் என்று என்னால் எண்ணக் கூட முடியவில்லை, நான் தங்களது பாதங்களை தொட்டுக் கும்பிட விரும்புகிறேன்’ என்று சொன்னேன்’.

எல்லாவற்றையும் கேட்ட அந்தப் பெண்மணி ‘அன்று நீ என்னைத் தழுவிக் கொள்ள ஆசைப்பட்டாய், அது தகாததாய் இருந்தது, ஆனால் இன்று நீ எல்லோரையும் பெருமைப்பட செய்து விட்டாய், இன்று நீ செய்த செயலால் நான் உன்னை ஆரத் தழுவிக் கொள்ள விரும்புகிறேன்’.

 ‘தமக்கையே நீ இப்பொழுது கிராமத்துக்கு வருவாயா?

 ‘கட்டாயம் வருவேன், நீ இன்று உயர்ந்து இந்த கிராமத்தையும் உன்னதமாக்கி இருக்கிறாய், அதனால் நான் இந்த கிராமத்திற்கு அவசியம் திரும்பி வருவேன்’ என்று அந்தப் பெண்மணி கூறியதை இங்கே அவன் மகிழ்ச்சியோடு கூறினான். அன்பின் சக்தி வலியது அல்லவோ!

 

                                            ரேவதி ராமச்சந்திரன்