பார்க்கிங்

தன் அருமையான நடிப்பால் மொத்தப் படத்தையும் தன் தோள்களில் தாங்குகிறார் பன்முகக் கலைஞர் எம் எஸ் பாஸ்கர். யார் பிஸ்தா எனும் ஈகோ யுத்தத்தில் மாட்டிக் கொள்ளும் ஒரு முதியவரும் ஒரு இளைஞனும் என்பது தான் கதை. இதை இவ்வளவு அருமையான திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவரு புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். பார்க்கிங் உண்மைக்கு நெருக்கமான அழுத்தமான நடுத்தர வர்க்கத்தின் கதை. – தி ஹிந்து.
ஹரீஷ் கல்யாண் தன் பெப்பர்மிண்ட் ஹீரோ அவதாரத்தை விட்டு விட்டு ஒரு சராசரி குடும்பத்தலைவனாக பட்டையை கிளப்பி இருக்கிறார். மூத்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் அதகளம் செய்து விட்டார். ஒவ்வொருவரும் தங்களது அனுபவத்தை ஒட்டி உரசிப் பார்க்கும் வகையில் திரைக்கதை இருப்பது அருமை. ஒரு வீட்டை ஒட்டி சுவையாக என்ன காட்ட முடியுமோ அதை அலுப்பில்லாமல் காட்சியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிஜூ சன்னி. சாம் சி எஸ்ஸின் இசை கதைக்கேற்ப பயணிக்கிறது. – டைம்ஸ் நௌ நியூஸ்.
இரு நடிகர்களின் அட்டகாசமான நடிப்பில் இதயத்தை தொடுகிறது பார்க்கிங். டாடா, போர்த்தொழில், குட் நைட் பட வரிசையில் இன்னொரு குறைந்த பட்ஜெட் படம் நிறைவைக் கொடுப்பது திரையுலகிற்கு டானிக். – இண்டியா டுடே.
பரவலாக நடுத்தர குடுயிருப்புகளில் உள்ள பார்க்கிங் பிரச்னையைக் கருவாக எடுத்துக்கொண்டு, அதில் மனித மனங்கள் அடையும் விருப்பு வெறுப்புகளை வைத்துத் தேர்ந்த கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். பார்க்கிங்கில் யார் வண்டியை நிறுத்துவது என்கிற சிறிய ஈகோ `தீ’, இரு நபர்களிடையேயான பெரு நெருப்பாகி பின்னர் எப்படிக் காட்டுத்தீயாக மாறுகிறது என்பதே ‘பார்க்கிங்’ படத்தின் ஒன்-லைன்! எம்.எஸ்.பாஸ்கர் குரூரம், வன்மம், ஆற்றாமை, கோபம் உள்ளிட்டவற்றை தனது அனுபவ நடிப்பால் அநாயசமாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். ஹரிஷ் கல்யாணுக்குக் கோபம் கைகொடுத்த அளவுக்கு மற்ற உணர்வுகளும் கை கொடுத்திருக்கலாம். எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக வரும் ரமா ராஜேந்திரன், மகளாக வரும் பிரார்த்தனா நாதன் இருவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதிலும் எம்.எஸ்.பாஸ்கரை எதிர்த்துப் பேசும் காட்சிகளில் இருவருமே அப்ளாஸ் அள்ளுகின்றனர். இளவரசு, அவ்வப்போது தலைக்காட்டிவிட்டு போனாலும் அதை அழுத்தமாகச் செய்திருக்கிறார். பின்னணி இசையில் பழைய பன்னீர்செல்வமாக சாம் சி.எஸ்-ஐ காணமுடிகிறது. காட்சியின் தீவிரத் தன்மையை வயலின் வழியே சொல்லி விடுகிறார். இருந்தும் பாடல்களும், பாடல் வரிகளும் பெரிதாக ஈர்க்கவில்லை. – விகடன் இணைய இதழ்.
அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் வெர்ஷன் தான் பார்க்கிங். – இண்டியன் ஹெரால்டு.
அன்னப்பூரணி

இயக்குனர் நிலேஷ் குமாரின் முயற்சி நல்ல நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்டு திரையில் பரிமளிக்காமல் போய் விடுகிறது. ஒப்பனையிலிருந்து அனைத்தையும் கவனமாகச் செய்து தன்னுடைய நடிப்பால் நம்மை கவர்ந்து விடுகிறார் அன்னப்பூரணியாக நயன்தாரா. அதையே ஃபர்ஹானாக வரும் ஜெய் குறித்து சொல்வதற்கில்லை. தலைமை சமையல்காரராக வரும் சத்யராஜ் தன் நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்துகிறார். இன்னும் கூட சுவையாக இருந்திருக்கலாம் எனும் எண்ணத்தோடு வெளியேறுகிறான் ரசிகன். – இண்டியா டுடே.
மாமிசத்தின் பக்கத்தில் நிற்பதுகூட பாவம் என்கிற குடும்பத்தில் பிறந்த அன்னபூரணிக்கு உலகில் தலைசிறந்த செஃப் ஆக வேண்டும் என்கிற ஆசை. அதற்கான தேடலில் அவர் சந்திக்கும் சவாலே படத்தின் ஒன்-லைன். ‘அசத்த வரா… கலக்க வரா…’ என்று பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார் தமன். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு அதீத தரத்தினால் உருவாக்கப்பட்ட விளம்பரப் படங்களில் இருக்கும் செயற்கையான ஒளியுணர்வையே தருகிறது. அது, இது எதுவும் எதார்த்தமில்லை என்கிற டோனினை படத்திற்கு செட் செய்கிறது. படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். சமையல் போட்டிக்கான அரங்கம், சாதாரண சமையல் கூடம் எனக் கலை இயக்குநர் ஜி.துரைராஜின் கலை இயக்கத்தில் குறையேதுமில்லை. மொத்தத்தில் கதையாகச் சுவாரஸ்யமான ஒன்லைனரை எடுத்திருந்தாலும், திரைக்கதையைச் சிறப்பாகக் கோர்க்காததால், எளிதில் யூகிக்கக்கூடிய ஒரு படமாகவே இந்த `அன்னபூரணி’ நமக்குப் பரிமாறப்பட்டிருக்கிறது.- சினிமா விகடன்.
நாடு

நமது கல்வி முறையின் போதாமை, சுகாதாரத் துறையில் தலைதூக்கும் ‘சேவை அல்லது தொழில்’ விவாதம், மூளை வடிகால் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் அவர்களின் மக்கள்தொகையைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் போன்ற பொருத்தமான கேள்விகளை நாடு எழுப்புகிறது, மேலும் படம் நீட் தேர்வின் தோல்வி குறித்தும் கருத்து தெரிவிக்கிறது . . இவை சிக்கலான சிக்கல்கள், ஒரு தீய சுழற்சியில் சிக்கியுள்ளன, இந்த நேரத்தில் தெளிவான தீர்வுகள் இல்லை. கொல்லிமலை போன்ற கடினமான நிலப்பரப்பில் வாகனம் ஓட்டும்போது, பல வளைவுகளைக் கொண்ட வளைந்த சாலை நியாயமானதாகத் தோன்றும். இப்போது அதே சாலையை ஒரு தட்டையான மேற்பரப்பில் கற்பனை செய்து பாருங்கள். அப்படி இருக்கிறது படம். – சினிமா எக்ஸ்பிரஸ்.
படத்தின் திரைக்கதையும் இயக்கமும் அருமை! ஒளிப்பதிவைப் பொறுத்தவரை, கண்ணுக்கினிய கிராமத்து காட்சிகள் ஒரு முழுமையான காட்சி விருந்தாகும். நம் இதயத்தைத் தொடக்கூடிய, சில சமயங்களில் கண்ணீரை வரவழைக்கும் இசை மற்றும் பின்னணி இசைக்கு சிறப்புக் குறிப்பிட வேண்டும். இன்னும் சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்பவர்களுக்கு மருத்துவ சேவையின் அவல நிலையைக் காட்டி, நாடு பல கேள்விகளைத் தூண்டுகிறது. – டைம்ஸ் நௌ தமிழ்.
அனிமல் ( தமிழ் இந்தி)

ரன்விஜய் (ரன்பீர் கபூர்) ஒரு பணக்கார டெல்லி பிராட், அவர் தனது தந்தை, தொழிலதிபர் பல்பீர் சிங் (அனில் கபூர்) சிலையாக வளர்கிறார். பல்பீர் கடுமையானவர் மற்றும் உணர்ச்சிவசப்பட முடியாதவர், இது குழந்தைப் பருவத்திலிருந்தே ரன்விஜய்யின் சுற்றத்தை குழப்புகிறது. அவன் தன் அப்பாவின் பிறந்தநாளுக்காக பள்ளியிலிருந்து திருடுகிறான்; பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சொந்த மைத்துனர் பல்பீரை ‘அப்பா’ என்று அழைக்கும் போது, அவர் கோபமடைந்து பிராந்தியவாதியாகிறார். குடும்பச் சொற்கள் அவரைப் பொது அர்த்தத்திலும் எரிச்சலூட்டுகின்றன – உதாரணமாக, கீதாஞ்சலி (ரஷ்மிகா மந்தனா) அவரைப் பொதுவில் ‘பையா’ (சகோதரர்) என்று அழைப்பது அவரது சிறுவயது ஈர்ப்பு. இப்போது ஒரு வயது முதிர்ந்த மனிதன், பைக் மற்றும் பன் மல்லெட்டுடன், கீதாஞ்சலிக்கு வேறொரு தோழனுடனான நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டு அதற்குப் பதிலாக அவனைத் திருமணம் செய்யும்படி கட்டளையிடுகிறான். கீதாஞ்சலி ஏன் இவ்வளவு வேகமாக பதிலளிக்கிறார் என்பது விளக்கமில்லாதது. சந்தீப் ரெட்டி வாங்காவின் ஆண்மைக்கு முறுக்கப்பட்ட படிமத்தில் ரன்பீர் கபூர் சிக்கி அவதிப்படுகிறார். – தி ஹிந்து
முழுத் திரைப்படமானது, நிகழ்வுகள், உணர்ச்சிகள் மற்றும் காட்சிகளின் தொடர்ச்சியை மிகக் குறைவான க்ளைமாக்ஸுக்கு இட்டுச் செல்கிறது, – தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
கஞ்ஜூரிங் கண்ணப்பன்

கான்ஜுரிங் போல மிரட்டும் பேய்ப்படமா, காமெடி என்ற பெயரில் சோதிக்கும் முயற்சியா? படம் ஆரம்பித்த விதத்திலேயே கதாபாத்திர அறிமுகத்தைச் சுருக்கி நேராகக் கதைக்குள் சென்றுவிடுகிறார்கள் என்பது ஆறுதலான விஷயம். ஆனால் அந்தச் சுருக்கமான அறிமுகத்திலும் ‘உச்’ கொட்டும் நகைச்சுவைகள் வரிசை கட்டிக் கொண்டு வருகின்றன.
பேய் படத்துக்கே உண்டான த்ரில்லர் பாணியிலான பின்னணி இசையைச் சிறப்பாகத் தந்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. இதில் காமெடி காட்சிகளுக்குத் தனியாகக் கொடுத்திருக்கும் சவுண்ட் டிராக் ரகளை. இருள் கலந்த மாய உலகத்துக்கான ஒளியுணர்வை சிறப்பாகக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா. மொத்தத்தில் `கான்ஜுரிங்’ தலைப்பில் `இன்செப்ஷன்’ பாணியிலான ஒன்லைன், கேட்ட உடனே சுவாரஸ்யம் தருகிறது. ஆனால் அதைப் படமாக்கிய விதத்தில் ‘கான்ஜுரிங்’ காணாமல் போய், காமெடியும் சரியாகப் பொருந்தி வராமல் போய், சுமாரான மற்றுமொரு பேய்ப் படமாக முடிகிறான் இந்த `கண்ணப்பன்’ – விகடன் இணைய இதழ்
தனித்துவமான கான்செப்ட் உடன் கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும் நன்றாக ஆரம்பித்து போகப்போக வேகத்தை இழந்துள்ளது. கதைக்கு தேவையில்லாத காட்சிகளை நீக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ரியல் பிளாஷ்பேக் சீனுக்கு பின்னர் படம் நன்றாகவே இருந்தது. மொத்தத்தில் இது ஒரு ஆவரேஜ் ஆன படம். – ஏஷியானநெட் தமிழ்.
ஹே நன்னா ( தெலுங்கு / தமிழ் )

அமெரிக்க படமான 2012ல் வெளிவந்த தி வவ் படத்தின் பல காட்சிகளை பட்டி டிங்கரிங் பார்த்து இந்தியத்திற்கு இட்டு வந்திருக்கிறார் இயக்குனர் சௌர்யுவ். நானி, மிருனாள் தாக்கூர் இருவரும் படத்தை தன் தோள்களில் சுமக்கிறார்கள். இது ஒரு ஃபீல் குட் சினிமா என்பதில் சந்தேகமில்லை. – ஃபில்மி கிராஃப் அருண்.
நானி, மிருனாளைத் தொடர்ந்து இசைஞர் ஹேஷம் அப்துல் வகாப் இன்னொரு முக்கியமான கண்ணி. ஹிருதயம் படம் போல இல்லாவிட்டாலும் இதில் வரும் பாடல்களும் இசையும் நெஞ்சுக்கு இதம். சீதா ராமம் படத்திற்குப் பிறகு அழுத்தமான பாத்திரத்தில் மிருனாள். இதிலும் அவர் சோடை போகவில்லை. பார்க்க வேண்டிய படம். – தி ஹிந்து.
கட்டில்

பாரம்பரிய கட்டில்தான் வேண்டும் என்று அடம் பிடிப்பது போல தொழில்நுட்பத்தை கையாண்ட விதத்திலும் பழைமை மாறாத பயணத்தைத் தொடர்ந்துள்ளனர் படக்குழுவினர்.
மூன்று தலைமுறையைக் கடந்த கணேசனின் (ஈ.வி.கணேஷ்பாபு) பாரம்பரிய வீட்டை விற்க முடிவு செய்கிறார்கள் அவனது உடன் பிறப்புகள். அதற்கு மனமில்லாமல் அவர் ஒப்புக் கொண்டாலும் வீட்டில் இருக்கும் பர்மா தேக்கு கட்டிலின் மீதுள்ள பிணைப்பின் காரணமாக அதை மட்டும் விற்க அனுமதிக்கவில்லை. இதனால் கட்டில் வைக்கும் அளவிற்கு ஒரு புதிய வீட்டைத் தேடி அலைகிறார் கணேசன். அவருக்குப் புதிய வீடு கிடைத்ததா, அந்தப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதே `கட்டில்’ படத்தின் கதை.
தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை கதாபாத்திரங்களையும் ஒரே நபராக ஏற்று நடித்துள்ளார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஈ.வி.கணேஷ்பாபு. வித்தியாசமான ஆடைகளைத் தவிர்த்து அவரிடம் நடிப்பில் எந்தவித மாறுதலும் இல்லை. அனைத்து உணர்வுகளிலும் செயற்கைத்தனமும் தடுமாற்றமும் எட்டிப்பார்க்கின்றன. படம் முழுக்க கர்ப்பிணிப் பெண்ணாக வலம் வருகிறார் நாயகி சிருஷ்டி டாங்கே. சில இடங்களில் நடிப்பில் நியாயம் சேர்க்க முயற்சி செய்கிறார். கணேசனின் தாயாக நடித்திருக்கும் கீதா கைலாசம் தனது வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார். கூடவே நட்புக்காக விதார்த், எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் வந்து போகிறார்கள்.
‘வைட் ஆங்கிள்’ ரவி சங்கரன் ஒளிப்பதிவு சின்னத்திரைக்கே உரிய ஒளியுணர்வையும், தரத்தினையும் கொண்டுள்ளது. சில இடங்களில் சீரில்லாமல் அசையும் கேமரா கோணங்கள் உறுத்தல். அதே போலப் படத்தினைக் கோர்த்த விதத்திலும் ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு நகரும் டிரான்சிஷனில் வழக்கொழிந்த பழைய எபெக்ட்ஸ்களையே பயன்படுத்தி இருக்கிறார் படத்தொகுப்பாளர் பி.லெனின். அவரே படத்துக்கான ஸ்க்ரிப்ட்டையும் எழுதியுள்ளார். உணர்வுகளைத் தூண்டும் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை உயிரோட்டம் இல்லாத காட்சிகளால் துண்டாகத் தெரிகிறது.
உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறுகதை இது. ஆனால் மோசமான திரை ஆக்கத்தினால் ‘கட்டில்’ எனும் இந்த பர்னிச்சரை (படத்தினை) சல்லி சல்லியாக நொறுக்கியிருக்கிறார்கள். – சினிமா விகடன்.
ஃபைட் கிளப்
நவீன யுவன் யுவதிகளுக்கு பிடித்த படமாக இது இருக்கலாம். உறியடி பட புகழ் விஜயகுமாரின் அடுத்த படம். முக்கியமாக இதில் பாராட்டப்பட வேண்டியவர் எடிட்டர் தான். சண்டைக் காட்சிகளில் காட்டியிருக்கும் நறுக்கு தெறிப்பு ரத்த அழுத்தத்தை எகிறச் செய்கிறது. அதோடு இதன் சண்டைகாட்சிகளை அமைத்த விதமும் அதை படமாக்கிய விதமும் சூப்பர். கதையையும் அதன் பிரதான பாத்திரங்களை அறிமுகப்படுத்த நிறைய நேரம் செலவிட்டு விட்டார்களோ என்று தோன்றுவது ஒரு குறையாக இருக்கலாம். வன்முறை அதிகம் உள்ள படம் மென் இதயக்காரர்களுக்கு உகந்ததல்ல. – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
வெண்ணை தாள் கனத்தில் கதை. அதை நவீனமாக சொல்லிய விதத்தில் தப்பித்து விடுகிறது படம். தனக்கு விளையாட்டை சொல்லிக் கொடுத்த குருவுக்கு கொலை மிரட்டல் வரும்போது ஆட்டத்தை விட்டு அவருக்காக களத்தில் கதை நாயகன் எனும் ஒன்லைன். இது பார்த்த கதை எனும் எண்ணத்தைத் தவிர்க்க முன் கதை பின் கதை என்று மாற்றி மாற்றி காட்டி நழுவ நினைக்கிறார்கள் படக் குழுவினர். பரிச்சியமில்லாத புதுமுகங்களை யார் எந்த பாத்திரம் என்று நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். இயக்குனர் அப்பாஸ் அ ரகமத் முடிந்த வரையில் இதை வெளித் தெரியாமல் கொண்டு வர முயன்றிருக்கிறார். ஆனாலும் லேசாக வெற்றிமாறனின் வடசென்னை பாதிப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. – தி ஹிந்து
ரத்த களறியான வடசென்னையை அதன் நறுக்கான திரையமைப்பால் ரசிக்க முடிகிறது. – இண்டியன் எக்ஸ்பிரஸ்.
புனைவு நிதர்சனத்தை மீறி இருப்பதால் இப்படத்தை ரசிக்க முடியவில்லை. – இந்தியா டுடே.
நவீன உத்திகள் கொண்டு எடுக்கப்பட்ட படம், இந்த அரத பழசான கதையை ரசிக்க வைக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
கண்ணகி

நான்கு யுவதிகளின் போராட்டங்களை படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் யஸ்வந்த் கிஷோர். அந்தப் பயணம் பாதியில் கை விடப் பட்டதோ எனும் எண்ணம் வருகிறது முடிவில். அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, கீர்த்தி பாண்டியன் எனும் நால்வர், எப்படி தங்களின் சிக்கல்களை எதிர் கொள்கிறார்கள் என்பது முடிச்சு. ஒரு மொழி உண்டு! எல்லா நல்ல கதைகளும் திரையில் அதே தாக்கத்துடன் வருவதில்லை. இந்த மொழி இப்படத்திற்கும் பொருந்தும். சொல்ல வந்த விதத்தில் பெண்களின் முன்னேற்றமா?தடுமாற்றமா? என்பதில் குழம்பி இருக்கிறார் இயக்குனர். திரை மொழியோ ஒளிப்பதிவோ ஒரே தரத்தில் இல்லை என்பதும் குறை. மொத்தத்தில் நல்ல வாய்ப்பை வீணாக்கி விட்டனர். – இந்தியா டுடே
நல்ல நோக்கங்கள் நல்ல படங்களைத் தருவதில்லை என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். – சினிமா எக்ஸ்பிரஸ்.
சில நல்ல உணர்வு பூரணமான தருணங்கள் உள்ளன. அதை இன்னும் மேலெடுத்து செல்லத் தவறி விட்டது படக்குழு. சில பாத்திரங்களை எழுதிய விதத்தில் கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால் இன்னமும் கூட ஈர்த்திருக்கும். – தி ஹிந்து
சொல்ல வந்த சேதியை பிரச்சார தொனி இல்லாமல் சொன்னதில் இந்தப் படம் பாராட்டு பெறுகிறது. சில அலுப்பு தருணங்கள் இருந்தாலும் க்ளைமேக்ஸ் திருப்பம் நம்மை எழுந்து உடகார வைக்கிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா
பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் அநீதிகளை பற்றி பேசி இருக்கும் இயக்குனரின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள். தனால் முடிந்த அளவிற்கு தான் சொல்ல வந்ததை சொல்லி இருக்கிறார். ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தது. சில இடங்களில் டப்பிங் இல்லாமலும், லைவ் லொக்கேஷன்களிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். முதல் பாதியில் நான்கு பெண்களையும், அவர்களின் வாழ்வியலை சொல்லும் விதம் நன்றாக இருந்தது, ஆனால் இரண்டாம் பாதியில் அதனை கொண்டு சென்ற விதம் படத்திற்கு சற்று தொய்வை தருகிறது. கிட்டத்தட்ட ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்த கதையில் சில இடங்களை கட் செய்து இருக்கலாம். முன்பு சொல்லி இருந்தது போல கிளைமாக்சில் வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காதபடி இருந்தாலும், அந்த ட்விஸ்ட் சிலருக்கு புரியாமல் போகவும் வாய்ப்புள்ளது. மேலும் சில காட்சிகள் புரிந்து விட்டாலும் நீண்ட நேரம் வருவதால் சலிப்பை தட்டுகிறது. – ஸீ தமிழ் ஊடகம்.
கேட்கப்பட வேண்டிய கேள்விகள்தான், ஆனால் கேட்ட விதமும், விடைகளற்ற பதிவும் போதுமானதா? இழுத்து இழுத்துப் பேசுவது, செயற்கையான உடல் மொழியென அனைவரையும் உதாசீனம் செய்யும் ஷாலின் சோயாவின் கதாபாத்திரம் பொறுமையைச் சோதிக்கிறது. அவரிடம் மல்லுக்கட்டும் ஆதேஷ் சுதாகர் நடிப்பிலும் மல்லுக்கட்டுகிறார். நான்கு மாத கர்ப்பிணியாக மென் சோகத்தோடு படம் முழுக்க வந்தாலும் பிரதான காட்சிகளில் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் குறையேதும் இல்லை. அறிமுக நடிகராக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். ஒட்டுமொத்தமாக நிறைவற்ற நடிகர்கள் தேர்வால் படம் தத்தளிக்கிறது. பின்னணி இசைக்கு அரவிந்த் சுந்தரோடு கூட்டணி சேர்ந்தாலும் உணர்வுகளை உணர்த்தும் கடமையைத் தாண்டி பல இடங்களில் அவசியமற்று வாசித்துத் தள்ளியிருக்கிறார்கள்.. – விகடன் சினிமா
சலார்

பிரபாஸ் எனும் சூப்பர் ஸ்டாரை கொண்டாடத் தெரிந்திருக்கிறது இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு. அதை முழு உழைப்பு போட்டு நிறைவேற்றி இருக்கிறார் பிரபாஸ். மூன்று மணி நேரத்திற்கு சற்று குறைவாக ஓடும் படத்தில் ஒண்ணேகால் மணி நேரத்தை மென் வேகத்தில் படத்தின் மையச் சரடை நோக்கி அழைத்துப் போகிறார் நீல். நீலின் உக்ரம் படத்தின் கதையை ஒட்டி இருக்கும் சலார் கேஜிஎஃப் படத்தின் திரைக்கதையை கர்ம சிரத்தையுடன் பின்பற்றுகிறது. அதிரடியான நம்ப முடியாத காட்சிகளின் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஸ்டண்ட் இரட்டையர்கள் அன்பறிவின் கோரியோகிராபி ஹாலிவுட் தரம். – தி ஹிந்து.
முதல் பாதியில் கொஞ்சம் பொறுமை இருந்தால் இரண்டாம் பாதி அதகளமாக ரசிக்கப்படும். கொஞ்சம் வரலாறு. நிறைய நவீன காட்சிப்படுத்தல் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
நிறைய கூச்சலும் கொஞ்சமாக கதையும் கொண்ட சலார் ஒரு காமிக் புத்தகம் போலவும் வீடியோ விளையாட்டு போலவும் அமைக்கப்பட்டிருக்கிறது. கருப்பு கான்வாஸில் ரத்த சிவப்பை அடித்தது போல ஒரு படம். கற்பனை நாடாக கந்தார் எனும் தேசத்தைக் காட்டி விட்டு அப்படி ஒன்று இருக்கலாமோ என்று ரசிகனை யோசிக்க வைத்ததில் பிரசாந்த் நீல் வெற்றி பெற்று விட்டார். கிருஷ்ணன் குசேலன் நட்பைப் போல பிரபாஸ் ( தேவா) வரதா ( பிரித்விராஜ் ) நட்பை தொட்டு புராணத்திலிருந்தும் ஒற்றி எடுத்திருக்கிறார் நீல். மொத்தத்தில் ரத்தமும் வன்முறையும் தூக்கலாக இருக்கும் சலார், ஒரு பளார். – இந்தியன் எக்ஸ்பிரஸ்
சபா நாயகன்

கார்த்திகேயன் இயக்கத்தில்,அசோக் செல்வன், மேகா ஆகாஷ், சாந்தினி சவுத்திரி, கார்த்திகா முரளிதரன் நடிப்பில் வெளியான படம். காவல் துறையினால் பாதிக்கப்பட்ட அரவிந்த் சபா தன் கதையை சொல்லும் விதமாக திரைக்கதை. பருவத்தின் பல கால கட்டங்களில் ஒரு வாலிபன் காதல் வயப்படும் பெண்களைப் பற்றிய கதை. புறவயமாக கதை சொல்லும் பாணியில் நிறைய நகைச்சுவை தருணங்களைச் சேர்த்து இருக்கிறார் இயக்குனர். சபாவின் நண்பர்களாக வரும் ஜெயசீலன் சிவராம், அருண் குமார், ஸ்ரீராம் கிருஷ் விலா நோக சிரிக்க வைக்கிறார்கள். அசோக் செல்வன் தன் பங்கை சரியாக அளித்திருக்கிறார். ஆனாலும் ரசிகனுக்கும் இதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை அவ்வப்போது உணர முடிகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
அதிக கவனம் கொண்டு இடறி விடக்கூடாது எனும் அச்சத்தில் படமாக்கியதில் எதையும் வீட்டுக்கு கொண்டு போக முடியாத படமாக மாறிப் போய் விட்டது சபா நாயகன். – சினிமா எக்ஸ்பிரஸ்.
சினிமா ரசிகர்களுக்கு பழக்கப்பட்ட கதை தான். ஆனால் அந்த கதையை திரையில் காட்டிய விதம் தான் ரசிகர்களை கவர்கிறது. புதுமுக இயக்குநரான சி.எஸ். கார்த்திகேயன் பலருக்கும் தெரிந்த கதையை காமெடி கலந்து சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். படத்தில் வரும் ஒன்லைனர்கள் தான் பெரிய பலமே. படத்தை சுவாரஸ்யமாக்கும் பல ஜோக்குகளை சொல்வதே ஹீரோ அரவிந்த் சபாவின்(அசோக் செல்வன்) நண்பர்கள் தான். அரவிந்த் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் அசோக் செல்வன். படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார். அரவிந்தின் பள்ளி காலத்து காதலாக வரும் கார்த்திகா முரளிதரன் அனைவரையும் கவர்கிறார். சபாநாயகன்- நம்பி பார்க்கலாம் – சமயம் தமிழ்.
ஜிகிரி தோஸ்த்

ஐநூறு மீட்டர் சுற்றளவில் யார் அலைபேசியில் பேசினாலும் அதை கேட்கும் திறன் கொண்ட ஒரு கருவியை கண்டு பிடிக்கும் கதை நாயகன், ஒரு தருணத்தில் பெரும் தொழிலதிபரின் மகளைக் கடத்திய மந்திரியின் கையாளின் பேச்சைக் கேட்டு அந்தக் கருவியின் துணையோடு அவளைக் காப்பாற்ற தன் நண்பர்களோடு எடுக்கும் முயற்சி தான் படத்தின் முடிச்சு. அதிக செலவு கூடாது என்பதற்காக மிகவும் சராசரியான திரைக்கதையும் காட்சி படிமங்களும் இருப்பதால் ஒரு முறை பார்க்கலாம் எனும் ரகத்தில் சேர்ந்து விடுகிறது படம். – ஃபில்மி கிராஃப்ட் அருண்.
இது காமெடி படம் அல்ல த்ரில்லர். படம் துவங்கிய வேகத்தில் காமெடி டோனில் இருந்து சீரியஸான த்ரில்லருக்கு மாறிவிடுகிறது. ஆனால் காமெடியும் சரி த்ரில்லரும் சரி ஜிகிரி தோஸ்துக்கு கை கொடுக்காமல் போய்விட்டது. அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசை தான் படத்திற்கு பெரிய பலமே. காட்சிகளை விட பின்னணி இசை மூலம் திகிலூட்டியிருக்கிறார்கள். மூன்று நண்பர்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் லோகியாக நடித்திருக்கும் விஜே ஆஷிக். அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதில் கணிக்க முடிகிறது. ஒரு கட்டத்தில் கணிக்கும் மூடும் போய்விடுகிறது. – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
நந்தி வர்மன்

ஒரு ரசிகனாக கொடுத்த காசை விட கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளவராக இருந்தால் இந்தப் படம் பிடிக்கும். சொல்ல வந்த கதையை அடுக்குகளாக அறிமுக இயக்குனர் பெருமாள் வரதனால் சொல்ல முடிகிறது. கதை நாயகன் சுரேஷ் ரவி அதிகம் ஈர்க்கவில்லை என்றாலும் சுற்றி இருக்கும் துணைப் பாத்திரங்கள் தங்கள் பங்கை செமையாக செய்து ரசிக்க வைக்கிறார்கள். – டைம்ஸ் ஆஃப் இந்தியா .
மதிமாறன்

குள்ளமாக இருப்பவர்களை கிண்டல் செய்யும் வழக்கம் பல இடங்களில் இருந்து வருகிறது, அதை நாம் கண்ணெதிரே பார்த்தும் இருப்போம். அப்படி ஒரு பிரச்சனை உள்ள நபரை வைத்து ஒரு முழு படத்தை எடுத்துள்ள இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியனுக்கு பாராட்டுக்கள். குள்ளமாக இருப்பதால் ஒருவர் என்னென்ன கேலி கிண்டலுக்கு ஆளாகிறார் என்பதை படம் முழுக்க காட்டியுள்ளார். மேலும் அதை வைத்து கதை, திரைக்கதையை சுவாரசியமாக எடுத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள வெங்கட் செங்குட்டுவன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், படத்தை தனது தோள்களில் சுமந்து செல்வதும் வெங்கட் தான். நடிப்பு, நடனம் என தனது திறமையை படத்தின் மூலம் வெளிக்காட்டியுள்ளார். நிச்சயம் இவருக்கு தமிழ் சினிமாவில் நீண்ட எதிர்காலம் உள்ளது. – ஸீ தமிழ் செய்திகள்.
இந்தப் படத்தின் பெரும் குறை ஒவ்வொரு காட்சியும் வசனம் சார்ந்து இருப்பது தான். எதுவும் இயற்கையாக இல்லாமல் திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. உருவ கேலி குறித்த கண்டனமாக படம் எடுத்தது சரிதான். ஆனால் அதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படாதா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

திரையரங்கில் நடக்கும் ஹாரர் கதை: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ஓடவோ ஒளியவோ நினைப்பு வராமல் தடுக்கும் கிச்சு கிச்சு படம். – ஹிந்து தமிழ்.
உபதேசம் இல்லை. நற்செய்தி இல்லை. ஆனால் வயிறு குலுங்க சிரிக்கலாம் வாங்க. திகிலையும் குபீர் சிரிப்பையும் சரிவிகிதத்தில் தந்திருக்கும் படம். இயக்குனர் ரமேஷ் வெங்கட் ஒரு ரவுண்டு வருவார். – டைம்ஸ் ஆஃப் இந்தியா.
ஆயிரம் பொற்காசுகள்

ஆயிரம் பொற்காசுகள் ஒருவருக்கு கிடைத்து, அது ஊர் முழுவதும் தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை லாஜிக் மீறாத நகைச்சுவையால் கலகலப்பாகத் தந்திருக்கிறார், இயக்குநர் ரவி முருகையா. கதையே காமெடிக்கான அனைத்தையும் கொண்டிருப்பதால், எளிதாகப் படத்தோடு ஒன்றிக்கொள்ள முடிகிறது. சமீப காலமாகச் சிறந்த படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் விதார்த், இதிலும் தனது இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். பானுமுருகனின் ஒளிப்பதிவும் ஜோஹன் சிவனேஷின் இசையும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன. சிறு பட்ஜெட் படங்களுக்கு என இருக்கும் குறைகள் இதிலும் இருந்தாலும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ சிரிப்புக்குத் தருகிறது, சிறப்பான கியாரண்டி. – இந்து தமிழ் திசை.

ஏன் போஸ்டர் படங்கள் இல்லை. கோலாஜாக போடலாம். வெறுமையாகா இருக்கிறது.
சிறகு இரவி
LikeLike